Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

குடிநீர் விநியோகத்தை சீரமைக்க வேண்டும் பட்டுக்கோட்டை நகராட்சி கூட்டத்தில் வலியுறுத்தல்

Print PDF

தினமலர் 30.04.2010

குடிநீர் விநியோகத்தை சீரமைக்க வேண்டும் பட்டுக்கோட்டை நகராட்சி கூட்டத்தில் வலியுறுத்தல்

பட்டுக்கோட்டை: பட்டுக்கோட்டையில் ரூ. 70 லட்சத்தில் வளர்ச்சிப்பணிகள் செய்வது என நகராட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இந்நகராட்சியின் அவசரக்கூட்டம் அதன் தலைவர் பிரியா தலைமையில் நடந்தது. ஆணையர் பாலகிருஷ்ணன், துணைத்தலைவர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உறுப்பினர்கள் பேசியதாவது:

சாமிநாதன்: பட்டுக்கோட்டை நகரின் நடைபாதையில் நெரிசல் ஏற்படுகிறது. பாதையில் நடந்து செல்ல வழிவகுக்க வேண்டும். பாலித்தீன் பைகளை ஒழிக்க மீண்டும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

ஜோதிமணி: நகராட்சியில் ஆடு அடிக்கும் (வதை செய்யுமிடம்) கட்டிடம் கட்டி திறக்கப்படாமலே உள்ளது. இதனால் வெளியில் உள்ளவர்கள் இறந்த ஆடுகளைக் கூட வெட்டி விற்பனை செய்கின்றனர். இதனால் மக்களுக்கு நோய்கள் வர வாய்ப்புள்ளது. சம்பத்: பொதுமக்கள் நலன் கருதாமல் 3 மணி நேரம் மின்தடை செய்யப்படுகிறது. ஆனால் சென்னை நகரத்தில் மட்டும் மின்வெட்டு இல்லாமல் உள்ளது. நமது மாவட்டங்களில் மட்டும் மின்வெட்டு இருப்பது ஏன்? (இவ்வாறு கூறிவிட்டு மின்வெட்டை கண்டித்து வெளிநடப்பு செய்தார்.) ரகுராமன்: புதிதாக ரேஷன்கார்டு கேட்டு விண்ணப்பித்தவர்களில் எங்கள் வார்டில் உள்ள 200 பேருக்கு ரேஷன் கார்டு இல்லை. அவர்கள் அனைவருமே ஏழை எளியவர்கள்.அதிகாரிகளிடம் கேட்டால் வீட்டுவரி ரசீது இல்லை என்று தட்டிக் கழிக்கிறார்கள். அவர்களுக்கு ரேஷன் கார்டு கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

மகப்பேறு உதவித் திட்டம் பெறுவதற்கு எந்தந்த நாட்களில் வந்து நகராட்சியில் பதிவு செய்யவேண்டுமென அறிவிக்க வேண்டும். என் வார்டில் உள்ள பள்ளியில் 125 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். அவர்களுக்கு போதிய கழிவறை சுகாதார வசதி இல்லை அதை செய்து தர வேண்டும். திருச்செந்தில்: பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் செயல்பட்டு வரும் 108 வாகன ஊர்தி பற்றி மேலும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

ஜவஹர்பாபு: சிவக்கொல்லை பகுதியில் குடிநீர் தட்டுப்பாடுகள் அதிகமாக உள்ளது. இரண்டு குடிநீர் தொட்டி அமைத்துக் கொடுக்க வேண்டும். பழுதடைந்துள்ள இரண்டு சாலைகளை புதுப்பித்து தர வேண்டும். அங்கன்வாடி கட்டிடம் கட்ட முடியவில்லை என்றால் நாங்கள் தங்களிடம் கொடுத்த பத்திரத்தை திருப்பித் தர வேண்டும்.


வீரையன்: அரசு ஆஸ்பத்திரியில் கண் பரிசோதனை செய்து கொள்ள டாக்டர்கள் கிடையாது. இலவச மருத்துவ முகாமை நாடி செல்கிறார்கள்.மறைந்த முன்னாள் சேர்மன் சீனிவாசன் சிலை வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளேன். அதை எப்பொழுது செய்யப்போகிறீர்கள்.பஸ் ஸ்டாண்டில் உள்ள வாய்க்கால் குண்டும், குழியுமாக உள்ளது. அதை சரி செய்ய வேண்டும். லட்சத்தோப்பு பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு உள்ளது. அதை போக்கித் தர வேண்டும்.

நாகராஜ்: நகரின் தெரு ஓரங்களில் உள்ள மணல்களை அள்ள வேண்டும்.பாரதிசாலையை சரிசெய்து கொடுக்க வேண்டும். விளை நிலங்களை மனைப்பிரிவாக பிரித்து நகராட்சி உத்தரவின்றி விற்கிறார்கள். நகராட்சி அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இங்குள்ள சர்வே ஊழியர்கள் சரியாக செயல்படுவதில்லை. செயல்பட செய்ய வேண்டும்.


அண்ணாதுரை: பஸ் ஸ்டாண்டில் பின்பக்கம் இருட்டாக உள்ளது. அங்கு விளக்கு எரியவிட வேண்டும். அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவை விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் பேசினர்.பின்னர் நகராட்சி வளர்ச்சிப்பணிகளாக சாலை வசதி, மின் வசதி, குடிநீர், சுகாதாரம் ஆகியவற்றிற்கு ரூ. 70 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Last Updated on Friday, 30 April 2010 06:36