Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

குடிநீர் பிரச்னையை தீர்க்க ரூ.1 கோடி

Print PDF

தினமணி 30.04.2010

குடிநீர் பிரச்னையை தீர்க்க ரூ.1 கோடி

திருவள்ளூர், ஏப். 29: திருவள்ளூர் மாவட்டத்தில் கோடை காலத்தில் குடிநீர் பிரச்னையை தீர்க்க ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் டி.பி.ராஜேஷ் விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் தெரிவித்தார்.

திருவள்ளூர் மாவட்ட விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் டி.பி.ராஜேஷ் தலைமையில் வியாழக்கிழமை காலை நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொன்னேரியைச் சேர்ந்த விவசாயி ஒருவர் அப்பகுதியில் பழுதடைந்துள்ள விவசாய வேளாண் கிடங்கை புதிதாக கட்ட வேண்டும் என கோரியிருந்தார்.

வேளாண் கட்டடம் புதிதாக கட்டத் தேவையில்லை. அதை பழுது பார்க்க ரூ.1.90 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வரும் நிதியாண்டில் விவசாய வேளாண் கட்டடம் சீரமைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். புழல் ஏரியில் சுற்றியுள்ள ஹோட்டல்கள், இறைச்சிக் கடைகள் மற்றும் வீடுகளின் கழிவுகள் கொட்டப்படுகின்றன. இதன் மூலம் சென்னை குடிநீர் மற்றும் விவசாய பயன்பாட்டுக்கு பயன்படுத்தப்படும் நீர் மாசுபடும் அபாயம் உள்ளது. மேலும் ஏரிப் பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனை தடுக்க வேண்டும் என விவசாய சங்கத் தலைவர் பாஸ்கள் கோரிக்கை விடுத்தார். மேற்கண்ட கோரிக்கைக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பொதுப்பணித் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

பாக்கம் பகுதியைச் சேர்ந்த சுபசெல்வராஜன், இந்த ஆண்டு பருவமழை பொய்த்துப் போனதால் திருவள்ளூர் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்து அதன் மூலம் விவசாயிகளுக்கு சலுகைகள் வழங்க வேண்டும் என கோரியிருந்தார். அவரது மனுவுக்கு பதிலளித்த மாவட்ட ஆட்சியர், திருவள்ளூர் மாவட்டத்திóல் கடந்த பருவத்தில் மழை நன்றாக பெய்துள்ளது. ஆகையால் விவசாயத்துக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. ஆனால் மாவட்டத்தில் உள்ள திருத்தணி, பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை பகுதியில் குடிநீர் பிரச்னை உள்ளது.

தற்போதுள்ள கோடை காலத்தில் குடிநீர் பிரச்னையை தீர்க்க ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன் மூலம் இப்பிரச்னை விரைவில் தீர்க்கப்படும் என்றார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.சோமசுந்தரம், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) ராஜகோபால் மற்றும் விவசாயம் சார்ந்த அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.