Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி பேரூராட்சியில் விநியோகிக்காத குடிநீருக்கு கட்டணம் வசூலிப்பு!

Print PDF

தினமணி 30.04.2010

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி பேரூராட்சியில் விநியோகிக்காத குடிநீருக்கு கட்டணம் வசூலிப்பு!

மதுரை, ஏப். 29: மதுரை மாவட்டம், வாடிப்பட்டி பேரூராட்சியில் குடிநீர் விநியோகிக்காமலே அதற்குரிய மாதாந்திரக் கட்டணம் வசூலிக்கப்படுவதாகப் புகார் எழுந்துள்ளது.

மதுரை} திண்டுக்கல் சாலையில் உள்ளது வாடிப்பட்டி பேரூராட்சி. இதில் தா.வாடிப்பட்டி, மேட்டுநீரேத்தான், தாதம்பட்டி, பேட்டைபுதூர், போடிநாயக்கனூர், பொட்டல்பட்டி, ராமநாயக்கன்பட்டி, சன்னகுளம், பெருமாள்பட்டி, சாணாம்பட்டி, குரங்குத்தோப்பு, குலசேகரன்கோட்டை உள்ளிட்ட பகுதிகள் அடங்கும்.

இந்தப் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. சுமார் 35 ஆயிரம் மக்கள் வசிப்பதாகக் கூறப்படுகிறது. ஆழ்துளைக் கிணறுகளை மட்டுமே குடிநீர்த் தேவைக்கு பயன்படுத்திவந்த வாடிப்பட்டி பேரூராட்சியில் கடந்த அதிமுக ஆட்சியில் வைகை கூட்டுக் குடிநீர்த் திட்டம் மேற்கொள்ளப்பட்டது.

அதன்படி இரும்பாடி ஊராட்சி அருகே உள்ள வைகை ஆற்றில் உள்ள கிணற்றிலிருந்து இணைப்பு பெற்று சுமார் 13 கிலோமீட்டர் தூரம் உள்ள வாடிப்பட்டிக்கு திமுக ஆட்சியில் 2006 ஆம் ஆண்டு தண்ணீர் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின்படி தினமும் 20 லட்சம் லிட்டர் குடிநீர் கிடைக்கும் எனக் கூறப்பட்டது. ஆனால், தற்போது வெறும் 6 லட்சம் லிட்டர் தண்ணீரே தினமும் விநியோகிக்கப்படுவதாக பேரூராட்சி நிர்வாக வட்டாரம் தெரிவிக்கிறது.

ஆனால், 11 லட்சம் லிட்டருக்கான கட்டணத்தை பேரூராட்சி நிர்வாகம் தரப்பில் குடிநீர் வடிகால் வாரியத்துக்கு செலுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த பணம் மக்களிடம் இருந்து பேரூராட்சியால் வசூலிக்கப்படுகிறது.

வைகை கூட்டுக் குடிநீர்த் திட்டத்துக்காக வாடிப்பட்டியில் 19 மேல்நிலை நீர்த்தொட்டிகள் தயார்படுத்தப்பட்டன. ஆனால், பல மேல்நிலைத் தொட்டிகளில் நிலத்தடி நீரே நிரப்பப்பட்டு விநியோகிப்பதாகவும் கூறப்படுகிறது.

குறிப்பாக தாதம்பட்டி, நீரேத்தான், மேட்டுபெருமாள்நகர், தாதப்பநாயக்கன்பட்டி, எல்.புதூர், ராமநாயக்கன்பட்டி ஆகிய பகுதிகளில் குடிநீர் சரிவர விநியோகிக்கப்படுவதில்லை என்ற புகாரும் உள்ளது.

வைகை கூட்டுக் குடிநீர்த் திட்டத்தில் தினமும் குடிநீர் விநியோகிக்கப்படும் எனக்கூறப்பட்டது.

ஆனால், தற்போது 2 அல்லது 3 நாள்களுக்கு ஒருமுறைதான் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது என்று பொதுமக்கள் கூறுகின்றனர். மேலும், குறிப்பிட்ட 8 வார்டு பகுதிகளுக்கும் குடிநீர் விநியோகம் சரிவர செயல்படுத்தப்படுவது இல்லை என்ற புகாரும் எழுந்துள்ளது.

சுமார் 1 லட்சம் லிட்டர் தண்ணீர் நிரப்பும் வசதி உள்ள தாதம்பட்டி மந்தை மேல்நிலைத் தொட்டியில் 30 ஆயிரம் லிட்டர் தண்ணீரே நிரப்பப்படுவதாகக் கூறப்படுகிறது.

மேட்டுநீரேத்தானில் வைகை கூட்டுக் குடிநீருக்கு இணைப்பு அளிக்கப்பட்டும் இன்னும் அதில் தண்ணீரே நிரப்பப்படவில்லை என்கின்றனர் அப்பகுதியினர்.

குடிநீருக்குப் பதிலாக ஆழ்துளைக் கிணறு மூலம் பெறப்படும் உப்பு நீரை பேரூராட்சி நிர்வாகம் விநியோகித்துவிட்டு, குடிநீர் கட்டணத்தை வசூலிப்பதாகவும் பல பகுதிகளில் புகார் கூறப்படுகிறது.

உப்பு நீரை குடிப்பதால் சிறுநீரகக் கோளாறு, பற்களில் கரைபடிதல் போன்ற பாதிப்புகள் ஏற்படுவதாக பலரும் தெரிவிக்கின்றனர்.

வாடிப்பட்டியில் குடிநீர் பிரச்னையை மையமாக வைத்து அடிப்படைத் தேவைக்கான போராட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அக்குழுவுக்கும் பேரூராட்சி தலைவர் தரப்புக்கும் மோதல் ஏற்பட்டு பிரச்னை திசை திரும்பியிருப்பதைக் கவலையோடு சுட்டிக் காட்டுகின்றனர் பொதுமக்கள்.

குடிநீர் பிரச்னை குறித்து போராட்டக் குழுவின் செயலரும் ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியருமான எம்.சீதாராமன் கூறியது:

வாடிப்பட்டியில் பல பகுதிகளுக்கு முறையாக வைகை கூட்டுக் குடிநீர் விநியோகம் இல்லை. ஆனால், குடிநீருக்கான கட்டணம் மட்டும் வசூலிக்கப்படுகிறது. இது எப்படி நியாயமாகும்?

பேரூராட்சியின் நிர்வாகக் குளறுபடியால் குடிநீர் விநியோகத்தில் பிரச்னை எழுந்துள்ளது. குடிநீர் கேட்டு போராடுவோரை பதவியிலிருப்போர் தாக்குகின்றனர். இதனால் தற்போது பிரச்னையை சட்டரீதியாக அணுகி வருகிறோம் என்றார்.

வைகையில் தனிக் கிணறு வேண்டும்

குடிநீர் பிரச்னை குறித்து பேரூராட்சித் தலைவர் கிருஷ்ணவேணி பால்பாண்டியன் சார்பில் அவரது கணவர் பால்பாண்டியன் கூறியது:

வைகை கூட்டுக் குடிநீர்த் திட்டத்தில் பேரூராட்சிக்கு போதிய குடிநீர் கிடைக்கவில்லை. காரணம் இரும்பாடி ஊராட்சி கிணற்றிலிருந்துதான் வாடிப்பட்டிக்கு தண்ணீர் பெறப்படுகிறது.

இங்கிருந்துதான் இரும்பாடி, கரட்டுப்பட்டி, நாச்சிகுளம் ஆகிய ஊர்களுக்கும் தண்ணீர் பெறப்படுகிறது.

இதனால் வாடிப்பட்டிக்கான முழுமையான தண்ணீரை இந்தக் கிணற்றிலிருந்து பெற முடிவதில்லை.

எனவே, வாடிப்பட்டி குடிநீர் தேவைக்கு என இரும்பாடி வைகை ஆற்றில் தனிக்கிணறு அமைக்க கடந்த ஆண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு இரும்பாடி ஊராட்சியும் சம்மதித்துள்ளது.

அதிகாரிகள் திட்டத்தை நிறைவேற்றினால் பிரச்னை தீர்ந்துவிடும்.

மக்கள் தொகை அதிகரித்துள்ளதற்கு ஏற்ப கூடுதலாகத் தேவைப்படும் குடிநீர்த் தேவைக்கு கோம்பை பகுதியில் ஆழ்துளைக் கிணறு அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.