Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

குடிநீர்த் தட்டுப்பாட்டைப் போக்க வலியுறுத்தல்

Print PDF

தினமணி 30.04.2010

குடிநீர்த் தட்டுப்பாட்டைப் போக்க வலியுறுத்தல்

நாகப்பட்டினம், ஏப். 29: நாகை நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் குடிநீர்த் தட்டுப்பாட்டைப் போக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாகை நகர்மன்றக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

நாகை நகராட்சிக் கூட்டம் தலைவர் ஆர். சந்திரமோகன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

துணைத் தலைவர் மாரிமுத்து, பொறியாளர் பக்கிரிசாமி, உதவிப் பொறியாளர் செல்வராஜ் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள், நகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் உறுப்பினர்களிடையே நடைபெற்ற விவாதம்:

ஜோதி: மின் சுடுகாடு அமைக்க நகராட்சி மூலம் இதுவரை ரூ. 52 லட்சம் விடுவிக்கப்பட்டுள்ளது. ஆனால், பணிகள் ஏதும் முழுமை பெறவில்லை.

ஆர். சந்திரமோகன் (நகர்மன்றத் தலைவர்): இப்பணியை, அனைத்துக் கட்சி நகர்மன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழு திங்கள்கிழமை பார்வையிட நடவடிக்கை எடுக்கப்படும்.

சச்சா முபாரக்: நகராட்சி மூலம் பல பணிகளுக்குப் பணி ஆணை வழங்கப்படுவதில்லை. தமிழக அரசு, உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு ஏராளமான நிதியை ஒதுக்கீடு செய்து வரும் நிலையில், நாகை நகராட்சியில் மட்டும் பொது நிதியில் பணம் இல்லை என்பது ஏற்கத்தக்கதல்ல.

நகர்மன்றத் தலைவர்: பல வணிக நிறுவனங்கள் நகராட்சிக்குச் செலுத்த வேண்டிய வரி நிலுவைகளைச் செலுத்தாததே நிதி பற்றாக்குறைக்கு முக்கிய காரணம்.

ஜோதி: வரி பாக்கி வைத்திருப்போரின் பட்டியலை பொதுமக்களின் பார்வைக்கு வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கெüதமன்: சேவாபாரதி சுனாமி குடியிருப்பில் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இப்பகுதியில் ஓர் கைப்பம்பு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உதவிப் பொறியாளர் செல்வராஜ்: இப்பகுதிக்கு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது. தேவையெனில், நகராட்சி மூலம் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

தண்டபாணி: நீலாயதாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு விழாவுக்கு முன் கோயில் சன்னிதி தெருவில் தார்ச் சாலை அமைக்க வேண்டும்.

கலா: கூக்குஸ் சாலையைப் புனரமைக்கக் கோரி 2 ஆண்டுகளாக வலியுறுத்தியும் நடவடிக்கை இல்லை.

நாகேஸ்வரி: பெருமாள் கோயில் மேலவீதி, பெரம்புக்காரத் தெரு, அட்டைக்குளம் ஆகிய பகுதிகளில் குடிநீர்த் தட்டுப்பாடு நிலவுகிறது. உடனடியாக இப்பகுதிகளுக்கு டேங்கர் லாரி மூலம் குடிநீர் விநியோகிக்க வேண்டும்.

திடீர் சலசலப்பு: நகர்மன்றக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது பெண் உறுப்பினர்கள் பகுதியில், அவைக் கூடத்தின் தரையில் ஒட்டப்பட்டிருந்த டைல்ஸ் கற்களின் இணைப்பில் திடீரென லேசான சப்தத்துடன் விரிசல் ஏற்பட்டது. இதனால், அவையில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.