Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

உடுமலை நகராட்சியின் குடிநீர் கிராமங்களில் சூப்பர் விற்பனை: 50 லிட்டர் 25 ரூபாய்

Print PDF

தினமலர் 05.05.2010

உடுமலை நகராட்சியின் குடிநீர் கிராமங்களில் சூப்பர் விற்பனை: 50 லிட்டர் 25 ரூபாய்

உடுமலை: உடுமலை நகராட்சி குடிநீர் முறைகேடாக வாகனங்கள் மூலம் கடத்தப்பட்டு விற்பனைக்கு எடுத்து செல்லப்படுகிறது. உடுமலை நகராட்சி பகுதியில் வசிக்கும் மக்களுக்கு குடிநீர் தேவைக்காக முதல் மற்றும் இரண்டாம் குடிநீர் திட்டங்கள் மூலம் திருமூர்த்தி அணையிலிருந்து சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் உடுமலை நகருக்கு கொண்டு வரப்படுகிறது. திட்ட குளறுபடி, பணியாளர் பற்றாக்குறை, மேல்நிலை நீர் தேக்க தொட்டிகளில் குடிநீர் ஏற்றாமல் வினியோகம் செய்யப்படுவது , 80 சதவீதம் தனியார் குடிநீர் இணைப்புகளில் மின் மோட்டார்கள் வைத்து குடிநீர் உறிஞ்சுவது போன்ற காரணங்களினால் உடுமலையில் குடிநீர் தட்டுப்பாடு தொடர்கிறது. இந்நிலையில், ஒரு சில தனியார் வாகனங்கள் மூலம் தண்ணீர் எடுத்துச்சென்று, கிராமங்களில் விற்பனை செய்யப்படுகிறது. குடிமங்கலம், பெதப்பம்பட்டி பகுதிகளில் சில தனியார் வாகன உரிமையாளர்கள் வியாபாரமாக செய்து வரு கின்றனர்.மினி டோர் வாகனங்களில் 50 லிட்டர் பிளாஸ்டிக் கேன் மற்றும் 'டிரம்' களை ஏற்றிக்கொண்டு வரும் இந்த நபர்கள், தளி ரோட்டிலுள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டி மற்றும் நகரிலுள்ள பொது குடிநீர் குழாய்கள் மற்றும் முறையான பராமரிப்பு இல்லாததால், பிரஷர் வால்வுகளில் வெளியேறும் குடிநீரை கேன்களில் பிடித்து விற்பனை செய்கின்றனர். 50 லிட்டர் குடிநீர் 25 ரூபாய்க்கு பெதப்பம்பட்டியில் விற்பனை செய்யப் படுகிறது. இவ்வாறு தினமும் ஆயிரக்கணக்கான லிட்டர் முறைகேடாக கடத்தப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. தளி ரோடு மேல்நிலை நீர் தேக்க தொட்டியிலிருந்து முறைகேடாக குடிநீர் விற்பனை செய்யும் லாரிகளுக்கு தண்ணீர் வழங்கப்படுகிறது. நகராட்சி குறிப்பிட்ட அளவு விலை நிர்ணயித்திருந்தாலும், ஒரு சில லாரிகளுக்கு மட்டும் பணம் கட்டியதாக கணக்கு காட்டப்பட்டு, பல லோடு குடிநீர் முறைகேடாக கடத்தப்படுகிறது. உடுமலை நகரில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், இவ்வாறு முறைகேடாக தினமும் ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வாகனங்கள் மூலம் கடத்தப்பட்டு, லாபகரமான தொழிலாக மாற்றப்பட்டுள்ளது.

Last Updated on Wednesday, 05 May 2010 06:05