Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

குடிநீர்த் தட்டுப்பாட்டை சமாளிக்க அதிரடி நடவடிக்கை

Print PDF

தினமணி 30.07.2009

குடிநீர்த் தட்டுப்பாட்டை சமாளிக்க அதிரடி நடவடிக்கை

வேலூர், ஜூலை 29: வேலூர் மாவட்டத்தில் நிலவும் குடிநீர்த் தட்டுப்பாட்டை சமாளிப்பதற்காக தொழிற்சாலைகளின் தண்ணீர் பயன்பாட்டை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் செ.ராஜேந்திரன் தெரிவித்தார்.

வேலூர் மாவட்டத்தில் நிலவும் குடிநீர்த் தட்டுப்பாடு குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் செ.ராஜேந்திரன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

வேலூர் மாவட்டத்தில் நிலவும் குடிநீர்த் தட்டுப்பாட்டைப் போக்க தமிழக அரசு ஒதுக்கீடு செய்த ரூ.5 கோடி நிதியை உள்ளாட்சிகளுக்குப் பிரித்து வழங்கியிருந்தார் ஆட்சியர்.

இந் நிதியில் மேற்கொள்ளப்பட்ட பணிகள், தொடர்ந்து நிலவும் குடிநீர்த் தட்டுப்பாட்டுக்கான காரணங்கள், அதைத் தீர்க்கத் தேவையான நிதி குறித்து அந்தந்த மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியத் தலைவர்கள் மற்றும் அலுவலர்களிடம் ஆட்சியர் கேட்டறிந்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது:

திருப்பத்தூர், ஆலங்காயம் போன்ற ஒரு சில நகராட்சிகளில் குடிநீர்த் தட்டுப்பாடு இல்லை. ஆனால், பெரும்பாலான கிராம ஊராட்சிகளில் குடிநீர்த் தட்டுப்பாடு நிலவுகிறது. ஏற்கெனவே, அரசு வழங்கிய ரூ.5 கோடி நிதி, உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கப்பட்டது. ஆனால், பெரும்பாலானோர் அந்நிதியில் எவ்விதப் பணிகளையும் இதுவரை மேற்கொள்ளவில்லை. ஒப்பந்த நடைமுறையால் தாமதமாகிறது. மாவட்டத்தில் நிலவும் குடிநீர்த் தட்டுப்பாட்டைப் போக்க முதல் கட்டமாக, லாரிகள், டிராக்டர்கள் மூலம் குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மேலும், இந்தத் தனியார் லாரிகள் குடிநீர் எடுக்கும் இடத்தைக் கண்டறிந்து, அந்த நீரைப் பரிசோதித்துச் சான்று வழங்க உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கொண்ட குழு அமைக்கப்படும். அவர்கள், தண்ணீர் லாரிகளைக் கண்காணிப்பார்கள்.

குடிநீர் பிரச்னையைத் தீர்க்க அரசிடம் ரூ.25 கோடி கோரப்பட்டுள்ளது. நிதி கிடைத்ததும், புதிய கிணறுகள், நீராதாரங்களைக் கண்டறியும் பணி துவங்கும்.

வணிக பயன்பாட்டுக்கான இணைப்புகள் துண்டிக்கப்படுகின்றன. இதுதவிர, தொழிற்சாலைகளின் பயன்பாட்டுக்குப் பெரும்பங்கு நீர் செலவழிக்கப்படுகிறது. இதை முறைப்படுத்தி, பொதுமக்களின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்ய முயற்சி மேற்கொள்ளப்படும்.

மழை பொழிவை செயற்கையாக உண்டாக்கும் முறை குறித்தும் யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அரசுக்குத் தெரியப்படுத்தப்படும் என்றார்.

மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட அலுவலர் அருள்ஜோதி அரசன், வேலூர் மாநகர மேயர் ப.கார்த்திகேயன், மாவட்ட ஊராட்சித் தலைவர் ஆர்.ஷீலாராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மாட்டு வண்டிகளுக்கு எச்சரிக்கை!

அ னுமதியின்றி மணல் அள்ளும் மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்படும் என்று ஆட்சியர் தெரிவித்தார்.

அவர் கூறியது: வேலூர் மாவட்ட குடிநீர்த் தேவைக்காக பாலாற்றில் ஆங்காங்கே கிணறுகள் அமைக்கப்பட்டு குடிநீர் எடுக்கப்படுகிறது. அப் பகுதியிலிருந்து மாட்டு வண்டிகள் மூலம் மணல் அள்ளப்படுவதால், நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்டு, கிணறுகள் வறண்டுவிடுவதாகப் புகார்கள் எழுந்தன.

எனவே, பாலாற்றில் மணல் அள்ளும் அனைத்து மாட்டு வண்டிகளின் உரிமையாளர்களும், முறையாக அந்தந்தப் பகுதி வட்டாட்சியரிடம் தங்களது மாட்டு வண்டிகளைப் பதிவு செய்துகொள்ள வேண்டும்.

மேலும், குடிநீர்த் திட்டக் கிணறுகள், பாலங்கள் உள்ள இடங்களைச் சுற்றி 500 மீட்டர் சுற்றளவில் மாட்டு வண்டிகள் மூலம் மணல் அள்ளக் கூடாது. அவ்வாறு மணல் அள்ளினால், மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்படும். பொதுப்பணித்துறையில் ரூ.60 கட்டணம் செலுத்தி மணல் அள்ளும் அனைத்து மாட்டு வண்டிகளின் உரிமையாளர்களுக்கும் இது பொருந்தும்.

உரிய பதிவு இன்றி, அனுமதியின்றி மணல் அள்ளும் மாட்டு வண்டிகளும் பறிமுதல் செய்யப்படும் என்றார் ஆட்சியர் செ.ராஜேந்திரன்

 

மோட்டார் மூலம் குடிநீர் திருடினால் இணைப்பு துண்டிப்பு: ஆட்சியர்

Print PDF

தினமணி 30.07.2009

மோட்டார் மூலம் குடிநீர் திருடினால் இணைப்பு துண்டிப்பு: ஆட்சியர்

விருதுநகர், ஜூலை 29: மின்மோட்டார் மூலம் குடிநீர் திருடினால் இணைப்பு துண்டிக்கப்படும் என விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சிஜி தாமஸ் வைத்யன் தெரிவித்துள்ளார்.

மாவட்டத்தில் குடிநீர் விநியோகம் குறித்த ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தென்மேற்குப் பருவ மழை தாமதமாவதால், பொதுமக்களுக்கும், பள்ளிகள், சத்துணவுக் கூடங்கள், அங்கன்வாடி மையங்கள், ஆதிதிராவிடர் மற்றும் பிற்படுத்தப்பட்ட மாணவ, மாணவிகள் விடுதிகளில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாமல், தொடர்ந்து கண்காணித்து சீராக வழங்குவது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

இதில் ஆட்சியர் சிஜி தாமஸ் வைத்யன் பேசியதாவது:

மாவட்டத்தில் தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் விநியோகிக்கும் பகுதிகளுக்கு அதற்கான நேரத்தை அதிகரிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். நகராட்சி பகுதிகளில் குடிநீர் விநியோகம் சீராக இருக்க வேண்டும். மின் விநியோகத்திலும் திடீர் பாதிப்பு ஏற்படக் கூடாது.

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்துக்கு குடிநீர் கட்டண நிலுவைத் தொகையை ஊராட்சிகள் தாமதமின்றி செலுத்த வேண்டும்.

ஏழாயிரம்பண்ணை கூட்டுக் குடிநீர்த் திட்டம் மூலம் குடிநீர் விநியோகிக்கும் இடங்களில் குழாய்களில் பழுது ஏற்பட்டுள்ளது. இது விரைவில் சரி செய்யப்படும்.

வல்லநாடு கூட்டுக் குடிநீர்த் திட்டத்தில் கைலாசபுரம் நீரேற்று நிலையத்துக்கு மின்சாரம் தடை ஏற்பட்டால், மாற்று இணைப்பு மூலம் மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் விருதுநகர் மாவட்டத்துக்கு குடிநீர் விநியோகம் சீரான முறையில் அமையும்.

மோட்டார் மூலம் குடிநீரை எடுத்தால், மோட்டார் பறிமுதல் செய்யப்படும். குடிநீர் இணைப்பும் துண்டிக்கப்படும். இதற்காக அலுவலர்கள் திடீர் ஆய்வு செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார் ஆட்சியர்.

குடிநீர் வடிகால் வாரிய செயற் பொறியாளர் கதிர்வேல், நிர்வாகப் பொறியாளர் முகமது சுப்புகனி, உதவி செயற் பொறியாளர்கள் சந்திரன், ரெங்கசாமி, சௌந்திரராஜன், ஊராட்சிகள் உதவி இயக்குநர் ராமநாதன், பேரூராட்சிகள் உதவி இயக்குநர் ராமகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

குடிநீர் விநியோகம்: பழுதடைந்த மோட்டார்கள் உடனே மாற்றப்படும் - மேயர்

Print PDF

தினமணி 30.07.2009

குடிநீர் விநியோகம்: பழுதடைந்த மோட்டார்கள் உடனே மாற்றப்படும் - மேயர்

மதுரை, ஜூலை 29: குடிநீர் விநியோகப் பயன்பாட்டில் உள்ள பழுதான மோட்டார்கள், அடிபம்புகள் உடனடியாக மாற்றப்படும் என, மாநகராட்சி மேயர் கோ.தேன்மொழி தெரிவித்தார்.

மேற்கு மண்டலத்துக்கு உள்பட்ட வார்டுகளில் சீரான குடிநீர் விநியோகம் குறித்த ஆய்வுக் கூட்டம், மேயர் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. ஆணையர் (பொறுப்பு) சக்திவேல் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் பங்கேற்ற மாமன்ற உறுப்பினர்கள், தங்களது வார்டுகளில் குடிநீரில் சாக்கடை கலந்து வருவதை சரிசெய்யவும், குடிநீர் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள குறைபாடுகளை நீக்கவும், பழுதடைந்த குழாய்களை மாற்றவும், சீராக குடிநீர் விநியோகிக்க வேண்டும் எனவும் கோரினர்.

மேலும், ஆபரேட்டர்கள் சரியான அளவு குடிநீரைத் திறந்துவிடுவதில்லை எனவும், மூடி இல்லாத பாதாளச் சாக்கடைகளுக்கு உடனடியாக மூடிகள் அமைக்கவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர்.

இதையடுத்து மேயர் பேசுகையில், பழுதான நிலையில் உள்ள போர்வெல் மோட்டார்கள் மற்றும் அடிபம்பு மோட்டார்களை உடனடியாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். சரியான அளவு குடிநீர் விநியோகிக்கவும், பாதாளச் சாக்கடைக்கான மூடிகளை உடனடியாக அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

மோட்டார் வைத்து குடிநீர் உறிஞ்சுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மேயர் எச்சரித்தார்.

கூட்டத்தில் நிர்வாகப் பொறியாளர் மோகன்தாஸ், உதவி ஆணையர் (மேற்கு) ரவீந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 


Page 371 of 390