Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

இன்றுமுதல் 2 நாளுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம்

Print PDF
தினமணி       10.06.2013

இன்றுமுதல் 2 நாளுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம்


காஞ்சிபுரம் நகராட்சியில் திங்கள்கிழமை முதல் 2 நாளைக்கு ஒரு முறைதான் குடிநீர் விநியோகிக்கப்படும் என்று நகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் நகராட்சிக்குள்பட்ட பகுதியில் சுமார் 2.25 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். இவர்களின் குடிநீர் தேவைக்காக காஞ்சிபுரம் ஓரிக்கை பாலாற்று படுகை மற்றும் வேலூர் மாவட்டம் திருமுக்கூடல் பாலாற்று படுகைகளில் ஆழ்துளை கிணறுகள் அமைத்து குடிநீர் கொண்டு வரப்படுகிறது.

இவ்வாறு கொண்டு வரப்படும் குடிநீர், நகரில் 9 இடங்களில் உள்ள மேல்நிலை தொட்டிகளில் நிரப்பப்பட்டு, நகரின் பல்வேறு பகுதிகளுக்கு தினமும் விநியோகிக்கப்பட்டு வந்தது. காஞ்சிபுரம் மாவட்டத்திலேயே காஞ்சிபுரத்தில் மட்டும்தான் தினமும் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், கடந்த ஆண்டு பருவ மழை பொய்த்ததால் பாலாற்று படுகைகளில் நிலத்தடிநீர் குறைந்தது. மேலும், வேலூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் பாலாற்றில் அதிக அளவு மணல் கொள்ளை நடந்து வருகிறது.

இதன் விளைவாக இப்போது பாலாற்று படுகையில் கிடைக்கும் குடிநீரின் தன்மையும் நாளுக்கு நாள் மாறி வருகிறது. மேலும் நிலத்தடி நீர் மட்டமும் அதலபாதாளத்துக்குச் சென்று விட்டது.

இதனால் காஞ்சிபுரத்தின் குடிநீர் ஆதாரம் முற்றிலுமாக முடங்கிவிட்டது. இதன் விளைவாக கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக முறையாக குடிநீர் வழங்கமுடியாமல் நகராட்சி திணறி வந்தது.

2 நாளைக்கு ஒரு முறை குடிநீர்: இந்நிலையில் காஞ்சிபுரத்தில் திங்கள்கிழமை முதல் 2 நாளைக்கு ஒரு முறைதான் குடிநீர் விநியோகம் செய்யப்படும் என்று நகர்மன்ற உறுப்பினர்களுக்கு ஆணையர் விமலா கடிதம் அனுப்பியுள்ளார். அக்கடிதத்தின் விவரம்:

தற்போது நிலவிவரும் பருவமழை பற்றாக்குறை காரணமாக ஏற்பட்டுள்ள வறட்சியால் பாலாற்று படுகைகளில் குடிநீர் ஆதாரம் வெகுவாகக் குறைந்துவிட்டது. இதனால் நகராட்சி மக்களுக்கு வழங்க வேண்டிய குடிநீரின் அளவு குறைந்துவிட்டது.

இந்தச் சூழ்நிலையில் நகராட்சி பகுதிகளில் போதிய அழுத்தத்துடன் தினமும் குடிநீர் வழங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பாலாற்று படுகைகளில் குடிநீர் ஆதாரம் அதிகரிக்கும் வரை திங்கள்கிழமை முதல் 2 நாளைக்கு ஒருமுறை என்ற அடிப்படையில் குடிநீர் விநியோகம் செய்யப்படும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 நகராட்சி நிர்வாகம் முன்கூட்டியே திட்டமிட்டு முறையான நடவடிக்கைகளை எடுத்திருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது என்று நகர்மன்ற உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
 

நாளை குடிநீர் வாரிய குறைதீர்க் கூட்டம்

Print PDF
தினமணி          07.06.2013

நாளை குடிநீர் வாரிய குறைதீர்க் கூட்டம்


குடிநீர் மற்றும் கழிவு நீர் குறித்த பிரச்னைகளுக்கான குறைதீர்ப்புக் கூட்டம் சனிக்கிழமை (ஜூன் 8) குடிநீர் வாரிய பகுதி அலுவலங்களில் நடைபெற உள்ளது.

இது குறித்து குடிநீர் வாரிய மேலாண் இயக்குநர் பி.சந்திரமோகன் வெளியிட்ட செய்தி:

ஜூன் 8-ஆம் தேதி இம்மாதத்திற்கான குறைதீர்க் கூட்டம் நடைபெறும். இதில் பொதுமக்கள் பங்கேற்று குடிநீர் மற்றும் கழிவுநீர் குறித்த தங்களின் பிரச்னைகளை மனுக்கள் வாயிலாக தெரிவிக்கலாம்.

திருவொற்றியூர், மணலி, மாதவரம், தண்டையார்பேட்டை, மாயவரம், திரு.வி.க.நகர், அம்பத்தூர், அண்ணா நகர், தேனாம்பேட்டை, உள்ளிட்ட இடங்களில் உள்ள குடிநீர் வாரிய பகுதி அலுவலகங்களில் காலை 10 முதல் பிற்பகல் 1 மணி வரை கூட்டம் நடைபெறும்.

ஒவ்வொரு பகுதி அலுவலகத்திலும் குடிநீர் வாரிய மேற்பார்வைப் பொறியாளர் தலைமையில் குறைதீர்க் கூட்டம் நடைபெற உள்ளது. கடந்த மாதம் நடந்த கூட்டத்தில் 26 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. அதில் 22 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

மாநகராட்சி பகுதியில் இன்று குடிநீர் வினியோகம் "கட்'

Print PDF
தினமலர்                 06.06.2013

மாநகராட்சி பகுதியில் இன்று குடிநீர் வினியோகம் "கட்'


சேலம்: சேலம் மாநகராட்சி பகுதியில், இன்று (6ம் தேதி) குடிநீர் வினியோகம் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.இதுகுறித்து, மாநகராட்சி கமிஷனர் அசோகன் வெளியிட்ட் அறிக்கை:

சேலம் மாநகராட்சிக்கு நீரேற்றி வழங்கும், மேட்டூர்- நங்கவள்ளி பிரதான குழாயில் கசிவு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளால் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. அதனால், ஜூன், 6ம் தேதி ஒரு நாள் மட்டும், குடிநீர் வினியோகம் நிறுத்தம் செய்யப்பட உள்ளது. பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்தி கொள்ளவும்.
 


Page 46 of 390