Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

சேலம் மாநகராட்சியில் குடிநீர் சப்ளை இன்று நிறுத்தம்

Print PDF
தினத்தந்தி         06.06.2013

சேலம் மாநகராட்சியில் குடிநீர் சப்ளை இன்று நிறுத்தம்


சேலம் மாநகராட்சிப் பகுதிகளுக்கு குடிநீர் வழங்கும் மேட்டூர்–நங்கவள்ளி குடிநீர் குழாயில் கசிவு ஏற்பட்டுள்ளது. அப்பகுதிகளில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தினால் பராமரிப்பு பணிகள் இன்று(வியாழக்கிழமை) மேற்கொள்ளப்படுகிறது. அதையொட்டி இன்று(6–ந்தேதி) ஒரு நாள் மட்டும் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் குடிநீர் விநியோகம் இருக்காது. எனவே, பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்தி மாநகராட்சிக்கு ஒத்துழைக்குமாறு ஆணையாளர் எம்.அசோகன் கேட்டுக்கொண்டுள்ளார்.
 

சென்னை குடிநீர் வாரிய அதிகாரி தகவல்: சென்னையில் லாரிகள் மூலம் குடிநீர் சப்ளை வழக்கம்போல நடைபெறும் 8–ந்தேதி முதல் நடைபெற இருந்த லாரிகள் வேலை நிறுத்தம் வாபஸ்

Print PDF
தினத்தந்தி               06.06.2013

சென்னை குடிநீர் வாரிய அதிகாரி தகவல்: சென்னையில் லாரிகள் மூலம் குடிநீர் சப்ளை வழக்கம்போல நடைபெறும் 8–ந்தேதி முதல் நடைபெற இருந்த லாரிகள் வேலை நிறுத்தம் வாபஸ்


சென்னைக்கு குடிநீர் சப்ளை செய்யும் லாரிகளின் வாடகை கட்டணம் உயர்த்தப்பட்டதால் 8–ந்தேதி முதல் செய்ய இருந்த லாரிகள் வேலை நிறுத்தம் வாபஸ் பெற்றதாகவும், வழக்கம்போல லாரிகள் மூலம் குடிநீர் சப்ளை செய்யப்படும் என்றும் சென்னை குடிநீர் வாரிய அதிகாரி தெரிவித்தார்.

குடிநீர் சப்ளை

சென்னை நகரில் குடிநீர் குழாய்கள் மூலம் வீடுகளுக்கு குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. இருப்பினும் சென்னை குடிநீர் வாரியம் லாரிகளை ஒப்பந்த அடிப்படையில் பேசி அந்த லாரிகள் மூலமாகவும் தண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது. தற்போது டீசல் விலை உயர்ந்துவிட்டதால் இந்த லாரிகளுக்கு வாடகை கட்டணத்தை உயர்தக்கோரி குடிநீர் சப்ளை செய்யும் லாரிகள் 8–ந்தேதி முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக லாரிகள் சங்கம் முடிவு செய்திருந்தது.இது குறித்து நேற்று சென்னை குடிநீர்வாரிய தலைமை பொறியாளரிடம் கேட்டதற்கு அவர் அளித்தபதில் வருமாறு:–

பேச்சுவார்த்தையில் உடன்பாடு

சென்னையில் 360 லாரிகள் மூலம் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. இந்த லாரிகள் சென்னை குடிநீர் ஏற்றும் நிலையங்களில் இருந்து தண்ணீரை நிரப்பிக்கொண்டு சென்னை நகரில் உள்ள தெருக்களுக்கு சென்று தேவையான இடங்களில் சப்ளை செய்து வருகின்றன.இந்த லாரிகளுக்கு தற்போது வழங்கப்படும் வாடகையை விட அதிகரித்து லாரி உரிமையாளர்கள் கேட்டிருந்தனர். லாரி உரிமையாளர்களும், சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகளும் கடந்த 3–ந்தேதி பேசினார்கள்.பேச்சுவார்த்தையில் சுமுக உடன்பாடு ஏற்பட்டது. வாடகை கட்டணத்தை உயர்த்த சென்னை குடிநீர் வாரியம் ஒப்புக்கொண்டது.

வேலை நிறுத்தம் வாபஸ்

அதன்படி அவர்கள் 8–ந்தேதி முதல் ஈடுபட இருந்த வேலைநிறுத்தத்தை திரும்ப பெற்றுக்கொண்டதாக தெரிவித்தனர். அதனால் வழக்கம்போல சென்னையில் லாரிகள் குடிநீர் சப்ளை செய்யும். வேலை நிறுத்தம் எதுவும் இல்லை. வேலைநிறுத்தம் இல்லை என்று லாரி உரிமையாளர்களும் அறிக்கை விடுவார்கள்.இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.
 

அனைத்துப் பகுதிகளுக்கும் குடிநீர் விநியோகம்: ஒப்பந்த லாரிகளுக்கு குடிநீர் வாரியம் உத்தரவு

Print PDF
தினமணி              06.06.2013

அனைத்துப் பகுதிகளுக்கும் குடிநீர் விநியோகம்: ஒப்பந்த லாரிகளுக்கு குடிநீர் வாரியம் உத்தரவு


சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு உள்ள பகுதிகள் எதுவாக இருந்தாலும் அந்தப் பகுதிகளுக்கு குடிநீர் விநியோகிக்க வேண்டும் என்று ஒப்பந்த லாரி உரிமையாளர்களுக்கு குடிநீர் குடிநீர் வாரியம் உத்தரவிட்டுள்ளது.

வரும் 8-ஆம் தேதியிலிருந்து குடிநீர் வாரியத்தின் ஒப்பந்த லாரிகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக வெளியான செய்தி தவறானது. லாரி உரிமையாளர்கள் அதுபோன்ற அறிவிப்பு எதையும் எங்களுக்குத் தெரிவிக்கவில்லை என்றும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

தற்போது 9 ஆயிரம் லிட்டர் மற்றும் 6 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 335 ஒப்பந்த லாரிகள் மூலம் நகரில் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. கோடை கால குடிநீர் பற்றாக்குறையைத் தவிர்க்கும் வகையில் 20 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 33 டேங்கர் லாரிகள் புதிதாக வாடகைக்கு அமர்த்தப்பட்டுள்ளன.

நாளொன்றுக்கு 4 ஆயிரம் நடைகள், லாரிகள் மூலம் நகரில் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கட்டண உயர்வு கோரி ஒப்பந்த லாரி உரிமையாளர்கள் வரும் 8-ஆம் தேதி முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக செய்திகள் வெளியாகின. இது குறித்து குடிநீர் வாரிய மேலாண் இயக்குநர் பி.சந்திரமோகன் கூறியது:

9 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட லாரிகள் ஒரு முறை குடிநீர் விநியோகிக்க ரூ.304.80 வழங்கப்பட்டு வந்தது. தற்போது அது ரூ.319.80 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 6 ஆயிரம் லிட்டர் லாரிகளுக்கு ரூ.229.47-லிருந்து ரூ.252.13 ஆக கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவு கடந்த 3-ஆம் தேதி வெளியிடப்பட்டு லாரி உரிமையாளர்களுக்கு 4-ஆம் தேதி தெரிவிக்கப்பட்டது.

அனைத்துப் பகுதிகளுக்கும் இயக்க வேண்டும்: விரிவாக்கப்பட்ட பகுதிகளுக்கு குடிநீர் எடுத்துச் செல்ல முடியாது எனவும், அதற்கு அதிகக் கட்டணம் வழங்குமாறும் லாரி உரிமையாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

ஒப்பந்த விதிகளின்படி குடிநீர்த் தட்டுப்பாடு உள்ள எந்தப் பகுதியாக இருந்தாலும், அங்கு லாரிகள் இயக்கப்பட வேண்டும். குறைந்த தொலைவில்தான் லாரிகளை இயக்குவோம் என்ற அவர்களின் கோரிக்கை ஏற்கப்படாது.

வழக்கம்போல நகரில் லாரி குடிநீர் விநியோகம் நடைபெறும். அதில் தடை ஏற்பட வாய்ப்பில்லை என்றார் அவர்.

இந்த நிலையில் லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யும்போது, அவ்வப்போது இடத்தை மாற்றிவிடும் நடவடிக்கைகளை கைவிடக் கோரி லாரி உரிமையாளர்கள் குடிநீர் வாரியத்துடன் வியாழக்கிழமை பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். இந்தப் பேச்சுவார்த்தை முடிவின் அடிப்படையில்தான் வேலைநிறுத்தம் குறித்த தெளிவான அறிவிப்பை வெளியிட முடியும் என்று ஒப்பந்த லாரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
 


Page 47 of 390