Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

ஒகேனக்கல் குடிநீர் திட்டத்தை முதல்வர் தொடங்கி வைக்கிறார்

Print PDF

தினபூமி                 29.05.2013

ஒகேனக்கல் குடிநீர் திட்டத்தை முதல்வர் தொடங்கி வைக்கிறார்

http://www.thinaboomi.com/sites/default/files/imagecache/story_thumbnail/Jaya1(C)_100.jpg

சென்னை, மே.29 - தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சேர்ந்த 30 லட்சம் மக்கள் பயன்பெறும் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தை முதல்-அமைச்சர் ஜெயலலிதா சென்னையில் இருந்தபடி வீடியோ கான்பரன்சிங் மூலம்  இன்று (புதன்கிழமை) தொடங்கி வைக்கிறார். இதன்மூலம் இரு மாவட்ட மக்களின் நீண்டகால கனவு நனவாகிறது.

தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய இரண்டும் வறட்சி பாதித்த மாவட்டங்கள் ஆகும். இங்குள்ள நிலத்தடி நீரில் புளோரைடு உப்பின் அளவு 1.5 மில்லி கிராம் முதல் 12.4 மில்லி கிராம் வரை உள்ளது. இது அனுமதிக்கப்பட்ட அளவைவிட மிகவும் அதிகம். வேறு வழியில்லாமல் இந்த நிலத்தடி நீரைப் பயன்படுத்துவதால் பற்கள் மஞ்சள் நிறமாக மாறுதல், மூட்டு தேய்மானம், முதுகெலும்பு, கை, கால் வளைதல், முடக்குவாதம் போன்ற பாதிப்புகளுக்கு மக்கள் ஆளாகிறார்கள். இந்த நோய்களைக் கட்டுப்படுத்தவும், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கவும் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் தொடங்கப்பட்டது.

முதல்-அமைச்சர் ஜெயலலிதா 2001-2006-ம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தை ஜப்பான் நாட்டு நிதி உதவியோடு நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொண்டார். தற்போது 3-வது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள முதல்-அமைச்சர் ஜெயலலிதா, ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று உத்தரவிட்டார். இதையடுத்து இந்த திட்டப் பணிகளை அமைச்சர்கள், அதிகாரிகள் அடிக்கடி ஆய்வு செய்து திட்டப் பணிகளை முடுக்கிவிட்டனர்.

அதைத்தொடர்ந்து ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகள் இப்போது ரூ.1,928 கோடி செலவில் முடிக்கப்பட்டு உள்ளது. சோதனை ஓட்டமும் நடத்தப்பட்டது. காவிரி ஆற்றில் இருந்து ஏறத்தாழ 1,150 மீட்டர் உயரத்திற்கு அதாவது 1.25 கிலோ மீட்டர் உயரத்திற்கு தண்ணீரை பம்பிங் செய்து தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள அனைத்துப் பகுதிகளுக்கும் குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. மொத்தம் 9 ஆயிரத்து 965 கிலோ மீட்டர் தூரத்திற்கு குடிநீர்க் குழாய்கள் பதிக்கப்பட்டு உள்ளன.

தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 2 மாவட்டங்களைச் சேர்ந்த 30 லட்சம் மக்கள் பயன்பெறும் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தை முதல்-அமைச்சர் ஜெயலலிதா இன்று (புதன்கிழமை) சென்னை தலைமை செயலகத்தில் வீடியோ கான்பரன்சிங் மூலம் தொடங்கி வைக்கிறார். அதே நேரத்தில் தர்மபுரி அரசு மருத்துவமனை அருகே நடைபெறும் விழாவில் அமைச்சர்களும், அதிகாரிகளும் பங்கேற்கின்றனர். இதன் மூலம் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் நீண்டகால கனவு நனவாகிறது

இந்த திட்டத்தின் மூலம் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சேர்ந்த 7,679 ஊரகக் குடியிருப்புகளில் 50 சதவீத குடியிருப்புகளுக்கும், 16 பேரூராட்சிகளுக்கும், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர் ஆகிய 3 நகராட்சிகளுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படும். இந்த திட்டம் பயன்பாட்டுக்கு வருவதன் மூலம் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் நீண்டகால கனவு நனவாகிறது. இரு மாவட்ட மக்களும் இப்போதிருந்தே மகிழ்ச்சியில் திளைக்கின்றனர்.

 

ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம்: முதல்வர் இன்று தொடக்கிவைக்கிறார்

Print PDF
தினமணி        29.05.2013

ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம்: முதல்வர் இன்று தொடக்கிவைக்கிறார்

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் பல ஆண்டு கால குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையிலான ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை தமிழக முதல்வர்

ஜெயலலிதா புதன்கிழமை (மே 29) தொடக்கிவைக்கிறார்.

சென்னையிலிருந்து காணொலிக் காட்சி மூலம் (விடியோ கான்பரன்சிங்) திட்டத்தைத் தொடக்கிவைக்க தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்கள் நேரடியாக காணும் வகையில் விழா ஏற்பாடுகள் இரு மாவட்டங்களிலும் செய்யப்பட்டுள்ளன.

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள 3 நகராட்சிகள், 17 பேரூராட்சிகள், 18 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 6,755 குடியிருப்புகளுக்கு சுகாதாரமான குடிநீர் வழங்கவும், புளோரோசிஸ் நோயைக் கட்டுப்படுத்தவும் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம் ரூ.1,928 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படுகிறது.

இதில், ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை நிதி ரூ.1,585.60 கோடியாகும். தமிழக அரசின் நிதி ரூ.307.48 கோடியாகும். இவைத் தவிர நகராட்சி, பேரூராட்சிகளின் பங்களிப்பாக ரூ.35.72 கோடி வழங்கப்பட்டுள்ளது. மேலும், ஆண்டு பராமரிப்பு செலவாக ரூ.63.67 கோடிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

5 தொகுப்புகளாக நடைபெற்று வந்த பணிகளில் 90 சதத்துக்கும் மேலான பணிகள் முடிவடைந்துள்ளன. இதுவரை ரூ.1,200 கோடிக்கு மேல் செலவிடப்பட்டுள்ளது. காவிரியாற்றிலிருந்து இயல்பு நீரை நீரேற்றம் செய்வதற்கான தலைமையிடப் பணிகள், குழாய்கள் பதிக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன. நாளொன்றுக்கு 160 மில்லியன் லிட்டர் சுத்திகரிப்புத் திறன் கொண்ட நீர் சுத்திகரிப்பு நிலையப் பணிகளும் முடிவடைந்துள்ளன. மின்னியந்திர உபகரணங்கள், இயல்பு நீர், சுத்திகரிக்கப்பட்ட நீர் கொண்டு செல்லும் குழாய்களின் சோதனைப் பணிகள் நிறைவு பெற்றுள்ளன.

இரு மாவட்டங்களிலும் இந்தத் திட்டத்துக்காக பதிக்கப்பட்ட குழாய்கள் சுத்தம் செய்யப்பட்டுள்ளன. பொது சமநிலை நீர்த்தேக்கத் தொட்டியிலிருந்து இயல்பு நீர் திறக்கப்பட்டு தொகுப்பு 2-இன் கீழ் தருமபுரி நகராட்சிப் பகுதி மக்களுக்கு குடிநீர் வழங்கும் வகையில் நெசவாளர் காலனியில் புதிதாக கட்டப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிக்கு தண்ணீர் ஏற்ற வகை செய்யப்பட்டுள்ளது.

தொகுப்பு 3-இன் கீழ் மொரப்பூர் பிரிவுச் சாலையிலிருந்து குழாய்கள் சுத்தப்படுத்தப்பட்டுள்ளன. தொகுப்பு 5-இன் கீழ் பென்னாகரம் மடத்திலிருந்து 18 கி.மீ. தொலைவு வரையில் வெளிப்போக்கி குழாய் மூலம் தண்ணீர் வெளியேற்றப்பட்டுள்ளது.

இதே முறையில் திட்டத்தின் அனைத்துத் தொகுப்புகளிலும் அமைக்கப்பட்டுள்ள பிரதான குழாய், கிளை குழாய்கள், பிரிவு பிரதான குழாய்கள் சுத்தப்படுத்தப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டுள்ளது.

மேலும், ஒகேனக்கல்லில் உள்ள நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து பொது சமநிலை நீர்த்தேக்கத் தொட்டிக்கு குடிநீரேற்றம் செய்யப்பட உள்ளது. 4 தொகுப்புகளின் கீழ் குழாய் பதித்தல், கட்டுமானப் பணிகள், மின் இயந்திரங்கள் நிறுவும் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன.

7,679 ஊரகக் குடியிருப்புகளில் 50 சத குடியிருப்புகள், 16 பேரூராட்சிகள், 3 நகராட்சிகள் ஆகியவற்றுக்கு குடிநீர் வழங்கும் பணி புதன்கிழமை முதல் தொடங்குகிறது.

தருமபுரி: தருமபுரியில் அரசுப் பொது மருத்துவமனை எதிரேயுள்ள அம்பேத்கர் காலனி அருகேயுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைவிடத்தில் விழா நடைபெறுகிறது. புதன்கிழமை முற்பகல் 11 மணிக்கு முதல்வர் ஜெயலலிதா காணொலிக் காட்சியில் தொடக்கிவைக்க அதை நேரடியாகக் காணும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கிருஷ்ணகிரி: இதேபோல, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒசூரை அடுத்துள்ள தின்னூர் பொதுப் பணித் துறை வளாகத்தில் உள்ள சமநிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைவிடத்தில் விழா நடைபெறுகிறது. இரு விழாக்களிலும் மாவட்ட ஆட்சியர்கள் ஆர்.லில்லி (தருமபுரி), டி.பி. ராஜேஷ் (கிருஷ்ணகிரி) மற்றும் மக்கள் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் என பலர் பங்கேற்கவுள்ளனர்.
 

ரூ.3 கோடியில் 100 ஆழ்குழாய் மூலம் குடிநீர்... தேவையான இடங்களுக்கு 8 லாரிகளில் சப்ளை

Print PDF
தினமலர்               27.05.2013

ரூ.3 கோடியில் 100 ஆழ்குழாய் மூலம் குடிநீர்... தேவையான இடங்களுக்கு 8 லாரிகளில் சப்ளை


ஈரோடு: ஈரோடு மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய இதுவரை, 100 ஆழ்குழாய், மூன்று கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து குடிநீர் தேவை அதிகரித்து வரும் பகுதிகளுக்குல, 12 லாரிகளில் தண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது.

ஈரோடு மாநகராட்சி பகுதியில் உள்ள, 60 வார்டுகளிலும் தினமும் மாநகராட்சி சார்பில் காவிரி ஆற்றில் இருந்து, 5.40 கோடி லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டு, குடிநீராக சப்ளை செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களாக காவிரியில் ஓடிய தண்ணீரை வைத்து, ஈரோடு மாநகராட்சி, மக்களுக்கு அரையும், குறையுமாக குடிநீர் தேவையை பூர்த்தி செய்தது. தற்போது முற்றிலும் தண்ணீர் நின்று போனது.

ஈரோடு மாநகராட்சியில் நான்கு மண்டலத்துக்கு எட்டு லாரிகள் மூலம் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. குடிநீர் தட்டுப்பாடு உள்ள பகுதிகளில் அவசரம் கருதி நான்கு லாரிகள் உட்பட மொத்தம், 12 லாரிகள் குடிநீர் சப்ளை செய்யும் பணி நடக்கிறது.

மாநகராட்சியோடு இணைக்கப்பட்ட நகராட்சிகளான சூரம்பட்டி, காசிபாளையம், வீரப்பன்சத்திரம், பெரியசேமூர் மற்றும் டவுன் பஞ்சாயத்துகளான சூரியம்பாளையம், பெரிய அக்ரஹாரம் மற்றும் பஞ்சாயத்துகளான கந்தம்பாளையம், எல்லப்பாளையம், வில்லரசம்பட்டி, திண்டல், முத்தம்பாளையம் ஆகிய பகுதிகளில், 10 முதல், 15 நாட்கள் ஒரு முறை குறைந்த அளவு தண்ணீர் வழங்கப்படுகிறது.

குடிநீர் தட்டுப்பாட்டை போக்க, 34 ஆழ் குழாய்களை அமைக்க இரண்டு மாதங்களுக்கு முன் அரசு அனுமதி வழங்கி உள்ளது. ஏற்கனவே, நமக்கு நாமே திட்டத்தில், 20 ஆழ்குழாய்களும், மாநகராட்சி பொது நிதியில் இருந்து வார்டு வாரியாகவும், குடிநீர் அதிக தட்டுபாடு உள்ள இடத்தில் கூடுதலாகவும் ஆழ்குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன.

குடிநீருக்காக மூன்று கோடி ரூபாய் செலவில், 100க்கும் மேற்பட்ட ஆழ்குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. வறட்சியான பகுதியில் ஆழ் குழாய்கள் போடும்போது, அதிக ஆழத்தில் ஆழ்குழாய்கள் அமைக்க வேண்டியதுள்ளது. இதற்கென கூடுதல் செலவாகிறது. ஆனாலும், குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு ஆழ்குழாய் மற்றும் லாரிகள் மூலம் குடிநீர் வழங்கி மாநகராட்சி நிர்வாகம் சமாளித்து வருகிறது.

இதுகுறித்து துணை மேயர் பழனிசாமி கூறியதாவது: ஈரோடு மாநகராட்சியில், குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்க, மாநகராட்சி பொது நிதி, நமக்கு நாமே திட்டம் மூலம், 100 ஆழ்குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதியாக ஆழ்குழாய்கள் போடப்படுகிறது. பல இடங்களில் அதிகமான ஆழத்தில் ஆழ்குழாய்கள் போட்டால் தான் தண்ணீர் வருகிறது.

மேலும், எட்டு லாரிகள் மூலம் குடிநீர் வழங்கும் நிலையில், மேலும் நான்கு லாரிகள் மூலம் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குடிநீர் தேவைக்காக மேட்டூர் அணையில் இருந்து, 800 கனஅடி தண்ணீர் காவிரியில் திறந்து விடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

வீரப்பன்சத்திரம் மண்டல துணை கமிஷனர் அசோக்குமார் கூறியதாவது: ஈரோடு சம்பத் நகர் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் ஏற்கனவே ஆழ்குழாய்கள் உள்ள பகுதிகளில், மேல்நிலை தொட்டி கட்டப்பட்டு தண்ணீர் தட்டுப்பாடு இல்லாமல் பராமரிக்கப்பட்டு வருகிறது. தற்போது, அக்குடியிருப்பின் பின் பகுதியில் மேலும், 15 பொது குழாய்கள் அமைக்கும் பணி தற்போது நடந்து வருகிறது.

குடிநீர் தேவைகள் அதிகமுள்ள பகுதிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து பொது மக்கள் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து வருகிறோம், என்றார்.
 


Page 50 of 390