Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

"புதுக்கோட்டைக்கு தனி குடிநீர்த் திட்டம்'

Print PDF
தினமணி          23.05.2013

"புதுக்கோட்டைக்கு தனி குடிநீர்த் திட்டம்'


புதுக்கோட்டை நகராட்சிப் பகுதியில் நீடித்துவரும் குடிநீர்ப் பற்றாக்குறையைப் போக்கும் வகையில், புதுக்கோட்டை நகருக்கென தனி குடிநீர்த் திட்டத்தை உருவாக்கும் முயற்சியை மேற்கொண்டுள்ளதாக புதுகையில் புதன்கிழமை நடைபெற்ற நகர்மன்ற அவசரக் கூட்டத்தில் நகராட்சி ஆணையர் ஆர். முருகேசன் தெரிவித்தார்.

 புதுக்கோட்டையில் நகர்மன்றத் தலைவர் (பொ) எஸ். அப்துல்ரகுமான் தலைமையில், நகராட்சிப் பொறியாளர் ஜெ. சுப்பிரமணியன் முன்னிலையில் நடைபெற்ற நகர்மன்றக் கூட்டத்தில் குடிநீர்ப் பிரச்னை குறித்து பெரும்பாலான உறுப்பினர்கள் எழுப்பிய கோரிக்கைகளுக்கு விளக்கமளித்தபோது ஆணையர், இத்தகவலை தெரிவித்தார்.

 நகர்மன்றத் தலைவர்: புதுக்கோட்டை மாவட்டத்தில் 2 ஆயிரம் ஏக்கரில் தொழில் பூங்காவும், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு இணையாகத் தரம் உயர்த்துவதாக அறிவித்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு நகர்மன்றம் சார்பில் பாராட்டுதலையும், நன்றியையும் அனைவரின் சார்பிலும் பதிவு செய்கிறேன். இதற்கு அனைத்து உறுப்பினர்களும் மேசையைத்தட்டி ஒலி எழுப்பி வரவேற்றனர்.

 எம். மோகன் (காங்): எனது வார்டில் உள்ள ராணியார் அரசு மகப்பேறு மருத்துவமனையின் கிழக்குப் பகுதியில் உள்ள வீதியில் கோழி இறைச்சிக் கடைக்காரர்கள் கழிவுகளை குவித்து வருகின்றனர். இதற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 வேங்கை அருணாச்சலம் (சுயே): தஞ்சை சாலையில் உள்ள தனியார் பெட்ரோல் விற்பனை நிலையம் முதல் அண்ணாசிலை வரையுள்ள சாலையில் புதை சாக்கடைத் திட்டத்துக்கு தோண்டப்பட்டு, மூடப்பட்ட சாலைகள் சேதமடைந்துள்ளன. காமராஜபுரம் 1 முதல் 10 வீதிகள் வரை வசிக்கும் மக்களுக்கு கடந்த 10 நாள்களாக குடிநீர் கிடைக்காத நிலை நீடிக்கிறது.

 ஏ. இப்ராகிம்பாபு (காங்): எஸ்.எஸ். நகர்ப் பகுதியில் கடந்த 15 நாள்களாக குடிநீர் விநியோகிக்கப்படாத நிலை உள்ளது. மேலும், காவிரி கூட்டுக் குடிநீர்த் திட்டத்தில் குடிநீர்பெறும் விராலிமலை, இலுப்பூர், அன்னவாசல் ஆகிய பகுதிகளில் காவிரி குடிநீர் வரும் பிரதானக் குழாய்களில் மின் மோட்டார் மூலம் நீர் உறிஞ்சப்படுவதைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் மூலம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 நகர்மன்றத் தலைவர்: குடிநீரை லாரிகள் மூலம் விநியோகிப்பதற்காக முறையான அட்டவணை தயாரித்து ஓட்டுநர்களிடம் அளிக்கப்பட்டு, அதன்படி விநியோகம் செய்யப்படுகிறது. இதில் நகர்மன்ற உறுப்பினர்கள் குறுக்கிடாமல் முழு ஒத்துழைப்பு அளித்தால் இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படாது.

 என்.கே. அறிவுடைநம்பி (திமுக): புதை சாக்கடைத் திட்டப் பணிகள் கடந்த மார்ச் மாதம் முடிவடைந்து விடும் எனக் கூறப்பட்டது. ஆனால், எப்போது பயன்பாட்டுக்கு வரும் எனத் தெரியவில்லை.

 செல்வம் (திமுக): அடப்பன்குளத்தை தூர் வாருவதற்கும் அதில் கிடைக்கும் நீரை குடிநீருக்கு பயன்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 சுப. சரவணன் (திமுக): ஒவ்வொரு ஆண்டும் புதுக்கோட்டையில் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படுவது தொடர் கதையாகி விட்டது. இதற்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில், நகராட்சியில் ஏதேனும் திட்டம் உள்ளதா என்பதை தெரிவிக்க வேண்டும்.

 ஆணையர் முருகேசன்: கடந்த 1996 -ல் கொண்டுவரப்பட்ட காவிரி கூட்டுக் குடிநீர்த் திட்டமானது 15 வழியோர கிராமங்கள், 3 பேரூராட்சிகளைக் கடந்து கடைசியாக புதுக்கோட்டை நகராட்சிக்கு வருகிறது. அதனால், இத்தட்டுப்பாடு தொடர்கிறது. இதற்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில் புதுக்கோட்டைக்கென தனி குடிநீர்த் திட்டத்தை உருவாக்கும் வகையில், குடிநீர் வடிகால் வாரியத்திடம் திட்ட அறிக்கை கேட்டுள்ளோம்.

 இதுதொடர்பாக அடுத்த வாரம் சென்னையில் துறை அதிகாரிகளிடம் ஆலோசனை நடைபெறவுள்ளது. மேலும், நூற்றாண்டு விழாவைப் பொறுத்தவரை சுமார் 70% பணிகள் கடந்த 11 மாதங்களில் நிறைவேற்றப்பட்டுள்ளன.

 இதைத்தொடர்ந்து, இக்கூட்டத்தில் நினைவுத்தூண் அமைத்தல், நகர எல்லையில் நுழைவு வாயில்கள், நகராட்சிக்கு புதிய அலுவலகக் கட்டடம் கட்டுவது, எல்.இ.டி விளக்குகள் பொருத்துவது போன்ற பணிகளுக்கு அனுமதி ஆணை வழக்கப்பட்டுள்ளது.

 மொத்தத்தில் திட்டப் பணிகள் அனைத்தையும் அமைச்சர், எம்எல்ஏ-க்கள், ஆட்சியர் உள்ளிட்டோரின் வழிகாட்டுதலில் விரைந்து முடிக்கப்படும். இதற்கு அனைத்து உறுப்பினர்களும் முழு ஒத்துழைப்புத் தர வேண்டும் என்றார்.
 

புதிய குடிநீர் திட்டங்களை முடிக்க முயற்சி

Print PDF
தினமலர்       22.05.2013

புதிய குடிநீர் திட்டங்களை முடிக்க முயற்சி


குன்னூர்:குன்னூர் மக்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், கரடிபள்ளத்தில் புதிய கிணறு வெட்டப்படுகிறது;கரன்சி குடிநீர் திட்டத்தை செயல்படுத்தவும் முயற்சி நடக்கிறது.குன்னூரின் முக்கிய நீராதாரமாக திகழ்வது ரேலியா அணை. ஆங்கிலேயர் காலத்தில் 10 ஆயிரம் மக்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக, இந்த அணை கட்டப்பட்டது.

தற்போது, மக்கள் தொகை 1.5 லட்சமாக உயர்ந்து விட்ட நிலையிலும், இந்த அணையை தான் நகராட்சி நிர்வாகம் நம்பியுள்ளது.இதனால், அணையில் சேமிக்கப்படும் நீர் போதுமான இருப்பதில்லை. இதனை தவிர, ஜிம்கானா நீர்தேக்கம், கரடிபள்ளம், பந்துமி நீர்தேக்கங்களில் தண்ணீர் தேக்கப்பட்டு, அவற்றை சுற்றியுள்ள பகுதிகளுக்கு தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது. எனினும், மழை பொய்த்த காரணத்தால், நகரின் பல பகுதிகளுக்கு 15 நாட்களுக்கு ஒரு முறைதான் தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது.

இதனால், சீசன் காலத்தில் உள்ளூர் மக்கள் குடிநீருக்காக பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். வரும் காலத்தில் தண்ணீர் தேவையை எதிர்கொள்ள, புதிய குடிநீர் திட்டங்கள் குன்னூருக்கு அவசர அவசியமாக உள்ளது.கமிஷனர் சண்முகம் கூறியதாவது:

குன்னூரின் தண்ணீர் தேவையை பருவ மழை தான் பூர்த்தி செய்கிறது. மழை பொய்த்தால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதை போக்க புதிய நீராதாரங்களை கண்டறிய ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. கரடி பள்ளத்தில் புதிதாக ஒரு கிணறு வெட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதனால், காந்திபுரம் உட்பட பகுதிகளின் தண்ணீர் தேவை பூர்த்தியாகும். ஜிம்கானா நீர்தேக்கத்தில் புதிய தடுப்பணை கட்டப்பட்டு வருகிறது. இந்த பணி முடிந்தால், அப்பகுதியில் கூடுதல் நீர் தேக்க முடியும். கரன்சி குடிநீர் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த பர்லியாறு ஊராட்சி நிர்வாகத்துடன் பேச்சு வார்த்தை நடக்கிறது. கரன்சி வனப்பகுதியில், ஒரு கி.மீ., தூரம் வரை, குழாய்கள் உயரமான பகுதியில் பதிக்கப்பட்டால் இந்த திட்டம் வெற்றி பெறும். ரேலியா அணையில் தடுப்பணை கட்டுவது குறித்து திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு மாநில அரசின் பரிசீலனைக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு சண்முகம் கூறினார்.
 

சேலம் மாநகராட்சிக்கு குடிநீர் சப்ளை செய்ய அணையில் 20 அடி நீள குழாய் பொருத்தம்

Print PDF
தினமலர்       22.05.2013

சேலம் மாநகராட்சிக்கு குடிநீர் சப்ளை செய்ய அணையில் 20 அடி நீள குழாய் பொருத்தம்


மேட்டூர்: மேட்டூர் அணை நீர்மட்டம், 20 அடியாக குறைந்ததால், சேலம் மாநகராட்சிக்கு குடிநீர் வினியோகம் செய்வதற்காக, அணைக்குள் கூடுதல் நீளமுள்ள குழாய்கள் பொருத்தப்பட்டுள்ளது.

மேட்டூர் அணை உட்பகுதியில் உள்ள நீரேற்று நிலையம் மூலம், சேலம் மாநகராட்சிக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. அணை நீர்மட்டம், 100 அடிக்கு மேல் இருக்கும் போது நாள் ஒன்றுக்கு, 2.40 கோடி லிட்டர் குடிநீரும், 50 அடிக்குமேல் இருக்கும் போது, 2.20 கோடி லிட்டர் குடிநீரும் எடுக்கப்பட்டு, சேலம் மாநகராட்சிக்கு வினியோகம் செய்யப்படும்.

நீர்மட்டம், கடந்த டிசம்பர், 19ம் தேதி, 35 அடியாக குறைந்ததால், நீரேற்று நிலையத்தின் தொட்டிக்கும் கீழே நீர்மட்டம் சென்று விட்டது. இதனால், சேலம் மாநகராட்சி நிர்வாகம், அணை நீருக்குள் இரு மிதவை மோட்டார் வைத்து, ஐந்தடி நீள குழாய்கள் பொருத்தி தண்ணீர் உறிஞ்சி, நீரேற்று நிலையத்தின் தொட்டியில் நிரப்பி, அங்கிருந்து பம்பிங் செய்து குடிநீர் சேலம் மாநகராட்சிக்கு வினியோகம் செய்தது.

நான்கு மாதத்துக்கு பின், தற்போது அணை நீர்மட்டம், 20 அடியாக குறைந்து விட்டது. நீரேற்று நிலைய தொட்டிக்கும், நீர் தேக்கத்துக்கும் இடையிலான இடைவெளி, 15 அடியாக அதிகரித்துள்ளது. இதனால், நீர்தேக்கத்தில் இருந்து தொட்டிக்கு, 20 அடி நீளமுள்ள குழாய்கள் சமீபத்தில் பொருத்தப்பட்டுள்ளது.

நீர்மட்டம் மேலும் குறையும் பட்சத்தில், மீண்டும் குழாய்கள் நீளத்தை மாற்றியமைத்து குடிநீர் எடுக்க, வேண்டிய நிலை ஏற்படும், என மாநகராட்சி ஊழியர்கள் தெரிவித்தனர்.
 


Page 52 of 390