Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

மயிலாப்பூர், நந்தனத்தில் நாளை குடிநீர் விநியோகம் ரத்து

Print PDF
தினமணி              14.04.2013

மயிலாப்பூர், நந்தனத்தில் நாளை குடிநீர் விநியோகம் ரத்து

குடிநீர் குழாய் இணைக்கும் பணி காரணமாக மயிலாப்பூர், ஆர்.ஏ.புரம், நந்தனம் உள்ளிட்ட பகுதிகளில் திங்கள்கிழமை (ஏப்ரல் 15) காலை 10 மணி முதல் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 16) பகல் 12 மணி வரை குடிநீர் விநியோகம் தடைபடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து குடிநீர் வாரியத்தின் மேலாண் இயக்குநர் பி.சந்திரமோகன் வெளியிட்ட அறிவிப்பு:-

வேளச்சேரி பகுதியில் பிரதானக் குடிநீர் குழாய் இணைக்கும் பணிகள் ஏப்ரல் 15 மற்றும் 16ஆம் தேதிகளில் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் காரணமாக மயிலாப்பூர், மந்தைவெளி, ஆர்.ஏ.புரம், நந்தனம், பள்ளிப்பட்டு, ஆலந்தூர், பம்மல், பல்லாவரம், பொழிச்சலூர், கவுல்பஜார், அனகாபுத்தூர், நங்கநல்லூர் ஆகிய இடங்களில் அன்றைய தினங்களில் குடிநீர் விநியோகம் தடைபடும்.

லாரிகள் மூலம் குடிநீர் பெற, 8144930909, 8144930912, 8144930913 என்ற செல்பேசி எண்களில் பகுதி பொறியாளர்களைத் தொடர்பு கொள்ளலாம்.
 

ஏப்ரல் 13-ல் குடிநீர் வாரிய குறைதீர் கூட்டம்

Print PDF
தினமணி                 11.04.2013
 
ஏப்ரல் 13-ல் குடிநீர் வாரிய குறைதீர் கூட்டம்
 
குடிநீர் மற்றும் கழிவு நீர் குறித்த பிரச்னைகளுக்கான குறைதீர்ப்புக் கூட்டம் சனிக்கிழமையன்று (ஏப்ரல் 13) குடிநீர் வாரிய பகுதி அலுவலங்களில் நடைபெற உள்ளது.

இது குறித்து குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குநர் பி.சந்திரமோகன் வெளியிட்ட செய்தி:

குடிநீர் வாரியம் சார்பில் மாதத்தின் 2-வது சனிக்கிழமைகளில் குறைதீர்க் கூட்டம் நடைபெற்று வருகிறது. அதன்படி வருகிற 13-ம் தேதி இம்மாதத்திற்கான குறைதீர்க் கூட்டம் நடைபெறும். இதில் பொதுமக்கள் பங்கேற்று குடிநீர் மற்றும் கழிவுநீர் குறித்த தங்களின் பிரச்னைகளை மனுக்கள் வாயிலாக தெரிவிக்கலாம்.

திருவொற்றியூர், மணலி, மாதவரம், தண்டையார்பேட்டை, மாயவரம், திரு.வி.க.நகர், அம்பத்தூர், அண்ணா நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூர், அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள குடிநீர் வாரிய பகுதி அலுவலங்களில் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை குறைதீர்க் கூட்டம் நடைபெறும்.

ஒவ்வொரு பகுதி அலுவலகத்திலும் குடிநீர் வாரிய மேற்பார்வை பொறியாளர் தலைமையில் குறைதீர்க் கூட்டம் நடைபெறும். கடந்த மாதம் நடந்த கூட்டத்தில் 33 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. அதில் 31 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

குடிநீர்த் தட்டுப்பாட்டைச் சமாளிக்க நடவடிக்கை: மாவட்டம் முழுவதும் ஆயிரம் ஆழ்குழாய் கிணறுகள்

Print PDF
தினமணி        11.04.2013

குடிநீர்த் தட்டுப்பாட்டைச் சமாளிக்க நடவடிக்கை:  மாவட்டம் முழுவதும் ஆயிரம் ஆழ்குழாய் கிணறுகள்


குடிநீர்த் தட்டுப்பாட்டைச் சமாளிக்கும் வகையில், மாவட்டம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆழ்குழாய் கிணறுகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிகள் அனைத்தும், இம்மாத இறுதிக்குள் முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

பருவமழை பொய்த்துவிட்ட காரணத்தால், நீர்நிலைகளில் தண்ணீர் வற்றிவிட்டது. மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் நிலத்தடி நீர் குறைந்து விட்டது. இதனால், பல இடங்களில் ஆழ்குழாய் கிணறுகள் வற்றியதால், தண்ணீருக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

மதுரை மாநகராட்சியைப் பொருத்தவரை, மண்டலம் 2-க்கு உட்பட்ட பகுதிகளில் கடும் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. இதனால் பொதுமக்கள் ஆங்காங்கே காலி குடங்களுடன் மறியல், முற்றுகை, ஆர்ப்பாட்டம் என போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஊரகப் பகுதிகளில், மாவட்டத்தில் உள்ள 13 ஒன்றியங்களில் உசிலம்பட்டி, சேடபட்டி, கள்ளிக்குடி, டி.கல்லுப்பட்டி ஆகிய ஒன்றியங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விட்டது. இந்த ஒன்றியங்களுக்கு உள்பட்ட பல கிராமங்களில் குடிநீர் பிரச்னை ஏற்பட்டிருக்கிறது. கோடையைச் சமாளிக்கும் வகையில் குடிநீர் வசதியை ஏற்படுத்திக் கொடுக்க, மாவட்ட நிர்வாகம் பணிகளைத் தீவிரப்படுத்தி உள்ளது.

இப் பணிகள் குறித்து, ஆட்சியர் அன்சுல் மிஸ்ரா புதன்கிழமை கூறியது:

குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படாமல் கோடையைச் சமாளிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. குடிநீர்ப் பிரச்னைகளைத் தீர்ப்பதற்காக தனிப்பிரிவும் அமைக்கப்பட்டுள்ளது. ஏப். 9 ஆம் தேதி வரை 388 புகார்கள் பெறப்பட்டன. இதில் 359 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. 29 புகார்கள் மட்டும் நடவடிக்கையில் இருக்கிறது. மாநகராட்சிப் பகுதியில் இருந்துதான் 80 சதவீத புகார்கள் பெறப்படுகின்றன. அதுகுறித்து மாநகராட்சியினருக்குத் தெரிவிக்கப்பட்டு உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

கோடையைச் சமாளிப்பதற்காக, மாவட்டம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆழ்குழாய் கிணறுகள் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. சில இடங்களில் ஏற்கெனவே இருக்கும் ஆழ்குழாய் கிணறுகளை ஆழப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாநகராட்சிப் பகுதியில் 244 இடங்களில் ஆழ்குழாய் கிணறுகள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில், தற்போது வரை 70 இடங்களில் ஆழ்குழாய்கள் அமைத்து முடிக்கப்பட்டுள்ளன. ஊராட்சிப் பகுதிகளில் 761 ஆழ்குழாய் கிணறுகள் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதேபோல, திருமங்கலம், மேலூர் நகராட்சிகளில் கோடையை சமாளிக்க கூடுதலாக ஆழ்குழாய்க் கிணறுகளை அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் 9 பேரூராட்சிகள் உள்ளன. இவற்றில் குடிநீர்ப் பிரச்னை இல்லையென்றாலும், கோடையைக் கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. சிறு மின்விசை பம்புகள் அமைப்பது, ஏற்கெனவே உள்ள ஆழ்குழாய் கிணறுகளை ஆழப்படுத்துவது என ரூ. 73 லட்சத்தில் 50 பணிகள் துவங்கப்பட்டுள்ளன. இப் பணிகளை, ஏப்ரல் இறுதிக்குள் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்றார் ஆட்சியர்.

ஆழ்குழாய் கிணறுகளில் உள்ள மோட்டார்கள், கை பம்புகள் பழுது ஏற்பட்டால் உடனுக்குடன் சரிசெய்வதற்கு அனைத்து ஊராட்சிகள், பேரூராட்சிகளில் உதிரி பாகங்களை தயார் நிலையில் வைத்திருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஏப்.20 இல் வைகை அணை திறப்பு

மதுரை, ஏப். 10: மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களின் குடிநீர்த் தேவைக்காக, ஏப். 20 ஆம் தேதியில் இருந்து 6 நாள்களுக்கு வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

வைகை ஆற்றை ஆதாரமாகக் கொண்ட குடிநீர்த் திட்டங்களுக்குத் தண்ணீர் கிடைக்கும் வகையில், அணையில் இருந்து 630 கன அடி தண்ணீர் திறந்துவிட முடிவு செய்யப்பட்டுள்ளது. அணையின் அதிகபட்ச கொள்ளளவு 71 அடி. புதன்கிழமை (ஏப். 10) நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 45.8 அடியாக இருந்தது. கடந்த ஆண்டில், இதே நாளில் 49.9 அடியாக நீர்மட்டம் இருந்தது.
 


Page 63 of 390