Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

குடிநீர் பிரச்னையை தீர்க்க 33 வார்டுகளில் ஆழ் துளை கிணறு

Print PDF
தினமலர்          03.04.2013

குடிநீர் பிரச்னையை தீர்க்க 33 வார்டுகளில் ஆழ் துளை கிணறு

தர்மபுரி: தர்மபுரி நகராட்சி பகுதியில் ஏற்பட்டுள்ள குடிநீர் தட்டுப்பாட்டை போக்க, 41 லட்சத்து, 58 ஆயிரம் ரூபாயில், 33 வார்டுகளிலும் ஆழ்துளை கிணறு அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தர்மபுரி நகராட்சி பகுதிக்கு, 58 கி.மீ., தூரத்தில் உள்ள பஞ்சப்பள்ளி சின்னாறு அணையில் இருந்து தண்ணீர் பம்பிங் செய்யப்பட்டு, வினியோகம் செய்யப்படுகிறது. தற்போது, சின்னாறு அணையில் நீரின்றி வறண்ட நிலையில் இருப்பதால், எட்டு நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது.

இதனால், நகரப்பகுதியில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நகரப்பகுதியில் பல இடங்களில் உள்ள ஆழ்துளை பம்புகளிலும் நிலத்தடி நீர் மட்டம் இல்லாமல், தண்ணீர் இன்றி பம்புகளை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வறட்சி நிவாரண திட்டத்தின் கீழ் தர்மபுரி நகராட்சி பகுதியில், 33 வார்டுகளிலும், 41 லட்சத்து, 58 ஆயிரம் மதிப்பில் ஆழ் துளை கிணறு அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் பஞ்சப்பள்ளி சின்னாறு அணையில் நீரேற்று நிலையத்தில் கேலஸி வகை கொண்ட ஆழ்துளை கிணறு அமைத்து, மின் மோட்டார் பொருத்தி தண்ணீர் பம்பிங் செய்யவும் நகராட்சி மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தலா ஆறு லட்ச ரூபாய் மதிப்பில், 36 லட்சத்தில், ஆறு ஆழ்துளை கிணறு அமைக்கவும் நகராட்சி மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நகரப்பகுதியில் ஆழ் துளை கிணறுகள் அமைக்கும் போது, நீர் செறிவு அதிகம் உள்ள இடங்களை தேர்வு செய்து, அமைக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

தங்கசாலை சந்திப்பில் மேம்பால பணி குழாய் மாற்றி அமைக்கும் பணியால் நாளை குடிநீர் வழங்குவதில் தடை போன் செய்தால் லாரியில் சப்ளை

Print PDF

தினகரன்                  03.04.2013

தங்கசாலை சந்திப்பில் மேம்பால பணி குழாய் மாற்றி அமைக்கும் பணியால் நாளை குடிநீர் வழங்குவதில் தடை போன் செய்தால் லாரியில் சப்ளை


சென்னை: தங்கசாலை சந்திப்பில் மேம்பால பணிக்காக குடிநீர் குழாய் மாற்றி அமைக்கப்படுவதால் நாளை சுற்றியுள்ள பகுதியில் குடிநீர் வழங்குவது தடைபடும் என்று குடிநீர்வாரியம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து, குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குனர் சந்திர மோகன் வெளியிட்டுள்ள அறிக்கை:

தங்கசாலை சந்திப்பில் மாநகராட்சி சார்பாக மேம்பாலம் அமைக்கப்படுகிறது. இதன் ஒருபகுதியாக, புதிதாக அமைக்கப்பட்ட குடிநீர் குழாயை, பழைய குடிநீர் குழாயுடன் இணைக் கும் பணி நாளை காலை 10 மணிக்கு தொடங்கி நாளை மறுநாள் மாலை 3 மணி வரை நடக்கிறது. எனவே அந்த சமயத்தில், ராயபுரம், பழைய வண்ணாரப்பேட்டை, புது வண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை, தங்கசாலை மற்றும் பகுதி-4ல் அமைந்துள்ள கோட்டங்கள் 42, 43, 47, 48 பகுதி -5 ல் அமைந்துள்ள கோட்டங்கள் 49, 50, 51, 52, 53, 54, 55 மற்றும் பகுதி-6 ல் அமைந்துள்ள கோட்டங்கள் 73 மற்றும் 77 ஆகிய இடங்களில் குழாய் மூலம் குடிநீர் வழங்குவதில் தடை ஏற்படும்.

எனவே அப்பகுதி மக்கள் தேவையான குடிநீரை முன்கூட்டியே சேமித்து வைத்துக் கொள்ள கேட்டுக் கொள்கிறோம். மேலும் லாரிகள் மூலம் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக பகுதி பொறியாளர்4- 8144930904, பகுதி பொறியாளர்5- 8144930905, பகுதி பொறியாளர்6- 81449- 30906, துணை பகுதி பொறி யாளர்11- 8144930211, துணை பகுதி பொறியாளர் 13- 8144930213 ஆகிய செல்போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

 

அம்பராம்பாளையம் தலைமை நீரேற்று நிலையத்தில் புதிய மின் மோட்டார்கள்

Print PDF
தினமணி       03.04.2013

அம்பராம்பாளையம் தலைமை நீரேற்று நிலையத்தில் புதிய மின் மோட்டார்கள்


பொள்ளாச்சி நகராட்சிப் பகுதியில் சீரான குடிநீர் விநியோகம் செய்ய ரூ.50 லட்சம் செலவில் அம்பராம்பாளையம் தலைமை நீரேற்று நிலையத்தில் மூன்று மின் மோட்டார்கள் பொருத்தப்பட்டு வருகின்றன.

பொள்ளாச்சி நகராட்சிக்கு உள்பட்ட 36 வார்டுகளில் 13 ஆயிரம் குடிநீர் இணைப்புகள் உள்ளன. இந்த இணைப்புகளுக்கு பொள்ளாச்சி நகராட்சி குடிநீர் திட்டத்தின் மூலமாக அம்பராம்பாளையம் பகுதி வழியாகச் செல்லும் ஆழியாற்றில் இருந்து தினமும் 13 மில்லியன் லிட்டர் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. ஆழியாற்றில் தண்ணீர் எடுக்கப்பட்டு அம்பராம்பாளையத்தில் உள்ள தலைமை நீரேற்று நிலையத்தில் உள்ள 220 குதிரைத் திறன் கொண்ட இரண்டு மின் மோட்டார்கள் மூலமாக பொள்ளாச்சி மார்க்கெட் சாலையில் உள்ள நீருந்து நிலையத்திற்கு தண்ணீரைக் கொண்டு சென்று, அங்கிருந்து விநியோகம் செய்யப்படுகிறது.

தலைமை நீரேற்று நிலையத்தில் இரண்டு மின் மோட்டார்களும் பழுதடையும் நேரத்தில் குடிநீர் விநியோகம் செய்வதில் சிரமம் ஏற்படுகிறது. இதைத் தடுக்கும் வகையில் அம்பராம்பாளையம் தலைமை நீரேற்று நிலையத்திற்கு மூன்று புதிய மின் மோட்டார்கள் பொருத்தப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து, நகராட்சித் தலைவர் வி.கிருஷ்ணகுமார் கூறியது:

பொள்ளாச்சி நகராட்சிப் பகுதிக்கு தங்கு தடையின்றி குடிநீர் விநியோகம் செய்யும் விதமாக ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு 60, 75 மற்றும் 100 குதிரைத் திறன்கள் கொண்ட மூன்று புதிய மின் மோட்டார்கள் அம்பராம்பாளையம் தலைமை நீரேற்று நிலையத்தில் அமைக்கப்பட்டு வருகிறது. இப் புதிய மின் மோட்டார்கள் பொருத்துவதன் மூலமாக 15 மில்லியன் லிட்டர் குடிநீர் விநியோகம் செய்யப்படும் என்றார்.
 


Page 69 of 390