Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

ரூ.11.60 கோடியில் புதிய குடிநீர் திட்டம் ராட்சத குழாய் மூலம் சோதனை ஓட்டம்

Print PDF
தினமலர்         26.03.2013

ரூ.11.60 கோடியில் புதிய குடிநீர் திட்டம் ராட்சத குழாய் மூலம் சோதனை ஓட்டம்

பள்ளிபாளையம்: பள்ளிபாளையம் நகராட்சியில், 11.60 கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்தப்பட உள்ள புதிய குடிநீர் திட்டப்பணிக்காக, காவிரி ஆற்றில் இருந்து, ராட்சத குழாய் மூலம், தண்ணீர் எடுத்துச் சென்று, கசிவு ஏற்படுகிறதா என்பது குறித்து, சோதனை மேற்கொள்ளப்பட்டது.

பள்ளிபாளையம் நகராட்சியில், 21 வார்டுகள் உள்ளன. அவற்றில், 45 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு, குடிநீர் வினியோகம் செய்வதற்காக, நகராட்சி நிர்வாகம் சார்பில், பள்ளிபாளையம் காவிரி ஆற்றில் நீர் உறிஞ்சி கிணறு அமைத்து, குழாய் மூலம் எடுத்து வரப்பட்டு, மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டியில் ஏற்றி, பின்னர், தினமும் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது.

அதற்காக, தினமும், 25 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுத்து வரப்படுகிறது. இது பற்றாக்குறையாக இருப்பதால், பொதுமக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகினர். இந்நிலையில், பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், 11.60 கோடி ரூபாய் மதிப்பில், புதிய குடிநீர் திட்டம் செயல்படுத்த, அரசு நிதி ஒதுக்கீடு செய்தது.
அதை தொடர்ந்து, சமயசங்கிலி காவிரி ஆற்றில் நீர் உறிஞ்சி கிணறு அமைக்கப்பட்டது. அங்கிருந்து, ஐந்து கி.மீ., தூரத்துக்கு ராட்சத குழாய் மூலம் தண்ணீர் எடுத்துச் சென்று, அக்ரஹாரம் பம்பிங் ஸ்டேஷனில் சுத்திகரிப்பு செய்து, அங்கிருந்து மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிக்கு எடுத்துச் சென்று, பின்னர் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது. இப்பணி, தற்போது, 80 சதவீதம் முடிவடைந்துள்ளது.

இரண்டு நாட்களாக சோதனை பணி மேற்கொள்ளப்பட்டது. சமயசங்கிலி காவிரி ஆற்றில் இருந்து, அக்ரஹாரம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பம்பிங் ஸ்டேஷன் வரை அமைக்கப்பட்டுள்ள ராட்சத குழாயில் தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது.

அப்போது, குழாயில் கசிவு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறுகிறதா, அடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வருவது தடைபட்டுள்ளதா என்பது குறித்து, 300 மீட்டர் தூரத்துக்கு ஒரு முறை, இந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதுவரை, எவ்வித பிரச்னையும் இல்லை.

இந்த புதிய குடிநீர் திட்டப் பணி முழுமையாக நிறைவடைந்தால், பள்ளிபாளையம் நகராட்சி மக்களுக்கு தடையின்றி தண்ணீர் சப்ளை செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
 

குடிநீர் குழாய்களில் அடிக்கடி உடைப்பு 11 வார்டுகளில் பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் பணி நிறுத்தம்

Print PDF
தினகரன்        26.03.2013

குடிநீர் குழாய்களில் அடிக்கடி உடைப்பு 11 வார்டுகளில் பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் பணி நிறுத்தம்


கோவை: குடிநீர் குழாய்களில் அடிக்கடி உடைப்பு ஏற்படுவதால் 11 வார்டுகளில் பாதாள சாக்கடை மற்றும் மழைநீர் வடிகால் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது என மேயர் கூறினார்.

கோவை மாநகரில் சிறுவாணி குடிநீர் விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வரும் பகுதிகளில் கோடை காலத்தை முன்னிட்டு ஏற்படும் குடிநீர் பற்றாக்குறையை சரி செய்வதற்கான ஆலோசனை கூட்டம் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நேற்று நடந்தது. மேயர் செ.ம.வேலுசாமி தலைமை தாங்கினார். கமிஷனர் லதா முன்னிலைவகித்தார். இதில், எடுக்கப்பட்ட முடிவுகள் பற்றி மேயர் கூறியதாவது:

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்துக்கு உட்பட்ட 15, 18, 19, 20, 21 வார்டுகள், தெற்கு மண்டலத்துக்கு உட்பட்ட 76, 77, 78, 79, 89, 90 வார்டுகள் என மொத்தம் 11 வார்டுகள் சிறுவாணி குடிநீரை மட்டுமே ஆதாரமாக கொண்டுள்ளன. இப்பகுதிகளுக்கு பில்லூர் குடிநீர் கொண்டுசெல்ல இணைப்பு குழாய்கள் பொருத்தப்படவில்லை.

கோடை காலமாக இருப்பதால் இப்பகுதிகளுக்கு சிறுவாணி குடிநீர் அளவு குறைக்கப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில், ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்பு திட்டத்தின்கீழ் மழைநீர் வடிகால், பாதாள சாக்கடை பணி மேற்கொள்ளப்படுவதால் குடிநீர் குழாய்களில் அடிக்கடி உடைப்பு ஏற்படுகிறது. எனவே, குடிநீரை சேமிக்கும் வகையில் இப்பகுதிகளில் பாதாள சாக்கடை மற்றும் மழைநீர் வடிகால் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

குடிநீரை எல்லா பகுதி மக்களுக்கும் பகிர்ந்து அளிக்கும் வகையில் தேவையான இடங்களில் கூடுதல் வால்வுகள் பொருத்தப்படும். ஆழ்குழாய் கிணறு பழுதடைந்து இருந்தால் அதை உடனடியாக சீரமைக்கவும், தேவைப்பட்டால் புதிய ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு மேயர் செ.ம.வேலுசாமி கூறினார்.

கூட்டத்தில், துணை கமிஷனர் சிவராசு, துணை மேயர் லீலாவதி, மாநகர பொறியாளர் கருணாகரன், மண்டல தலைவர்கள் பெருமாள்சாமி, சாவித்ரி, பணிக்குழு தலைவர் அம்மன் அர்ஜூணன் உள்பட பலர் பங்கேற்றனர்.
 

குடிநீர்த் தட்டுப்பாடு: ஆழ்துளை கிணறுகள் அமைக்க ஆட்சியர் உத்தரவு

Print PDF
தினமணி         26.03.2013

குடிநீர்த் தட்டுப்பாடு: ஆழ்துளை கிணறுகள் அமைக்க ஆட்சியர் உத்தரவு


குடிநீர்த் தட்டுப்பாட்டைப் போக்க ஆழ்துளை கிணறுகளை கூடுதலாக  அமைக்கவும், நீராதாரம் குறைவாக உள்ள பகுதிகளில் லாரிகளில் குடிநீர் விநியோகம் செய்யவும் மாவட்ட ஆட்சியர் அன்சுல் மிஸ்ரா உத்தரவிட்டுள்ளார்.

மேலும் குடிநீர்த் தட்டுப்பாடு குறித்து பொதுமக்கள் புகார் தெரிவிக்க, ஆட்சியர்  அலுவலகத்தில் சிறப்பு உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மதுரை மாநகராட்சி உள்பட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் ஏற்பட்டுள்ள  தண்ணீர்ப் பற்றாக்குறையை போக்குவதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம், ஆட்சியர் அன்சுல்மிஸ்ரா தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் ஆட்சியர் பேசியது:

மதுரை மாநகராட்சியில் எந்தெந்த வார்டுகளில் குடிநீர்ப் பற்றாக்குறை அதிகமாக  உள்ளது என்பதைக் கண்டறிந்து, அந்த வார்டுகளில் எத்தனை குடும்பங்கள் வசிக்கின்றன என்பதையும் கணக்கிட்டு, அதற்கேற்ப கூடுதலாக ஆழ்துளை கிணறுகள் அமைக்க  வேண்டும். நீராதாரம் குறைவான பகுதிகளில் தேவைக்கேற்ப சுழற்சி முறையில் லாரிகளில் குடிநீர் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளிலும் கூடுதலாக ஆழ்துளை கிணறுகள் அமைத்தும், நீராதாரம் குறைவான பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாய்களை தேவைக்கேற்ப ஆழப்படுத்தவும், சுத்தப்படுத்தவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தப் பணிகளுக்கு உள்ளாட்சி துறையிலுள்ள பொதுநிதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

குடிநீர் பிரச்னை குறித்து பொதுமக்கள் தங்கள் குறைகளை தெரிவிக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் சிறப்பு உதவி மையத்தை  0452-2526888, 2521444, என்ற தொலைபேசி எண்களிலும், 7200650582 என்ற அலைபேசி எண்ணிலும் தெரிவிக்கலாம். மாநகராட்சிப் பகுதியைச் சேர்ந்தவர்கள் மாநகராட்சி அலுவலகத்தில் 0452-2530433 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம். எந்த பகுதியில் குடிநீர் பற்றாக்குறை இருப்பதாக தகவல் வருகிறதோ அப் பகுதிக்கு உடனடியாக லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மாநகராட்சி வார்டுகளிலும், ஊராட்சி பகுதிகளிலும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக பொருத்தப்பட்டிருக்கும் குடிநீர் குழாய்களின் பீலியை சரியாக மூடாததாலும்,  உடைத்து விடுவதாலும், குடிநீர் அதிக அளவில் வீணாகிறது.

இது போன்ற சம்பவங்கள் நிகழாமல் சம்பந்தப்பட்ட பகுதிகளில் வாழும் பொதுமக்களும், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளும் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும்.   நிலத்தடி நீரை வியாபார நோக்கில் விநியோகம் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

மாநகராட்சியில் சில பகுதிகளிலும்,  மாவட்டத்தின் சில பகுதிகளிலும் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.  இந்த நிலையை சரிசெய்வதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ள அனைத்து துறை அதிகாரிகளும் இணைந்து செயல்படவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.  குடிநீர் இணைப்புகளில் மோட்டார் அமைத்து குடிநீரை உறிஞ்சினால்,  மோட்டார்கள் பறிமுதல் செய்யப்படும். கோடை காலமாக இருப்பதால் குடிநீர்ப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.  பொதுமக்களும் இதனை உணர்ந்து நீரைச் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்றார்  ஆட்சியர்.

கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அருண்சுந்தர்தயாளன், மாநகராட்சி ஆணையர் ஆர். நந்தகோபால், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) எஸ்.சாந்தி, பொதுப்பணித் துறை  செயற்பொறியாளர் தனபால், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்)  சுகுமாறன் மற்றும் மாநகராட்சி, குடிநீர் வடிகால் வாரியம் உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள்  பங்கேற்றனர்.
 


Page 76 of 390