Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காவிரி குடிநீர் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் வீடு, வீடாக குறைகளை கேட்டறிந்து, அமைச்சர் கே.பி.முனுசாமி உறுதி

Print PDF
தினத்தந்தி            25.03.2013

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காவிரி குடிநீர் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் வீடு, வீடாக குறைகளை கேட்டறிந்து, அமைச்சர் கே.பி.முனுசாமி உறுதி


கிருஷ்ணகிரி நகராட்சி பகுதியில் வீடுவீடாக சென்று குறைகளை கேட்டறிந்த தமிழக உள்ளாட்சி மற்றும் சட்டத்துறை அமைச்சர் கே.பி.முனுசாமி விரைவில் காவிரி குடிநீர் பயன்பாட்டுக்கு வரும் என பொதுமக்களிடம் உறுதியளித்தார்.

குறைகள் கேட்பு

கிருஷ்ணகிரி நகராட்சிக்குட்பட்ட பகுதியில் வீடு, வீடாக குறைகளை கேட்கும் பணியை தமிழக நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைத்துறை அமைச்சர் முனுசாமி மேற்கொண்டுள்ளார். அதன்படி நேற்று 11வது வார்டு முதல் 19வது வார்டு உள்ள பகுதிகளுக்கு நேரில் சென்று பொதுமக்களிடம் நேரடியாக குறைகளை கேட்டறிந்தார். அப்போது ஏராளமானோர் குடிநீர் வசதி சாலை வசதி, மின் வசதி, சாக்கடை வசதி, காங்கிரீட் சாலை, குப்பை அகற்றுதல், பட்டா, கழிவறை கட்டிடம், கல்விக்கடன், முதியோர் ஓய்வூதியம், பழுதடைந்த மின் கம்பம் அகற்றுதல், மினி சின்டெக்ஸ் குடிநீர் தொட்டி அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அமைச்சரிடம் மனுக்கள் கொடுத்தனர். இந்த மனுக்களை பெற்றுக்கொண்ட அவர், உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தகுதியின் அடிப்படையில் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

காவிரி குடிநீர்

மேலும் பொதுமக்கள் பலர் கால்வாய் வசதி வேண்டி கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்றுக்கொண்ட அமைச்சர் கே.பி.முனுசாமி, ஒரு சில இடங்களில் ஆக்கிரமிப்புகள் உள்ளதால் அவற்றை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் நில அளவை செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றிய பின்பு தேவையான இடங்களில் கால்வாய் வசதி செய்துகொடுக்கப்படும் என்றார். மேலும், குடிநீர் வசதி வேண்டி கோரிக்கை விடுத்ததன் பேரில் விரைவில் காவிரி குடிநீர் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு வரவுள்ளதால் அவற்றை மக்களின் பயன்பாட்டிற்கு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.

குடிநீர் வரத்து குறைவாக வரும் பகுதிகளில் கூடுதலாக பைப்லைன் அமைத்து கொடுக்கவும், ஆழ்துளை கிணறு அமைத்து சின்டெக்ஸ் டேங் அமைத்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொடுக்கவும், சம்பந்தப்பட்ட நகராட்சி ஆணையர் மற்றும் நகர்மன்ற தலைவருக்கு உத்திரவிடப்பட்டுள்ளது. விரைவில் நடவடிக்கை எடுத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்கப்படும் என்றும் அமைச்சர் உறுதி கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி நகர்மன்ற தலைவர் தங்கமுத்து, நகர்மன்ற துணைத் தலைவர் வெங்கடாசலம், ஒன்றியக்குழுத் தலைவர் கோவிந்தராஜ், பேரூராட்சி தலைவர் வாசுதேவன், பெற்றோர்ஆசிரியர் கழக தலைவர் கேசவன், ஆணையாளர் இளங்கோ, தாசில்தார் மகேஸ்வரன், மின்துறை உதவி செயற்பொறியாளர் இளங்கோ மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
 

கடலூரில் இன்று குடிநீர் விநியோகம் ரத்து

Print PDF
தினமணி          24.03.2013

கடலூரில் இன்று குடிநீர் விநியோகம் ரத்து


கடலூர் நகரப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை குடிநீர் விநியோகம் ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கடலூர் நகர் மன்ற ஆணையர் (பொறுப்பு) ரவி வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கடலூர் திருவந்திபுரம், கேப்பர்மலையில் உள்ள தலைமை குடிநீரேற்று நிலையங்களில் மின்வாரியம் சார்பில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால், மின்மோட்டார் இயக்கி குடிநீர் உந்துதல் பணி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த நீரேற்று நிலையங்களில் இருந்து குடிநீர் பெறும் திருப்பாதிரிப்புலியூர், செம்மண்டலம், புதுப்பாளையம், அண்ணாநகர் மற்றும் கடலூர் துறைமுகம் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 24) ஒரு நாள் மட்டும் குடிநீர் விநியோகம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
 

ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் ஓசூர் நகரை வந்தடைந்தது பொதுமக்கள் பட்டாசு வெடித்து உற்சாக வரவேற்பு

Print PDF
தினத்தந்தி            24.03.2013

ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் ஓசூர் நகரை வந்தடைந்தது பொதுமக்கள் பட்டாசு வெடித்து உற்சாக வரவேற்பு


ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் ஓசூர் நகரை வந்தடைந்தது. தாகம் தீர்க்க வந்த காவிரி நீரை பொதுமக்கள் பட்டாசு வெடித்து உற்சாகமாக வரவேற்றனர்.

ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர்

கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய 2 மாவட்ட மக்கள் பயன் பெறும் வகையில் ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டம் ரூ.1,900 கோடி மதிப்பில் செயல்படுத்தப்படுகிறது. தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள மடத்தில் இருந்து தண்ணீர், மூங்கில்பட்டி பம்பிங் மையத்திற்கு கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து மகேந்திரமங்கலம், காடுசெட்டிப்பட்டி, உள்ளுகுறுக்கை, ஜக்கேரி, குந்துமாரனப்பள்ளி வழியாக ஓசூர் தின்னூர் வருகிறது.

தற்போது குழாய்கள் பதிக்கும் பணி முடிவு பெற்றுள்ளது. இதையடுத்து ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் சோதனை ஓட்டம் தொடங்கி நடந்து வருகிறது. இதன்படி, நேற்று முன்தினம் இரவு ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் சோதனை ஓட்டமாக ஓசூரை வந்தடைந்தது. இரவு 8 மணி அளவில் இந்த காவிரி நீர் ஓசூருக்கு வந்தது.

ஓசூர் மக்கள் வரவேற்பு

ஓசூர்தேன்கனிக்கோட்டை சாலையில் உள்ள ஆர்.சி.தேவாலயம் அருகில், ரெயில்வே பாலம் அருகில் உள்ள குழாயில், நுரை பொங்கியவாறு காவிரி நீர் வந்தது. இதை பார்த்து ஓசூர் நகர மக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்கள். பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் கொடுத்தும் தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.

இந்த நிகழ்ச்சியில், ஓசூர் நகராட்சி தலைவர் பாலகிருஷ்ணரெட்டி, அ.தி.மு.க. ஒன்றிய துணை செயலாளர் சர்வேஷ், ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்ட மேற்பார்வை பொறியாளர் மோகனசுந்தரம், ஓசூர் நிர்வாக பொறியாளர் கோபாலகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:

120 லட்சம் லிட்டர் தண்ணீர்

கடல்மட்டத்தில் இருந்து 700 மீட்டர் உயரத்தில் உள்ள ஓசூர் நகருக்கு காவிரி நீர் சோதனை ஓட்ட முறையில் வந்துள்ளது. ஒகேனக்கல்லில் இருந்து ஓசூர் தின்னூர் வரை குழாய்கள் அமைக்கப்பட்டுள்ள தூரத்தின் அளவு 112 கிலோ மீட்டர் ஆகும். இதன்மூலம் ஓசூர் நகருக்கு நாள் ஒன்றுக்கு 120 லட்சம் லிட்டர் தண்ணீர் கிடைக்கும்.

அடுத்ததாக 1,245 மீட்டர் உயரத்தில் உள்ள தேன்கனிக்கோட்டை தாலுகா பெட்டமுகிலாளத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லும் பணி நடக்கிறது. இதற்காக ஒகேனக்கல்லில் இருந்து 150 மீட்டர் உயரத்தில் தண்ணீர் கொண்டு வரப்படுகிறது.

இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

சூளகிரிக்கு வந்தது

இதையடுத்து நேற்று காலை ஒகேனக்கல் கூட்டுகுடிநீர் சூளகிரியை வந்தடைந்தது. சூளகிரி மற்றும் சுற்று வட்டார பகுதி மக்களுக்கு வினியோகிக்க பைபாஸ் சாலையில் 5 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தொட்டி கட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் சூளகிரி, தியாகரசனப்பள்ளி, சாமனப்பள்ளி, உல்லட்டி மற்றும் சுற்று வட்டார பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகிக்கப்படும். எனவே, அந்த பகுதி மக்களும் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.
 


Page 77 of 390