Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

திருப்பரங்குன்றம் பகுதியில் தினமும் லாரிகளில் குடிநீர் விநியோகம்: மேயர்

Print PDF

தினமணி              23.03.2013

திருப்பரங்குன்றம் பகுதியில் தினமும் லாரிகளில் குடிநீர் விநியோகம்: மேயர்

திருப்பரங்குன்றம், திருநகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளுக்கு தினமும் லாரிகளில் குடிநீர் விநியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மேயர் வி.வி. ராஜன்செல்லப்பா தெரிவித்தார்.

மாநகராட்சிக்குள்பட்ட திருப்பரங்குன்றம் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இப்பகுதியில் குடிநீர் விநியோகம் செய்வது தொடர்பாக மேயர் வி.வி. ராஜன்செல்லப்பா, ஆணையர் ஆர்.நந்தகோபால் மற்றும் அதிகாரிகள் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினர்.

மூலக்கரையில் நீர்உந்து நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள லாரிகளில் குடிநீர் நிரப்பும் நிலையத்தை அவர்கள் பார்வையிட்டனர். இங்கிருந்து லாரிகளில் குடிநீரை நிரப்பி திருப்பரங்குன்றம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் விநியோகிகக்கும் பணியை மேயர் தொடக்கி வைத்தார்.

பின்னர் அவர் கூறியதாவது:

திருப்பரங்குன்றம், தென்கரை கண்மாய், மாடக்குளம் ஆகிய பகுதிகளில் உள்ள பழைய ஆழ்குழாய்கள் சீர்செய்யப்பட்டு மூலக்கரையில் உள்ள குடிநீர் உந்து நிலையத்தில் சேகரிக்கப்பட்டு, லாரிகளில் குடிநீர் நிரப்பப்பட்டு விநியோகிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முதல்கட்டமாக வார்டு 95 முதல் 99 வரையிலான அதாவது திருப்பரங்குன்றம், ஹார்விபட்டி, திருநகர், பாண்டியன் நகர், நெல்லையப்பபுரம், சுந்தர் நகர், எஸ்ஆர்வி நகர் ஆகிய பகுதிகளுக்கு 2 லாரிகளில் தினமும் 2 லட்சம் லிட்டர் குடிநீர் விநியோகிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் சின்டெக்ஸ் தொட்டிகள் மூலமாகவும் குடிநீர் விநியோகம் செய்யப்படும் என்றார்.

நிகழ்ச்சியின்போது, உதவி ஆணையர் அ.தேவதாஸ், மாமன்ற உறுப்பினர்கள்  முத்துக்குமார், அமீதாபேகம், நாகலட்சுமி, பாண்டுரங்கன், சந்தியா, பூமிபாலகன், செயற்பொறியாளர் ஜெயசீலன், உதவி செயற்பொறியாளர் திருஞானம், பொறியாளர் சேகர் உள்பட மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.

பின்னர், அருள்தாஸ்புரம் பொறியாளர் அலுவலகத்தில் வார்டு 8, 9 ஆகிய பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிப்பது குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் இருவரும் கலந்து கொண்டனர்.

இப்பகுதிகளில் சின்டெக்ஸ் குடிநீர் தொட்டிகள் அமைக்குமாறும், பழுதாகியுள்ள போர்வெல்களை மராமத்து செய்வதுடன், குடிநீர் மோட்டார்களை சரிசெய்து இயக்க ஏற்பாடு செய்யுமாறும் மாமன்ற உறுப்பினர் தாஸ் கோரிக்கை வைத்தார்.

இப்பிரச்னைகளுக்கு உடனே தீர்வுகாணுமாறு பொறியாளர்களுக்கு மேயர் உத்தரவிட்டார்.

Last Updated on Saturday, 23 March 2013 10:41
 

நகரில் தடையின்றி குடிநீர் வினியோகிக்க 40 இடத்தில் செல்போன் மோட்டார் ஸ்டார்ட்டர்

Print PDF
தினகரன்          23.03.2013

நகரில் தடையின்றி குடிநீர் வினியோகிக்க 40 இடத்தில் செல்போன் மோட்டார் ஸ்டார்ட்டர்

பொள்ளாச்சி: பொள்ளாச்சி நகரில் தடையின்றி குடிநீர் வினியோகம் செய்ய, 40 இடங்களில் செல்போன் மோட்டார் ஸ்டார்டர் அமைக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பொள்ளாச்சி நகராட்சியில் மொத்தம் 36 வார்டுகள் உள்ளன. இந்த வார்டு பகுதியில் உள்ள குடி யிருப்பு மற்றும் வணிகவளாகங்கள் உள்ளிட்டவைகளுக்கு தேவையான குடிநீர், அம்பராம்பாளையம் கூட்டுகுடிநீர் மூலம் வினியோகம் செய்யப்படுகிறது.

அம்பராம்பாளையத்தில் உள்ள தலைமை நீரேற்றுநிலையத்தில் இருந்து பிரதான குழாய் மூலம் கொண்டுவரப்படும் தண்ணீர் நகரில் மகாலிங்கபுரம், ஜோதிநகர், டி.கோட்டாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மேல்நிலை தொட்டிகளில் ஏற்றப்பட்டு பின் குறிப்பிட்ட நாட்களுக்கு ஒருமுறை வினியோகிக்கப்படுகிறது.

மேலும் நகரில் உள்ள பொதுக்கிணற்றில் இருந்தும், தெருக்களில் உள்ள பொதுக்குழாய் வழியாக தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது.  தற்போது மின்தடை மற்றும் கோடை வறட்சிகாரணமாக 4 அல்லது 5 நாட்களுக்கு ஒருமுறையே குடிநீர் வினியோகம் செய்யப்படும் என்று நகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் சில நேரங்களில், குடிநீர் மோட்டார் முறையாக இயக்கப்படாமல் இருப்பதால் குடியிருப்பு பகுதிகளுக்கு முழுமையாக தண்ணீர் வினியோகம் செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது.  

இதைதொடர்ந்து மின்மோட்டாரை விரைந்து இயக்கி, குடிநீர் வினியோகத்தை சீர் படுத்துவதற்காக நகராட்சி மூலம் செல்போன் மோட்டார் ஸ்டார்ட்டர் பொறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த செல்போன் மோட்டார் ஸ்டார்ட்டர் மூலம், தங்குதடையின்றி குடிநீர் வினியோக சேவை இருக்கும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறுகையில்,  பொதுமக்களுக்கு சீராக தண்ணீர் வினியோகம் செய்யும் வகையில், அம்பராம்பாளையம் நீரேற்று நிலையம், மார்க்கெட்ரோடு நீரூந்து நிலையம் மற்றும் நகரில் உள்ள 16, பொதுக்கிணறுகள், 14போர்வோல் பகுதிகளில் செல்போன் மூலம் இயக்ககூடிய மோட்டார் ஸ்டார்ட்டர் விரைவில் அமைக்கப்படுகிறது. ரூ.5லட்சத்தில் மொத்தம் 40 இடங்களில் பொருத்தப்பட உள்ளன.

இதன் மூலம் மின்சார கட்டணம் மிகவும் குறையும், நீண்டதூர பயணம் மிச்சமாகும், இருக்கின்ற இடத்தில் இருந்து, செல்போன் மிஸ்டுகால் மூலம் மோட்டாரை ஆன் மற்றும் ஆப் செய்யலாம். சிறப்பு மைக்ரோ கன்ட்ரோலர் மூலம் மோட்டாருக்கு முழு பாதுகாப்பு கிடைக்கிறது. மின்நிறுத்தம் மற்றும் வினியோக நேரத்தில்  செல்போனுக்கு உடனே தகவல் கிடைக்கிறது. மேலும் அதன் செயல்பாட்டை கம்யூட்டரில் தெரிந்து கொள்ளலாம். விரைவில் செல்போன் மோட்டார் ஸ்டார்ட்டர் அமைக்கப்படுகிறது‘ என்றனர்.
 

சிறுவாணி குடிநீர் மேலும் குறைப்பு

Print PDF
தினகரன்          23.03.2013

சிறுவாணி குடிநீர் மேலும் குறைப்பு

கோவை, : சிறுவாணி அணையின் மொத்த நீர் மட்ட உயரம்  15 மீட்டர். அணை நீர் குறைந்தபட்ச இருப்பு நிலைக்கு கீழ் சென்று விட்டது.

நில மட்டத்திற்கு கீழ் பள்ளத்தில் தேங்கிய தண்ணீரை உறிஞ்சி எடுக்கும் பணி நடக்கிறது. நேற்று அணையின் நீர் மட்டம் 863.10 மீட்டராக இருந்தது. அணையில் இருந்து 29.75 கோடி லிட்டர் குடிநீர் பெறப்பட்டது.

தினமும் குடிநீர் எடுக்கும் அளவு குறைந்து வருகிறது. கடந்த 18ம் தேதி 32.45 கோடி லிட்டர் குடிநீர் பெறப்பட்டது. அணையில் மேலும் 3 மீட்டர் ஆழத்திற்கு குடிநீர் பெற முடியும். ஆனால் குடிநீர் பெறும் அளவு தினமும் குறையும் வாய்ப்புள்ளது.

ஒரு வாரத்திற்கு தினமும் 2 கோடி லிட்டர் குடிநீர் பெற முடியும். அணை நீர் மட்டம் 862 மீட்டர் அளவை எட்டினல் தினமும் 1 கோடி லிட்டர் மட்டுமே குடிநீர் எடுக்க முடியும் என குடிநீர் வடிகால் வாரியத்தினர் தெரிவித்தனர்.
Last Updated on Monday, 25 March 2013 07:40
 


Page 78 of 390