Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

குடிநீர் கட்டணம் செலுத்தாத 238 வீடு, கடைகளின் இணைப்பு துண்டிப்பு

Print PDF
தினமணி                22.03.2013

குடிநீர் கட்டணம் செலுத்தாத 238 வீடு, கடைகளின் இணைப்பு துண்டிப்பு


கடலூர் நகராட்சியில் குடிநீர் கட்டணம் பாக்கி வைத்துள்ள 238 வீடு மற்றும் கடைகளின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன.

கடலூர் நகராட்சியில் குடிநீர் கட்டணமாக ஒரு இணைப்புக்கு மாதம்தோறும் ரூ.40 வசூல் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் சிலர் இந்த கட்டணத்தைச் செலுத்தாமல் மாதக்கணக்கில் பாக்கி வைத்துள்ளதாகப் புகார் எழுந்தது.

இதை வசூல் செய்ய நகராட்சி நிர்வாகம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட பின்னரும் பலன் இல்லாததால் குடிநீர் கட்டணம் பாக்கி வைத்துள்ள வீடு, கடைகளின் இணைப்புகளைத் துண்டிக்கும் பணியை நகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. இது குறித்து ஆணையர்(பொறுப்பு) ரவி கூறியது:

கடலூர் நகராட்சியில் 11,000 குடிநீர் இணைப்புகள் உள்ளன. இதில் 50 சதவீதம் பேர் குடிநீர் கட்டணத்தைச் செலுத்திவிட்டனர். மீதி 50 சதவீதம் பேர் பாக்கி வைத்துள்ளனர். இவர்களிடம் இருந்து ரூ.1.5 கோடி குடிநீர் கட்டணம் வசூல் செய்ய வேண்டி உள்ளது.

குடிநீர் கட்டணத்தைச் செலுத்தாதவர்களுக்கு கேட்பு அறிவிப்பு, ஒலிபெருக்கிகள் மூலம் எச்சரிக்கை விடுதல் போன்ற நடவடிக்கைளை மேற்கொண்ட பின்னரும் குறித்த காலத்துக்குள் பணத்தைச் செலுத்தாததால் குடிநீர் இணைப்பைத் துண்டிக்கிறோம். இதுவரை 238 குடிநீர் இணைப்புகளைத் துண்டித்துள்ளோம். இந்த நடவடிக்கை தொடரும் என்றார். 
 

குடிநீர், பாதாளச் சாக்கடை புகார் தெரிவிக்க...

Print PDF

தினமணி      21.03.2013

குடிநீர், பாதாளச் சாக்கடை புகார் தெரிவிக்க...


மதுரை மாநகராட்சி பகுதிகளில் குடிநீர் பிரச்னைகள், பாதாள சாக்கடை பிரச்னைகள் மற்றும் மாநகராட்சி தொடர்பான இதர பிரச்னைகள் குறித்து புகார்கள் தெரிவிக்க, மண்டல வாரியாக தொலைபேசி எண்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

 மண்டலம் எண் 1 பகுதிக்கு- 0452-2302431, மண்டலம் எண் 2- 0452-2537215, மண்டலம் எண் 3- 0452-2321121, மண்டலம் எண் 4- 0452-2345561 ஆகிய எண்களிலும், ஆணையர் தனிப்பிரிவு தொலைபேசி- 0452-2345561 ஆகிய எண்களில் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம்.

 காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை தெரிவிக்கும் புகார்கள் குறித்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என, ஆணையர் ஆர்.நந்தகோபால் தெரிவித்துள்ளார்.

 

நாமக்கல் மாவட்டத்தில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய ரூ.32 கோடிக்கு திட்ட மதிப்பீடு தயார் கலெக்டர் ஜெகநாதன் தகவல்

Print PDF

தினத்தந்தி                20.03.2013

நாமக்கல் மாவட்டத்தில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய ரூ.32 கோடிக்கு திட்ட மதிப்பீடு தயார் கலெக்டர் ஜெகநாதன் தகவல்

நாமக்கல் மாவட்டத்தில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய ரூ.32 கோடிக்கு திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு, அரசுக்கு கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளதாக திட்டக் குழு கூட்டத்தில் கலெக்டர் ஜெகநாதன் கூறினார்.

திட்டக்குழு கூட்டம்

நாமக்கல் மாவட்ட திட்டக்குழு கூட்டம் மாவட்ட கலெக்டர் ஜெகநாதன் தலைமையில் நடைபெற்றது. கூட்டம் தொடங்கியதும், மாவட்ட ஊராட்சித்தலைவர் கே.காந்திமுருகேசன் , நாமக்கல் நகரத்தை புராதான நகரமாக அறிவித்தமைக்கும், நாமக்கல் மற்றும் நாமகிரிபேட்டை ஆகிய 2 இடங்களில் ரூ.1 கோடியே 67 லட்சத்து 52 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர் விடுதி கட்ட உத்தரவிட்டமைக்கும் தமிழக முதல்அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை வாசித்தார்.

அதனை தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை, ஊரக வளர்ச்சித்துறை, பொதுசுகாதாரத்துறை, மருத்துவத்துறை, வருவாய்த்துறை என ஒவ்வொரு துறைகளின் மூலமும் நிறைவேற்றப்படும் திட்டப்பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இக் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் ஜெகநாதன் பேசும்போது கூறியதாவது :

ரூ.32 கோடிக்கு திட்ட மதிப்பீடு தயார்

நாமக்கல் மாவட்டம் வறட்சி மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில், இந்த மாவட்டத்தின் குடிநீர் தேவையை போக்குகின்ற வகையில் ரூ.32 கோடிக்கு திட்ட மதிப்பீடுகள் தயாரித்து அரசுக்கு கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த நிதி வரப்பெற்றவுடன் போர்க்கால அடிப்படையில் குடிநீர் பிரச்சனையை தீர்ப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

குறிப்பாக திட்டக்குழு உறுப்பினர்கள், தங்கள் பகுதியின் அத்தியாவசியத்தை கருத்தில் கொண்டு கோரிக்கை வைத்தால் அங்கேயும் குடிநீர் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்படும். மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் நிதி, ஒன்றிய குழு பொதுநிதி ஆகிய நிதிகள் அனைத்தும் குடிநீர் திட்டத்திற்கு முன்னுரிமை அளிக்க அறிவுறுத்தப்படுகிறது.

நாமக்கல் மாவட்டத்தில் தமிழக முதல்அமைச்சரின் மாபெரும் மரம் நடும் திட்டத்தின் கீழ் 6500 மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் தனி மின்விசை திட்டத்தின்கீழ் ரூ.10 கோடி மதிப்பில் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் கூட்டுகுடிநீர் திட்டத்தின்கீழ் குடிநீர் திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தப்பணிகள் முடிவு பெற்றால் பெரும்பாலான கிராமங்கள் மற்றும் நகரப்பகுதிகள் முழுமையாக குடிநீர் வசதி பெறும். தமிழக முதலமைச்சரால் அறிவிக்கப்பட்ட அனைத்து மக்கள் நலத்திட்டங்களும் மிகச் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு கலெக்டர் ஜெகநாதன் பேசினார்.

இக் கூட்டத்தில் நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.பி.பாஸ்கர், மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் ஏ.பி.பழனிவேல், மாவட்ட ஊராட்சி செயலாளர் சரஸ்வதி, மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் பி.ஆர்.சுந்தரம், மயில்சுந்தரம், மணி, ராணி, சாமிநாதன் உட்பட அனைத்து உறுப்பினர்கள் மற்றும் திட்டக்குழு உறுப்பினர்கள், அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

பூங்கா அமைக்க கோரிக்கை

கூட்டத்தில் மோகனூர் காவிரி ஆற்றில் தரைவழிப்பாலம் அருகே பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தில் பொழுதுபோக்கு அம்சம் கொண்ட பூங்கா ஒன்று அமைத்து தர கேட்டுக்கொள்வது.இதேபோல் வேலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பாட்டப்பன் கோவில் முதல் தற்காலிக பஸ் நிலையம் வரை மழைநீர் வடிகால் அமைக்க கோருவது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 


Page 81 of 390