Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

சிறுவாணியில் தண்ணீர் எடுக்கும் அளவு குறைப்பு! * வறட்சியை சமாளிக்க முன்னேற்பாடு

Print PDF
தினமலர்                  07.03.2013

சிறுவாணியில் தண்ணீர் எடுக்கும் அளவு குறைப்பு! * வறட்சியை சமாளிக்க முன்னேற்பாடு


சிறுவாணி அணையில் நீர்இருப்பு குறைந்து வருவதால், தண்ணீர் எடுக்கும் அளவு குறைக்கப்பட்டு, வறட்சியை சமாளிக்க முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கோவை மாநகராட்சியில் 32 வார்டுகள்; சாடிவயல், காருண்யா நகர், செம்மேடு, போளுவாம்பட்டி, பூளுவப்பட்டி, ஆலாந்துறை, மாதம்பட்டி, காளம்பாளையம், பேரூர் பகுதிகள், தற்போது மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட வடவள்ளி, வீரகேரளம், கோவைபுதூர், கவுண்டம்பாளையம், குறிச்சி, குனியமுத்தூர் பகுதிகளுக்கும் சிறுவாணி குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.

சிறுவாணியின் நீர்ப்பிடிப்பு பகுதியில் தென்மேற்கு, வடகிழக்கு பருவமழைகள் பொய்த்ததால், அணையின் நீர்மட்டம் அதலபாதாளத்திற்கு சென்றது.

இதையடுத்து, சிறுவாணியில் இருந்து தண்ணீர் எடுக்கும் அளவு குறைந்ததால், குடிநீர் வினியோகத்தில் சிக்கல் நிலவுகிறது. சிறுவாணி குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டதால், மாநகராட்சியில் ஐந்து இடங்களில் சிறுவாணி - பில்லூர் குடிநீர் குழாய்கள் இணைப்பு ஏற்படுத்தி, குடிநீர் தட்டுப்பாடு சமாளிக்கப்பட்டுள்ளது.

இதனால், வேலாண்டிபாளையம், வெங்கிட்டாபுரம், கவுண்டம்பாளையம், பி.என்.புதூர், சீரநாயக்கன்பாளையம், பூசாரிபாளையம், செல்வபுரம், சுண்டக்காமுத்தூர் பகுதியிலுள்ள 12 வார்டுகள் சிறுவாணி குடிநீரை மட்டுமே நம்பியுள்ளன.

நேற்றைய நிலவரப்படி, 15 மீட்டர் உயரமுள்ள சிறுவாணி அணையில் 0.56 மீட்டர் (அதாவது, 1.83 அடி) நீர்மட்டம் உள்ளது. அணையின் நீர்மட்டம் குறைந்து, நீர் எடுக்கும் அளவும் குறைந்ததால், வினியோகிக்கப்படும் தண்ணீர் "பிரஷர்' குறைந்து தட்டுப்பாடு நிலவுகிறது. மழை பெய்து அணையின் நீர்மட்டம் உயர்ந்தால் மட்டுமே, இப்பிரச்னைக்கு தீர்வு ஏற்படும் என்பதால், குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் மாற்று ஏற்பாடுகள் செய்துள்ளனர்.

மாநகராட்சி கமிஷனர் லதா கூறுகையில், "சிறுவாணியில் நீர் இருப்பு குறைந்துள்ளதால், அணையில் இருந்து தண்ணீர் எடுக்கும் அளவை குறைக்க ஆலோசனை செய்யப்பட்டது. மாநகராட்சிக்கு வழங்கும் சிறுவாணி தண்ணீர் அளவை குறைத்தால், மே மாதம் 10ம் தேதி வரையிலும் சிறுவாணியில் இருந்து தண்ணீர் எடுக்க முடியும். அதற்குள், மழை பெய்யும் என்ற நம்பிக்கை உள்ளது. கடந்த இரண்டு நாட்களாக சிறுவாணி மலைப்பகுதியில் சீதோஷ்ண நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. சிறுவாணி குடிநீர் வழங்க வேண்டிய வார்டுகளில் பற்றாக்குறையை சமாளிக்க லாரிகள் மூலம் பில்லூர் தண்ணீர் சப்ளை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. சூழலை அறிந்து மக்களும் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்' என்றார்.
 

கோடையில் கூடுதல் குடிநீர் விநியோகம்: நகர்மன்ற தலைவர் உறுதி

Print PDF
தினமணி              07.03.2013

கோடையில் கூடுதல் குடிநீர் விநியோகம்: நகர்மன்ற தலைவர் உறுதி


விழுப்புரம் நகரில் கடும் கோடையிலும் கூடுதலாக குடிநீர் விநியோகிக்கப்படும் என புதன்கிழமை நகர்மன்றத்தில் அதிகாரிகளுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் நகர்மன்றத்தலைவர் ஜி. பாஸ்கரன் கூறினார்.

விழுப்புரம் நகர்மன்றத்தில், கோடையில் குடிநீர் தட்டுப்பாடு, சுகாதாரம், நகர்ப்புற அமைப்பு குறித்து அதிகாரிகளுடன் புதன்கிழமை நகர்மன்றத் தலைவர் ஜி.பாஸ்கரன் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் அவர் கூறியது: விழுப்புரம் நகர்மன்றப்பகுதியில், ஒரு நபருக்கு 54 லிட்டர் வீதம் குடிநீர் தற்போது வழங்கப்பட்டு வருகிறது. ஒருநபருக்கு 90 லிட்டர் வீதம் வழங்கவேண்டும் என்ற நோக்கத்தில் புதிதாக 2 குடிநீர் டேங்க் அமைக்கப்பட்டு, தற்போது அந்த புதிய டேங்குகளில் இருந்து ஆய்வுக்காக தண்ணீர் திறந்துவிட்டு வருகிறோம்.

ஏற்கெனவே உள்ள 2 டேங்குகளுடன் புதிதாக 2 டேங்குகள் சேர்ந்து மொத்தம் 4 டேங்குகளில் குடிநீர் விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதனால் கடும் கோடையிலும், விழுப்புரம் நகரில் குடிநீர் தட்டுப்பாடு இருக்காது. கூடுதலாகவே குடிநீர் வழங்கப்படும். நகரில் சுத்தமாக வைத்திருக்கும் வகையில் கூடுதலாக 47 குப்பைத் தொட்டிகள் வாங்கப்பட்டுள்ளது.

இவை வார்டுகளில் வைத்து குப்பை தெருக்களில் தேங்காமல் சேகரிக்கப்பட்டு அப்புறப்படுத்தப்படும். இது தவிர கூடுதலாக 40 தள்ளுவண்டிகள் குப்பை சேகரிக்க வாங்கப்பட்டுள்ளது. நகரமைப்பு வழிகாட்டி விதிமுறைகளின்படி, புது கட்டிடங்கள் அனுமதி அளிக்கப்படுவதுடன், கண்காணிக்கப்படும் என்றார்.

கூட்டத்தில், ஆணையர் ராஜேந்திரன், மேலாளர் மங்கையர்க்கரசி (பொறுப்பு) வருவாய் அலுவலர் நாராயணசாமி, வருவாய் ஆய்வாளர்கள் சாமிராஜ், உமாசங்கர், நகரமைப்பு ஆய்வாளர் கோகுல், அமலின்சுகுணா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
 

ராஜபாளையம் நகருக்கு தாமிரபரணி குடிநீர்: நகர்மன்றத் தலைவர் ஆய்வு

Print PDF
தினமணி              07.03.2013

ராஜபாளையம் நகருக்கு தாமிரபரணி குடிநீர்:  நகர்மன்றத் தலைவர் ஆய்வு

ராஜபாளையம் நகருக்கு தாமிரபரணி குடிநீர் கொண்டு வர ஆதாரமாக முக்கூடல் பகுதியில் சோதனை கிணறு அமைக்கும் பணியை செவ்வாய்க்கிழமை பார்வையிட்டார் நகர்மன்றத் தலைவர் எஸ். தனலட்சுமி.

 ராஜபளையம் நகரில் உள்ள 42வார்டுகளுக்கும் தேவையான குடிநீர் ராஜபாளையம் முடங்கியார் சாலையிலுள்ள 6வது மைல் குடிநீர்த் தேக்கத்தில் இருந்து விநியோகம் செய்யப்டுகிறது. இதுதவிர வனப்பகுதியில் இருந்து ரூ. 22 கோடி மதிப்பீட்டில் 2ஆவது குடிநீர்த்தேக்கம் அமைக்கப்படு அங்கிருந்து இந்நகருக்கு குடிநீர் விநியோகிக்க நகராட்சி சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

 இந்நிலையில் வறட்சிகாலங்களில் வனப்பகுதியில் இருந்து நீர் கிடைப்பது இல்லை. இதனால் ஏற்படும் குடிநீர்த் தட்டுப்பாட்டை சமாளிக்க மாற்று ஏற்பாடாக தாமிரபரணி ஆற்றிலிருந்து குடிநீர் கொண்டுவரும் திட்டத்துக்கு ராஜபாளையம்

 நகர்மன்றத்தலைவி பி.எஸ்.தனலட்சுமி தீர்மானம் கொண்டுவந்து நிரைவேற்றினார். இத்திட்ட ஆய்வுக்காக ரூ. 2லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் அரியநாயகியபுரம் தடுப்பணைப்பகுதியில் இருந்து ராஜபாளையத்துக்கு தாமிரபரணி ஆற்று நீர் கொண்டுவர பணிகள் நடந்து வருகின்றன. இதற்காக இப்பகுதியில் சோதனை கிணறுகள் அமைக்கும் பணி நடந்துவருகிரது.

 இப்பணியை ராஜபாளையம் நகர்மன்றத் தலைவர் பி.எஸ்.தனலட்சுமி, துணைத் தலைவர் ராதாகிருஷ்ணன், விருதுநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலாளர் பி.பி.செல்வசுப்பிரமணியராஜா கவுன்சிலர்கள் மணிகண்டராஜா, முருகேசன், ரமணி, ராஜம், தனலட்சுமி, ராஜபாளையம் நகர அ.தி.மு.க இலக்கிய அணிச்செயலாளர் நவநீதகிருஷ்ணன், ஜெயலலிதா பேரவை நிர்வாகி அர்ச்சுணராஜா மற்றும் அதிகாரிகள் அடங்கிய குழுவினர் செவ்வாய்க்கிழமை பார்வையிட்டனர்.
 


Page 84 of 390