Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

சென்னை ஏரிகளில் குறைந்து வரும் நீர்மட்டம்

Print PDF
தினமணி                   04.03.2013

சென்னை ஏரிகளில் குறைந்து வரும் நீர்மட்டம்


சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளின் முக்கிய நீர் ஆதாரங்களான பூண்டி, செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகளின் நீர்மட்டம் வேகமாகக் குறைந்து வருகிறது.

இதன் காரணமாக கோடை காலத்தில் மக்களுக்குத் தேவையான அளவு குடிநீர் விநியோகம் செய்வதில் சிக்கல் எழுந்துள்ளது. இருப்பினும் கோடை கால குடிநீர் தட்டுப்பாட்டைச் சமாளிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.

பருவமழை பற்றாக்குறை: வடகிழக்குப் பருவமழை பொய்த்துப் போனதன் விளைவாக மாநிலத்தின் முக்கிய நீர் ஆதாரங்களின் நீர்மட்டம் இந்த ஆண்டு உயரவில்லை. அக்டோபரிலிருந்து டிசம்பர் வரை சராசரியாக 44 செ.மீ. மழை பதிவாக வேண்டும். ஆனால் கடந்த வடகிழக்குப் பருவமழை காலத்தில் தமிழகத்தில் 37 செ.மீ. மழையே பதிவானது.

மேலும், கிருஷ்ணா நதிநீர் பங்கீட்டுத் திட்டத்தின் கீழ், ஆண்டுக்கு 12 டி.எம்.சி. தண்ணீரை தமிழகத்துக்கு ஆந்திர மாநிலம் வழங்க வேண்டும். ஆனால், கடந்த ஆண்டில் நதிநீர் பங்கீட்டுத் திட்டத்தின் அடிப்படையில் முழுமையான அளவு தண்ணீரை ஆந்திரம் வழங்கவில்லை. மேலும், கடலூர் மாவட்டம், காட்டுமன்னார் கோயிலில் உள்ள வீராணம் ஏரியின் நீர்மட்டம் குறைந்ததால் சென்னைக்கு வரும் நீர்வரத்து பெருமளவு குறைந்துள்ளது.

ஒரு மாதத்துக்குள் பூண்டி ஏரியின் நீர்மட்டம் 3 அடியும், சோழவரம் ஏரியின் நீர்மட்டம் 8 அடியும் குறைந்துள்ளது. புழல், செம்பரம்பாக்கம், வீராணம் ஏரிகளிலும் போதிய நீர் இருப்பு இல்லை. இதனால் கோடை காலத்தில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவலாம் என அஞ்சப்படுகிறது.

சென்னை மற்றும் விரிவாக்கப்பட்ட பகுதிகளில் நாளொன்றுக்கு குழாய் வழியாக 74.5 கோடி லிட்டரும், லாரி மூலமாக 2.2 கோடி லிட்டரும் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இதைத் தவிர தனியார் நிறுவனங்கள் மற்றும் தனியார் பயன்பாட்டுக்கு 6.4 கோடி லிட்டர் குடிநீர் விநியோகம் செய்யப்படுவதாகத் தெரிகிறது.

இந்த நிலையில் நெம்மேலியில் ரூ.871 கோடி செலவில் அமைக்கப்பட்ட கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தை முதல்வர் அண்மையில் தொடங்கி வைத்தார். இதன் மூலம் மக்கள் பயன்பாட்டுக்காக நாளொன்றுக்கு 10 கோடி லிட்டர் குடிநீர் கூடுதலாகக் கிடைத்துள்ளது.

திருவான்மியூர், வேளச்சேரி, பள்ளிப்பட்டு மற்றும் தகவல் தொழில்நுட்ப பூங்கா பகுதிகளில் வசிக்கும் 15 லட்சம் மக்களின் பயன்பாட்டுக்காக இம்மாத இறுதிக்குள் நெம்மேலி குடிநீர் விநியோகிக்கப்பட உள்ளதாகத் தெரிகிறது.

லாரிகள் மூலம் விநியோகம்: கோடை காலத்தில் சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது எனவும், அதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் சட்டப்பேரவையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.பி.முனுசாமி தெரிவித்திருந்தார்.

அதன் அடிப்படையில் கோடை கால குடிநீர்த் தட்டுப்பாட்டைச் சமாளிக்க லாரிகள் மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாக குடிநீர் வாரிய உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், குடிநீர் பிரச்னைகள் குறித்து பொது மக்கள் வேறு சில கருத்துகளையும் தெரிவிக்கின்றனர்.

சீரான விநியோகம் தேவை: ""மாநகராட்சியில் 200 வார்டுகளிலும் குடிநீர் மற்றும் கழிவுநீர் பிரச்னைகள் உள்ளன. போதிய அளவு குடிநீர் விநியோகம் செய்யப்படுவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஆனால் கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே நகரின் பல இடங்களில் குடிநீர் வருவதில்லை.

இது குறித்து புகார் அளித்தால் குடிநீர் வாரிய அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. லாரிகள் மூலம் குடிநீர் பெற பதிவு செய்து 6 மாதங்கள் ஆனாலும் தண்ணீர் வருவதில்லை. குடிநீர் வாரியம் நிர்ணயித்த தொகையை விடக் கூடுதலாகக் கொடுப்பவர்களுக்கே லாரி குடிநீர் வழங்கப்படுகிறது'' என பொது மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறியது:

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளொன்றுக்கு 83 கோடி லிட்டர் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. குடிநீர் ஏரிகளில் தற்போது உள்ள நீர் இருப்பு குடிநீர் விநியோகத்துக்குப் போதுமானதாக உள்ளது.

இதைத் தவிர மீஞ்சூர், நெம்மேலி கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டத்தின் கீழ் 20 கோடி லிட்டர் குடிநீர் கூடுதலாகக் கிடைக்கிறது. எனவே கோடை காலத்தில் சீரான குடிநீர் விநியோகத்தை எதிர்பார்க்கலாம் என்றனர்.
Last Updated on Monday, 04 March 2013 11:44
 

கோடையை சமாளிக்க புதிய குடிநீர் திட்டம்நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர் "யோசனை'

Print PDF
தினமலர்          04.03.2013

கோடையை சமாளிக்க புதிய குடிநீர் திட்டம்நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர் "யோசனை'


தஞ்சாவூர்: "கோடைகாலத்தை சமாளிக்க புதிய குடிநீர் திட்டம் செயல்படுத்த வேண்டும்' என, தஞ்சை நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர் பேசினார்.தஞ்சையில் நகராட்சி கூட்டம் தலைவர் சாவித்திரி தலைமையில் நடந்தது. இதில், கமிஷனர் ரவிச்சந்திரன், நகர்நல அலுவலர் சிவனேசன், இன்ஜினியர் சீனிவாசன் பங்கேற்றனர். தொடர்ந்து கூட்டத்தில் நடந்த கவுன்சிலர்கள் விவாதம் வருமாறு:சதாசிவம் (தி.மு.க.,): நகராட்சி பகுதியில், குண்டும் குழியுமாக சாலை காட்சியளிக்கிறது. இதை செப்பனிட நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.ராமநாதன் (தி.மு.க.,): கோடை காலம் நெருங்கி வருகிறது.

ஆனால், தற்போதே, நகராட்சி பகுதியில் குடிநீர் பற்றாக்குறை நிலவுகிறது. எனவே பற்றாக்குறையை சமாளிக்க முன்னெச்சரிக்கையாக, புதிய குடிநீர் திட்டத்தை நிறைவேற்றி, போதிய குடிநீரை பொதுமக்களுக்கு தட்டுப்பாடின்றி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.தனியாருக்கு துப்புரவு பணி விடப்பட்டு, 180 தொழிலாளர்கள் பணியில் ஈடுபடுவர் என, தெரிவிக்கப்பட்டது.

ஆனால், 150 பேர் தான் ஈடுபடுகின்றனர். மேலும் வழக்கமாக, 30 பேர் தனியாக பிரிக்கப்பட்டு, சாக்கடை அடைப்பு மண்ணை அள்ளும் பணியில் ஈடுபடுத்தப்படுவர். இப்பணிக்கு, 30 பேர் ஒதுக்காததால் சாக்கடை அடைப்பு, சுகாதாரக்கேடு அதிகரித்து விட்டது.இன்ஜினியர்: வெண்ணாற்றங்கரை படுகையில், குடிநீர் எடுக்க, 11 கோடி ரூபாயில் குடிநீர் திட்டம் தயாரிக்கப்பட்டது. ஆனால் கோடையில் இத்திட்டம் மூலம் தண்ணீர் கிடைக்க வாய்ப்பில்லை என்பதால், மாற்றுத்திட்டம் தயாரிக்கப்பட்டு, விரைவில் நிறைவேற்றப்படும்.சாவித்திரி (தலைவர்): துப்புரவு பணிக்காக, 180 பேர் தனியாரிடம் கோரப்பட்டுள்ளது.

ஆனால் தற்போது, 170 பேர் வரை வருகின்றனர். ஒப்பந்தபடி, 180 பேரை ஒதுக்காவிட்டால், மறுடெண்டர் வைக்கப்பட்டு, வேறு நபரிடம் பணிகள் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும். சாக்கடை மண் அள்ளவும் தனியாக தொழிலாளர்கள் நியமிக்கப்படுவர்.மதியழகன் (அ.தி.மு.க.,): வெண்ணாற்றங்கரையில் புதிய பாலம் அமைக்க, தி.மு.க., ஆட்சியில் பழைய பாலம் இடிக்கப்பட்டது. தற்போது அ.தி.மு.க., ஆட்சியில் புதிய பாலம் திறப்பு விழா கண்டுள்ளது.

இது பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது.பாலசுப்பிரமணியன் (அ.தி.மு.க.,): வார்டுதோறும் உள்ள குறைகளை நேரில் நகராட்சி தலைவர் ஆய்வு செய்து, பணிகளை முடுக்கி விட வேண்டும்.இதற்கு தலைவர் சாவித்திரி, நேரில் பார்க்கவேண்டும் எனும் அவசியம் இல்லாத அளவுக்கு பணிகள் நடந்து வருகிறது என கூறினார். அதற்கு கவுன்சிலர் பாலசுப்பிரமணியன் மறுத்து, பொதுவாகவே, ஒருவரை வீட்டுக்கு வாங்க, சாப்பிடுங்க என, கூறுவோம்.

ஆனால் வாயளவு கூறிவிட்டு, சாப்பாடு போடமாட்டோம். அதுபோல தான் இதுவும். ஆய்வுக்கு வந்தால், குறைகளை நேரடியாக கூற வசதியாக இருக்கும் என, நகைச்சுவையாக கூற, கூட்டத்தில் அனைவரும் சிரித்ததால், கலகலப்பு ஏற்பட்டது.
Last Updated on Monday, 04 March 2013 11:13
 

ஏர்வாடியில் 10 நாட்களாக காவிரி குடிநீர் நிறுத்தம் லாரி தண்ணீர் குடம் ரூ.5க்கு விற்பனை

Print PDF
தினமலர்                       04.03.2013

ஏர்வாடியில் 10 நாட்களாக காவிரி குடிநீர் நிறுத்தம் லாரி தண்ணீர் குடம் ரூ.5க்கு விற்பனை


கீழக்கரை: ஏர்வாடியில் கடந்த 10 நாட்களாக காவிரி குடிநீர் வராததால், அப்பகுதி மக்கள் லாரி குடிநீரை ஒரு குடம் ரூ. 5க்கு விலை கொடுத்து வாங்கும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மேலும், பற்றாக்குறை காரணமாக, குளத்து நீரை குடிநீராக பயன்படுத்தி வருகின்றனர்.ஏர்வாடி ஊராட்சிக்குட்பட்ட 15க்கும் மேற்பட்ட கிராமங்களில் 20 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர்.

இங்குள்ள மக்கள் விவசாயம், கூலிவேலை, கட்டுமான தொழில் உள்ளிட்ட வேலைக்கு சென்று வருகின்றனர். இங்கு நிலத்தடி நீர் உவர்ப்பு தன்மை கொண்டதால் மக்கள் காவிரி நீரை மட்டுமே நம்பி உள்ளனர். காவிரி குடிநீரும் வாரத்திற்கு ஒரு முறை மட்டும் சப்ளை செய்யப்படுவதால் தண்ணீர் வரும்போது, மக்கள் போட்டி போட்டுக் கொண்டு குடங்களில் சேமித்து வைப்பதில் மும்முரம் காட்டுவர்.

சிக்கலில் உள்ள காவிரி குடிநீர் சேகரிப்பு மையத்தில் இருந்து ஏர்வாடி ஊராட்சிக்கு குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வந்தது. கடந்த 10 நாட்களாக ஏர்வாடியில் காவிரி கூட்டுக் குடிநீர் சப்ளை நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், மக்கள் அன்றாட தேவை போக, குளிப்பதற்கும் டேங்கர் லாரி தண்ணீரை நம்பியே காத்திருக்கும் அவலம் உள்ளது. ஒரு குடம் தண்ணீர் ரூ.5க்கு விற்கப்படுகிறது. ஏர்வாடி அஸ்மா பீவி, 54. கூறியதாவது:நான்கு ரூபாய்க்கு விற்ற ஒரு குடம் தண்ணீர், டீசல் விலை உயர்வால் தற்போது ஐந்து ரூபாயாக உயர்ந்துள்ளது.

சராசரியாக நாளொன்றுக்கு ஒரு குடும்பத்தை பொறுத்தவரை ஐந்து குடம் தண்ணீர் தேவை உள்ளது. கூலி வேலை செய்யும் எங்களால் தண்ணீருக்கு தினமும் 25 ரூபாய் எப்படி செலவழிக்க முடியும். எனவே, ஊராட்சி நிர்வாகம் குடிநீர் அவசியம் கருதி டிராக்டர் மூலம் மக்களுக்கு இலவசமாக தண்ணீர் வழங்க முன்வர வேண்டும்.ஊராட்சி தலைவர் முகம்மது அலி ஜின்னா கூறியதாவது;இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விட்டது. தொடர்ந்து குடிநீர் வினியோகம் தடைபட்டதால் மக்கள் பெரும் பாதிப்பு அடைந்துள்ளனர். மக்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாத நிலையில் உள்ளோம். காவிரி நீர் வாரத்திற்கு அதிகபட்சமாக மூன்று முறை தான் வினியோகம் செய்கின்றனர். இது மக்களுக்கு தொடர்ந்து பற்றாக்குறையாக இருந்து வருகிறது, என்றார்.

காவிரி கூட்டுக்குடிநீர் திட்ட இளநிலை பொறியாளர் ஒருவர் கூறியதாவது:

சிக்கலில் உள்ள "பம்பிங் ஸ்டேஷனில்' மின்மோட்டர் பழுதால், குடிநீர் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. இருப்பினும், நேற்று முன்தினம் மோட்டார் பழுது நீக்கப்பட்டு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் தண்ணீர் ஏற்றும் பணி நடந்து வருகிறது. விரைவில், ஏர்வாடி பகுதியில் குடிநீர் வந்துவிடும்.
Last Updated on Monday, 04 March 2013 11:10
 


Page 85 of 390