Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

குடிநீர் விநியோகத்தை சீர்படுத்த வேண்டும்

Print PDF
தின மணி           27.02.2013

குடிநீர் விநியோகத்தை சீர்படுத்த வேண்டும்


கோடை காலத்தை கருத்தில் கொண்டு குடிநீர் விநியோகத்தை சீர்படுத்தவும், ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று திருப்பூர் மாநகராட்சிக் கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.

திருப்பூர் மாநகராட்சிக் கூட்டம் மேயர் அ.விசாலாட்சி தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. துணை மேயர் சு.குணசேகரன், ஆணையர் செல்வராஜ், கவுன்சிலர்கள் பங்கேற்றனர். இதில் கவுன்சிலர்கள் பேசியது:

முருகசாமி (அதிமுக): கோடைகாலத்தில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு உள்ளது. பணிமனைக்கு செல்லும் குப்பை லாரிகள், வாகனங்கள் பழுது நீக்கம் செய்வதில் ஏற்படும் காலதாமதத்தினால் வீதிகளில் குப்பை தேங்குகிறது. இப்பணியை விரைவாக முடித்து குப்பை அகற்றும் பணிக்கு வாகனங்களை பயன்படுத்த வேண்டும்.

பல இடங்களில் மின் கம்பங்கள் பழுதாகி சாய்ந்து விழும் நிலையில் உள்ளன. இது தொடர்பாக மின் வாரிய அதிகாரிகளிடம் பேசி மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வார்டில் தண்ணீர் விநியோகத்திற்கு பிளாஸ்டிக் டேங்க் வைப்பதில் கூட காலதாமதம் செய்கின்றனர்.

சுப்பிரமணியம் (திமுக): முதல் குடிநீர் திட்டத்தில் பிப்.2-ஆம் தேதி ஏற்பட்ட பழுது சரி செய்வதற்கு 8 நாள்கள் ஆகி உள்ளன. இதனால் 3.20 கோடி லிட்டர் குடிநீர் மக்களுக்கு கிடைக்காத நிலை ஏற்பட்டது.

க.மாரப்பன் (சி.பி.எம்.): மண்டலத்திற்கு ரூ.50 ஆயிரம் மதிப்பிலான பணிகளை மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், குடிநீர் கசிவு சரி செய்யும் வேலைக்கு உரிய தொகை தரப்படாமல் இருப்பதால் பிளம்பர்கள் மேற்கொண்டு குடிநீர் கசிவு பணிகளை செய்ய முன் வருவதில்லை. இதனால் குடிநீர் பிரச்னை ஏற்படுகிறது.

ரவிச்சந்திரன் (சி.பி.ஐ.): அதிகாரிகளின் மெத்தனப் போக்கினால் பல்வேறு பணிகள் முடங்கி உள்ளன. கடந்த 2011-12-ஆம் ஆண்டில் சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி நிதியில் இருந்து 3 இடங்களில் குடிநீர் தொட்டி கட்டுவதற்காக அனுமதி வழங்கப்பட்ட நிலையில், இதுவரை அப்பணிகள் தொடங்கப்படவில்லை. குடிநீர் விநியோகத்தை கண்காணிப்பதற்கென தனியாக அதிகாரியை நியமித்து, குடிநீர் விநியோகத்தை சீர்படுத்த வேண்டும்.

கோவிந்தராஜ் (தேமுதிக): மாநகராட்சியின் ஒட்டுமொத்த கட்டடப் பணிகளில் தரம் இல்லை என புகார் எழுந்துள்ளது. இப்பணிகளை தரத்துடன் செய்ய வேண்டும்.

செல்வராஜ் (ஆணையாளர்): கோடைகாலத்தில் வறட்சியை சமாளிக்க, தற்போது 3 குடிநீர் திட்டங்களில் பெறப்படும் 89 எம்.எல்.டி (ஒரு எம்.எல்.டி. என்பது 10 லட்சம் லிட்டர்) குடிநீர் தவிர்த்து மாற்று உபயோகத்திற்காக ஆழ்குழாய் கிணறுகளை செப்பனிடுவது, புதிதாக ஆழ்குழாய் கிணறுகள் அமைப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள 4 மண்டலத்திற்கும் மொத்தம் ரூ.8.9 கோடியில் மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இப்பணிகள் விரைந்து மேற்கொள்ளப்படும்.

4 ஆவது குடிநீர் திட்டம் குறித்து புதிய திருப்பூர் பகுதி மேம்பாட்டுக் கழகம் மூலமாக திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. 3 ஆவது குடிநீர் திட்டத்தில் மேலும் 29 எம்.எல்.டி. குடிநீர் வழங்க தயாராக உள்ளனர். இது குறித்து மாமன்றம் முடிவு செய்தால் இத்திட்டத்தில் கூடுதலாக குடிநீர் பெற்று விநியோகிக்க முடியும்.

முருகசாமி (அதிமுக): 2 ஆவது குடிநீர் திட்டத்தில் கூடுதலாக குடிநீர் பெறும் வகையில் மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் மாநகராட்சி மூலமாக செக் டேம் அமைத்து குடிநீர் பெறலாம். 3 ஆவது திட்டத்தில் பெறப்படும் குடிநீருக்கான கட்டணத்தை காட்டிலும் இதில் செலவு குறைவு.

மேயர் அ.விசாலாட்சி: கவுன்சிலர்கள் குறிப்பிட்ட புகார்கள் தொடர்பாக அந்தந்த மண்டல உதவி ஆணையர்கள் உரிய ஆய்வு செய்து அடுத்த கூட்டத்திற்குள் அப்பணிகளை சரி செய்ய வேண்டும். 37 ஆவது வார்டில் உடனடியாக ஒட்டுமொத்த துப்புரவுப் பணியை மேற்கொள்ள அந்த மண்டலத்தின் உதவி ஆணையருக்கு உத்தரவிடுகிறேன் என்றார்.
Last Updated on Wednesday, 27 February 2013 10:37
 

பாதாளம் நோக்கி செல்லும் பவானிசாகர் நீர்மட்டம்:கடும் குடிநீர் பிரச்னை ஏற்படும் அபாயம்

Print PDF
தின மலர்                27.02.2013

பாதாளம் நோக்கி செல்லும் பவானிசாகர் நீர்மட்டம்:கடும் குடிநீர் பிரச்னை ஏற்படும் அபாயம்


சத்தியமங்கலம்: பவானிசாகர் அணையின் நீர்மட்டம் பாதாளம் நோக்கி செல்வதால், ஈரோடு மாவட்டத்தில் கடும் குடிநீர் பிரச்னை ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் அணை, தென்னிந்தியாவின் மிகப்பெரிய மண் அணையாகும். இந்த அணையின் மொத்த நீர்மட்ட உயரம், 120 அடியாகும். இதில், சகதி, 15 அடி கழித்து நீர்மட்ட உயரம், 105 அடியாக கணக்கிடப்படுகிறது. அணையின் மொத்த நீர் கொள்ளளவு, 32 டி.எம்.சி., ஆகும்.

ஈரோடு மற்றும் கரூர் மாவட்டத்தின் ஒரு பகுதியை பசுமையாக வைத்துள்ள பவானிசாகர் அணை புன்செய்புளியம்பட்டி, சத்தி, கோபி, பவானி உள்ளிட்ட நகராட்சி மற்றும் நூற்றுக்கணக்கான டவுன் பஞ்சாயத்து, பஞ்சாயத்து பகுதிகளின் குடிநீர் பிரச்னையை தீர்த்து வருகிறது. தவிர அணையில் இருந்து வெளிவரும் கீழ்பவானி வாய்க்கால் மூலம், 2.07 லட்சம் ஏக்கர் பாசன நிலங்களுக்கும், பவானி ஆற்றின் மூலம் தடப்பள்ளி, அரக்கன்கோட்டை மற்றும் காலியங்கராயன் பாசனப்பகுதியை சேர்ந்த, 50 ஆயிரம் ஏக்கர் பாசனப்பகுதியும் வளம் பெறுகிறது.

பவானிசாகர் அணைக்கு நீலகிரி மலைப்பகுதியில் இருந்து வரும் பவானி ஆறும், கூடலூர் மலைப்பகுதியில் இருந்து வரும் மோயாரும் நீர்வள ஆதாரங்களாக விளங்குகிறது.

கடந்த ஆண்டு இதே நேரத்தில் பவானிசாகர் அணையின் நீர்மட்டம், 71.39 அடியாக இருந்தது. அணையின் நீர் கொள்ளளவு, 11.54 டி.எம்.சி.,ஆக இருந்தது. இதனால் கடந்தாண்டு வறட்சியின்போது குடிநீருக்கு எவ்வித பிரச்சனையும் இல்லாமல், பாசனத்துக்காகவும், பவானிசாகர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.

ஆனால் நடப்பு ஆண்டில் நிலமை தலைகீழாக மாறியுள்ளது. பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளதால், அணைக்கு சொற்ப அளவு தண்ணீரே வருகிறது. அரசும் அவ்வப்போது பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிட்டதால், அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைய தொடங்கியது.

அணையின் நீர்மட்டம் குறைந்து வரும் நிலையில், குடிநீர் பிரச்னை ஏற்படும் என மக்கள் அஞ்சும் நிலையில், கடந்த ஏழு முதல், 17ம் தேதி வரை, 11 நாட்கள் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலுக்கு சிறப்பு நனைப்பாக தண்ணீர் திறக்கப்பட்டது. சிறப்பு நனைப்பால் விவசாயிகளுக்கு எந்த பயனும் இல்லை. ஆனால் அணையில், 1.38 டி.எம்.சி., தண்ணீர் குறைந்தது.

நேற்று மாலை அணையின் நீர்மட்டம், 33.80 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 155 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து பவானி ஆற்றில் வினாடிக்கு, 155 கனஅடி தண்ணீரும், கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு, 5 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டது.

தற்போது அணையின் நீர்மட்டம், கடந்த ஆண்டு இதே நேரத்தில் இருந்ததை காட்டிலும், 37.59 அடி (10 டி.எம்.சி.,) தண்ணீர் குறைவாக உள்ளது.

இதனால் அணையின் நீர்தேக்க பகுதி குட்டைபோல் காட்சியளிக்கிறது. அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைவதால், மீன்கள் இறக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தவிர, நீலகிரி மலையில் மழை பெய்து, அணைக்கு நீர் வராவிட்டால், ஈரோடு மாவட்டத்தில் கடும் குடிநீர் பிரச்னை ஏற்படவும் வாய்ப்புள்ளது.
Last Updated on Wednesday, 27 February 2013 10:17
 

கட்டி முடித்து இரண்டு ஆண்டாகியும் திறக்கப்படாத நீர்தேக்க தொட்டி

Print PDF

தின மலர்                27.02.2013

கட்டி முடித்து இரண்டு ஆண்டாகியும் திறக்கப்படாத நீர்தேக்க தொட்டி


ஆலந்தூர்: வால்வு பொருத்தாததால், இரண்டு ஆண்டுகளாக திறக்காமல் இருக்கும் மேல்நிலை நீர்தேக்க தொட்டியை திறக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்துள்ளது.

ஆலந்தூர் மண்டலம், 158வது வார்டு, பர்மா காலனி பகுதியில், 2010ல், நந்தம்பாக்கம் பேரூராட்சியாக இருந்தபோது, 7.75 லட்சம் ரூபாய் செலவில், 2 லட்சம் கொள்ளளவு கொண்ட, மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்டப்பட்டது.

ஆனால், இதுவரை திறக்கப்படவில்லை.மாநகராட்சியுடன் இணைந்த பின்னும், நீர்தேக்க தொட்டி திறக்கப்படாததால், பர்மா காலனி மக்கள், நீண்ட தூரம் சென்று, குடிநீர் எடுத்து வருவது தொடர்கிறது. கீழ்நிலை நீர்தேக்க தொட்டி நீரை, மேல்நிலை தொட்டியில் ஏற்றாததால், கீழ்நிலை தொட்டியில் நிரம்பி வழியும் நீர், வீணாக அடையாறு ஆற்றில் கலக்கிறது.மேல்நிலை தொட்டியில் செல்லும் குழாயில், வால்வு பொருத்த வேண்டிய பணி மட்டுமே மிச்சம் உள்ளது. அதைச் செய்ய, குடிநீர் வாரியம் காலம் தாழ்த்தி வருவதாக, பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதுகுறித்து, பர்மா காலனியை சேர்ந்த சரஸ்வதி கூறியதாவது:இந்த நீர்த்தேக்க தொட்டியை நம்பி தான், எங்கள் காலனி மக்கள் உள்ளனர். மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் பொருத்த வேண்டிய வால்வுக்கு, 3,000 ரூபாய் தான் செலவாகும். அதை கூட, மெட்ரோ அதிகாரிகளால் வாங்க முடியவில்லையோ.இவ்வாறு, அவர் கூறினார்.

Last Updated on Wednesday, 27 February 2013 10:03
 


Page 89 of 390