Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

குறிச்சி குடிநீர்ப் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ரூ.90 லட்சத்தில் ஜெனரேட்டர் அமைக்க அனுமதி

Print PDF
தினமலர்    27.08.2012

குறிச்சி குடிநீர்ப் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ரூ.90 லட்சத்தில் ஜெனரேட்டர் அமைக்க அனுமதி

குறிச்சி : ""குறிச்சி மற்றும் குனியமுத்தூர் பகுதிகளில் நிலவும், குடிநீர்ப் பிரச்னைக்கு தீர்வு காணும் பொருட்டு, ரூ.90 லட்சத்தில் ஜெனரேட்டர் அமைக்க, அரசு அனுமதி வழங்கியுள்ளது'' என, தெற்கு மண்டல தலைவர் பெருமாள்சாமி தெரிவித்தார்.

கோவை மாநகராட்சியின், தெற்கு மண்டல கவுன்சிலர்கள் கூட்டம், தலைவர் பெருமாள்சாமி தலைமையில், போத்தனூரிலுள்ள மாநகராட்சி அலுவலகத்தில் நடந்தது. அனைத்து வார்டுகளிலும், தெரு மின் விளக்குகள் எரிவதில்லை. பராமரிப்பு பணியும் மேற்கொள்வதில்லை என, கவுன்சிலர்கள் ஒட்டுமொத்தமாக குறை கூறினர். குடிநீர் வினியோகத்தில் தாமதம், சாக்கடை நீர்க் கால்வாய், ரோடு வசதி போன்றவை குறித்தும் கேட்டனர்.

தலைவர் பெருமாள்சாமி பேசியதாவது:

தெற்கு மண்டலத்துக்குட்பட்ட, அனைத்து வார்டுகளிலும், மண்டல நிதியின் மூலம் ஆறு கோடி ரூபாய் மதிப்பிலும், மாநகராட்சி நிதி மூலம், நான்கு கோடி ரூபாய் மதிப்பிலும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. தற்போது, மண்டல மற்றும் மாநகராட்சி நிதி மூலம், ஐந்து கோடி ரூபாய் மதிப்பில், ரோடு மற்றும் வடிகால் வசதி பணிகள் நடக்கின்றன.

பிருந்தாவன் சர்க்கிள் (87வது வார்டு), சாந்தி நகர் (88வது வார்டு), மருதம் நகர் (89வது வார்டு), கோவைப்புதூர் எஸ் பிளாக் (90வது வார்டு), மல்லையன் கார்டன் (91வது வார்டு), கிருஷ்ணசாமி நகர் (92வது வார்டு), இ.பி. காலனி (93வது வார்டு), எம்.கே.என்., நகர் (94வது வார்டு), சாய் நகர் (95வது வார்டு), ஆண்டாள் தோட்டம் (96வது வார்டு), எல்.ஐ.சி.காலனி (98வது வார்டு), அற்புதம் நகர் (99வது வார்டு), கார்மல் நகர் (100வது வார்டு) ஆகிய இடங்களில், ரூ.1.38 கோடி மதிப்பில், பூங்காக்கள் அமைக்கப்பட உள்ளன. இதற்கான நிதி கோரி, மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, மேயருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

நிதி ஒதுக்கப்பட்ட பின், ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு, பணிகள் துவங்கும். 85வது வார்டிலுள்ள, மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் ஆரம்பப்பள்ளிகளில், புதிய கட்டடங்கள் கட்டவும், ஆசிரியர்களுக்கு கழிவறை கட்டவும், தளம் அமைக்கவும் ரூ.80.4 லட்சத்தில் மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, மேயரின் அனுமதிக்கு அனுப்பப்பட்டுள்ளது.

புட்டுவிக்கி மேம்பாலம் வார்டு 85ல் உள்ள செல்வபுரம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், மதிய உணவு அறை கட்ட, ரூ.9.98 லட்சம் ஒதுக்கப்பட்டு, ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. கோவைப்புதூர் - செல்வபுரம் செல்லும், புட்டுவிக்கி மேம்பாலம், மாநகராட்சி நிதியிலிருந்து, ரூ.2.25 கோடியில் கட்ட, திட்ட அனுமதி அரசிடமிருந்து பெறப்பட்டுள்ளது. ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு, விரைவில் பணிகள் துவங்கப்படும். மாவட்ட கலெக்டரின் பரிந்துரையை ஏற்று, மாநகராட்சி நிதி மூலமாக, ரூ.30 லட்சம் மதிப்பில், புதியதாக இணைக்கப்பட்ட பகுதிகளிலுள்ள அங்கன்வாடிகளில், புதிய கட்டடம் கட்டவும், பராமரிக்கவும் ஒப்பந்தப்புள்ளி பெறப்பட்டு, பணிகள் துவங்கப்பட உள்ளன.இவ்வாறு, அவர் பேசினார்.

அடிப்படை வசதிகளை மேம்படுத்த ரூ.1.7 கோடிக்கும், அங்கன்வாடி பராமரிப்புக்காக ரூ.30 லட்சத்துக்கும், ஒப்பந்த அனுமதி வழங்கப்பட்டது. ரூ.80 லட்சம் மதிப்பில், புதியதாக வடிகால், கான்கிரீட் சாலைகள் அமைக்க நிர்வாக அனுமதியும் வழங்கப்பட்டது.

தற்போது, குறிச்சி மற்றும் குனியமுத்தூர் பகுதிகளில் 15 - 20 நாட்களுக்கு ஒருமுறையே, குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. குறிப்பாக, தற்போது நிலவும் மின் வெட்டால், குடிநீர் எப்போது வரும் என்பதே தெரியாத நிலையில் பொதுமக்கள் உள்ளனர்.
3 வார்டுக்கு ஒரு கான்டிராக்டர்

தலைவர் பெருமாள்சாமியிடம் கேட்டபோது, ""மின் வெட்டால், குடிநீர் வினியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனை தவிர்க்க, ஜெனரேட்டர்கள், வாடகை அடிப்படையில் பொருத்தப்பட்டுள்ளன. இதன்மூலம், ஆழியாறு திட்டத்திலிருந்து, 8.2 மற்றும் சிறுவாணியிலிருந்து ஏழு எம்.எல்.டி., குடிநீரும் தினமும் வருகிறது.

""இனி வரும் நாட்களில், 10-11 நாட்களுக்கு ஒருமுறை, குடிநீர் வினியோகம் செய்யப்படும். ஆழியாறில் 90 லட்சம் ரூபாய் மதிப்பில், ஜெனரேட்டர் பொருத்த, அரசிடம் அனுமதி கோரப்பட்டது. தற்போது அனுமதி கிடைத்துள்ளது. வரும் 5ம் தேதி, இதற்கான டெண்டர் விடப்படும். ஜெனரேட்டர் பொருத்திய பின், எட்டு நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகம் செய்யப்படும். இதன்மூலம், குடிநீர்ப் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணப்படும் தெரு மின் விளக்கு பிரச்னைக்கு தீர்வு காண, மூன்று வார்டுகளுக்கு ஒரு கான்ட்ராக்டரை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில், அதற்கான டெண்டர் கோரப்படும்,'' என்றார்.
Last Updated on Tuesday, 28 August 2012 06:55
 

மழை நீர் சேகரிப்பு அமைப்பு இருந்தால்தான் குடிநீர் இணைப்பு மேயர் எச்சரிக்கை

Print PDF

தினகரன்                      25.08.2012

மழை நீர் சேகரிப்பு அமைப்பு இருந்தால்தான் குடிநீர் இணைப்பு மேயர் எச்சரிக்கை

சென்னை, : கட்டுமானங்களில் மழைநீர் சேகரிப்பு அமைப்பு இருந்தால்தான் குடிநீர் இணைப்பு மற்றும் கழிவு நீர் இணைப்பு வழங்கப்படும் என்று மேயர் சைதை துரைசாமி எச்சரித்தார்.
சென்னை  மாநகராட்சியின் சாதாரண கூட்டம் நேற்று நடந்தது. தலைமை வகித்து மேயர் சைதை துரைசாமி பேசும்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:

சென்னை மாநகராட்சியில் மழைநீர் சேகரிப்பு அமைப்பை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மழைநீர் கால்வாய்களின் முகத்துவாரங்களில் மழைநீர் சேகரிப்பு அமைப்புடன் கூடிய நுழைவாயில்கள் 5 ஆயிரம் அமைக்கப்படும். தாழ்வான பகுதிகளில் சாலை ஓரங்களில் போக்குவரத்து தீவு, சாலையோர பூங்கா மற்றும் விளையாட்டுத்திடல் ஆகியவற்றில் மழை நீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்தப்படும்.

சென்னை மாநகராட்சியின் அனைத்து அலுவலகங்கள், பள்ளிகள், சுகாதாரத்துறை கட்டிடங்கள் ஆகியவற்றில் ஏற்கனவே உள்ள மழை நீர் சேகரிப்பு அமைப்புகள் சீரமைக்கப்படும். இல்லாத இடங்களில் புதிதாக ஏற்படுத்தப்படும்.

தனியார் கட்டிட வளாகம், வணிக வளாகம், திரையரங்குகள், மருத்துவமனைகள் ஆகியவற்றில் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு இல்லாத இடங்களில் புதிதாக அமைப்புகள் ஏற்படுத்த வலியுறுத்தப்படுகிறது.

சென்னை மாநகராட்சியும், சென்னை பெருநகர வளர்ச்சிக்குழுமமும் கட்டிடம் கட்டுவதற்கு அனுமதி அளிக்கும்போது மழை நீர் சேகரிப்பு அமைப்புகள் வரைபடத்துடன் இருந்தால்தான் அனுமதி வழங்கப்படும். சென்னை மாநகராட்சியின் வருவாய்த்துறை ஊழியர்களான வரி மதிப்பீட்டாளர்கள், வரி தண்டலர்கள் சென்னை நகரில் உள்ள  புதிய கட்டிடங்களுக்கு மழைநீர் சேகரிப்பு அமைப்பு உள்ளதா என்பதை கண்டறிந்த பின்னரே கட்டிடங்களுக்கு வரி மதிப்பீடு செய்யப்படும்.

மழை நீர் சேகரிப்பு அமைப்பு இருந்தால் மட்டுமே கட்டுமானங்களுக்கு கழிவுநீர் இணைப்பு, குடிநீர் இணைப்புகள் வழங்கப்படும். அல்லது மழை நீர் அமைப்பை ஏற்படுத்திய பிறகே அனுமதி வழங்கப்படும்.இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

 

"மாநகராட்சி மூலம் லாரிகளில் விநியோகிக்கும் குடிநீருக்கு கட்டணம் செலுத்த வேண்டாம்'

Print PDF

தினமணி             25.08.2012

"மாநகராட்சி மூலம் லாரிகளில் விநியோகிக்கும் குடிநீருக்கு கட்டணம் செலுத்த வேண்டாம்'

தூத்துக்குடி, ஆக. 24: தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில் பொதுமக்களுக்கு லாரிகள் மூலம் விநியோகிக்கப்படும் குடிநீருக்கு யாரும் பணம் செலுத்த வேண்டாமென மாநகராட்சி ஆணையர் சோ. மதுமதி அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

 தூத்துக்குடி மாநகராட்சி பகுதியோடு இணைக்கப்பட்ட மீளவிட்டான், சங்கரப்பேரி, தூத்துக்குடி ரூரல், முத்தையாபுரம், அத்திமரப்பட்டி ஆகிய இடங்களுக்கு மாநகராட்சி மூலம் லாரிகளில் குடிநீர் கொண்டு செல்லப்பட்டு விநியோகிக்கப்படுகிறது.

 ஆனால், சிலர் லாரியில் மக்கள் தண்ணீர் பிடிக்கும்போது ஒரு குடத்துக்கு ஒரு ரூபாய் அல்லது இரண்டு ரூபாய் என பணம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது.

 மாநகராட்சியோடு இணைந்துள்ள பகுதிகளுக்கு மாநகராட்சியில் இருந்து கட்டாயம் குடிநீர் வழங்க வேண்டும் என்கிற நல்ல நோக்கத்தோடு லாரிகள் மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது. அப்படியிருக்கையில், குடிநீருக்காக யாரும் கட்டணம் கேட்டால் மக்கள் கொடுக்க வேண்டாம்.

 மாநகராட்சிதான் லாரிகளுக்கு கட்டணம் செலுத்தி மக்களுக்கு இலவசமாக தண்ணீர் வழங்குகிறது. இதில் யாருக்கும் பணம் தரத்தேவையில்லை.

 கட்டணம் கேட்பவர்கள் குறித்த தகவலை மாநகராட்சிக்கு பொதுமக்கள் 0461-2326902 அல்லது 2326901 என்ற எண்ணில் தெரிவிக்கலாம்.

 ஐந்து ஊராட்சிப் பகுதிகளுக்கும் குடிநீர் லாரி எந்தெந்த நாள்களில் வரும் என்கிற அட்டவணை தயார் செய்யப்பட்டுள்ளது. இது குறித்த தகவல் மாநகராட்சி இணையதளம் அல்லது மாநகராட்சி அலுவலகம், ராஜாஜிபூங்கா நீர்த்தேக்க நிலையத்தில் மக்கள் தெரிந்து கொள்ளலாம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Last Updated on Saturday, 25 August 2012 10:39
 


Page 97 of 390