Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

லாரிமூலம் மாநகராட்சி வழங்கும் குடிநீருக்கு கட்டணம் கொடுக்க வேண்டாம்

Print PDF

தினமலர்              24.08.2012

லாரிமூலம் மாநகராட்சி வழங்கும் குடிநீருக்கு கட்டணம் கொடுக்க வேண்டாம்

தூத்துக்குடி:மாநகராட்சி மூலம் புதியதாக இணைக்கப்பட்ட பஞ்சாயத்து பகுதிக்கு வழங்கும் குடிநீரை குடத்திற்கு ஒரு ரேட் வைத்து சிலர் வசூல் செய்கிறார்கள். இது மிகப் பெரிய குற்றமாகும். குடத்து தண்ணீர் பிடிக்க மக்கள் பணம் எதுவும் கொடுக்க வேண்டாம் என்று மாநகராட்சி கமிஷனர் மதுமதி தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியோடு இணைக்கப்பட்ட மீளவிட்டான், சங்கரப்பேரி, தூத்துக்குடி ரூரல், முத்தையாபுரம், அத்திமரப்பட்டி ஆகிய இடங்களுக்கு மாநகராட்சி மூலம் லாரிகள் மூலம் குடிநீர் கொண்டு செல்லப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் சில விஷமிகள் லாரியில் மக்கள் தண்ணீர் பிடிக்கும் போது ஒரு குடத்திற்கு ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் என்று பணம் வசூலித்து வருவதாக கூறப்படுகிறது.

இதற்கான புகார் மாநகராட்சி கமிஷனர் மதுமதிக்கு வந்தது. இது குறித்து கமிஷனர் மதுமதி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; மாநகராட்சியோடு இணைந்துள்ள பகுதிக்கு மாநகராட்சியில் இருந்து கட்டாயம் குடிநீர் வழங்க வேண்டும் என்கிற நல்ல நோக்கத்தோடு லாரிகள் மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது. ஆனால் சிலர் அந்த லாரி தண்ணீரை மக்கள் பிடிக்க வரும்போது ஒரு குடத்திற்கு ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் என்று கட்டணம் வசூல் செய்வதாக தகவல் வந்துள்ளது. அவ்வாறு கட்டணம் யாரும் கேட்டால் மக்கள் கொடுக்க வேண்டாம். மாநகராட்சி தான் லாரிகளுக்கு கட்டணம் செலுத்தி மக்களுக்கு இலவசமாக தண்ணீர் வழங்குகிறது. இதில் யாருக்கும் பணம் தரத்தேவையில்லை.

இதனால் ஒரு குடத்திற்கு இவ்வளவு ரூபாய் என்று கேட்பவர் பற்றிய தகவலை மாநகராட்சிக்கு பொதுமக்கள் 0461-2326902 அல்லது 2326901 என்ற எண்ணில் தெரிவிக்கலாம். ஐந்து பஞ்சாயத்து பகுதிகளுக்கு குடிநீர் லாரி என்று வரும் என்கிற அட்டவணை தயார் செய்யப்பட்டுள்ளது. இது குறித்த தகவல் மாநகராட்சி இணையதளம் அல்லது மாநகராட்சி அலுவலகம், ராஜாஜிபூங்கா நீர்தேக்க நிலையத்தில் மக்கள் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு மதுமதி தெரிவித்தார்.
 

ரூ.9 லட்சத்தில் ஆழ்குழாய் கிணறு அமைக்க திட்டம்

Print PDF

தினமலர்              24.08.2012

ரூ.9 லட்சத்தில் ஆழ்குழாய் கிணறு அமைக்க திட்டம்

பொள்ளாச்சி:பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில், கிணற்று நீர் வினியோகிக்க ஒன்பது லட்சம் ரூபாய் செலவில் ஆழ்குழாய் கிணறு அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக, சூளேஸ்வரன்பட்டி கவுன்சில் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.பொள்ளாச்சி அடுத்த சூளேஸ்வரன்பட்டி கவுன்சில் கூட்டம் தலைவர் கார்த்திகேயன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில், நடந்த விவாதம் :செல்வகுமார் (தி.மு.க.,): மின்தடை குறித்து மக்கள் தெரிவிக்கும் புகார், பேரூராட்சி அலுவலகத்தில் பதிவு செய்வது போல், மின்வாரிய அலுவலகத்திலும் பதிவேட்டை கையாள வலியுறுத்த வேண்டும்.அதிகாரிகள்: இது குறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் வலியுறுத்தப்படும்.

அஜிமா (அ.தி.மு.க.,): பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில், கிணற்று நீர் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். தினசரி பயன்பாட்டு தண்ணீர் கிடைக்காத மக்கள் இந்த நீரை பயன்படுத்த முடியும். அதிகாரிகள்: குடியிருப்பு பகுதிகளில், கிணற்றுநீருக்கான குழாய் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. பழுதடைந்த தார் சாலையும் சீரமைக்கப்படும்.கனகராஜ் (தி.மு.க.,) : மயானபகுதியில், குப்பை அகற்றாததால், கடுமையான துர்நாற்றம் வீசுகிறது. அதிகாரிகள் : ஒவ்வொரு பகுதியாக, குப்பை அகற்றி தூர்வாருவதுடன், மின் விளக்குகள் சீரமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.காளிதாஸ் (சுயேச்சை): ஏறுபதிநகர் பகுதியில், பொது கிணற்றுக்கு மோட்டார் வைத்து மக்களுக்கு தண்ணீர் வினியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கார்த்திகேயன் (தலைவர்): பேரூராட்சிக்குட்பட்ட 8,9வது வார்டு பகுதிகளில், கிணற்று நீர் வினியோகிக்கும் வகையில் ஆழ்குழாய் கிணறு அமைத்து மோட்டார் மூலம் குடிநீர் வினியோகிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில், மோதிராபுரம், சக்தி நகர், கல்லாமேடு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மக்கள் பயன் பெறுவர். இதற்கேற்ப குடியிருப்பு பகுதிகளில், குழாய் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பேரூராட்சி சார்பில் இத்திட்டத்துக்கு ஒன்பது லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.அதிகாரிகள்: மக்களின் அடிப்படை தேவைகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. இதில், செயலர் அலுவலர் உமாராணி உட்பட அதிகாரிகள் பங்கேற்றனர்.
 

குழாய் இணைப்பு பணி ஆதம்பாக்கம், நங்கநல்லூரில் நாளை குடிநீர் சப்ளை ரத்து போன் செய்தால் லாரியில் விநியோகம்

Print PDF

தினகரன்      23.08.2012

குழாய் இணைப்பு பணி ஆதம்பாக்கம், நங்கநல்லூரில் நாளை குடிநீர் சப்ளை ரத்து போன் செய்தால் லாரியில் விநியோகம்

சென்னை,: சென்னை மெட்ரோ ரயில் பாலம் அமைக்கும் பணிக்காக குடிநீர் செல்லும் பிரதான குழாய்கள் இணைப்பு பணி நாளை நடக்கிறது எனவே இப்பகுதியில் குடிநீர் சப்ளை இருக்காது, அவசர தேவைக்கு போன் செய்தால் லாரியில் விநியோகம் செய்யப்படும் என்று குடிநீர் வாரிய மேலாண் இயக்குனர் அபூர்வ வர்மா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

மெட்ரோ ரயில் நிலையம் அமைக்கும் பணிக்காக மீனம்பாக்கம் ரயில் நிலையம் அருகே ஜி.எஸ்.டி சாலையின் அடியில் செல்லும் 600 மி.மீ மற்றும் 450 மி.மீ விட்டமுள்ள இரும்பு குழாயை மாற்றி அதை ஏற்கனவே உள்ள 600 மி.மீ மற்றும் 450 மி.மீ விட்டமுள்ள இரும்புக்குழாயுடன் இணைக்கும் பணி, நாளை காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை மேற்கொள்ளப்பட உள்ளது.

இதனால் நாளை காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை ஆலந்தூர், ஆதம்பாக்கம், பாலாஜி நகர், பக்தவச்சலம் நகர், நங்கநல்லூர், கே.கே.நகர், கன்டோன்மென்ட், மீனம்பாக்கம், பம்மல், முனவர் அவென்யூ, கண்ணபிரான் கோயில் தெரு, அனகாபுத்தூர், பொழிச்சலூர், கவுல்பஜார் ஆகிய பகுதிகளில் குடிநீர் விநியோகம் இருக்காது.

அவசர தேவைக்கு லாரிகளில் குடிநீர் தேவைப்படுவோர், பகுதி பொறியாளர் 12 என்பவரை 8144930912 என்ற தொலைபேசி எண்ணிலும், துணைப்பகுதி பொறியாளர் -12 என்பவரை 81449 30262, உதவிப்பொறியாளர் ஆலந்தூர்- 8144930364, உதவிப்பொறியாளர் லாரி விநியோகம்- 8144930165, தலைமை அலுவலகம் (புகார்பிரிவு) - 2845 4040 மற்றும் 45674567 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

 


Page 99 of 390