Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

சிறுவாணி திட்டத்தில் குடிநீர் குழாய் வால்வு மாற்ற திட்டம்

Print PDF

தினகரன்    16.08.2012

சிறுவாணி திட்டத்தில் குடிநீர் குழாய் வால்வு மாற்ற திட்டம்

கோவை, : பழுதடைந்த சிறுவாணி பிரதான குடிநீர் குழாய் வால்வுகளை மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது.சிறுவாணி அணையில் இருந்து தினமும் 10 கோடி லிட்டர் குடிநீர் பெற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அணை நீர் மட்டம் குறைந்து விட்டதால் தற்போது தினமும் 7.2 கோடி லிட்டர் குடிநீர் பெறப்படுகிறது. அணை நீரேற்று நிலையத்தில் பெறப்படும் குடிநீர், 9 கி.மீ மலைப்பாதை நீரோடை வழியாக சிறுவாணி அடிவாரம் வரை கொண்டு வரப்படுகிறது.

சிறுவாணி அடிவாரத்தில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்தில் நீரை சுத்திகரித்து 1000 மி.மீ விட்டம் கொண்ட பிரதான குழாய் மூலமாக கோவை பாரதிபார்க் மற்றும் காந்திபார்க் மேல் நிலை தொட்டிக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.பிரதான குழாய் சிறுவாணி அடிவாரத்தில் இருந்து பாரதிபார்க் மற்றும் காந்திபார்க் வரை 37 கி.மீ தூரத்திற்கு அமைக்கப்பட்டுள்ளது.

பிரதான குழாயில் பல இடங்களில் வால்வு பழுதடைந்து குடிநீர் வீணாகி வருகிறது. குறிப்பாக இருட்டுப்பள்ளம், ஆலாந்துறை, மத்வராயபுரம், பூலுவப்பட்டி, மாதம்பட்டி உள்ளிட்ட பகுதியில் வால்வு பழுதடைந்து காணப்படுகிறது. இந்த வால்வுகளை மாற்றாமல் விட்டதால் தினமும் பல ஆயிரம் லிட்டர் குடிநீர் வீணாகி சாக்கடையில் கலக்கிறது. இதை தவிர்க்க, பிரதான குடிநீர் குழாய் வால்வுகளை மாற்ற குடிநீர் வடிகால் வாரியம் திட்டமிட்டுள்ளது.

குடிநீர் வடிகால் வாரியத்தினர் கூறுகையில், ‘‘ சிறுவாணி பிரதான குழாய் அமைத்து 30 ஆண்டுகளாகி விட்டது. பழுதடைந்த வால்வுகள் சிறுவாணி அடிவாரத்தில் இருந்து பாரதிபார்க் வரை சரி செய்யப்படும். ஆலாந்துறை, மத்வராயபுரம் உட்பட 10 இடங்களில் வால்வு பழுதடைந்து விட்டது.இந்த வால்வு அகற்றப்பட்டு புதிதாக வால்வு அமைக்கப்படும். இதற்காக 19.88 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அடுத்த மாதம் வால்வு மாற்றும் பணி நடத்தப்படும்.  பில்லூர் முதல் திட்டத்தில், வெள்ளியங்காடு கட்டன் மலைப்பகுதியில் பிரதான வால்வு பழுதடைந்து விட்டது. இதனை 9.90 லட்ச ரூபாய் செலவில் மாற்றி அமைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.இது தவிர, ஈச்சனாரி ரயில் பாதை பகுதியில் பில்லூர் குடிநீர் திட்ட குழாய் (450 மி.மீ விட்டம் கொண்டது) பழுதடைந்துள்ளது. இந்த பகுதியில் மேம்பால பணியும் நடக்கிறது. இந்த குழாய்களை மாற்றி வேறு இடத்தில் அமைக்க 11.94 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விரைவில் பணிகள் துவக்கப்படும், ’’ என்றனர்.

 

துறையூர் நகராட்சிக்குள் ஆழ்குழாய் கிணறுகள் அமைக்க உத்தரவு

Print PDF

தினமணி     16.08.2012

துறையூர் நகராட்சிக்குள் ஆழ்குழாய் கிணறுகள் அமைக்க உத்தரவு

துறையூர், ஆக. 15: துறையூர் நகராட்சி பகுதிக்குள் தேவையான இடங்களில் ஆழ்குழாய் கிணறுகள் அமைக்க நடவடிக்கை எடுக்கும்படி, மாவட்ட ஆட்சியர் ஜெயஸ்ரீமுரளிதரன் உத்தரவிட்டிருப்பதாக ஆணையர் சி. மதிவாணன் புதன்கிழமை தெரிவித்தார்.

 சுதந்திர தினவிழாவையொட்டி, துறையூர் நகராட்சி அலுவலகத்தில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது அவர் கூறியது: துறையூர் நகரில் 20 லட்சம் லிட்டர் காவிரி கூட்டு குடிநீர் ஒருநாள் விட்டு ஒருநாள் வழங்கப்படுகிறது. காசிக்குளம், பெரிய ஏரி ஆழ்குழாய் கிணறு மூலம் ஒரு நாளைக்கு 19 லட்சம் லிட்டர் எடுக்கப்பட்டு நகரில் தினமும் வழங்கப்படுகிறது. காவிரி குடிநீர் விநியோகம் சீராக இருக்க குடிநீர் வடிகால் வாரியத்தினர் 125 கேவி ஜெனரேட்டரை நகர்மன்ற அலுவலகத்தினுள் பொருத்தியுள்ளனர். மழையில்லாததால், ஆழ்குழாய் கிணறுகளில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்துள்ளது. எனவே, நீரேற்றுவதற்கும் தாமதம் ஆகிறது. மாவட்ட ஆட்சியர் உத்தரவுப்படி, நகராட்சி பகுதியில் 14 இடங்களில் நகராட்சி பொது நிதி ரூ. 22 லட்சம் செலவில் ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டு வருகிறது என்றார்.

 

இன்று முதல் இருநாட்கள்கே.கே.நகரில் குடிநீர் "கட்'

Print PDF

தினமலர்               16.08.2012

இன்று முதல் இருநாட்கள்கே.கே.நகரில் குடிநீர் "கட்'

திருச்சி: "திருச்சி கே.கே.நகர் உள்ளிட்ட பகுதிகளில் நாளை மற்றும் நாளை மறுநாள் குடிநீர் விநியோகம் இருக்காது' என்று திருச்சி மாநகராட்சி கமிஷனர் தண்டபாணி அறிவித்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் பராமரிக்கப்பட்டு வரும் பிராட்டியூர் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் அடங்கும், புங்கனூர் அருகே அரியாற்றில் பாலம் கட்டும் பணி நடப்பதால், பாலத்தின் குறுக்கே செல்லும் குடிநீர் உந்துக்குழாய்களை சாலையின் ஓரத்தில் மாற்றியமைக்கும் பணி தமிழ்நாடு குடிநீர் வாரியத்தின் மூலம் இன்று (16ம் தேதி), நாளை (17ம் தேதி) மேற்கொள்ளப்படுகிறது.

இதனால் பிராட்டியூர் கூட்டுக்குடிநீர் திட்டத்தின்கீழ் குடிநீர் விநியோகம் செய்யப்படும், திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட ராம்ஜி நகர், பிராட்டியூர், எடமலைப்பட்டிபுதூர், கே.கே.நகர், எல்.ஐ.சி., காலனி, ஐயப்ப நகர், தங்கையா நகர், பழனி நகர், அய்யர் தோட்டம், உடையான்பட்டி, விஸ்வநாதபுரம், கே.சாத்தனூர், அசோக் நகர், விஸ்வாஸ் நகர், ஆனந்த் நகர், சுப்ரமணிய நகர், ஆசாத் நகர், கிருஷ்ணமூர்த்தி நகர் ஆகிய பகுதிகளில் இன்று, நாளை குடிநீர் விநியோகம் இருக்காது.வரும் 18ம் தேதி முதல் வழக்கம்போல குடிநீர் விநியோகம் செய்யப்படும்.

எனவே பொதுமக்கள் இதனால் ஏற்படும் சிரமத்தை பொறுத்து, மாநகராட்சியுடன் ஒத்துழைக்க வேண்டும்.குடிநீரை சிக்கனமாக பயன்படுத்தவேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


Page 103 of 390