Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

3-வது கூட்டுக் குடிநீர் திட்டப் பணி 90% நிறைவு: நகர்மன்றத் தலைவர் தகவல்

Print PDF

தினமணி            14.08.2012

 3-வது கூட்டுக் குடிநீர் திட்டப் பணி 90% நிறைவு: நகர்மன்றத் தலைவர் தகவல்

திருவண்ணாமலை, ஆக. 13: திருவண்ணாமலை நகராட்சி குடிநீர் தேவைக்காக ரூ.36.66 கோடியில் நடைபெற்று வரும் 3-வது கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்து விட்டன என்று திருவண்ணாமலை நகர்மன்றத் தலைவர் என்.பாலச்சந்தர் கூறினார்.

இதுகுறித்து திங்கள்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியது:

சாத்தனூர் அணையில் இருந்து திருவண்ணாமலைக்கு சுமார் 19 கி.மீ. தொலைவுக்கு 3-வது கூட்டுக் குடிநீர் திட்டப் பணிக்கான குழாய்கள் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணி 90 சதவீதம் நிறைவடைந்துள்ளது. இன்னும் 600 மீட்டர் தொலைவுக்கு மட்டுமே குழாய்கள் அமைக்கப்பட வேண்டும். இப் பணி துரிதமாக நடைபெற்று வருவதால், விரைவில் முடிந்துவிடும்.

இத்திட்டத்துக்காக அண்ணா நகர், திருக்கோயிலூர் சாலை, பச்சையம்மன் கோயில் பகுதி, தேனிமலை உள்ளிட்ட 4 இடங்களில் மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. நகர் முழுவதும் பகிர்மான குழாய் அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்பட உள்ளது. இப் பணிகள் அனைத்தும் அக்டோபர் மாதத்துக்குள் முடிவடையும்.

இப்போது நாள் ஒன்றுக்கு நகரம் முழுவதும் 130 லட்சம் லிட்டர் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இத்திட்டம் நிறைவு பெற்றால் நாள் ஒன்றுக்கு 260 லட்சம் லிட்டர் குடிநீர் கிடைக்கும். நகரின் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் என்றார் அவர்.

முன்னதாக, இத்திட்டம் குறித்து நகராட்சி ஆணையர் விஜயலட்சுமி, பொறியாளர் பாஸ்கரன், குடிநீர் வடிகால் வாரியச் செயற்பொறியாளர் ஞானசேகரன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தில் நகர்மன்றத் தலைவர் என்.பாலச்சந்தர் ஆய்வு மேற்கொண்டார்.

 

பாளை., முருகன்குறிச்சியில் சீரான குடிநீர் வழங்க அதிகாரிகளுக்கு மேயர் உத்தரவு

Print PDF

தினமலர்      14.08.2012

பாளை., முருகன்குறிச்சியில் சீரான குடிநீர் வழங்க அதிகாரிகளுக்கு மேயர் உத்தரவு

திருநெல்வேலி:பாளை., 8வது வார்டு முருகன்குறிச்சி பகுதியில் சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு மேயர் விஜிலா உத்தரவிட்டார்.

பாளை., முருகன்குறிச்சி 8வது வார்டு தேவபிரான் தெரு, கடவுள் தெரு, இறைவன் தெரு உள்ளிட்ட பகுதிகளில் சீரான குடிநீர் விநியோகம் இல்லை எனக்கூறி பெண்கள் நேற்று முன்தினம் ரோடு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியலில் மக்கள் ஈடுபட்டதை தொடர்ந்து நேற்று காலை அந்தப்பகுதிக்கு மேயர் விஜிலா, நகரப்பொறியாளர் ஜெய்சேவியர், உதவிக் கமிஷனர் ஜான் கென்னடி, உதவி செயற்பொறியாளர் சாமுவேல் செல்வராஜ், உதவிப்பொறியாளர் கருப்பசாமி, கவுன்சிலர் கோமதிநாதன் ஆகியோர் அந்தப்பகுதியில் ஆய்வு செய்தனர். குடிநீர் வராததற்குரிய காரணங்களை கண்டறிந்து, குழாய்களை சீரமைத்து சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என அதிகாரிகளுக்கு மேயர் விஜிலா உத்தரவிட்டார்.

 

குடிநீர் பிரச்னையில் தொடர்ந்த சிக்கல் தீர்ந்ததால் : வீணாகும் தண்ணீரை நிறுத்த நடவடிக்கை அவசியம்

Print PDF

தினமலர்      14.08.2012

குடிநீர் பிரச்னையில் தொடர்ந்த சிக்கல் தீர்ந்ததால் : வீணாகும் தண்ணீரை நிறுத்த நடவடிக்கை அவசியம்

ஊட்டி : "ஊட்டியில் பரவலாக பெய்து வரும் மழையால், குடிநீர் வினியோகத்தில் சிக்கல் இருக்காது,' என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.ஊட்டியில் மொத்தமுள்ள 36 வார்டு மக்களின் நீர் தேவையை நகரை சுற்றியுள்ள நீர்தேக்க அணைகள் பூர்த்தி செய்து வருகின்றன. தென் மேற்கு பருவ மழை ஏமாற்றியதால் கடந்த இரு மாதமாக அணைகளில் நீர்வரத்து குறைந்து கொண்டே வந்தது; சில அணைகள் தரை தட்டும் நிலைக்கு வந்தன; சில இடங்களில் நீர் வினியோகத்தில் தடங்கல் ஏற்பட்டது.பல இடங்களில் 10 நாள் இடைவெளியில் நீர் வினியோகம் செய்யப்பட்டது. பார்சன்ஸ் வேலி அணை மட்டுமே நீர் வினியோகத்திற்கு பெரும் துணையாக இருந்தது.

மழை வந்ததால் நிம்மதி:

ஊட்டியில் கடந்த சில நாளாக பரவலாக மழை பெய்து வருகிறது."ஓஹோ' என இல்லாவிட்டால் ஓரளவு மழை பெய்து வருவதால், நகரில் உள்ள அணைகளில் நீர்மட்டம் மெல்ல, மெல்ல உயர்ந்து வருகிறது.இதே போன்று இன்னும் சில தினங்கள் மழை பெய்தால், அணைகளின் நீர் மட்டம் கணிசமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. நகராட்சி அதிகாரிகள் கூறுகையில்,"பார்சன்ஸ் வேலி அணையில் தேவைக்கேற்ற நீர் உள்ளது.

நகர மக்களுக்கு தடையில்லா நீர் வினியோகம் செய்யும் அளவுக்கு அணைகளில் நீர் இருப்பு உள்ளது; இப்போதைக்கு நீர் தட்டுப்பாடு ஏற்படுவதற்கான வாய்ப்பு இல்லை,' என்றனர்.

குழாய்களில் கசிவு:

குடிநீர் நீர் தேக்கங்களில் இருந்து குடிநீரை வினியோகம் செய்யும் குழாய்களின் பல இடங்களில் கசிவு ஏற்பட்டு, சாலைகளில் தண் ணீர் வீணாகி வருகிறது.வாகனங்களுக்கான நீரேற்று மையங்களிலும் குழாய்களில் தண்ணீர் விரயமாகி வருகிறது. இதேபோல, காமராஜ சாகர் உட்பட சில அணைகளில் கசிவு ஏற்படுவதாக, சில கவுன்சிலர்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர்.மழை அதிகரித்து அணை நிரம்பும் பட்சத்தில் அணையில் நிரம்பும் நீர் கசிந்து வீணாகும் என்பதால், அணை­யில் உள்ள கசிவுகளை அடைக்கவும், வீணாகும் தண்ணீரை நிறுத்தவும் நகராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும்.
 


Page 104 of 390