Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

அரசு மருத்துவமனைக்கு முறையான குடிநீர் சப்ளை

Print PDF

தினமலர்      14.08.2012

அரசு மருத்துவமனைக்கு முறையான குடிநீர் சப்ளை

சேலம்: "சேலம் மாநகராட்சி சார்பில், அரசு மருத்துவமனைக்கு முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது'' என, சேலம் மாநகராட்சி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது."சேலம், அரசு மருத்துவமனை மற்றும் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கும் சேர்ந்து, தினசரி, 3.5 லட்சம் லிட்டர் குடிநீர் சப்ளை செய்ய, சேலம் மாநகராட்சிக்கு, 4.15 லட்சம் ரூபாய் டிபாஸிட் செலுத்தி, ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. ஆனால், இதுவரை தண்ணீர் வினியோகம் செய்யப்படவில்லை.'"இதுதொடர்பாக, பலமுறை நினைவூட்டல் கடிதம் அனுப்பியும் பலன் இல்லை. அதேப்போல, ஏற்கனவே, இருந்த பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தமிழரசு, பல முறை மாநகராட்சிக்கு கடிதம் எழுதியும், கண்டு கொள்ளவில்லை. தற்போதுள்ள செயற்பொறியாளர் கலையரசன் தொலைபேசியில் புகார் செய்தும், மாநகராட்சி நிர்வாகம் அலட்சியம் காட்டி வருகிறது' என, மாநகராட்சி நிர்வாகத்தின் மீது, அரசு மருத்தவமனை, டீன் வள்ளிநாயகம் குற்றம்சாட்டியிருந்தார்.

இது குறித்த செய்தி, நேற்று "காலைக்கதிர்' நாளிதழிலில் வெளியானது.இது தொடர்பாக மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்ட விளக்க அறிக்கை:சேலம் மாநகராட்சியில் இருந்து, நாள்தோறும் அரசு மருத்துவமனைக்கு, 41 ஆயிரம் லிட்டர் குடிநீர், லாரிகள் மூலம் வினியோகம் செய்யப்படுகிறது. நாள் ஒன்றுக்கு லாரிகளுக்கு வாடகையாக, 3,500 ரூபாய் நிர்ணயம் செய்து, ஒரு லட்சத்து, ஐந்தாயிரம் ரூபாய் வாடகை செலுத்தப்பட்டு வருகிறது.அரசு மருத்துவமனை வளாக பகுதிகளில், ஏற்கனவே உள்ள ஆறு குடிநீர் குழாய் இணைப்புகள் மூலம் சராசரியாக, நாள் ஒன்றுக்கு, 36 ஆயிரம் லிட்டர் குடிநீர் தினசரி வினியோகம் செய்யப்படுகிறது. மேலும், இரண்டு பெரிய இணைப்புகள் கூடுதலாக வழங்கப்பட்டு, நாள் ஒன்றுக்கு சராசரியாக, 31 ஆயிரம் லிட்டர் வீதம், நான்கு நாட்களுக்கு ஒரு முறை மொத்தமாக, ஒரு லட்சத்து, 25 ஆயிரம் லிட்டர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.லாரி மூலமும், குடிநீர் இணைப்புகள் மூலமும், நாள் ஒன்றுக்கு, அரசு மருத்துவமனை வளாகத்திலுள்ள, எட்டு தரை தள தொட்டிகளுக்கு, ஒரு லட்சத்து, 8,000 லிட்டர் வழங்கப்படுகிறது.

மேலும், பொதுமக்களிடம் இருந்து குடிநீர் இணைப்புகளுக்காக பெறப்படும் வைப்பு தொகையை போலவே, அரசு தலைமை மருத்துவ மனை நிர்வாகமும், குடிநீர் இணைப்பு பெற்று, அதற்கான வைப்பு தொகையை செலுத்தியுள்ளது.மாநகராட்சி நிர்வாகத்தின் மூலம் வழங்கப்படும் குடிநீரினை, குடிநீர் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று ஏற்கனவே, பல முறை மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில், அரசு தலைமை மருத்துவமனையின், தலைவருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.எனவே, குடிநீர் தேவை போக, பிற தேவைகள் (குளியல் அறை, கழிவறை மற்றும் இதர தேவைகள்) உள்ளிட்டவற்றுக்கு மருத்துவமனையை பராமரிக்கும், பொதுப்பணித் துறையினர், இதற்கு உண்டான மாற்று திட்டத்தை தயார் செய்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும், உள் மற்றும் புற நோயாளிகளின் தேவையை நிறைவேற்றிட வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

பில்லூர் திட்டத்தில் 1.80 கி.மீ தூரத்துக்கு இரும்பு குடிநீர் குழாய்

Print PDF

தினகரன்             13.08.2012

பில்லூர் திட்டத்தில் 1.80 கி.மீ தூரத்துக்கு இரும்பு குடிநீர் குழாய்

கோவை,: பில்லூர் முதல் திட்டத்தில் ரூ.4.90 கோடியில் 1.80 கி.மீ தூரம் இரும்பு குடிநீர் குழாய் அமைக்க டெண்டர் விடப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் பில்லூர் முதல் குடிநீர் திட்டத்தின் மூலமாக கோவை மாநகராட்சி, பல்லடம் நகராட்சி, மதுக்கரை, செட்டிபாளையம், வெள்ளலூர், ஒத்தக்கால் மண்டபம் உள்பட 23 பேரூராட்சி, 510 வழியோர கிராமங்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. கோவை மாநகராட்சிக்கு தினமும் 6.5 கோடி லிட்டர் குடிநீரும், நகராட்சி, பேரூராட்சிகள், வழியோர கிராமங்களுக்கு தினமும் 6.1 கோடி லிட்டர் குடிநீரும் விநியோகிக்கப்படுகிறது. தினமும் சுமார் 17 லட்சம் மக்கள் பில்லூர் முதல் குடிநீர் திட்டத்தில் குடிநீர் பெறுகிறார்கள். பில்லூர் அணையில் இருந்து வெள்ளிங்காடு, தோலம்பாளையம், காரமடை, வையம்பாளையம், வீரபாண்டி பிரிவு, வெள்ளமடை வழியாக 28 கி.மீ தூரம் கற்காரை பிரதான குழாய் (1500 மி.மீ விட்டம் கொண்டது) மூலமாக விளாங்குறிச்சி ரோடு மேல் நிலை நீர் தொட்டிக்கு குடிநீர் கொண்டு வரப்படுகிறது. பிரதான குடிநீர் குழாய் பாறை, பள்ளம், களிமண் நிறைந்த பகுதியில் அமைந்துள்ளது. குழாய் கற்காரையாக (பி.எஸ்.சி) இருப்பதாலும், அதிக அழுத்தம், மின் தடை காரணமாகவும் அடிக்கடி உடைந்து விடுகிறது. குழாய் உடைப்பு, அதிக நீர் அழுத்தம் கண்டறிய ஸ்கேடா என்ற குடிநீர் விநியோக கண்காணிப்பு கருவி அமைக்கப்பட்டது. இந்த கருவியின் மூலமாக களிமண் பூமியில் பதிக்கப்பட்ட கற்காரை குழாய்களே அதிக அழுத்தம் தாங்காமல் உடைந்து விடுவதை தெளிவாக காட்டியது. இதை தொடர்ந்து களிமண் பூமியில் உள்ள பிரதான குழாய்களை முற்றிலும் மாற்ற உத்தரவிடப்பட்டது. வீரபாண்டி பிரிவு முதல் வெள்ளமடை வரை 1.8 கி.மீ தூரத்திற்கு கற்காரை குழாய்க்கு பதிலாக இரும்பு குழாய் அமைக்கப்படும். இதற்காக 4.90 கோடி ரூபாய் செலவில் டெண்டர் விடப்பட்டுள்ளது.வரும் 16ம் தேதி வரை டெண்டர் விண்ணப்பங்கள் பெறப்படும். வரும் 17ம் தேதி கோவை பாரதிபார்க் ரோட்டில்  உள்ள குடிநீர் வடிகால் வாரிய தலைமை பொறியாளர் அலுவலகத்தில் டெண்டர்.
 

ரூ.132.12 கோடி தனிக்குடிநீர் திட்ட பணி

Print PDF

தினமலர்    13.08.2012

ரூ.132.12 கோடி தனிக்குடிநீர் திட்ட பணி

சேலம்: சேலம் மாநகரில், தனிக்குடிநீர் திட்டத்துக்காக, 132.12 கோடி ரூபாய் மதிப்பிலான இரண்டாம் கட்ட பணிகளை, அமைச்சர் இடைப்பாடி பழனிசாமி நேற்று துவக்கி வைத்தார்.சேலம் மாநகருக்கு, 320.54 கோடி ரூபாய் மதிப்பில் துவங்கப்பட்ட, தனிக் குடிநீர் திட்டத்தில், முதல் கட்டமாக, 188.42 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகள் நிறைவு பெறும் நிலையில், இரண்டாம் கட்டமாக, 132.12 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகள் நேற்று துவங்கப்பட்டன.அதன் ஒரு பகுதியாக, சேலம், மாமாங்கத்தில் இருந்து, 67.385 கி.மீ., தூரத்துக்கு, 44.1 கோடி ரூபாய் மதிப்பில், துணை பிரதான குழாய்கள் பதிக்கும் பணிக்கான பூமிபூஜை நேற்று நடந்தது. அமைச்சர் இடைப்பாடி பழனிசாமி தலைமை வகித்து பூமிபூஜை செய்து, பணியை துவக்கி வைத்தார்.தொடர்ந்து, மாநகர பகுதிகளில், 32.85 கோடி ரூபாய் மதிப்பில், புதிதாக, 22 மேல்நிலை நீர்தேக்க தொட்டிகள் அமைப்பதற்கான பூமிபூஜை, களரம்பட்டியிலும், 47.63 கோடி ரூபாய் மதிப்பீட்டில், புதிதாக பகிர்மான குழாய்கள் பதிக்கவும், 2.5 கோடி ரூபாய் மதிப்பில், குடிநீர் அளவை கம்ப்யூட்டரில் கண்காணிக்கவும், பராமரிப்பு மற்றும் இதர பணிக்கான, 2.5 கோடி மதிப்பு வேலைக்கான பூமிபூஜையை அம்மாபேட்டையிலும், அமைச்சர் இடைப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்.மூன்று நிலையாக மேற்கொள்ளப்படும் தனிக்குடிநீர் திட்ட இரண்டாம் கட்டப்பணிகளை, 18 மாதத்துக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. தனிக்குடிநீர் திட்டம் அமலுக்கு வந்ததும், மாநகர பகுதியில், தினசரி, ஒரு நபருக்கு, 135 லிட்டர் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சேலம், குமாரசாமிபட்டி ஆயுதப்படை போலீஸ் குடியிருப்பு அருகே, 39.50 லட்சம் ரூபாய் மதிப்பில், ஐந்து படுக்கை வசதி கொண்ட மகப்பேறு மருத்துவமனையையும், கிச்சிப்பாளையம் பகுதியில், 39.95 லட்சம் ரூபாய் மதிப்பில், எட்டு படுக்கை வசதிகளுடன் புதிதாக கட்டப்பட்ட மகப்பேறு மருத்துவமனையையும், அமைச்சர் திறந்து வைத்தார்.கலெக்டர் மகர பூஷணம், எம்.பி. செம்மலை, எம்.எல்.ஏ.,க்கள் செல்வராஜ், வெங்கடாசலம், மாநகராட்சி கமிஷனர் அசோகன், மேயர் சவுண்டப்பன், துணை மேயர் நடேசன், நிர்வாக பொறியாளர் காமராஜ் உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

 


Page 105 of 390