Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

குடியாத்தத்தில் ரூ.1.25 கோடியில் ராபின்சன் குளத்தை புனரமைக்க முடிவு

Print PDF

தினமணி             10.08.2012

குடியாத்தத்தில் ரூ.1.25 கோடியில் ராபின்சன் குளத்தை புனரமைக்க முடிவு

குடியாத்தம், ஆக. 9: குடியாத்தம் நகராட்சியும், ரோட்டரி சங்கமும் இணைந்து இங்குள்ள ராபின்சன் குளத்தை தூரெடுத்து, மழைநீரை சேகரிக்க முடிவெடுத்துள்ளன. சுமார் ரூ. 1.25 கோடியில் செயல்படுத்தப்பட உள்ள இத் திட்டத்துக்கு வெண்துளி நன்னீர் திட்டம் என பெயரிடப்பட்டுள்ளது.

குடியாத்தம் நகரின் மையப் பகுதியில் சுமார் 5 ஏக்கர் நிலப் பரப்பில் அமைந்துள்ளது ராபின்சன் குளம். ஆங்கிலேயர் ஆட்சியின்போது கட்டப்பட்ட இந்தக் குளம் நகரின் முக்கிய நீராதாரமாக விளங்கி வந்தது.

இந்நிலையில் கடந்த பல ஆண்டுகளாக நீர்வரத்து இன்றி இக்குளம் முற்றிலும் வற்றிவிட்டது. குளத்தில் செடி, கொடிகள் வளரத் தொடங்கின. நாளடைவில் அப்பகுதி மக்கள் குப்பைகளை கொட்டத் தொடங்கினர். நகராட்சி ஊழியர்களும் நகரில் அள்ளும் குப்பைகளை, லாரிகள் மூலம் கொண்டுவந்து இக்குளத்தில் கொட்டினர்.

இதனால் மழைக் காலங்களில் குளத்தில் நீர்தேங்கி, சுற்றுப்பகுதி கிணறுகள் மற்றும் ஆழ்துளைக் கிணறுகளில் நீர் மாசடைந்தது நிறம் மாறியது.

நகரில் வேறு நீர்த்தேக்கங்கள் எதுவும் இல்லாத நிலையில், நிலத்தடி நீர் மட்டம் வெகுவாகக் குறைந்து வருகிறது.இப்போது 500 அடியிலிருந்து 600 அடி ஆழம் வரை பூமியைத் துளைத்தால்தான் ஆழ்துளைக் கிணறுகளில் தண்ணீர் கிடைக்கும் நிலை உள்ளது.

இந்நிலையில் ராபின்சன் குளத்தை தூரெடுத்து, மழைநீர் சேகரிப்பு மையம் அமைக்கவும், அதைச் சுற்றி பூங்காவும், பொதுமக்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் வகையில் பாதை அமைக்கவும், நகராட்சி நிர்வாகம் முடிவு செய்ததுள்ளது.

இதனிடையே நகராட்சியும், ரோட்டரி சங்கமும் இணைந்து இத்திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்துள்ளன. ராபின்சன் குளத்தில் உள்ள குப்பைகளை ரோட்டரி சங்கமே அகற்றி, குளத்தை சீரமைத்துத் தர உள்ளதால், இப்பணிக்கு ஏற்படும் செலவில், நகராட்சியின் பங்குத் தொகையாக, ரூ. 10 லட்சம் ரோட்டரி சங்கத்துக்கு வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

புதிதாக தொடங்க உள்ள வெண்துளி நன்னீர் திட்டத்துக்கு ரோட்டரி சங்க முன்னாள் தலைவரும், அம்பாலால் அறக்கட்டளைச் செயலருமான கே.ஜவரிலால் ஜெயின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.இந்த திட்டத்துக்கான ஒப்பந்த படிவத்தை, நகர்மன்றத் தலைவர் அமுதாசிவப்பிரகாசம், ஜவரிலால் ஜெயினிடம் வழங்கினார். இந்தத் திட்டம் மூலம் குடியாத்தம் பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து குடிநீர் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் என எதிப்பார்க்கப்படுகிறது.

Last Updated on Saturday, 11 August 2012 07:17
 

சாத்தான்குளத்தில் குடிநீர் பற்றாக்குறை: சிறப்பூர் திட்டம் தொடக்கம்

Print PDF

தினமணி         08.08.2012

சாத்தான்குளத்தில் குடிநீர் பற்றாக்குறை: சிறப்பூர் திட்டம் தொடக்கம்

சாத்தான்குளம், ஆக. 7: சாத்தான்குளம் பேரூராட்சியில் குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்க சிறப்பூர் குடிநீர் திட்டம் மீண்டும் புனரமைப்பு செய்யப்பட்டது.

சாத்தான்குளம் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இங்கு 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

இங்குள்ள மக்களுக்கு பொன்னன்குறிச்சியிலிருந்து சாத்தான்குளம்-உடன்குடி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் ஒருநாள் விட்டு ஒருநாள் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் போதிய மழை இல்லாததால் ஸ்ரீவைகுண்டம் அணையில் தண்ணீர் வறண்டதால் பொன்னன்குறிச்சியிலும் உள்ள ஆழ்துளைகளிலும் தண்ணீர் வற்றியது.

இதனால் சாத்தான்குளத்துக்கு குடிநீர் வழங்குவது பாதிக்கப்பட்டது. ஏற்கெனவே கூட்டுக் குடிநீர் திட்டம் தொடங்குவதற்கு முன் சிறப்பூர் குடிநீர் திட்டத்தின் மூலம் இப்பகுதிக்கு குடிநீர் வழங்கப்பட்டு வந்தது.

நாளடைவில் அவை தூர்ந்து போனதால் அங்கிருந்து வழங்கப்படுவது நிறுத்தம் செய்யப்பட்டது.தற்போது கூட்டுக் குடிநீர் திட்டத்தில் தண்ணீர் குறைந்து போனதால் பேரூராட்சி மூலம் துரித நடவடிக்கையால் சிறப்பூர் குடிநீர் திட்டம் புனரமைப்பு செய்யப்பட்டது.

பின்னர் சிறப்பூரில் மேலும் 4 ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு சாத்தான்குளம் மக்களுக்கு குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.அதன்படி மீண்டும் சாத்தான்குளம் மக்களுக்கு தற்போது தினமும் ஒரு மணி நேரம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

சிறப்பூர் குடிநீர் திட்டத்தை மீண்டும் செயல்படுத்திய பேரூராட்சித் தலைவர் ஆ.செ.ஜோசப், செயல் அலுவலர் முருகேசன் மற்றும்மன்ற உறுப்பினர்களை பொதுமக்கள் பாராட்டினர்.

Last Updated on Wednesday, 08 August 2012 11:34
 

காயல்பட்டினம் குடிநீர் பிரச்னை: நிலத்தடி நீர் மூலம் தீர்க்க அதிகாரிகள் ஆய்வு

Print PDF

தினமணி         08.08.2012

காயல்பட்டினம் குடிநீர் பிரச்னை: நிலத்தடி நீர் மூலம் தீர்க்க அதிகாரிகள் ஆய்வு

ஆறுமுகனேரி, ஆக. 7: காயல்பட்டினத்தில் நிலவும் குடிநீர் பிரச்னைக்கு, நிலத்தடி நீர் மூலம் தீர்வு காண நகராட்சி அதிகாரிகள் திங்கள்கிழமை குரும்பூர் அருகே உள்ள நல்லூரில் ஆய்வு மேற்கொண்டனர்.

காயல்பட்டினத்துக்கு குடிநீர் வழங்கும் மேல  ஆத்தூரில்  உள்ள நீர்தேக்கம்  உள்பட  தூத்துக்குடி போன்ற   பல்வேறு   நீர்  தேக்கங்களுக்கு    பாபநாசம்    அணையிலிருந்து    இருந்து      தண்ணீர் தாமிரவருணி ஆற்றில் திறந்து    விடப்படுகிறது. தினசரி  சராசரியாக 20 லட்சம் லிட்டர் தண்ணீர் தமிழ்நாடு குடிநீர் வாரியம் மூலம் காயல்பட்டினத்துக்கு எடுக்கப்பட்டு வந்தது.அது  தற்போது 15 லட்சம்   லிட்டராக  குறைக்கப்பட்டுள்ளது    என   மேலாத்தூர்   குடிநீர்  வடிகால்  வாரிய  துணை பொறியாளர்   பாலசுப்ரமணியம்   தெரிவித்தார்.  மேலும்   அவர்  கூறுகையில்தண்ணீர்  வரத்து மிகவும் குறைவாக இருப்பதால், சில நாள்களில் இந்த அளவும் குறைக்கப்படவேண்டி இருக்கும் என்றும், திருநெல்வேலியில் அமைச்சர் கலந்துகொண்ட   ஆய்வுக்   கூட்டத்தில்    சூழ்நிலையை கருத்தில்கொண்டு, விரைவாக  நிலத்தடி நீர் மூலம் காயல்பட்டினத்துக்கு குடிநீர் வழங்க  ஏற்பாடு செய்யும்படி  அறிவுறுத்தப்பட்டுள்ளதாக   தெரிவித்தார்.  இதையடுத்து   நிலத்தடி   நீர்     மூலம் காயல்பட்டினத்துக்கு குடிநீர் வழங்க குரும்பூர்  அருகே உள்ள நல்லூரில்  திங்கள்கிழமை  ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.நகர்மன்றத் தலைவர்  ஐ.  ஆபிதாஷேக்,   ஆணையர்   அசோக்குமார், மண்டல பொறியாளர் மற்றும் இதர அதிகாரிகள் ஆகியோர் இந்த ஆய்வினை  மேற்கொண்டனர்.

Last Updated on Wednesday, 08 August 2012 11:34
 


Page 107 of 390