Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

குடிநீர் திட்ட பணிக்காக தயாராகும் "ஏர்வால்வ் சேம்பர்'

Print PDF

தினமலர்                    08.08.2012

குடிநீர் திட்ட பணிக்காக தயாராகும் "ஏர்வால்வ் சேம்பர்'

பாலக்கோடு: ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட பணிக்காக பாலக்கோட்டில் ஏர்வால்வ் சேம்பர் தயாரிக்கும் பணி தீவிரமாக நடக்கிறது.தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்கள் பயன் பெறும் வகையில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட பணிகள் நடந்து வருகிறது. இத்திட்டத்தின் மூலம் ஒருங்கிணைந்த தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மூன்று நகராட்சிகள், 17 டவுன் பஞ்சாயத்துக்கள், ஆறு ஆயிரத்து 755 பஞ்சாயத்துக்கள் உள்ள மக்கள் பயன் பெறும் வகையில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம், ஆயிரத்து 928 கோடியே 80 லட்ச ரூபாய் மதிப்பில் திட்ட பணிகள் துவங்கப்பட்டு ஐந்து தொகுப்பாக பணிகள் நடந்து வருகிறது.ஐந்தாவது தொகுப்பில் பாலக்கோட்டில் இருந்து கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர், கிருஷ்ணகிரி, பர்கூர் ஆகிய பகுதிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்லும் பணி நடக்கிறது. இதற்காக பாலக்கோட்டில், 78 லட்சம் கொள்ளவு கொண்ட நீர் ஏற்று மையம் அமைக்கும் பணி வேகாமாக செயல்படுத்தப்படுகிறது.மேலும் இங்கிருந்து செல்லும் குடி நீர் குழாய்களில் ஏற்படும் நீரின் அழுத்தத்தை குறைக்கும் வகையில் ஏர்வால்வ் சேம்பர்கள் அமைக்கும் பணி நடக்கிறது. இதற்காக பாலக்கோட்டில் ஏர்வால்வ் சேம்பர் அதிகளவில் தயாரிக்கப்படுகிறது. இதை வாகனங்கள் மூலம் ஏற்றி சென்று குடிநீர் குழாய்களில் குறிப்பிட்ட இடத்தில் பொருத்தும் பணி நடந்து வருகிறது.

இது குறித்து கூட்டு குடிநீர் திட்ட அலுவர் ஒருவர் கூறியது:

ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டதின் ஐந்தாவது தொகுப்பில் மடத்தில் இருந்து பாலக்கோட்டில் அமைக்கப்பட்டு வரும் 78 லட்சம் கொள்ளவு கொண்ட நீர் தேக்க தொட்டிக்கு தண்ணீர் கொண்டு வரப்படும்.

இங்கிருந்து   கிருஷ்ணகிரி நகராட்சி, ஓசூர், பர்கூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. இதற்காக குடிநீர்   குழாய்கள்   பதிக்கும் பணி நிறைவு பெறும் நிலையில் உள்ளது.குடி குழாயின் நீர் அழுத்தத்தை குறைக்க நூற்றுக்கும் மேற்பட்ட ஏர்வால்வ் சேம்பர் பொருத்தப்படுகிறது.இதற்காக பாலக்கோடு நீர் ஏற்று மையம் அருகே ஏர்வால்வ் சேம்பர் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

இப்பணிகள்     அனைத்தும்  வரும்   செப்டம்பர்  மாதம் இறுதிக்குள் முடிக்கப்படும்.இவ்வாறு கூறினார்.

 

தேவை 203 சப்ளை 128 மில்லியன் லிட்டர் புதிய அணை கட்டினால் மதுரை பிழைக்கும் குடிநீருக்கு வரப்போகுது பஞ்சம்!

Print PDF

தினகரன்   07.08.2012

தேவை 203 சப்ளை 128 மில்லியன் லிட்டர் புதிய அணை கட்டினால் மதுரை பிழைக்கும் குடிநீருக்கு வரப்போகுது பஞ்சம்!

மதுரை, : மாநகராட்சி எல்லை விரிவாக்கத்திற்கு பிறகு குடிநீர் தேவை நாள் ஒன்றுக்கு 203 மில்லியன் லிட்டராக அதிகரித்துள்ளது. ஆனால், 128 மில்லியன் லிட்டர்தான் சப்ளை செய்யப்படுகிறது. இதனால் புதிய குடிநீர் திட்டங்களை உருவாக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது. வைகை அணை அருகே குடிநீருக்காக உருவாக்கப்பட்ட புதிய அணை கட்டும் திட்டம் விரைவாக நிறைவேற்றப்பட வேண்டும் என பொறியாளர்கள் கருதுகின்றனர்.

மதுரை மாநகராட்சியுடன் 3 நகராட்சி, 3 பேரூராட்சி, 11 ஊராட்சிகள் இணைக்கப்பட்டு 100 வார்டுகளாக்கப்பட்டுள்ளன. இதனால் மக்கள் தொகை 15 லட்சமாக உயர்ந்துள்ளது. மாநகராட்சி பகுதிகளில் நாள் ஒன்றுக்கு ஒரு நபருக்கு 135 லிட்டர் வீதம் குடிநீர் சப்ளை செய்யவேண்டும். அதன்படி ஒரு நாள் தேவை 203 மில்லியன் லிட்டர். ஆனால் தற்போது பழைய 72 வார்டுகளுக்கே தினமும் 103 லிட்டர் வழங்கப்படுகிறது. விரிவாக்க பகுதிகளுக்கு அதை விட குறைவாகவே கிடைக்கிறது.

நூறு வார்டுகளுக்கும் சேர்த்து மொத்தம் தினமும் 128 மில்லியன் லிட்டர் சப்ளை செய்யப்படுகிறது. தற்போதைய நிலையில் 75 மில்லியன் லிட்டர் பற்றாக்குறை உள்ளது. மதுரை குடிநீருக்கு வைகை அணையில் ஆண்டுக்கு ஆயிரத்து 500 மில்லியன் கன அடி ஒதுக்கப்படுகிறது. இதன் மூலம் தினமும் 115 மில்லியன் லிட்டர் குழாய் மூலம் நேரடியாக வருகிறது. இதுதவிர, வைகை ஆற்று படுகையில் உறை கிணறு தோண்டி எடுக்கப்படுகிறது. ஆற்றில் வறட்சி ஏற்படும்போது உறை கிணறுகள் வற்றி விடுகிறது. இப்போதுள்ள நிலையில் குடிநீர் தேவையை ஈடுகட்ட முடியவில்லை.

நூறு வார்டுகளுக்கும் எதிர்கால குடிநீர் தேவைக்கு இன்னும் கூடுதலாக 278 மில்லியன் லிட்டர்தேவைப்படும் நிலை உள்ளது. அல்லது 3 ஆயிரத்து 500 மில்லியன் கன அடி நீருக்கான குடிநீர் ஆதாரம் கண்டறியப்பட வேண்டும். எனவே, தகுந்த குடிநீர் ஆதாரத்தை தேர்வு செய்யவும், குடிநீர் அபிவிருத்தி திட்டம் தயாரிக்கவும் ஆலோசனை குழு நியமிக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது. காவிரி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் மாநகராட்சி பகுதிக்கு சிறிதளவே கிடைக்க வாய்ப்புள்ளது. மழை காலங்களில் வைகை அணை நிரம்பி உபரி நீர் ஆற்றில் திறக்கப்பட்டு கடலில் வீணாகிறது.

எனவே, வைகை அணை அருகே ஜெயமங்கலத்தில் புதிய அணை கட்ட திட்டம் உருவாக்கப்பட்டது. வைகையில் குறிப்பிட்ட அளவுக்கு மேல் நிரம்பும் தண்ணீர் புதிய அணையில் தேங்கும். இதற்காக இணைப்பு கால்வாய் அமைத்துக் கொள்ளமுடியும். இதற்கான மாதிரி வரைபடத்தை பொதுப் பணித்துறை பொறியாளர்கள் தயாரித்து அரசுக்கு அனுப்பி உள்ளனர். இந்த அணை திட்டம் நிறைவேறினால், மதுரை மாநகராட்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு கூடுதல் குடிநீர் கிடைக்க வாய்ப்பு ஏற்படும் என பொறியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
 

குன்னூரில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு :தனியார் லாரிகள் மூலம் குடிநீர் வினியோகம்

Print PDF

தினமலர்          07.08.2012

குன்னூரில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு :தனியார் லாரிகள் மூலம் குடிநீர் வினியோகம்

குன்னூர் : குன்னூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர் வினியோகம் செய்ய, ஊட்டி நகராட்சி மற்றும் தனியார் நிறுவனங்களில் இருந்தும் லாரிகள் கொண்டு வரப்பட்டுள்ளன. குன்னூர் நகரின் ஒரே குடிநீர் ஆதாரமான ரேலியா அணையின் நீர்மட்டம், பருவ மழை பொய்த்த காரணத்தால், வேகமாக குறைந்து வருகிறது. பிற குடிநீர் திட்டங்களும் கிடப்பில் போடப்பட்டுள்ளதால், தண்ணீர் பிரச்னை "தலைவலியாக' மாறி வருகிறது

. நீர்மட்டம் குறைவு:இதனால், நகராட்சி சார்பில் இரு நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் வினியோகிக்கப்பட்டு வந்த நிலை மாறி, தற்போது 12 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது. இதேபோல, 9.6 அடி கொள்ளவு கொண்ட பந்துமி அணையில் தற்போது அரையடி மட்டுமே நீர் உள்ளதால், இங்கிருந்து தண்ணீர் வினியோகிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

காந்திபுரம் பகுதி மக்கள் தண்ணீரை விலை கொடுத்து வாங்கி வருகின்றனர். நகராட்சி நிர்வாகத்துக்கு இது குறித்து புகார் அளித்ததன் பேரில், லாரிகளில் தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது. தண்ணீர் வினியோகிக்க 4 லாரிகள் நகராட்சி சார்பில் இயக்கப்படும் நிலையில், தற்போது இரு லாரிகள் பழுதடைந்துள்ளன. ஒரு லாரி தகுதி சான்றிதழ் பெற அனுப்பப்பட்டுள்ளதால், ஒரு லாரி மூலம் 30 வார்டுகளுக்கு தண்ணீர் வினியோகம் செய்ய முடியாமல் ஊழியர்கள் திணறுகின்றனர்.

மேலும் லாரியின் இழுவை திறன் குறைவாக உள்ளதால் மேடான பகுதிகளுக்கு லாரி செல்வதில்லை. லாரிகள் மூலம் வினியோகம்:

இந்நிலையில், குன்னூரில் அனைத்து வார்டுகளுக்கும் தண்ணீர் வினியோகிக்க, ஊட்டி நகராட்சியிலிருந்து ஒரு தண்ணீர் லாரி கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும் இரு தனியார் லாரிகள் வாடகைக்கு எடுக்கப்பட்டு தண்ணீர் வினியோகிக்கும் பணி நடந்து வருகிறது.

இதனால்    குன்னூர்   மக்கள்   ஆறுதலடைந்துள்ளனர். ரேலியா அணையில் மட்டுமே குடிநீர் இருப்பு உள்ள நிலையில்,   வரும்   நாட்களில் மழை பெய்தால் மட்டுமே தண்ணீர் தட்டுப்பாடு நீங்கும் சூழ்நிலை உள்ளது.

 


Page 109 of 390