Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

தனியார் மூலம் தண்ணீர் வினியோகம் சுத்திகரிப்புக்கான உத்தரவாதமில்லை

Print PDF

தினமலர்                 03.08.2012

தனியார் மூலம் தண்ணீர் வினியோகம் சுத்திகரிப்புக்கான உத்தரவாதமில்லை

ஊட்டி : "தனியார் மூலம் வினியோகம் செய்யப்படும் தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு உள்ளதா என்பதை உறுதி செய்த பின்பு பயன்படுத்த வேண்டும்,' என அறிவுறுத்தப்பட்டுள்ளது.ஊட்டி நகராட்சி கமிஷனர் சிவக்குமார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தனியார் நிறுவனங்கள் லாரி மூலம் பொதுமக்களுக்கு தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு,"தனியார் வாயிலாக வினியோகம் செய்யப்படும் தண்ணீர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்,' என்பதற்கான சான்றிதழ் நகராட்சி வாயிலாக வழங்கப்படுவதில்லை. எனவே, தனியார் மூலம் வினியோகம் செய்யப்படும் தண்ணீர் சுகாதாரமானதாகவும், சுத்திகரிக்கப்பட்டதாகவும் உள்ளதா என்பதனை உறுதி செய்த பின்பு பயன்படுத்த வேண்டும். மேலும், குடிநீர் மூலம் நோய்கள் பரவாமல் தடுக்க குடிநீரை நன்கு கொதிக்க வைத்து ஆறிய பின்பு குடிக்க வேண்டும். இவ்வாறு சிவக்குமார் கூறியுள்ளார்.

 

"நகராட்சி பகுதியில் விரைவில் குடிநீர் விநியோகம்'

Print PDF
தினமணி                   03.08.2012

 "நகராட்சி பகுதியில் விரைவில் குடிநீர் விநியோகம்'


தஞ்சாவூர், ஆக. 2: குடிநீர் குழாயை இணைக்கும் பணி நிறைவடைந்து வருவதால், விரைவில் குடிநீர் விநியோகம் செய்யப்படும் என்றார் தஞ்சாவூர் நகர்மன்றத் தலைவர் சாவித்திரி கோபால்.

அரியலூர் மாவட்டம், திருமானூர் கொள்ளிடம் ஆற்றிலிருந்து தஞ்சாவூர் நகராட்சி பொதுமக்களுக்கு தேவையான குடிநீர் எடுக்கப்பட்டு, விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆற்றின் உள்ளே அமைக்கப்பட்டிருக்கும் குடிநீர் குழாய்கள் அடிக்கடி பழுது ஏற்பட்டதைத் தொடர்ந்து, மேம்பாலம் அமைக்கப்பட்டு அதில் குடிநீர் குழாய் பதிக்கும் பணி முடிவுற்றுள்ளது.

இதில், தற்போது குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வரும் இணைப்பைத் துண்டித்து, புதிய குழாயுடன் இணைப்பு ஏற்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக, தஞ்சாவூர் நகராட்சியில் கடந்த 2 நாள்களுக்கு குடிநீர் வழங்கப்படவில்லை.

நடைபெற்று வரும் இந்தப் பணிகளை தஞ்சாவூர் சட்டப்பேரவை உறுப்பினர் எம். ரெங்கசாமி, நகர்மன்றத் தலைவர் சாவித்திரி கோபால் ஆகியோர் புதன்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இதுகுறித்து நகர்மன்றத் தலைவர் கூறியது:

நகர மக்களுக்கு தங்கு தடையின்றி குடிநீர் வழங்கும் பொருட்டு திருமானூர் கொள்ளிடம் நீரேற்று நிலையத்திலிருந்து ஆற்றின் தரை தளத்துக்கு ரூ. 11 கோடியில் 6 மீட்டர் உயரத்தில் 1010 மீட்டர் நீளம் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இதில், குழாய் பதிக்கும் பணிகள் நிறைவுற்று புதன்கிழமை சோதனை அடிப்படையில் நீரேற்றப்பட்டுள்ளது.

இந்தப் பணிகள் விரைவில் முடிவடைந்தவுடன் ஓரிரு நாளில் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு விடும். இவ்வாறு பாலத்தில் குழாய் அமைக்கும் பணியால் ஆற்றில் தண்ணீர் வீணாவது முற்றிலும் தடுக்கப்படும் என்றார்.

ஆய்வின் போது, நகராட்சி ஆணையர் பு. ஜானகி ரவீந்திரன், பொறியாளர் சீனிவாசன், திருவையாறு ஊராட்சி ஒன்றியக் குழுத் துணைத் தலைவர் என். இளங்கோவன், மாவட்ட அதிமுக முன்னாள் துணைச் செயலர் ஜெ.வி. கோபால், நகர்மன்ற உறுப்பினர்கள் சுவாமிநாதன், சரவணன், பூபதி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 

பழனியில் குடிநீர் குழாய் பதிக்கும் பணி: ஜப்பான் வல்லுநர்கள் ஆய்வு

Print PDF

தினமணி                 01.08.2012

பழனியில் குடிநீர் குழாய் பதிக்கும் பணி: ஜப்பான் வல்லுநர்கள் ஆய்வு

பழனி, ஜூலை 31: பழனியில் பன்னாட்டு நிதி நிறுவனத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ள குடிநீர் குழாய் பதிக்கும் பணிகளை, ஜப்பான் நாட்டு திட்ட வல்லுநர்கள் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனர்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பாலாறு-பொருந்தலாறு அணையில் இருந்து பழனிக்கு சிமெண்ட் குழாய்கள் மூலமாக குடிநீர் கொண்டு வரும் பணிகள், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் செய்யப்பட்டு, நகராட்சிக்கு ஒப்படைக்கப்பட்டது.

இக்குழாய் வரும் வழியில் பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டதால், இன்று வரை முழுமையாக குடிநீரை பயன்படுத்த முடியாத நிலை, நகராட்சிக்கு நீடித்து வருகிறது.

இந்நிலையில், ஜப்பான் பன்னாட்டு நிதி நிறுவனம் மூலம் சுமார் ரூ. 21.6 கோடி மதிப்பில் பாலாறு-பொருந்தலாறு அணையில் இருந்து பழனிக்கு வரும் சிமெண்ட் குடிநீர் குழாய்களை, இரும்புக் குழாய்களாக மாற்ற திட்டங்கள் தீட்டப்பட்டு, அரசு ஒப்புதல் பெறப்பட்டு, கடந்த சில மாதங்களாக பணிகள் நடைபெற்று வருகின்றன.

இப்பணிகளை, செவ்வாய்க்கிழமை பன்னாட்டு நிதி நிறுவனத்தின் திட்ட வல்லுநர்களான மிஹிர் சோகைல், யூய் நகமுரா ஆகியோர் ஆய்வு செய்தனர்.

அதில் அவர்கள், பழனிக்கு குடிநீர் வரும் பாலாறு அணை, நீரேற்றும் நிலையம், குடிநீர் சுத்திகரிப்பு செய்யும் பகுதி மற்றும் குழாய்கள் பதிக்கும் பணிகளை பார்வையிட்டனர். நகர்மன்றத் தலைவர் வேலுமணி, துணைத் தலைவர் முருகானந்தம், நகராட்சி ஆணையர் (பொறுப்பு) கண்ணையா ஆகியோர் பணிகளை தரமாக முடிக்க, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுக்கு வலியுறுத்தினர்.

ஆய்வு குறித்து, குடிநீர் வடிகால் வாரியச் செயற்பொறியாளர் ராஜேந்திரன் கூறுகையில், தமிழகத்தில் ஜப்பான் பன்னாட்டு நிதி நிறுவனத்தின் ஒத்துழைப்பால், திருச்சி, பழனி, இடப்பாடி, குன்னூர், தேவகோட்டை மற்றும் சென்னை மாதவரம் போன்ற இடங்களில் குடிநீர் பணிகள் நடைபெற்று வருகின்றன.

மொத்த திட்ட மதிப்பீடு ரூ. 345 கோடி. பழனியில் ரூ. 21.6 கோடி மதிப்பில் நடைபெறும் இப்பணிகள் 2013 ஜூன் மாதம் நிறைவுபெறும். திருச்சியில் பணிகள் நிறைவுறும் தருவாயில் உள்ளன. பழனியில் ஆய்வுகள் இன்றுதான் துவங்கப்பட்டுள்ளன எனத் தெரிவித்தார்.

ஆய்வின்போது, தமிழ்நாடு உட்புற கட்டமைப்பு நிதி நிறுவன முதுநிலை உதவி மேலாளர் ராஜேந்திரன், துணை மேலாளர் அருண் ஜஸ்டின், குடிநீர் வடிகால் வாரிய உதவி செயற்பொறியாளர் ஜெயக்குமார், உதவிப் பொறியாளர் சிங்கராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

 5 நகராட்சிப் பள்ளிகளின் மேம்பாட்டுக்கு ரூ.24 லட்சம் நிதிமயிலாடுதுறை, ஜூலை 31: மயிலாடுதுறை நகராட்சி நிர்வாகத்தின் கீழ் செயல்படும் 5 நகராட்சிப் பள்ளிகளின் மேம்பாட்டுக்காகவும், அடிப்படை வசதிகளைச் செய்யவும்  நகராட்சி கல்வி நிதியின் கீழ் ரூ. 24 லட்சம் ஒதுக்கீடு  செய்வதற்கு நகர்மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.மயிலாடுதுறை நகர்மன்றக் கூட்டம், தலைவர்  எஸ். பவானி  தலைமையில்  செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில்  உறுப்பினர்கள் பேசியது:

ரமேஷ்: நகர்மன்ற உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கவும், பழுதடைந்துள்ள சாலைகளை  சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். க. ரகு: காமராஜர் பேருந்து நிலையம் அருகில் மிகப்பெரிய அளவில் நகராட்சியின்  அனுமதி பெறாமல்  டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த பேனர்கள்  சரிந்தால் உயிரிழப்பு ஏற்படும் என்பதால், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் டிஜிட்டல் பேனர் வைப்பதை  தடுக்க வேண்டும்.

ராஜேந்திரன்: கச்சேரி  சாலையில்  மக்கள் அதிக அளவில் வந்து போவதால், இந்தப் பகுதியில்  சுகாதார வளாகம் அமைத்து, நகர்  தூய்மை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வை. தனபால்: சின்னக்கடைவீதி,மகாதானத் தெரு சந்திப்பில் டாஸ்மாக் கடை உள்ளது. அந்த வழியாகச் செல்லும் பள்ளி,கல்லூரி மாணவ-மாணவிகள், பொதுமக்களுக்கும்  இடையூறு  ஏற்படுவதால், கடையை  அகற்றவேண்டும்.

ஜி.கோவிந்தராஜன்: சித்தர்க்காடு பகுதியில்  விநியோகம் செய்யப்படும் குடிநீர் மாசடைந்து  காணப்படுவதால் பொது மக்கள்  நோயுறும் நிலை உருவாகியுள்ளது. கூட்ட முடிவில், மயிலாடுதுறை நகராட்சியின் கீழ் செயல்படும், திருவிழந்தூர் நகராட்சித் தொடக்கப்பள்ளியில்   கூடுதல் கட்டடம் கட்டுவதற்கு ரூ. 4.50 லட்சம், கூறைநாடு கிட்டப்பா நகராட்சி மேல்நிலைப்பள்ளி  கட்டடங்கள்  பராமரிப்பிற்கு  ரூ. 4 லட்சம்,  தியாகி நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப்பள்ளி கட்டடம் மற்றும் சுகாதார  வளாகம்  மற்றும் புதிய வகுப்பறைகள்  கட்டுவதற்கு   ரூ. 13 லட்சம், கூறைநாடு எரகாலித் தெரு நகராட்சி பள்ளி கட்டடம் பராமரிப்புக்கு ரூ. 1 லட்சம் ஆகியவை நகராட்சி கல்வி நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்வது உள்ளிட்ட 35 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 


Page 112 of 390