Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

வீராணம் ஏரி நீர் மட்டம் குறைவு: சென்னைக்கு குடிநீர் அனுப்புவதில் சிக்கல்

Print PDF
தினமணி                30.07.2012

வீராணம் ஏரி நீர் மட்டம் குறைவு: சென்னைக்கு குடிநீர் அனுப்புவதில் சிக்கல்

கடலூர், ஜூலை 29: வீராணம் ஏரியில் நீர்மட்டம் குறைந்து விட்டதால் சென்னைக்கு குடிநீர் அனுப்பும் பணி தடைபட்டுள்ளது.

சென்னைக்கு தண்ணீர் தடையின்றி செல்ல ஏதுவாக அமைக்கப்பட்டுள்ள ஆழ்குழாய் கிணறுகளை சீரமைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

காட்டுமன்னார்கோவில் அருகே வீராணம் ஏரி அமைந்துள்ளது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சோழ அரசர்களால் உருவாக்கப்பட்ட இந்த பெரிய ஏரி, இப்போது பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டிலும், பராமரிப்பிலும் உள்ளது. இந்த ஏரியின் மூலம் சுமார் 70 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனம் வசதி பெற்று வருகின்றன.

மேட்டூர் அணையில் இருந்து கல்லணை, கீழணை வழியாக வடவாறு மூலம் வீராணம் ஏரி தண்ணீர் வசதி பெறுகிறது. சென்னை மாநகரின் குடிநீர்த் தட்டுப்பாட்டைப் போக்க சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்னர் வீராணம் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதன் மூலம் பெரிய சிமெண்ட் பைப்புகள் புதைக்கப்பட்டு சென்னைக்கு குடிநீர் எடுத்துச் செல்ல திட்டமிடப்பட்டு பணிகள் நடந்தன. ஆனால் இப்பணி பாதியில் கைவிடப்பட்டது.

இந்நிலையில் சென்னை மாநகரில் வளர்ச்சி மற்றும் மக்கள் தொகை பெருக்கத்தால் ஆண்டுக்கு ஆண்டு கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் மக்கள் தண்ணீர் கிடைக்காமல் அவதி அடைந்தனர்.

இந்நிலையில் 2001-ம் ஆண்டு அதிமுக அரசு பதவி ஏற்றதும் முதல்வர் ஜெயலலிதா புதிய வீராணம் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். சுமார் ரூ.720 கோடி செலவில் இரும்பு குழாய்கள் புதைக்கப்பட்டு வீராணத்தில் இருந்து சென்னைக்கு குடிநீர் எடுத்து செல்லப்பட்டது.

மேலும் வீராணம் ஏரியில் தண்ணீர் இல்லாத சமயத்தில் சென்னைக்குக் குடிநீர் கொண்டு செல்ல சேத்தியாதோப்பு முதல் பண்ருட்டி வரையில் சுமார் 43 ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கப்பட்டு நீர்மூழ்கி மோட்டார் பொருத்தப்பட்டு தண்ணீர் எடுத்து அனுப்பப்பட்டது.

இந்நிலையில் இந்த ஆண்டு மேட்டூரிலிருந்து தண்ணீர் திறந்து விடப்படாததாலும், போதுமான மழை இல்லாததாலும், வறட்சி ஏற்பட்டுள்ளதாலும் நீர் வரத்து குறைந்து வீராணம் ஏரி வறண்டு வருகிறது.வீராணம் ஏரியில் தண்ணீர் குறைந்ததால் தினமும் சென்னைக்கு அனுப்பப்பட்ட நீரின் அளவு படிப்படியாகக் குறைக்கப்பட்டது.

 இதற்கிடையே ஏரியில் தண்ணீர் அளவு மிகவும் குறைந்து வறண்டு காணப்படுவதால் வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு அனுப்பப்படும் குடிநீர் முற்றிலும் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் சென்னையில் தற்போது குடிநீர்த் தட்டுப்பாடு இல்லை என்றாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சேத்தியாதோப்பு முதல் பண்ருட்டி வரையில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்குழாய் கிணறுகளை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது.

இந்த ஆழ்குழாய் கிணறுகளில் உள்ள நீர்மூழ்கி மோட்டார்களை பழுது நீக்கியும், ஆழ்குழாயில் உள்ள அடைப்புகளை நீக்கும் பணியிலும் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
 

கரூரில் குடிநீர் திட்டப்பணிகள் தமிழக அமைச்சர் நேரில் ஆய்வு

Print PDF

தினமலர்                        30.07.2012

கரூரில் குடிநீர் திட்டப்பணிகள் தமிழக அமைச்சர் நேரில் ஆய்வு

கரூர்: கரூர் அருகே கட்டளை காவிரியாற்றில் நடந்து வரும் குடிநீர் திட்டப்பணிகளை, தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

விரிவாக்கம் செய்யப்பட்ட கரூர் நகராட்சியில் உள்ள பழைய இனாம் கரூர் நகராட்சி, பழைய தாந்தோணி நகராட்சி மற்றும் பழைய கரூர் நகராட்சிக்குட்பட்ட பொதுமக்களின் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்ய, முதல்வர் ஜெயலலிதா 68 கோடி ரூபாய் குடிநீர் திட்ட பணிகளுக்காக நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.இதையடுத்து நெரூர் அருகில் காவிரி ஆற்றின் கரையோர பகுதியில் நீர் சேகரிக்கும் கிணறு, நடைபாலம் அமைக்கும் பணிகள் மற்றும் 4.70 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர் சேகரிப்பு தொட்டி கட்டும் பணியும், 24 கோடியே 67 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நடந்து வருகிறது.

கரூர் நகராட்சி தாந்தோணி நகரப்பகுதிக்குட்பட்ட மக்களின் குடிநீர் பணிகளை பூர்த்தி செய்யும் வகையில், கட்டளை காவிரி கரையோர பகுதியில் நீர் சேமிப்பு கிணறு மற்றும் நடை பாலம் அமைக்கும் பணி மற்றும் மூலக்காட்டனூரில் 4.55 லட்சம் லிட்டர் கொள்ளவு கொண்ட தரைமட்ட நீர் சேகரிப்பு தொட்டி கட்டும் பணி, திண்ணப்பா நகரில் 6.40 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கும் பணிகள் 25 கோடியே 16 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நடந்து வருகிறது.நேற்று காலை 11 மணிக்கு கட்டளை காவிரியாற்றில் நடந்து வரும் நீர் சேகரிப்பு பணிகளை போக்குவரத்துத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி பார்வையிட்டு, பணிகளை குறிப்பிட்ட காலத்தில் முடிக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தர விட்டார். பின்னர் அவர் கூறுகையில், ""கரூர் நகராட்சி பகுதி களுக்குட்பட்ட குடிநீர் திட்டப்பணிகள் வரும் 2013ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலும் முடிவுற்று மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

ஆய்வின் போது கலெக்டர் ÷ஷாபனா, எம்.எல்.ஏ., காமராஜ், கரூர் நகராட்சி தலைவர் செல்வராஜ், துணைத்தலைவர் காளியப்பன், நகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரன், நகராட்சி கவுன் சிலர்கள் நெடுஞ்செழியன், தானேஷ், மாவட்ட கவுன்சிலர் வேலுச்சாமி, தாந்தோணி நகர அ.தி.மு.க., செயலாளர் சரவணன், தொகுதி கழக இணைச்செயலாளர் விஜயகுமார் உடன் சென்றனர்.

 

ரூ.458 கோடி மதிப்பீட்டில் குடிநீர் மேம்பாட்டு திட்டம்

Print PDF

தினமலர்                    27.07.2012

ரூ.458 கோடி மதிப்பீட்டில் குடிநீர் மேம்பாட்டு திட்டம்

திருப்பூர்:"திருப்பூர் மாநகராட்சியில், 458 கோடி ரூபாயில் குடிநீர் வினியோக மேம்பாட்டு திட்டமும், 318 கோடி ரூபாயில் பாதாள சாக்கடை திட்டத்தையும் செயல்படுத்தலாம்,' என, புதிய திருப்பூர் மேம்பாட்டு கழகம் திட்ட அறிக்கை தயாரித்துள்ளது.திருப்பூர் மாநகராட்சியில், 20 வார்டுகளில் மட்டும் பாதாள சாக்கடை திட்டம் செயல்பாட்டில் உள்ளது. புதிய திருப்பூர் பகுதி மேம்பாட்டு கழகம், அத்திட்டத்தை நிர்வகித்து வருகிறது. ஒருங்கிணைந்த மாநகராட்சி எல்லைகளில், அனைத்து வார்டுகளிலும் பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்துள்ளது. அதற்காக, மாநகராட்சி நிர்வாகம் மதிப்பீடு கோரியிருந்தது.புதிய திருப்பூர் மேம்பாட்டு கழக அதிகாரிகள், அதற்கான அறிக்கையை தயாரித்து அளித்துள்ளனர். பாதாள சாக்கடை திட்டம் 318 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தயாரிக்கப்பட்டுள்ளது. திட்ட அறிக்கை தயாரிக்க, திட்ட மதிப்பீட்டில் 0.35 சதவீதம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஒரு கோடியே 11 லட்சத்து 30 ஆயிரம் ரூபாயை பொது நிதியில் இருந்து வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற வளர்ச்சி திட்டம் செயல்படுத்தும்போது, இத்தொகையை திரும்ப பெற வழிவகை உள்ளது. எனவே, பொது நிதியில் இருந்து தொகை வழங்க மாநகராட்சி நிர்வாகம் உத்தேசித்துள்ளது.

குடிநீர் திட்டம்
மாநகராட்சி முழுவதும் சீராக குடிநீர் சப்ளை செய்வதற்கான திட்டத்தையும் தயாரித்துள்ளது. அதன்படி, 458 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. புதிய திட்ட அறிக்கை தயாரிப்புக்கான கட்டண தொகையான, ஒரு கோடியே 60 லட்சத்து 54 ஆயிரம் ரூபாயை, ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற வளர்ச்சி திட்டத்தில் திரும்ப பெற வழிவகை உள்ளதால், பொது நிதியில் வழங்க மாநகராட்சி உத்தேசித்துள்ளது. வரும் 30ல் நடக்கும் மாமன்ற கூட்டத்தில் இதுகுறித்து விவாதிக்கப்பட உள்ளது.

 


Page 113 of 390