Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

பாளை.,யில் கூடுதல் மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைக்க நடவடிக்கை

Print PDF

தினமலர்                 27.07.2012

பாளை.,யில் கூடுதல் மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைக்க நடவடிக்கை

திருநெல்வேலி : பாளை.,பகுதியில் கூடுதலாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் உறுதியளித்ததை தொடர்ந்து இன்று (27ம் தேதி) நடக்கயிருந்த உண்ணாவிரத போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

பாளை., மண்டலத்திற்குட்பட்ட 23வது வார்டு மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய தனியாக மேல்நிலை நீர்த் தேக்க தொட்டி கட்டுவதற்கு நிதி ஒதுக்க கோரி பாளை.,ஜவகர் மைதானத்தில் இன்று(27ம் தேதி) காலை உண்ணாவிரத போராட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தனர்.

இதற்கிடையே மாநகராட்சி கமிஷனர் மோகன், மேயர் விஜிலா ஆகியோர் பாளை., மண்டலத்திற்குட்பட்ட 23வது வார்டின் அனைத்து பகுதிகளுக்கும் சீராக குடிநீர் வினியோகிக்கவும், ஆய்வுகள் மேற்கொண்டு பாளை.,பகுதியில் கூடுதலாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதனைதொடர்ந்து 23வது வார்டு மக்கள் இன்று காலை மேற்கொள்ளயிருந்த உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டனர்.

இது குறித்து கவுன்சிலர் உமாபதி சிவன் கூறியதாவது:

பாளை., மண்டலம் 23வது வார்டில் நிலவும் குடிநீர் பிரச்னையை தீர்க்க தனியாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்ட கோரி பொதுமக்கள் இன்று(27ம் தேதி) பாளை.,யில் உண்ணாவிரதத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்திருந்தனர். இதற்கிடையே கமிஷனர், மேயர் 23வது வார்டு குடிநீர் பிரச்னையை தீர்க்க நடவடிக்கை எடுப்பதோடு, தேவைப்படின் கூடுதலாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளனர்.

இதனையடுத்து இன்று(27ம் தேதி) காலை பாளை.,யில் நடைபெறயிருந்த உண்ணாவிரத போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. இருப்பினும் இன்று காலை 10.30 மணிக்கு பாளை., வீரபாண்டி மகாலில் 23வது வார்டு மக்கள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் நடக்கிறது.இவ்வாறு கவுன்சிலர் உமாபதிசிவன் தெரிவித்தார்.

 

கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் திட்டப்பணி பெரம்பலூர் கலெக்டர் அதிரடி ஆய்வு

Print PDF

தினமலர்                 27.07.2012

கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் திட்டப்பணி பெரம்பலூர் கலெக்டர் அதிரடி ஆய்வு

 பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டப்பணிகளை கலெக்டர் தரேஷ்அஹமது திடீரென நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் 57 கோடியே 83 லட்சம் ரூபாய் மதிப்பில் கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகள் நடந்து வருகின்றன. 306 கிராமங்கள் மற்றும் அரும்பவூர், பூலாம்பாடி ஆகிய டவுன் பஞ்சாயத்து பகுதிகளும், இத்திட்டத்தின் மூலம் பயனடையும்.செங்கரையூர் கொள்ளிடம் ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள நீர் உறுஞ்சும் நிலையத்திலிருந்து இத்திட்டத்திற்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் குழாய் மூலம் கொண்டு வரப்படுகிறது. இதற்கான பணிகள் பாடாலூர் பகுதி வரை முடிவுற்று குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.

மீதமுள்ள பகுதிகளுக்கு சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது. இதற்கான நீர் உந்தும் நிலையங்கள் அமைக்கும் பணிகளும் முடிவுற்றுள்ளன. பெரியம்மாபாளையம், அரும்பாவூர், கிருஷ்ணாபுரம் ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள நீர்உந்தும் நிலையங்களையும், பாடாலூர், நாரணமங்கலம், தெரணி ஆகிய பகுதிகளில் நீர்விநியோகம் குறித்தும் கலெக்டர் தரேஷ்அஹமது பார்வையிட்டு ஆய்வு செய்தார்.பின்னர் அலுவலர்களிடம் இத்திட்டத்தினை விரைந்து செயல்படுத்தி 306 கிராமங்களுக்கும் விரைவில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்ய அறிவுறுத்தினார்.முன்னதாக ரூ.156 லட்சம் மதிப்பில் கட்டப்படவுள்ள வேப்பந்தட்டை பஞ்சாயத்து யூனியன் அலுவலக கட்டிடம் கட்டும் இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.ஆய்வின்போது, கூட்டுக்குடிநீர் திட்ட நிர்வாக பொறியாளர் சந்திரசேகரன், உதவி நிர்வாக பொறியாளர்கள் விஜயராகவன், கனகராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.

 

நீர்வழி தடங்களை சுத்திகரிக்க நிதி ஒதுக்கீடு : சென்னை நகரில் 337 இடங்கள் தேர்வு

Print PDF

தினமலர்                 27.07.2012

 நீர்வழி தடங்களை சுத்திகரிக்க நிதி ஒதுக்கீடு : சென்னை நகரில் 337 இடங்கள் தேர்வு

சென்னை : சென்னையின் பிரதான நீர்வழி தடங்களான அடையாறு, கூவம் பக்கிங்ஹாம் கால்வாய் ஆகியவற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க, 300 கோடி ரூபாய் செலவில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை அமைக்க முதல்வர் உத்தரவிட்டு உள்ளார்.
 
சென்னை நகரின் பொருளாதார மற்றும் மக்கள் தொகை வளர்ச்சிக்கு ஏற்ப, கட்டமைப்பு வளராததால், இயற்கை ஆதாரங்களில் கழிவுநீர் மற்றும் குப்பை கொட்டுவது அதிகரித்து வருகிறது. இதனால், கூவம், அடையாறு மற்றும்   பக்கிங்ஹாம் கால்வாய் "செத்து'விட்டதாக அண்ணா பல்கலை, கடந்த வாரம், அரசிடம் அறிக்கை கொடுத்தது.அதன்படி, இந்த நீர்வழிகளில், கலக்கும் தொழிற்சாலை மற்றும் குடியிருப்பு பகுதிகழிவுநீரால், ஆக்சிஜன் அளவு மிகவும் குறைந்து, எந்த வகை உயிரினமும் வாழ முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.
கடந்த ஏழு ஆண்டுகளாக இந்த ஆய்வு நடந்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும், இந்த நீர்வழிகளின் நிலை குறித்து அரசுக்கு அறிக்கை அளிக்கப் படுகிறது.

துவங்கவில்லை முந்தைய தி.மு.க., ஆட்சியின் போது, அடையாறு, கூவம் ஆறுகள் சுத்தப் படுத்தப் படும் என்று, அறிவிக்கப் பட்டது. ஆனால், அதற்கான முதல்கட்ட பணிகள் கூட துவக்கப் படவில்லை. ஆய்வின் பேரில், முன்னாள் துணை முதல்வர் ஸ்டாலின் தலைமையில், சில "மாஜி'க்கள் சிங்கப்பூர் பயணம் மட்டும் மேற்கொண்டனர்.இந்த நிலையில், சென்னையின் பிரதான நீர்வழி தடங்களில் கழிவுநீர் கலப்பதை தடுக்க, 337 இடங்களில் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்வதற்கான ஏற்பாடுகளை செய்ய, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டு உள்ளார்.

அரசு உத்தரவுஇது குறித்து,நேற்று, அரசு வெளியிட்ட அறிக்கை விவரம்:
 
சென்னை நகர நீர்வழி பாதைகளில் கழிவுநீர் கலக்க கூடிய, கூவம் ஆற்றில், 105 இடங்கள்; பக்கிங்ஹாம் கால்வாயில், 183 இடங்கள், அடையாறில், 49 இடங்கள் என, 337 இடங்களில் கழிவுநீரை சுத்திகரிக்க 300 கோடி ரூபாய் ஒதுக்கப் பட்டு உள்ளது.இந்த பணிகளை மேற்கொள்ள முதல்கட்டமாக, 150 கோடி ரூபாயை தவணை முறையில் சென்னை பெருநகர் குடிநீர் வாரியத்திற்கு விடுவிக்கவும் உத்தரவிடப் பட்டு உள்ளது.
 
 இதன் படி, பிரதான கழிவுநீர் குழாய்கள் அமைத்தல், சிறிய அளவிலான குழாய்களை அகற்றி, அதிக லிட்டர் கொள்ளளவு கொண்ட கழிவுநீர் உந்து குழாய்கள் அமைத்தல், சாலையோரம் சிறிய கழிவுநீரேற்றும் நிலையங்கள் அமைத்தல், ஏற்கனவே உள்ள கழிவுநீரேற்றும் நிலையங்களில் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளுதல் மற்றம் ஏற்கனவே உள்ள சிறிய அளவிலான கழிவுநீர் குழாய்களை பெரிய குழாய்கள் கொண்டு மாற்றி அமைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப் படும்.இதன் மூலம், சென்னையில் சுத்திகரிக்கப் படாத கழிவுநீர் ஆறுகளுடன் கலப்பது தடுத்து நிறுத்தப்படும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப் பட்டு உள்ளது.

Last Updated on Friday, 27 July 2012 05:34
 


Page 114 of 390