Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

"45 நாள்களுக்கு கோவையில் குடிநீர்ப் பிரச்னை இருக்காது'

Print PDF

தினமணி       13.07.2012

"45 நாள்களுக்கு கோவையில் குடிநீர்ப் பிரச்னை இருக்காது'

 கோவை, ஜூலை 12: சிறுவாணி அணைப்பகுதியில் மழை பெய்து வருவதால், அடுத்த 45 நாள்களுக்கு கோவை மாநகராட்சிக்குக் குடிநீர்ப் பிரச்னை இருக்காது என்று, கோவை மேயர் செ.ம. வேலுசாமி தெரிவித்தார்.

 கோவையில் "தினமணி' நிருபரிடம் அவர் வியாழக்கிழமை கூறியது:

 சிறுவாணி அணைப்பகுதியில் கடந்த சில நாள்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. புதன்கிழமை இரவு 15 மி.மீ. மழை பெய்தது. இதனால் அணையின் நீர் மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இப்போதுள்ள நீர் மட்டத்தில் 10 அடி வரை தண்ணீர் எடுக்க முடியும். இதனால் அடுத்த 45 நாள்களுக்கு கோவை மாநகராட்சிப் பகுதியில் குடிநீர்ப் பிரச்னை இருக்காது.

 பில்லூர் அணைப்பகுதியில் இருந்து வரும் நீரை சிறுவாணி குடிநீர்த் தொட்டியுடன் இணைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த இணைப்பு முடிந்துவிட்டால், கோவை மாநகராட்சிக்கு எப்போதுமே குடிநீர் பிரச்னை இருக்காது.

 அதிமுக ஆட்சி அமைந்தவுடன் கோவை மாநகராட்சிக்கு சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்ததன் அடிப்படையில், மாநகராட்சியின் விரிவாக்கப்பட்ட பகுதிகளில் இருக்கும் 10 லட்சம் பேருக்கு கூடுதல் குடிநீர் வழங்கப்படுகிறது.

 கோவை மாநகராட்சிப் பகுதியில் வார்டுக்கு ஒரு நாள் வீதம் சிறப்பு துப்புரவு முகாம் வெள்ளிக்கிழமை துவக்கப்படும். 50 துப்புரவுப் பணியாளர்கள், 2 லாரிகள், ஒரு பொக்லைன் இயந்திரங்களைக் கொண்டு இம்முகாம் நடத்தப்படும்.

 வெள்ளிக்கிழமை நடக்கவுள்ள முகாமை அமைச்சர் கே.பி.சாமி துவக்கிவைக்க உள்ளார் என்று கூறினார்.

 

ஆத்தூர் நகராட்சியில் உப்பு நீர் சுத்திகரித்து வழங்கும் திட்டம்

Print PDF
தினமலர்         06.06.2012

ஆத்தூர் நகராட்சியில் உப்பு நீர் சுத்திகரித்து வழங்கும் திட்டம்

ஆத்தூர்: தமிழகத்தில் முதன் முறையாக, ஆத்தூர் நகராட்சியில், பொதுமக்களுக்கு, உப்பு நீரை சுத்திகரித்து, பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டம் நடைமுறைக்கு வந்தது. தமிழகத்தில் உள்ள உள்ளாட்சி நிர்வாகங்களில், கூட்டுக் குடிநீர் திட்டம், திறந்த வெளி கிணறு, ஆழ்துளை கிணறுகளில் இருந்து, குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. அவ்வாறு சப்ளை செய்யும் பெரும்பாலான திறந்தவெளி கிணறு, ஆழ்துளை கிணறுகளில், உப்பு நீர் அதிகம் கிடைப்பதால், அந்த நீரை பருகும் மக்களுக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டு வருகிறது. அதனால், உப்பு தண்ணீர் உள்ள பகுதிகளுக்கு, சுத்திகரிப்பு மற்றும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் சப்ளை செய்ய வேண்டும் என, குடிநீர் வடிகால் வாரியத்துக்கு, மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தி வருகின்றன. சேலம் மாவட்டம், ஆத்தூர் நகராட்சி, வார்டுகளில், பெரும்பாலும் உப்பு நீர் மட்டுமே வருகிறது. இந்த உப்பு நீரை, குடிநீரை சுத்திகரிக்கும், "ஆர்.ஓ.,' இயந்திரம் பொருத்தப்பட்டு, சுத்தமான குடிநீர் வழங்குவதற்கு, கள்ளக்குறிச்சி எம்.பி., ஆதிசங்கரிடம், பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்பேரில், தமிழகத்தில் முதன்முøறாக, ஆத்தூர் நகராட்சி, 9வது வார்டில் உள்ள மினி குடிநீர் தொட்டி அருகில், உப்பு நீரை சுத்திகரித்து, பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும், "ஆர்.ஓ.,' இயந்திரம் பொருத்துவதற்கு, எம்.பி., ஆதிசங்கர், நான்கு லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தார். தனியார் நிறுவனத்தின் மூலம் அமைக்கப்பட்ட சுத்திகரிப்பு செய்யும் இயந்திரத்தை, 9வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் ஸ்டாலின், தி.மு.க., குழுத் தலைவர் காசியம்மாள் மற்றும் வார்டு மக்கள் கலந்து கொண்டு துவக்கி வைத்தனர்.
 

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் கூடுதல் நீரை சேமிக்க திட்டம்

Print PDF

தினமலர்       27.12.2011

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் கூடுதல் நீரை சேமிக்க திட்டம்

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து, இந்தாண்டு பருவ மழைக்கு மட்டும், 1.5 டி.எம்.சி., உபரிநீர் வெளியேற்றப்பட்டுள்ளது. ஆறு ஆண்டுகளில், 11 டி.எம்.சி., நீர் வீணாக வெளியேறியுள்ளது. வீணாக கடலில் கலக்கும் நீரை சேமித்து வைக்க, புதிய திட்டத்தை அரசு வகுத்துள்ளது. இதற்காக நிதியும் ஒதுக்கியுள்ளது.

சென்னை மாநகரத்திற்கு புதிய வீராணம், புழல், பூண்டி, சோழவரம், செம்பரம்பாக்கம் நீர்தேக்கங்களில் இருந்து குடிநீர் பெறப்படுகிறது. இதை தவிர, ஒவ்வொரு ஆண்டும் ஆந்திர மாநிலம் வழங்கும், கிருஷ்ணா நதிநீரை புழல், பூண்டி, செம்பரம்பாக்கம் ஆகிய ஏரிகளில் சேமித்து வைத்து, நகர மக்களின் குடிநீர் தேவைக்கு பயன்படுத்தப்படுகிறது. கிருஷ்ணா நீர் பெறும், கால அட்டவணை தமிழகத்தில், பருவமழை துவங்கும் நேரம் என்பதால், பருவமழைக்கு முன்பே சென்னை குடிநீருக்கு ஆதாரமாக விளங்கும் ஏரிகள், 75 சதவீதம் வரை நிரம்பிவிடுகின்றன. பருவமழைக் காலத்தில் கிடைக்கும் முழு அளவு நீரையும் சேமித்து வைக்க முடியாமல், உபரிநீர் வீணாக கடலுக்குத் திறந்துவிடப்படுகிறது.

வீணாகும் நீர்

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து, இந்தாண்டு நவம்பரில் மட்டும், 1.3 டி.எம்.சி., உபரிநீர் வெளியேற்றப்பட்டுள்ளது. டிசம்பர் மாதத்துடன் மொத்தம், 1.5 டி.எம்.சி., அளவிற்கு நீர் திறந்து வெளியேற்றப்பட்டுள்ளது. கடந்த 2005ம் ஆண்டு முதல், இந்தாண்டு வரை எடுக்கப்பட்ட புள்ளிவிவரப்படி, 11 டி.எம்.சி., நீர், சேமிக்க வழியில்லாமல் வெளியேற்றப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக, கடந்த 2005ல் ஒன்பது முறை செம்பரம்பாக்கம் ஏரி மறுகால் திறக்கப்பட்டு, 6.8 டி.எம்.சி., உபரிநீர் வெளியேற்றப்பட்டது. இதே அளவு, புறநகர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தின் மணிமங்கலம், ஆதனூர், படப்பை உள்ளிட்ட ஏரிகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரிநீரும், அடையாறு ஆறு வழியாக கடலில் கலக்கிறது. இந்த வகையில் மட்டும், கடந்த 2005ம் ஆண்டு முதல், இந்தாண்டு வரை 10 டி.எம்.சி., அளவு உபரிநீர் வெளியேறியுள்ளது.

சேமிப்பு வழிகள்

வீணாகும் நீரை முறைப்படி சேமித்தால், சென்னை மற்றும் புறநகருக்கு தினமும் தாராளமாக குடிநீர் வழங்க முடியும். அதிகாரிகளின் திட்டமிடல் இன்மையால் தண்ணீர் வீணாவதாக நீர்வள நிபுணர்கள் குற்றம் சாட்டுகின்றனர். செம்பரம்பாக்கம் ஏரி தூர்வாரி பல ஆண்டுளாகி விட்டது. தற்போது, 3,645 மில்லியன் கனஅடி நீர் கொள்ளளவு கொண்டதாக, ஏரி இல்லை என்பதை நீர்வள நிபுணர்கள் கணித்து நடவடிக்கை எடுக்க அரசுக்கு பரிந்துரைத்தனர். அதன் அடிப்படையில், தற்போது அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. ஏரியை தூர் வாரி ஆழப்படுத்த உத்தரவிட்டுள்ளது. இதற்கான செலவுகளை மதிப்பிடும் படி பொதுப்பணித்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தூர்வார வேண்டும். ஏரியின் பரப்பளவுக்கு ஏற்ப ஆழம் இல்லை. இதை இன்னும் ஆழப்படுத்தும் வாய்ப்பு உள்ளது. ஆழப்படுத்தினால், செம்பரம்பாக்கம் ஏரி முழு அளவில் நீர் சேமிக்க முடியும்.

செயற்கை ஏரிகள் சாத்தியமா?

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறந்துவிடப்படும் உபரிநீர் காவனூர், சிறுகளத்தூர், குன்றத்தூர், வழுதலம்பேடு, திருமுடிவாக்கம் ஆகிய கிராமங்கள் வழியாக பாய்ந்து, திருநீர்மலை அருகே அடையாறு ஆற்றில் கலக்கிறது. இதற்காக மொத்தம், 6.25 கி.மீ., தூரத்திற்கு கால்வாய் உள்ளது. அடையாறு ஆறு, 42 கி.மீ., தூரம் கொண்டது. இதில், மணப்பாக்கத்தை கடந்த பின்தான் முழு அளவில் மாசடைகிறது. அதற்கு முன், சில உள்ளாட்சிகளில் இருந்து வரும் கழிவுநீரும், நாகல்கேணி தோல் தொழிற்சாலையில் இருந்து சுத்திகரித்து வெளியேற்றப்படும் கழிவுநீரும் ஆற்றில் கலக்கிறது. இதையும் தடுத்து நிறுத்தினால், மணப்பாக்கம் வரை ஆறு மாசு இன்றி இருக்கும். செம்பரம்பாக்கம் ஏரியின் மதகு பகுதியில் இருந்து, மணப்பாக்கம் வரை உள்ள பகுதியில், ஏராளமான அரசு புறம்போக்கு நிலங்கள் உள்ளன. இங்கு தேவைக்கு ஏற்ப உபரி நீரை சேமித்து வைக்க, செயற்கை ஏரிகள் அமைக்க ஆய்வு நடத்த வேண்டும்.

ஆந்திராவை பாருங்கள்

உபரிநீரை சேமிக்க ஆந்திர மாநிலத்தில், பல டி.எம்.சி., கொள்ளளவு கொண்ட, ஏராளமான செயற்கை ஏரிகள் அமைக்கப்பட்டுள்ளன. அது போன்று நிலப்பரப்பளவுக்கு ஏற்ப, 0.3 முதல் 0.5 டி.எம்.சி., கொள்ளளவு கொண்ட சிறிய ஏரிகளை, அடையாறு கரையோரம் அமைப்பது பற்றி திட்டமிடலாம். இதனால், புறம்போக்கு நிலம் ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்குவதை தவிர்க்கலாம். தண்ணீரையும் சேமிக்கலாம்.

தடுப்பணைகள்

அடையாறு ஆற்றில், தற்போது ஒரு தடுப்பணை மட்டுமே உள்ளது. இங்கு மழைக்காலத்தில் தேங்கும் நீரால், அந்தப் பகுதி முழுவதும் நிலத்தடி நீர் வளம் பெருகியுள்ளது என, ஆய்வில் தெரிய வந்துள்ளது. சென்னை, விமான நிலைய இரண்டாவது இணை ஓடுதளம் அமைப்பதற்காக, மணப்பாக்கம் தடுப்பணை அப்புறப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக, கவுல்பஜார் அருகே ஒரு தடுப்பணை கட்டி தருவதாக விமான நிலைய ஆணையம் ஒப்புக் கொண்டுள்ளது. இன்னும் அதற்கான நடவடிக்கை துவங்கவில்லை. அடையாறு ஆற்றில், திருநீர்மலை முதல் கவுல்பஜார் வரை இரண்டு தடுப்பணை கட்டலாம் எனக் கூறப்படுகிறது. அதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு நடத்த வேண்டும்.

நீர்வள நிபுணர் ஒருவர் கூறுகையில், "புறநகரில் விவசாயம் குறைந்து விட்டதால் பாசனத்திற்கு நீர் தேவையில்லை. குடிநீர் தேவை அதிகரிப்பதால் இன்னும், 10 ஆண்டுகளில் அதன்தேவை இருமடங்காக உயரும். அப்போது புதிய நீர் ஆதாரங்களை தேட முடியாது. தற்போது இருக்கும் சில நூறு ஏக்கர் பரப்பளவு இடங்களும், ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் செல்ல வாய்ப்பு உள்ளது. இதனால், எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, புதிய நீர் ஆதாரங்களை உருவாக்கவும், வீணாகும் நீரை சேமிக்கவும் திட்டமிடுதல் அவசியம்' என்றார்.

கூடுதல் நீர் சேமிப்பு

செம்பரம்பாக்கம் ஏரி, 2,551 எக்டேர் பரப்பளவு கொண்டது. தற்போது முழுக் கொள்ளளவு நீர் உள்ளது. ஏரியின் நீர்மட்டம், 24 அடி. ஏரியின் நீர்மட்டத்தை கணக்கிடும் கோபுரம் பகுதியில் இருந்து, உபரிநீர் வெளியேறும் மதகுகள் அமைந்துள்ள பகுதிவரை, 200 மீட்டர் சுற்றளவிற்கு மட்டுமே தான் ஏரி ஆழம், 24 அடியாக இருக்கும். மற்ற இடங்களில், 10 முதல் 18 அடி வரைதான், சராசரியாக நீர் தேங்கும் வகையில் உள்ளது. ஏரிக்கு நீர் வரும் பகுதியில் மட்டத்தில் இருந்து, 2 அடி ஆழம் மட்டுமே உள்ளது. இந்த இடத்தில் இருந்து ஏரி உள்நோக்கி வரும் போது, ஐந்து அடி துவங்கி ஆழம் மெல்ல அதிகரிக்கிறது. இப்படி ஆளம் குறைவாக உள்ள பகுதியில் மண் படிந்துள்ளது. இப்படி படிந்துள்ள மண்ணை தூர்வாரி முறைப்படுத்தினால், தண்ணீர் தேங்கும் அளவு மிகவும் அதிகரிக்கும். இதற்காக தற்போது, செம்பரம்பாக்கம் உட்பட சென்னையை சுற்றியுள்ள, ஐந்து ஏரிகளை ஆழப்படுத்த, தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்து நிர்வாக ஒப்புதல் அளித்துள்ளது.

இதன்படி, செம்பரம்பாக்கம் ஏரி ஆழப்படுத்துவது மற்றும் சில சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக திட்ட வரைவுகள் தயாரிக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்வரும் பகுதியில் இருந்து, குறைந்தபட்சம், 10 அடிக்கு குறையாமல் ஆழப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. உள்வரும் பகுதியில் ஆழம் மேலும் அதிகமாக்கப்பட உள்ளது. ஆனால், ஏரியின் தற்போதைய அதிகபட்ச உயரமான நீர்மட்டம், 24 அடி என்பதை உயர்த்த திட்டம் இல்லை என்று கூறப்படுகிறது. சராசரியான அளவிற்கு ஏரியை ஆழப்படுத்தும் போது, செம்பரம்பாக்கம் ஏரியில் கூடுதலாக அரை டி.எம்.சி., வரை நீரை சேமிக்கலாம், என பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதை நான்கு பிரிவுகளாக செயல்படுத்தவும் திட்டமிடப்பட்டு வருகிறது. ஆனால், எவ்வளவு தூரத்திற்கு, எத்தனை அடி வரை ஆழம் எடுப்பது என்று இறுதி முடிவு எடுக்கும் போதுதான், கூடுதலாக சேகரிக்கப்பட உள்ள, நீரின் அளவை நிச்சயமாகக் கூறமுடியும் என்றார். அந்த அதிகாரி.

செம்பரம்பாக்கத்தை பாதுகாக்க ரூ.26 கோடி

செம்பரம்பாக்கம் ஏரி பாதுகாப்புக்காக, 26 கோடி ரூபாய் மதிப்பில் ஒரு திட்டம் தீட்டி, அதை அரசின் பார்வைக்கு அதிகாரிகள் ஏற்கனவே அனுப்பியுள்ளனர். ஆக்கிரமிப்பை தடுத்து கரையோரம் குப்பை கொட்டுவதை தவிர்க்கும் வகையில், ஏரியை சுற்றி கான்கிரீட் சுற்றுச்சுவர் அமைக்கவும், ஏரிக்கரையில் சிதிலமடைந்துள்ள, சாலையைச் சீரமைக்கவும் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது. இதில், கான்கிரீட் சுற்றுச்சுவர் அமைக்க மட்டும், 15 கோடி ரூபாய் தேவை, என கணக்கிடப்பட்டுள்ளது. ஏரியை ஆழப்படுத்தி, பாதுகாப்பு பலப்படுத்தினால் தான், ஏரி நீரை பாதுகாக்க முடியும்.

கடலுக்கு போன குடிநீர் 2005ம் ஆண்டு முதல் வெளியேறிய உபரிநீர் ஆண்டு டி.எம்.சி.,
2005 6.8 2007 0.7
2008 1.7 2010 0.5 2011 1.5

- கே.எஸ்.வடிவேலு -

 


Page 117 of 390