Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

கோடையில் குடிநீர் தட்டுப்பாடு வராது ஊட்டி நகராட்சி அதிகாரிகள் தகவல்

Print PDF
தினகரன்       24.01.2011

கோடையில் குடிநீர் தட்டுப்பாடு வராது ஊட்டி நகராட்சி அதிகாரிகள் தகவல்


ஊட்டி, ஜன. 24:

ஊட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கு குடிநீர் வழங்கும் பார்சன்ஸ்வேலி உட்பட அனைத்து அணைகளிலும் போதுமான நீர் இருப்பு இருப்பதால் குடிநீர் தட்டுப்பாடு வராது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஊட்டி நகராட்சிக்குட்பட்ட 36 வார்டுகளில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இவர்களுக்கு குடிநீர் பார்சன்ஸ்வேலி, மார்லிமந்து, டைகர் ஹில், கோரிசோலா, அப்பர் மற்றும் லோயர் தொட்டபெட்டா, அப்பர் மற்றும் லோயர் கோடப்பமந்து, ஓல்டு ஊட்டி, கிளன்ராக் ஆகிய அணைகளில் இருந்து வழங்கப்படுகிறது.

பார்சன்ஸ்வேலி அணையிலிருந்து ஊட்டி நகர் மற்றும் வெலிங்டன் ராணுவ மையத்திற்கு அதிகளவு நீர் விநியோகிக்கப்படுகிறது.

மக்கள் தொகை பெருக்கம் மற்றும் அதிகரித்து வரும் சுற்றுலா பயணிகள் கூட்டத்திற்கு தகுந்தவாறு குடிநீர் வழங்க வேண்டிய நிலை ஊட்டி நகராட்சிக்கு ஏற்பட்டுள்ளது.

கடந்தாண்டு ஜூன் முதல் டிசம்பர் வரை மாவட்டத்தில் பெய்த கன மழை காரணமாக பெரும்பாலான ஆணைகள் நிரம்பின. எனவே கோடையில் இம்முறை குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இல்லை என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். குடிநீர் வழங்க பிரதானமாக உள்ள அனைத்து அணைகளிலும் தேவையான அளவு நீர் இருப்பில் இருப்பதாக கூறியுள்ளனர். பெரும்பாலான அணைகளும் தனது முழு கொள்ளளவை எட்டிய நிலையில் காணப்படுகிறது.

கோடை சீசன் காலத்தில் உள்ளூர்வாசிகளுக்கு மட்டுமின்றி சுற்றுலா பயணிகளுக்கும் தேவையான அளவு குடிநீரை வழங்க இயலும் என்று நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

சிறுவாணி அணை நீர் மட்டம் சரிந்தது : 110 நாளுக்கு மட்டுமே குடிநீர் : சமாளிக்க மாநகராட்சி நடவடிக்கை

Print PDF

தினகரன்       13.01.2011

சிறுவாணி அணை நீர் மட்டம் சரிந்தது : 110 நாளுக்கு மட்டுமே குடிநீர் : சமாளிக்க மாநகராட்சி நடவடிக்கை

கோவை, ஜன. 13:

சிறுவாணி அணை நீர் மட்டம் 4.95 மீட்டர் சரிந்தது. இன்னும் 110 நாளுக்கு மட்டுமே குடிநீர் பெற முடியும்.

சிறுவாணி அணையின் மொத்த நீர் மட்டம் 15 மீட்டர். நேற்று அணையின் நீர் மட்டம், உச்ச மட்டத்திலிருந்து 4.95 மீட்டர் குறைந்து காணப்பட்டது.

அதாவது அணையின் நீர் மட்டம் 873.55 மீட்டராக (கடல் மட்ட உயர கணக்கின் படி) இருந்தது. இன்னும் 10.05 மீட்டர் உயரத்திற்கு நீர் தேக்கம் உள்ளது.

தினமும் நீர் மட்டம் 10 முதல் 11 செ.மீ அளவிற்கு குறைந்து வருகிறது. 10 முதல் 13 நாளில் 1 மீட்டர் அளவிற்கு நீர் மட்டம் குறைகிறது. தினமும் 8.8 கோடி லிட்டர் குடிநீர் பெறப்படுகிறது.

இதில் கோவை மாநகராட்சிக்கு 7.3 கோடி லிட்டர் குடிநீரும், நகராட்சிகள், வழியோர கிராமங்களுக்கு 1.5 கோடி லிட்டர் குடிநீரும் வழங்கப்படுகிறது.

சிறுவாணி நீரை, சுமார் 20 லட்சம் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இப்போதுள்ள நீர் மட்ட அளவின் படி பார்த்தால் இன்னும் 110 நாளுக்கு மட்டுமே குடிநீர் பெற முடியும்.

அதாவது ஏப்ரல் மாத இறுதி வரை மட்டுமே குடி நீர் கிடைக்க வாய்ப்புள்ளது. மே மாதம் அணை வறண்டு விடும். அணை நீர் அளவை குறைத்தாலும் மே மாதம் முதல் வாரத்தில் குடிநீர் பற்றாக்குறை மிக அதிகமாகவே இருக்கும்.

சிறுவாணி அணையின் நீர் பிடிப்பு பகுதியில் கடந்த 25 ஆண்டுகளில் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் மழை பெய்யவில்லை.

மார்ச், ஏப்ரல் மாதங்களில் 30 முதல் 70 மி.மீ அளவிற்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஆனால் கோடை வெயிலில் இந்த மழையால் நீர் மட்டம் உயராது.

எனவே அணை வறட்சி யை தவிர்க்கும் வாய்ப்புகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். கடந்த ஆண்டு தென் மேற்கு பருவ மழை காலத்தில் 1800.76 மி.மீ மழை பதிவானது.

வடகிழக்கு பருவ மழை காலத்தில் 671.77 மி.மீ மழை பதிவாகியிருந்தது. கடந்த 2009ம் ஆண்டு, இரு பருவ காலத்திலும் 3100 மி.மீ மழை பெய்தது.

இதனுடன் ஒப்பிடும் போது மழையளவு ஒரு ஆண் டில் 35 சதவீதம் குறைவு. அணை நீர் மட்டம் வேக மாக சரிவதால் சிறு வாணி நீராதார பகுதி மக்கள் பாதிக்கப்படும் நிலையிருக்கிறது.

விரைவில் சிறுவாணி அணை விவகாரம் தொ டர்பாக குடிநீர் வடிகால் வாரியம், உள்ளாட்சி அமைப் புகளின் ஆலோ சனை கூட்டம் நடத்தப்படும்.

இதில் குடிநீர் கட்டுபாடு, விநியோகம் குறித்த புதிய நடைமுறை உத்தரவு பிறப்பிக்கப்படும்.
 

குடிநீர் தொட்டிகளில் வெப்கேமரா லாரிகளை கண்காணிக்க திட்டம்

Print PDF
தினகரன்       03.01.2011

குடிநீர் தொட்டிகளில் வெப்கேமரா லாரிகளை கண்காணிக்க திட்டம்


கோவை, ஜன.3:

கோவை மாநகராட்சி குடிநீர் தொட்டிகளில் வெப் கேமரா அமைத்து லாரிகளை கண்காணிக்க தொழில்நுட்ப திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சியில், 45 இடத்தில் மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. சிறுவாணி அணையிலிருந்து குடிநீர், பிரதான குழாய் மூலம் சாயிபாபாகாலனி பாரதிபார்க் மற்றும் காந்திபார்க்கில் உள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டிக்கு வருகிறது. பின்னர், சிறு மேல்நிலை நீர் தேக்க தொட்டிகளுக்கும், வார்டுகளுக்கும் பிரித்து அனுப்பி வைக்கப்படுகிறது.
நகரில், பாரதிபார்க், கணபதி ராமகிருஷ்ணாபுரம், வரதராஜபுரம், புலியகுளம் பகுதியில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டிகளில் இருந்து லாரி மூலம் குடிநீர் பெற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கோவை நகரில், 4 மாநகராட்சி லாரி மற்றும் 14 தனியார் லாரி மூலம் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. நகரில் 761 புதிதாக அங்கீகரிக்கப்பட்ட லே அவுட் இருக்கிறது. இங்கே பகிர்மான குழாய், குடிநீர் இணைப்பு 20 சதவீதம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

இப்பகுதியில் லாரி மூலம் அவ்வப்போது குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. தொழில் நிறுவனங்கள், மருத்துவமனைகள், மண்டபங்களுக்கு அத்தியாவசிய தேவை அடிப்படையில் குடிநீர் வழங்கப்படுகிறது. 10 ஆயிரம் லிட்டர் குடிநீருக்கு ஆயிரம் ரூபாய் என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குடியிருப்புகளுக்கு இலவசமாக குடிநீர் வழங்கப்படுகிறது. தினமும் 18 லாரிகளில், 40 முதல் 45 டிரிப் வரை குடிநீர் விநியோகம் நடக்கிறது. சுமார் 5 லட்சம் லிட்டர் குடிநீர் லாரி மூலம் வழங்கப்படுகிறது. இதில் முறைகேடு நடப்பதாக மாநகராட்சிக்கு புகார் வந்தது. குடிநீரை ஓட்டல், லாட்ஜ், தொழில் நிறுவனங்களுக்கு கூடுதல் தொகைக்கு விற்பதாக தெரியவந்தது. டிரிப் முறையிலும் மோசடி நடக்கிறது.

வரதராஜபுரத்தில் குடிநீர் விநியோகிக்காமல் அதற்கான தொகை பெற்றதும் கண்டறியப்பட்டது. இதைதொடர்ந்து குடிநீர் விநியோகத்தை முறைப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டது. பாரதிபார்க், புலியகுளம், கணபதி ராமகிருஷ்ணாபுரம், வரதராஜபுரம் மேல்நிலை நீர் தேக்க தொட்டி வளாகத்தில் சுழலும் வெப் கேமரா அமைக்கப்படவுள்ளது. லாரியில் பிடிக்கப்படும் குடிநீர் அளவு, லாரி வந்து செல்லும் நேரம், குடிநீர் அளவு போன்றவை கேமராவில் பதிவாகி விடும். இதேபோல், லாரியில் வெப் கேமரா அமைக்கப்படும். குடியிருப்பு மற்றும் வார்டுகளுக்கு சென்று வரும் நேரம். குடிநீர் அளவு, விநியோகிக்கப்பட்ட விதம் தெளிவாக தெரியும். குடிநீரை வீணாக்கினாலும், முறைகேடாக விற்றாலும் இதில் தெரிந்து விடும்.

குடிநீர் லாரிகளில் கண்டறியும் முறைக்கான (டிராக்கிங் சிஸ்டம்) தொழில்நுட்பம் தனியார் நிறுவனம் மூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து குடிநீர் லாரிகளும், 4 மேல்நிலை தொட்டிகளும் மாநகராட்சி கட்டுபாட்டிற்குள் கொண்டு வரப்படும்.
 


Page 121 of 390