Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

ஜப்பான் வங்கி நிதியுதவியுடன் ரூ. 13.85 கோடியில் குடிநீர் திட்டம்

Print PDF

தினகரன்            27.12.2010

ஜப்பான் வங்கி நிதியுதவியுடன் ரூ. 13.85 கோடியில் குடிநீர் திட்டம்

குன்னூர், டிச.27: 

குன்னூர் நகராட்சி பகுதியில் ஜப்பான் வங்கி நிதியுதவியுடன் ரூ. 13.85 கோடியில் புதிய குடிநீர் திட்டம் நிறைவேற்றப்பட உள்ளது என நகராட்சி தலைவர் கூறினார்.

குன்னூர் நகரில் கடந்த ஓரு வாரத்திற்கு முன் தமிழக அரசின் சிறப்பு சாலை திட்டம் மற்றும் வெள்ள நிவாரண நிதி திட்டத்தின் கீழ் ரூ. 5.50 கோடி மதிப்பில் சாலை புனரமைப்பு பணிகள் துவங்கி நடந்து வருகிறது. இதனிடையே குடிநீர் ஆதாரத்தை மேம்படுத்தும் வகையில் ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு நிதியுதவியுடன் ரூ. 13.85 கோடி செலவில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

இதுகுறித்து நகராட்சி தலைவர் ராமசாமி கூறியதாவது:

நகரில் மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சி பணி க்காக மாநில அரசு பல கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து பணிகளும் துவங்கி நடந்து வருகிறது.

தற்போது ஜப்பான் நாட்டு உதவியுடன் குடிநீர் மேம்பாட்டு திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது.ஜப்பான் வங்கியில் இருந்து ரூ. 8.31 கோடி, வங்கி மானியமாக ரூ. 4.16 கோடி, பொதுமக்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்பின் பங்காக ரூ. 1.38 கோடி என மொத்தம் ரூ. 13.85 கோடி மதிப்பில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

இதற்காக குடியிருப்புகளின் குடிநீர் இணைப்புக்கு வைப்பு தொகையாக ரூ. 3 ஆயிரம், பிற இணைப்பு களுக்கு ரூ. 10 ஆயிரமும், மாதாந்திர கட்டணமாக குடியிருப்புகளுக்கு ரூ. 70, பிற இணைப்புகளுக்கு ரூ. 250 என நிர்ணயம் செய்யப்பட உள்ளது.

தமிழ்நாடு நகர்ப்புற கூட்டமைப்பு மற்றும் நிதி சேவை நிறுவனத்தின் அறிவுறுத்தல்படி நிதியாதாரத்தை பெருக்க வைப்பு தொகை, மாதாந்திர கட்டணங்களை வசூலிப்பது, இத்திட்டத்தை செயல்படுத்த குடிநீர் வடிகால் வாரியத்திடம் ஒப்படைப்பது, மாற்றி அமைக்கப்பட்ட வைப்பு தொகை, கட்டண விகிதங்களை நடைமுறையிலுள்ள துணை விதிகளை மாற்றி திருத்தம் மேற்கொண்டு இத்திட்டத்திற்கு அனுமதி வழங்துவற்காக குன்னூர் நகராட்சியின் சிறப்பு கூட்டம் இன்று நடைபெற உள்ளது. மன்ற அனுமதி பெற்றவுடன் உடனடியாக இதற்கான ஆயத்த பணிகள் துவங்கும்.

இவ்வாறு நகராட்சி தலைவர் ராமசாமி கூறினார்.

Last Updated on Monday, 27 December 2010 06:31
 

ராமநாதபுரம் நகரில் காவிரி கூட்டு குடிநீர் திட்ட குழாய்கள் பதிக்கும் பணி தீவிரம்

Print PDF
தினகரன்        21.12.2010

ராமநாதபுரம் நகரில் காவிரி கூட்டு குடிநீர் திட்ட குழாய்கள் பதிக்கும் பணி தீவிரம்


ராமநாதபுரம், டிச. 21:

ராமநாதபுரம் மாவட்டத்தில் ரூ.617 கோடியில் காவிரி கூட்டு குடிநீர் திட்டம் கடந்தாண்டு துவங்கியது. இத்திட்டத்தில் முதற்கட்டமாக நகராட்சி, பேரூராட்சி பகுதிகளுக்கு குடிநீர் வழங்கப்பட்டது. அடுத்த கட்டமாக கிராமங்களுக்கு குடிநீர் சப்ளை தொடங்கப்பட்டது. இத்திட்டம் மூலம் இன்னும் நூறு சதவீதம் அனைத்து பகுதிகளுக்கும் குடிநீர் வழங்கப்படவில்லை. இத்திட்டத்தில் பெரும்பாலும் ஏற்கனவே இருந்த மேல்நிலைத் தொட்டிகள், குடிநீர் குழாய்களே பயன்படுத்தப்படுகின்றன. அதனால் தற்போது வரும் தண்ணீர் அதிகளவில் இருப்பதால் பல இடங்களில் குடிநீர் குழாய்கள் உடைந்து, தண்ணீர் வெளியேறுகிறது.

ராமநாதபுரம் நகராட்சிப் பகுதிக்கு போதுமான அளவு தண்ணீர் இத்திட்டம் மூலம் வந்தும் அனைத்து பகுதிகளுக்கும் பழைய குழாய்கள் மூலம் சப்ளை செய்ய முடியவில்லை. மேலும் புதிதாக ஏராளமான குடியிருப்புகள் உருவாகியிருப்பதும், அப்பகுதிகளுக்கு இணைப்புகள் கொடுக்க வேண்டியும் உள்ளது. தற்போதுள்ள நிலையில் ஏராளமான பகுதிகளில் பொதுக் குழாய்களும் இல்லாமல் மக்கள் அவதிப்படுகின்றனர்.

இதையடுத்து ராமநாதபுரம் நகராட்சி பகுதியில் காவிரி கூட்டுக் குடிநீர் சப்ளை செய்வதற்காக புதிய குழாய்கள் பதிக்க டெண்டர் விடப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. தற்போது குழாய் பதிக்கும் பணிகள் நகராட்சி பகுதி தெருக்களில் நடந்து வருகிறது. பி.வி.சி., குழாய்கள் 1.5 மீட்டர் ஆழத்தில் பதிக்கப்படுகின்றன. ராமநாதபுரம் மாவட்டத்தில் கூலித் தொழிலாளர்கள் பற்றாக்குறையாக இருப்பதால் ஒப்பந்ததாரர்கள் சேலம், கோவை, புதுக்கோட்டை மாவட்டங்களிலிருந்து ஆட்களை அழைத்து வந்து பணிகளை செய்கின்றனர். இந்த பணிகளை வரும் ஜனவரிக்குள் முடிக்க நகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. ஆகவே குழாய் பதிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
 

மெட்ரோ வாட்டர் பணிக்காக துருப்பிடிக்காத குழாய்கள்

Print PDF

தினமலர்              15.12.2010

மெட்ரோ வாட்டர் பணிக்காக துருப்பிடிக்காத குழாய்கள்

ஆலந்தூர் : மத்திய - மாநில அரசுகளின் சார்பில் 67 கோடி ரூபாய் செலவில் புதிதாக ஆலந்தூரில் அமைக்கப்படும் மெட்ரோ வாட்டர் பணிக்காக நங்கநல்லூரில் துருப்பிடிக்காத நவீன பகிர்மான குழாய்கள் அளவு வாரியாக குவித்து வைக்கப்பட்டுள்ளது.சென்னை, ஆலந்தூர் நகராட்சியில் 1.75 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். இங்கு, சென்னை குடிநீர் வாரியம் மூலம் 100 லட்சம் லிட்டர் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. இது, இப்பகுதி மக்களின் குடிநீர் தேவைக்கு போதுமானதாக இல்லை.நிலத்தடி நீர்மட்டமும் மிக ஆழத்திற்கு சென்றுவிட்டதால் குடிநீர் தட்டுப் பாடு நிலவுகிறது. இதை சமாளிக்க மத்திய - மாநில அரசுகள் மற்றும் ஆலந்தூர் நகராட்சி சார்பில் 67 கோடி ரூபாய் செலவில் புதிய குடிநீர் திட்டப் பணிகளுக்கு தில்லை கங்கா நகரில் கடந்த சில மாதங்களுக்கு முன் அடிக்கல் நாட்டப்பட்டது.இதையடுத்து, தில்லை கங்கா நகரில் 1.5 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட கீழ்நிலை நீர்த்தேக்க தொட்டி ஒன்றும், 5.5 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி ஒன்றும் கட்டப்பட்டு வருகிறது.

நங்கநல்லூர் ஸ்டேட் பாங்க் காலனியில் 5 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட கீழ்நிலை நீர்த்தேக்க தொட்டி ஒன்றும், நேரு நெடுஞ்சாலையில் 5 லட்சம் லிட்டர் கொள்ளளவிலான கீழ்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் அமைப்பதற்கான பணிகள் நடந்து வருகின்றன.சாந்தி நகரில் முதல் மற்றும் 2வது தெரு, சுரேந்தர் நகரில் மூன்றாவது தெரு, நங்கநல்லூர் 32 மற்றும் 34வது தெருக்கள், ராம்நகரில் ஐந்தாவது தெருவில் குடிநீர் பகிர்மான குழாய்கள் பதிக்கப்படுகின்றன. அதற்காக, லேண்ட்கோ என்ற நிறுவனத்திடமிருந்து நவீன வகையான துருப்பிடிக்காத எல்..டி., பகிர்மான குழாய்களுக்கு ஆர்டர் தரப்பட்டது.அதன்படி, ஆலந்தூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பகிர்மான குடிநீர் குழாய்கள் அளவு வாரியாக தருவிக்கப்பட்டு, நங்கநல்லூர் பகுதியில் வைக்கப்பட்டுள்ளன."இத்திட்டத்தின்படி, 37 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட கூடுதல் மேல்நிலை குடிநீர் தொட்டிகள் ஆறு, 15 லட்சம் கொள்ளளவு கொண்ட கீழ்நிலை குடிநீர் தொட்டிகள் ஐந்து அமைக்கப்படும்.மொத்தம் 144 கிலோ மீட்டர் தூரத்திற்கு பகிர்மான குழாய்கள் பதிக்கப்படும். இப்பணிகள் முடிவடைந்ததும், 290 லட்சம் லிட்டர் குடிநீரை தேக்கி வைக்க முடியும். நபருக்கு 135 லிட்டர் வரை குடிநீர் கிடைக்கும்.இப்பணிகள் இரண்டாண்டுகளில் முடிவடையும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

 


Page 122 of 390