Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

சென்னை ஏரிகளில் 1 ஆண்டுக்கு தேவையான தண்ணீர் இருப்பு உள்ளது; பருவ மழையால் நீர்மட்டம் உயர்வு

Print PDF

மாலை மலர்        24.11.2010

சென்னை ஏரிகளில் 1 ஆண்டுக்கு தேவையான தண்ணீர் இருப்பு உள்ளது; பருவ மழையால் நீர்மட்டம் உயர்வு

சென்னை ஏரிகளில் 1 ஆண்டுக்கு தேவையான தண்ணீர் இருப்பு உள்ளது; பருவ மழையால் நீர்மட்டம் உயர்வு

சென்னை, நவ. 24- தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 29-ந்தேதி தொடங்கியது. அடிக்கடி மழை பெய்து வருவதால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

பூண்டி ஏரியின் ஒட்டு மொத்த கொள்ளளவு 3.231 டி.எம்.சி. ஆகும். இந்த ஏரி யில் 2.85 டி.எம்.சி. தண்ணீர் உள்ளது. ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுவதாலும், நீர்ப் பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதாலும் பூண்டி ஏரிக்கு வரும் தண்ணீர் அளவு அதிகரித்துள்ளது. இதே அளவு தண்ணீர் வந்தால் பூண்டி ஏரி ஓரிரு நாட்களில் நிரம்பி விடும்.

ஆந்திராவில் இருந்து பூண்டி ஏரிக்கு வரும் தண்ணீர் கொசஸ்தலை ஆற்றின் வழியாக சோழவரம் ஏரிக்கு திருப்பி விடப்படுகிறது. ஊத்துக்கோட்டையில் உள்ள மதகின் வழியாக விநாடிக்கு 580 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதனால் சோழவரம் ஏரியும் நிரம்பும் நிலையில் உள்ளது. இதன் மொத்த கொள்ளளவு 0.881 டி.எம்.சி. ஆகும். இங்கு 0.650 டி.எம்.சி. தண்ணீர் உள்ளது. வினாடிக்கு 225 கனஅடி தண்ணீர் வருகிறது.

புழல் ஏரியின் மொத்த கொள்ளளவு 3.3 டி.எம்.சி. இங்கு 2.3 டி.எம்.சி. தண்ணீர் உள்ளது. வினாடிக்கு 619 கன அடி தண்ணீர் வருகிறது. செம்பரம்பாக்கம் ஏரி யின் மொத்த கொள்ளளவு 3.64 டி.எம்.சி. இங்கு 1.9 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. வினாடிக்கு 405 கனஅடி தண்ணீர் வருகிறது.

சென்னைக்கு குடிநீர் வழங்கும் 4 ஏரிகளின் ஒட்டு மொத்த கொள்ளளவு 11.057 டி.எம்.சி. இதில் 7.73 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. இதைக் கொண்டு அடுத்த ஆண்டு நவம்பர் மாத இறுதி வரை சென்னை நகருக்கு குடிநீர் வழங்க முடியும் என்று குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

குடிநீர் கட்டணம் செலுத்தாமல் அலட்சியம்

Print PDF

தினமலர்              24.11.2010

குடிநீர் கட்டணம் செலுத்தாமல் அலட்சியம்

சேலம்: சேலம் மாநகராட்சியில் குடிநீர் கட்டணம் செலுத்தாதவர்களின் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டு வருகிறது.சேலம் மாநகராட்சிக்கு ஆத்தூர், நங்கவள்ளி ஆகிய இரண்டு குடிநீர் திட்டங்கள் மூலம் தினமும் 750 லட்சம் லிட்டர் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. மாநகராட்சி பகுதியில் 84 ஆயிரம் குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு குடிநீர் இணைப்புக்கான டெபாசிட் தொகை ஐந்தாயிரத்தில் இருந்து ஏழாயிரத்து 500 ரூபாயாகவும், குடிநீர் கட்டணம் 100 ரூபாயில் இருந்து150 ரூபாயாகவும் அதிகரிக்கப்பட்டது.

மாநகர பகுதியில் குடியிருப்பு வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள் அதிகரித்து வருகிறது. அதனால், உயர்த்தப்பட்ட டிபாஸிட் தொகை மற்றும் கட்டணம் குறித்து கவலைப்படாமல் புதிய குடிநீர் இணைப்பு வேண்டி
நிறைய பேர் விண்ணப்பித்து வருகின்றனர்.

இந்நிலையில், ஏற்கனவே குடிநீர் இணைப்பு பெற்ற பலர் ஆண்டுக்கணக்கில் குடிநீர் கட்டணம் செலுத்தாமல் அலட்சியம் காட்டி வருகின்றனர். கடந்த இரண்டு மாதங்களாக நிலுவை தொகையை செலுத்துமாறு மாநகராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டது. பலரது வீடுகளுக்கு நேரடியாக சென்றும் அதிகாரிகள் எச்சரிக்கை செய்தனர். ஒரு சிலர் மட்டுமே நிலுவை தொகையை செலுத்தினர். பெரும்பாலானோர் அலட்சியம் காட்டினர்.
அதனால், கடந்த இரண்டு நாட்களாக சூரமங்கலம் மண்டலத்துக்குட்பட்ட 19 வது வார்டில் இரண்டு ஆண்டுகளாக குடிநீர் கட்டணம் செலுத்தாமல் அலட்சியம் காட்டியவர்களின் பட்டியலுடன் சென்ற அதிகாரிகள், துண்டிப்பு நடவடிக்கையில் இறங்கினர்.

நேற்று முன்தினம் ஆறு குடிநீர் இணைப்புக்கள் துண்டிக்கப்பட்டது. நேற்று எட்டுக்கும் மேற்பட்ட குடிநீர் இணைப்புக்கள் துண்டிக்கப்பட்டது. குடிநீர் இணைப்பு துண்டிப்பு செய்யப்பட்ட சூரமங்கலம் பகுதியில் நடமாடும் கம்ப்யூட்டர் வாகனம் வைக்கப்பட்டிருந்தது. அங்கு நேரடியாக வந்து நிலுவை கட்டணத்தை செலுத்தியவர்களின் குடிநீர் இணைப்புக்களை அதிகாரிகள் துண்டிக்காமல் சென்றனர். சூரமங்கலம் மண்டலத்தை தொடர்ந்து அஸ்தம்பட்டி, அம்மாப்பேட்டை, கொண்டலாம்பட்டி மண்டலங்களிலும் அதிகாரிகள் நீண்ட காலமாக நிலுவை தொகை செலுத்தாமல் இருப்பவர்களின் பட்டியலை தயார் செய்து வருகின்றனர்.

 ஒரு சில நாட்களில் துண்டிப்பு நடவடிக்கையில் ஈடுபட உள்ளனர். அதேபோல, கட்சி பிரமுகர்களின் ஆதிக்கத்தால் முறைகேடாக போடப்பட்டுள்ள குடிநீர் இணைப்புக்களையும் அதிகாரிகள் துண்டிக்க முன் வர வேண்டும். குறிப்பிட்ட சில வணிக நிறுவனங்கள், மண்டபங்களுக்கு 24 மணி நேரமும் குடிநீர் கிடைக்கும் வகையில் போடப்பட்டுள்ள நேரடியான இணைப்புக்களையும் துண்டித்தால், குடிநீர் பிரச்னையை கட்டுப்படுத்த முடியும்.

 

பில்லூர் குடிநீர் குழாயில் உடைப்பு :குடிநீர் வினியோகம் நிறுத்தம்

Print PDF

தினமலர்             24.11.2010

பில்லூர் குடிநீர் குழாயில் உடைப்பு :குடிநீர் வினியோகம் நிறுத்தம்

கோவை: வெள்ளமடை கிராமத்தில் பில்லூர் பிரதான குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக, கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு மண்டலப்பகுதிகளில் இன்று ஒரு நாள் குடிநீர் வினியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. பில்லூர் அணையிலிருந்து மோட்டார் மூலம் பம்ப் செய்யப்பட்டு, கோவை மாநகருக்கு குடிநீர் 1,500 மில்லி மீட்டர் விட்டமுள்ள குழாய்களின் வழியாக கொண்டுவரப்படுகிறது. மாநகராட்சி எல்லையிலுள்ள மேல்நிலைத்தொட்டிகளில் குடிநீர் நிரப்பப்பட்டு, கிழக்கு மற்றும் வடக்கு மண்டலப் பகுதிகளில் வினியோகம் செய்யப்படுகிறது. நேற்று மாலை 4.45 மணிக்கு பில்லூர் அணையிலிருந்து கோவைக்கு வரும் பிரதான குழாயில், சர்கார்சாமக்குளம் ஒன்றியம் வெள்ளமடை கிராமத்தில் உடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் ஆறாய் பெருக்கெடுத்து ஓடியது.

தகவலறிந்த குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் கோபாலகிருஷ்ணன், உதவி நிர்வாக பொறியாளர்கள் வேலுசாமி, நெல்சன், உடைப்பு ஏற்பட்ட இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். இரு குழாய்களுக்கு இடைப்பட்ட பகுதியில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால், இரும்பால் இணைக்கும் பைப் பொருத்தும் பணி நடந்தது. 12 மணி நேரத்திற்கு பின்பே மீண்டும் தண்ணீர் பம்ப் செய்யப்படும். அதன் பின், குடிநீர் விநியோகம் செய்யப்படும். அதனால் இன்று ஒரு நாளைக்கு கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு மண்டலப் பகுதிகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் என்று கோவைமாநகராட்சி அறிவித்துள்ளது. இன்று சீராகும்: "பில்லூர் குடிநீர்த் திட்ட சேவை இன்று சீராகும்' என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. கலெக்டர் உமாநாத் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பில்லூர் குடிநீர்த் திட்டத்தில், நீர் உந்துதல் நேற்று மாலை அவசர கால பராமரிப்புப் பணிக்காக நிறுத்தப்பட்டது. பணிகள் நிறைவு செய்யப்பட்டு, நீர் உந்துதல் மற்றும் வினியோகம் இன்று மதியத்தில் இருந்து வழக்கம் போல் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது' என்று தெரிவித்துள்ளார்.

 


Page 134 of 390