Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

பில்லூர் 2வது குடிநீர் திட்டத்தில் 10 ஆயிரம் புதிய குடிநீர் இணைப்பு

Print PDF

தினகரன்               23.11.2010

பில்லூர் 2வது குடிநீர் திட்டத்தில் 10 ஆயிரம் புதிய குடிநீர் இணைப்பு

கோவை, நவ.23:பில்லூர் 2வது குடிநீர் திட்டத்தில், முதல் கட்டமாக 10 ஆயிரம் புதிய இணைப்பு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சி சார்பில் 140 கோடி ரூபாய் செலவில் பில்லூர் 2வது குடிநீர் திட்டப்பணி நடக்கிறது. மார்ச் மாத இறுதியில் பணி முடியும். ஏப்ரல் முதல் வாரத்தில் குடிநீர் விநியோகிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தற்போது பில்லூர் முதல் குடிநீர் திட்டத்தில் தினமும் 6.5 கோடி லிட்டர் குடிநீர் எடுக்கப்படுகிறது. 2வது திட்டத்திலும் இதே அளவிற்கு குடிநீர் பெற முடியும்.

தற்போது நகரில், சுமார் 2.5 லட்சம் வீடுகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இவற்றில், 1.3 லட் சம் வீடுகளுக்கு மட்டும், குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. புதிய குடிநீர் திட்டம் செயல்பாட்டிற்கு வந்தா ல், முதல் கட்டமாக 10 ஆயிரம் குடிநீர் இணைப்பு வழங்கப்படும். குறிப்பாக, சிங்காநல்லூர், சவுரிபாளையம், உப்பிலிபாளையம், வரதராஜபுரம், ஒண்டிப்புதூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு மட்டும் சுமார் 6 ஆயிரம் குடிநீர் இணைப்பு தரப்படும்.

மாநகரில், வரும் 10 ஆண்டுகளில், 1.5 லட்சம் வீடுகளுக்கு புதிதாக குடிநீர் இணைப்பு தர திட்டமிடப்பட்டுள்ளது. வணிக இணை ப்புகளும் தேவையான அளவு வழங்கப்படும். பஸ் ஸ்டா ண்ட், மார்க்கெட், மருத்துவமனை உட்பட பல்வேறு பகுதிகளில் குடி நீரை தடையின்றி வழங்க முடிவு எடுக்கப்பட்டுள் ளது.

கோவை மாநகராட்சி கமிஷனர் அன்சுல் மிஸ்ரா கூறுகையில், "பில்லூர் 2வது குடிநீர் திட்டம் செயல்பாட்டிற்கு வந்தால், மக்கள் கேட் கும் அளவிற்கு நிலுவையின்றி குடிநீர் இணைப்பு தரமுடியும்.

4 நாளுக்கு ஒரு முறை என்ற நிலை மாறி, தினமும் குடிநீர் வழங்கப்படும். எந்த பகுதியிலும் குடிநீர் தட்டுப்பாடு, பற்றாக்கு றை இருக்காது.

சிங்காநல்லூர் மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் விரைவில் பகிர்மான குழாய் அமைக்கப்படும். இதன் மூலம் குடிநீரை தேவை பூர்த்தி செய்யப்படும். மொத்த குடிநீர் அளவு மேலும் 6.5 கோடி லிட்டராக உயரும், " என் றார்.

ஏப்ரல் மாதம் வழங்கப்படும் 2036 வரை பஞ்சமிருக்காது

பில்லூர் 2வது குடிநீர் திட்டம், 2036ம் ஆண்டு வரையுள்ள மக்கள் தொகைக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்போது சிறுவாணி அணை மூலம் தினமும் 8.3 கோடி லிட்டர், பில்லூர் முதல் திட்டத்தில் 6.5 கோடி லிட்டர் குடிநீர் கிடைக்கிறது. 2வது திட்டம் நடைமுறைக்கு வந்தால், தினமும் 21.3 கோடி லிட்டர் குடிநீர் கிடைக்கும். நகரில் ஒரு தனிநபருக்கு 135 லிட்டர் குடிநீர் தினமும் வழங்கவேண்டும். ஆனால், புதிய திட்டம் வந்தால் தினமும் தனிநபருக்கு 150 லிட்டர் குடிநீர் கிடைக்கும். 2021ம் ஆண்டு, நகரின் மக்கள் தொகை 12.88 லட்சமாகவும், 2036ம் ஆண்டு 16.44 லட்சமாகவும் கணக்கிடப்பட்டுள்ளது. 2036ம் ஆண்டு வரை குடிநீர் பற்றாக்குறையின்றி தொடரும். மொத்த குடிநீரில், 10 முதல் 15 சதவீதம் இழப்பு ஏற்படும் என விரிவான திட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

தினமும் 83 லட்சம் லிட்டர் தண்ணீர் ரூ10 கோடியில் புதிய குடிநீர் திட்டம் அடுத்த மாதம் துவங்குகிறது

Print PDF

தினகரன்               23.11.2010

தினமும் 83 லட்சம் லிட்டர் தண்ணீர் ரூ10 கோடியில் புதிய குடிநீர் திட்டம் அடுத்த மாதம் துவங்குகிறது

நாமக்கல், நவ.23: நாமக்கல் நகராட்சியில் ரூ10 கோடியில் செயல்படுத்தப்படும் புதிய குடிநீர் திட்டம் மூலம் தினமும் 83 லட்சம் லிட்டர் தண்ணீர் கிடைக்கும். இந்த திட்ட பணிகள் அடுத்த மாதம் துவங்கவுள்ளது.

இது குறித்து, நாமக்கல் நகராட்சி தலைவர் செல்வராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:

நாமக்கல் நகராட்சியில் சிறப்பு சாலை திட்டத்தின் கீழ் சாலைகள் சீரமைப்பு மற்றும் புதிய சாலைகள் அமைக்க ரூ8 கோடி தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. இந்த நிதியை கொண்டு நகராட்சி பகுதியில் உள்ள 30 வார்டுகளில் தேவையான இடங்களில் சாலைகள் அமைக்கப்பட உள்ளது. முதற்கட்ட மாக பாதாளசாக்கடை திட்டப்பணிகள் முடிவடைந்த பகுதியில் சாலைகள் சரி செய்யப்படும். பாதாள சாக்கடை திட்டத்தை பொறுத்த வரை 95 சதவீதப் பணிகள் நிறைவடைந்துள்ளது.

நாமக்கல் நகராட்சியில் ரூ10 கோடியில் நடைபெற்று வரும் புதிய குடீநீர் திட்டப்பணிகள் முழுமையாக முடிவடைந்துவிட்டது. இந்த திட்டத்துக்காக மோகனூர் காவிரி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுக்கப்படுகிறது. மோகனூரில் உள்ள தலைமை நீரேற்று நிலையத்துக்கு மின் இணைப்பு பெறப்பட்டு தற்போது ஆற்றில் இருந்து நீரேற்று நிலையத்துக்கு தண்ணீர் சோதனை ஓட்டம் மூலம் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்துக்காக மோகனூர் காவிரியில் தண்ணீர் எடுக்கப்படும் இடத்தில் இருந்து நாமக்கல் வரை 20 கி.மீ தூரத்துக்கு பைப் லைன்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் நகராட்சிக்கு தினமும் 83 லட்சம் லிட்டர் தண்ணீர் கிடைக்கும். இதற்காக நாமக்கல் நகராட்சி அலுவலகத்தில் 9 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர்தேக்க தொட்டி அமைக்கப்பட்டுள்ளது.

இதை தவிர 5 இடங்களில் மேல்நிலை நீர்தேக்க தொட்டிகள் கட்டப்பட்டுள்ளன. பணிகள் முற்றிலும் முடிவடைந்துவிட்டதால் புதிய குடிநீர் திட்டம் அடுத்த மாதம் முதல் செயல்பட துவங்கும். நாமக்கல் நகராட்சி பகுதியில் உள்ள சாலைகள் மற்றும் பொது இடங்களில் அரசியல் கட்சியினர், வர்த்தக நிறுவனம், தனியார் நிகழ்ச்சிகளின் விளம்பர பிளக்ஸ் போர்டுகள் வைக்க தடை செய்யப்பட்டுள்ளது. தனியார் இடங்களில் வைக்கப்படும் பிளக்ஸ் போர்டுகளுக்கு நகராட்சி அலுவலகத்தில் அனுமதி ஏதும் பெறத்தேவையில்லை.

அனுமதியின்றி பொது மற்றும் தனியார் இடங்களில் வைக்கப்படும் பிளக்ஸ் போர்டுகள் நகராட்சி பணியாளர்கள் மூலம் முன்அறிவிப்பின்றி அகற்றப்படும். இவ்வாறு நகராட்சி தலைவர் செல்வராஜ் தெரிவித்தார். அப்போது நகராட்சி ஆணையாளர் பாலச்சந்திரன் உடனிருந்தார்.

 

ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம்: தொகுப்பு 3, 5 பணிகள் ஜனவரியில் தொடங்கப்படும்- ஆட்சியர்களின் ஆய்வுக்கூட்டம்

Print PDF

தினமணி              20.11.2010

ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம்: தொகுப்பு 3, 5 பணிகள் ஜனவரியில் தொடங்கப்படும்- ஆட்சியர்களின் ஆய்வுக்கூட்டம்

தருமபுரி, நவ.19: ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தின் தொகுப்பு 3 மற்றும் 4-க்கான பணிகள் 2011-ம் ஆண்டு ஜனவரியில் தொடங்கப்படும் என இரு மாவட்ட ஆட்சியர்களின் ஆய்வுக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர்த் திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்வதற்காக மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழுக்கூட்டம் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர்கள் இரா.ஆனந்தகுமார் (தருமபுரி), வி.அருண் ராய் (கிருஷ்ணகிரி) ஆகியோர் தலைமை வகித்தனர்.

இத்திட்டத்துக்குத் தேவையான நிலத்தை கையகப்படுத்துதல், ஆற்றின் குறுக்கே பாலம் கட்டி குழாய் அமைத்தல், சாலையோரங்களில் குழாய் அமைத்தல், வனத்துறை மற்றும் ரயில்வே துறைகளுக்கு சொந்தமான இடங்களில் நீர்த்தேக்கத் தொட்டிகள் மற்றும் குழாய் அமைத்தல் போன்ற முதல்கட்டப் பணிகளை செய்ய வேண்டியுள்ளது.

இப்பணிகளுக்குத் தேவையான அனுமதி அளித்தல், தடையில்லா சான்று வழங்குதல் உள்ளிட்டவை தொடர்பாக இரு மாவட்ட ஆட்சியர்களும் ஆய்வு செய்தனர். திட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர்த் திட்ட தலைமைப் பொறியாளர் ரவிச்சந்திரன் விளக்கினார்.

முதல்தொகுப்பில், காவிரி ஆற்றில் தண்ணீர் எடுப்பதற்கான இறைப்பான் கிணற்றின் பக்கவாட்டுச் சுவர் கான்கிரீட் பணி முடிக்கப்பட்டுள்ளது. இறைப்பான் கிணற்றில் இருந்து நீர்சுத்தகரிப்பு நிலையத்துக்கு 1,500 மி.மீ. விட்டமுள்ள இரும்புக்குழாய்கள் மூலம் நீர் உந்தப்படவுள்ளது. இக்குழாயின் மொத்த நீளம் 6,200 மீட்டர்.

இக்குழாய்கள் முழுமையாக தருவிக்கப்பட்டு, பதித்து, குழாய்களை இணைத்தல், இணைப்புத் தரம் பரிசோதித்தல் ஆகிய பணிகள் நடைபெற்று வருகின்றன. சுமார் 1,556.63 மீ நீளத்துக்கு பதித்து இணைக்கப்பட்டுள்ள குழாய்களை நீரழுத்த பரிசோதனை செய்வதற்கான பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.

குளோரின் சேர்க்கும் கட்டடம் மற்றும் ரசாயனப் பொருள்கள் கிடங்கு கட்டடம் கட்டும் பணிகள் ஆகியவை நடைபெற்று வருகின்றன. 240 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட பெரிய சமநிலை நீர்த்தேக்கத் தொட்டி 4 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ளது. மொத்தம் 280 மீ நீளமுள்ள சுற்றுச்சுவர் மற்றும் 5.45 மீ உயரமுள்ள 208 தூண்களுக்கான கான்கிரீட் பணிகள் நிறைவுப் பெற்றுள்ளன.

முதல்தொகுப்பை முடிப்பதற்கான காலக்கெடு 30 மாதங்கள் என்றாலும் இப்பணியை 24 மாதங்களுக்குள் முடிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. அதேபோல தொகுப்பு 2-க்கான பணிகள் 24 மாதங்களுக்குள் முடிக்கப்படும். தொகுப்பு 4-க்கான பணிகளும் 24 மாத காலத்துக்குள் முடிக்கப்படும். தொகுப்பு 3 மற்றும் 5-க்கான பணிகள் 2011-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் தொடங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இத்திட்டத்தின் கண்காணிப்புப் பொறியாளர்கள் பழனிசாமி, மனோகரன், செயற்பொறியாளர் ராசப்பன், பொதுப்பணித்துறை உதவிச் செயற்பொறியாளர் கெüதம், பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் ருக்மணி, சுகாதாரத்துறை உதவி இயக்குநர் அய்யனார் உள்பட பலர் பங்கேற்றனர்.

 


Page 136 of 390