Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

தொடர் மழை எதிரொலி சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

Print PDF

தினகரன்                 18.11.2010

தொடர் மழை எதிரொலி சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

சென்னை, நவ.18: வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது.

இதனால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளான பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஏரிகளில் நீர்மட்டமும் உயர்ந்துள்ளது.

பூண்டி ஏரி:

மொத்த கொள்ளளவு 3,231 மில்லியன் கன அடி. தற்போது 2,246 மில்லியன் கன அடி தண்ணீர் உள்ளது. கிருஷ்ணா கால்வாய் மூலம் நீர்வரத்து 387 கன அடி. மழைநீர் வரத்து 703 கன அடி. ஏரியில் இருந்து 411 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. கடந்த ஆண்டு இதே நாளில் 1,696 மில்லியன் கன அடி தண்ணீர் இருந்தது.

புழல் ஏரி:

மொத்த கொள்ளளவு 3,300 மில்லியன் கன அடி. ஏரியில் தண்ணீர் இருப்பு 2,103 மில்லியன் கன அடி. மழைநீர் மற்றும் பூண்டி ஏரியில் இருந்து வரத்து 1,175 கன அடி. 133 கன அடி தண்ணீர் குடிநீருக்காக வெளியேற்றப்படுகிறது. கடந்த ஆண்டு இருப்பு 1,729 மில்லியன் கன அடி.

சோழவரம் ஏரி:

மொத்த கொள்ளளவு 881 மில்லியன் கன அடி. தண்ணீர் இருப்பு 524 மில்லியன் கன அடி. மழைநீர் வரத்து 289 கன அடி. கடந்த ஆண்டு இருப்பு 552 மில்லியன் கன அடி.

செம்பரம்பாக்கம் ஏரி:

மொத்த கொள்ளளவு 3,645 மில்லியன் கன அடி. தற்போது 1,777 மில்லியன் கன அடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு நீர்வரத்து 892 கன அடி. 93 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. கடந்த ஆண்டு இருப்பு 1,587 மில்லியன் கன அடி. தொடர் மழையால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

இதனால், இந்த ஏரிகளின் நீர்மட்டம் வேகமாக உயருகிறது. விரைவில் நிரம்பும் நிலையும் ஏற்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. பூண்டி ஏரி நீர் நிரம்பி காட்சி அளிக்கிறது. இதனால், இந்த ஏரிகளின் நீர்மட்டம் வேகமாக உயருகிறது. விரைவில் நிரம்பும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

 

தேனி நகராட்சியில் குடிநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு மூன்று மண்டலங்களாக பிரித்து சப்ளை செய்ய முடிவு

Print PDF

தினமலர்                    18.11.2010

தேனி நகராட்சியில் குடிநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு மூன்று மண்டலங்களாக பிரித்து சப்ளை செய்ய முடிவு

தேனி : தேனியில் குடிநீர் சப்ளையினை சீரமைக்க நகராட்சி பகுதி முழுவதையும் மூன்று மண்டலங்களாக பிரிக்க கலெக்டர் முத்துவீரன் உத்தரவிட்டுள்ளார். தேனி- அல்லிநகரம் நகராட்சி பகுதி தற்போது குடிநீர் சப்ளைக்காக 85 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இதனால் தற்போது தேவைக்கு ஏற்ற அளவு குடிநீர் கிடைத்தும் முறைப்படி சப்ளை செய்ய நகராட்சி அதிகாரிகளால் முடியவில்லை.நகரின் தற்போதைய குடிநீர் சப்ளை குழாய் செல்லும் வழித்தடங்கள் குறித்த தெளிவான விபரங்கள் எதுவுமே நகராட்சியில் இல்லை.

இதனால் ஏதாவது ஒரு பகுதியில் குடிநீரில் கழிவுநீர் கலந்தாலும் நகராட்சியால் கண்டுபிடித்து சரி செய்ய முடியவில்லை. குடிநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண கலெக்டர் முத்துவீரன் நகராட்சி அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தி, குடிநீர் சப்ளையினை முறைப்படுத்த உத்தரவிட்டார். நகராட்சி தற்போது குடிநீர் சப்ளைக்காக 85 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இதனால் எல்லா மண்டலங்களுக்கும் குறிப்பிட்ட நேரம் வீதம் குடிநீர் சப்ளை கொடுத்து வர வேண்டி உள்ளதாலும் ஐந்து நாளுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் சப்ளை செய்ய முடிகிறது. கூடுதல் நேரம் இருந்தும் சப்ளை செய்ய முடியவில்லை. இந்த பிரச்னையை தீர்த்து சப்ளையை சீரமைக்கும் வகையில் நகராட்சி பகுதி முழுவதையும் மூன்று மண்டலங்களாக பிரித்து, இதற்கேற்ற வகையில் கூடுதல் குடிநீர் தொட்டிகளை அமைத்து சப்ளை செய்தால், தற்போது உள்ள நீர் ஆதாரங்களில் இருந்தே தினமும் குடிநீர் சப்ளை செய்ய முடியும் என உத்தரவிட்டுள்ளார். இதற்கு 50 லட்சம் ரூபாய் வரை செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. வைகையில் இருந்து குடிநீர் கொண்டு வருவது உடனடியாக சாத்தியமில்லாத நிலையில், பகிர்மானத்தை சீரமைப்பதன் மூலம் சப்ளையினை அதிகரிப்பதன் மூலம் தேனி நகரின் குடிநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண முடியும்.

 

மோட்டார் மூலம் குடிநீர் திருட்டு காரைக்குடி நகராட்சியில் சீராக தண்ணீர் விநியோகிப்பதில் சிக்கல்

Print PDF

தினகரன்                        15.11.2010

மோட்டார் மூலம் குடிநீர் திருட்டு காரைக்குடி நகராட்சியில் சீராக தண்ணீர் விநியோகிப்பதில் சிக்கல்

காரைக்குடி, நவ. 15: காரைக்குடி நகராட்சியில் வீடுகள், வணிக நிறுவனங்களில் மின்மோட்டார் பொருத்தி குடிநீர் திடுடப்படுவதால் சீராக தண்ணீர் விநியோகிக்க முடியவில்லை.

காரைக்குடி நகராட்சியில் மொத்தமுள்ள 36 வார்டுகளில் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். நகராட்சியின் குடிநீர் தேவைக்காக கோவிலூர் சாலையில் உள்ள சம்பை ஊற்று நீரேற்று நிலையத்தில் இருந்து நாள்தோறும் 75 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுக்கப்படுகிறது. மகர்நோன்பு திடல், கல்லுகட்டி செக்காலை, திருச்சி ரோடு, புதிய கோர்ட் அருகே ஆகிய பகுதிகளில் உள்ள நீர்தேக்க தொட்டிகள் மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. நகராட்சி சார்பில் 11 ஆயிரத்து 228 வீடுகளுக்கு, 340 பொதுக்குழாய்கள் மூலம் குடிநீர் விநியோகம் நடக்கிறது.

குறிப்பிட்ட சில வீடுகள், வணிக நிறுவனங்கள், டீக்கடைகள், ஓட்டல்களில் திருட்டுத்தனமாக குடிநீர் இணைப்பில் மின்மோட்டார் பொருத்தி தண்ணீர் எடுக்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளது. இதனால் அனைத்து பகுதிகளுக்கும் சீராக குடிநீர் விநியோகிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து நகராட்சி ஊழியர் ஒருவர் கூறுகையில், ``வீடு, வணிக நிறுவனங்களில் மின்மோட்டார் மூலம் குடிநீர் திருடப்படுவதால் பிற பகுதிகளுக்கு சீராக விநியோகம் செய்யமுடியவில்லை. குடிநீர் திருட்டை தடுக்க நகராட்சி சார்பில் விரைவுப்படை அமைக்கப்பட்டது.

தற்போது படை செயல் இழந்துவிட்டது. குடிநீர் திடுபவர்களின் மின்மோட்டாரை பரிமுதல் செய்வதோடு, குடிநீர் இணைப்பையும் துண்டிக்க வேண்டும். நகர்மன்ற கவுன்சிலர்கள் தங்களது வார்டில் மின்மோட்டார் மூலம் குடிநீர் திருடப்படுகிறாதா என ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

காரைக்குடியை சேர்ந்த ராமானுஜம் கூறுகையில், ``முன்பு குடிநீர் திருட்டை தடுக்க விரைவுப்படை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டது. தற்போது நடவடிக்கை ஏதும் இல்லாதாதால் எவ்வித பயமும் இல்லாமல் குடிநீர் திருடுகின்றனர். இதனால் தாழ்வான பகுதிகளுக்கு சுத்தமாக குடிநீர் வருவதில்லை. சிறியவகை அடிபம்பை பொறுத்தி தண்ணீர் எடுக்க நேரிடுகிறது. இவ்விஷயத்தில் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

 


Page 138 of 390