Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

மெதுகும்மல்&களியக்காவிளை கூட்டு குடிநீர் திட்டத்திற்கு ரூ17கோடி நிதி ஒதுக்கீடு அமைச்சர் சுரேஷ்ராஜன் தகவல்

Print PDF

தினகரன் 18.10.2010

மெதுகும்மல்&களியக்காவிளை கூட்டு குடிநீர் திட்டத்திற்கு ரூ17கோடி நிதி ஒதுக்கீடு அமைச்சர் சுரேஷ்ராஜன் தகவல்

மார்த்தாண்டம், அக். 18: மெதுகும்மல்&களியக்காவிளை கூட்டு குடிநீர் திட்டத்திற்கு ரு.17 கோடி ஒதுக்கப் பட்டுள்ளது என்று குழித்துறை நகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலைய திறப்பு விழாவில் அமைச்சர் சுரேஷ் ராஜன் பேசினார்.

குழித்துறை நகராட்சி சார்பில் ஞாறாம்விளை நீரேற்று மையத்தில் ரூ.1 கோடியே 19 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள புதிய குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் திறப்புவிழா நடந்தது. விழாவிற்கு டிஆர்ஓ கலைச்செல்வன் தலைமை வகித்தார். நகர்மன்றத் தலைவர் பொன். ஆசைத்தம்பி வரவேற்றார். ஹெலன்டேவிட்சன் எம்பி, ஜாண்ஜோசப் எம்எல்ஏ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சுத்திகரிப்பு நிலையத்தை திறந்து வைத்து அமைச்சர் சுரேஷ்ராஜன் பேசியதாவது: அனைத்து மக்களும் பயன்படும் வகையில் குழித் துறை நகராட்சி சார்பில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. நகராட்சியில் 5 வார்டுகளுக்கு சுத்திகரிக் கப்பட்ட குடிநீர் வழங்க முடியாத நிலை ஏற்பட்டபோது கூடுதலாக ரூ. 8 லட்சம் நிதி ஒதுக்கி நகராட்சியில் உள்ள அனைத்து வார்டு(21 வார்டு) மக்களுக்கும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும் என்பதில் நகர்மன்ற தலைவர் பொன். ஆசைத்தம்பி உறுதியாக இருந்தார். இதை அவர் செயல்படுத்தி காட்டி உள்ளார்.

2006 தேர்தலுக்கு முன்பாகவே இந்த திட்டத்திற்கு ஒப்புதல் பெறப்பட்டதாக இங்கு பேசிய எம்.எல்.ஏ சுட்டி காட்டினார். அதற்கு மாற்று கருத்து இல்லை. ஆனால் கடந்த நான்கரை ஆண்டுகளாக செய்த பணிகளை எண்ணி பார்க்க வேண்டும்.

மெதுகும்மல்&களியக்காவிளை கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு ரூ. 17 கோடி ஒதுக்கப் பட்டுள்ளது. இதற்கான பணிகள் இன்னும் 10 நாட்களில் தொடங்கும். திருவட்டார் கூட்டுகுடிநீர் திட்டத்திற்காக டெண்டர் யாரும் எடுக்க முன்வராததால், அரசு சார்பில் அப்பணிகள் செய்யப்படும். குழித்துறை நகராட்சியில் ரூ. 3 கோடியே 70 லட்சம் செலவில் அமைக்கப்படும் பஸ் நிலைய பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. வரும் ஜனவரியில் பணிகள் முடிவடைந்து பஸ்நிலையம் திறக்கப்படும். சாய் சப்சென்டர் அமைக்க 50 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது.

ஆனால் முன்னாள் எம்பிக்கள் சாய் சப்சென்டர் அமைக்க ஆணை பிறப்பிக்கப்பட்டதாகவும், நிதி ஒதுக்கப்பட்டதாகவும் கூறி அடிக்கல்லை நாட்டி தேர்தலுக்காக நாடகம் நடத்தியுள்ளனர். நெய்யாறு இடது கரை சானலில் தண்ணீர் திறந்து விட கேரள அரசு பணம் கேட்கிறது. இது பற்றி தமிழக முதல்வர் கேரள அரசுக்கு கடிதம் எழுதி உள்ளார். ஒரு மாதமாகியும் எந்த பதிலும் வரவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் ஜாண்ஜேக்கப் எம்.எல்.., மாவட்ட ஊராட்சித் தலைவர் அஜிதா, வேளாண் மை விற்பனைக்குழுத் தலைவர் ஜி.எம்.ஷா, தமிழ்நாடு மீனவர் நல வாரிய துணைத் தலைவர் பெர்னார்டு, முன்னாள் அமைச்சர் லாரன்ஸ், கவுன்சிலர்கள் சகாதேவன், ஜோசப், நகர்மன்றத் துணைத் தலைவர் யூஜின், குழித்துறை மோட்டார் வாகன தொழிற் சங்கத் தலைவர் மாகின், நகர கமிஷனர் சர்தார், பொறி யாளர் ரமேஷ், விவசாய அணி குமரி தேவராஜ், அருள்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 

தாந்தோன்றிமலையில் 25 கோடியில் புதிய குடிநீர் திட்டம்

Print PDF

தினமணி 13.10.2010

தாந்தோன்றிமலையில் 25 கோடியில் புதிய குடிநீர் திட்டம்

கரூர், அக்.12: கரூர் மாவட்டம், தாந்தோன்றிமலை நகராட்சியில் 25.16 கோடியில் புதிய குடிநீர் திட்டத்தைச் செயல்படுத்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நகராட்சி கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

தாந்தோன்றிமலை நகராட்சி அவசரக் கூட்டம் நகர்மன்றக் கூட்டரங்கில் நடைபெற்றது. தலைவர் ஜெ. ரேவதிஜெயராஜ் தலைமை வகித்தார். துணைத் தலைவர் வி. வசந்தாமணி, செயல் அலுவலர் செ. தெய்வசிகாமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், சிறப்புச் சாலைகள் திட்டத்தில் இயற்கைச் சீற்றத்தால் பழுதான சாலைகளைத் தேர்வு செய்து, சாலைப் பணிகளை மேற்கொள்வதற்காக நகராட்சி நிர்வாக இயக்குநருக்கு அனுப்பிவைக்கப்பட்ட பணிகளில் ஒப்புதல் பெறப்பட்ட 10 பணிகள் மன்றத்தின் பார்வைக்கு வைக்கப்பட்டன.

பெருமாள் கோயில் தேர் வீதியில் தார்த் தள அபிவிருத்திக்கு 25 லட்சம், அரசு மேல்நிலைப்பள்ளி முன்பு தார்ச் சாலைக்கு 23.45 லட்சம், குமரன் சாலைப் பகுதியில் சிமென்ட் தளம், வடிகால் அபிவிருத்திக்கு 7.20 லட்சம், ராயனூர் பகுதியில் 3 சிமென்ட் தளங்கள், வடிகாலுக்கு 16 லட்சம், காமராஜ் நகரில் தார்த் தளம் அமைக்க 7.20 லட்சம், பாரதிதாசன் நகர், ஜீவா நகர், திண்ணப்பா நகர், கரூர் - திண்டுக்கல் சாலை, காந்திகிராமம் பகுதிகளில் சிமென்ட் தளம், தார்த் தளம்,வடிகால் பணிகள் அமைப்பது உள்ளிட்ட 10 பணிகளுக்கு 1 கோடியே 6 லட்சத்து 80 ஆயிரத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து தாந்தோன்றிமலை நகராட்சியின் குடிநீர் அபிவிருத்தி திட்டப் பணிக்காக ஜெர்மன் நாட்டு நிதி நிறுவனமான கேஎப்டபிள்யூ நிதியுதவியுடன் நீடித்த கட்டமைப்பிற்கான நிதியுதவித் திட்டத்தின் கீழ் 25.16 கோடியில் புதிய குடிநீர் திட்டத்தைச் செயல்படுத்துவது. இதில், நீடித்த கட்டமைப்பிற்கான நிதியுதவி தமிழ்நாடு திட்டத்தின் கீழ் 1018.14 லட்சம் கடனாகப் பெறுவது, கடன் தொகையை வட்டியுடன் திருப்பிச் செலுத்துவது குறித்து முடிவு செய்யப்பட்டது.

இத் திட்டத்திற்காக கட்டளைப்பகுதியில் தலைமை நீரேற்று நிலையம், நகராட்சிப் பகுதியில் 5 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 7 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் அமைக்க இடம் வழங்க மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.

நகராட்சிப் பகுதியில் ஒப்பந்த அடிப்படையில் தனியார் மூலம் பொது சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இதில், ஒப்பந்தக் காலம் முடியும் தருவாயில் மேலும் ஓராண்டுக்கு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு, உறுதி செய்யப்படாததால் தினக்கூலி அடிப்படையில் ஊதியம் வழங்கத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

இதற்கு திமுக உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதேபோல, பொது சுகாதார நலனைக் கருதி, நகராட்சியில் கூடுதலாக 75 துப்புரவுப் பணியாளர்கள் பணியிடங்களை அனுமதிக்க வேண்டி சென்னை நகராட்சி நிர்வாக இயக்குநருக்கு கடிதம் எழுதுவது என்ற தீர்மானத்திற்கும் திமுகவினர் எதிர்ப்புத் தெரிவித்தனர். எனினும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அப்போது நடைபெற்ற விவாதம்:

பெ. ரவி (திமுக): பொது சுகாதாரப் பணியில் தினக்கூலி அடிப்படையில் நகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றாமல் எவ்வாறு பணியாளர்களை நியமிக்கலாம். பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டு ஒரு மாதத்திற்குப் பின்னரே தீர்மானம் கொண்டு வரப்படுகிறது. இதுகுறித்து தலைவருக்குத் தெரிவிக்கப்பட்டதா?

செயல் அலுவலர் : மண்டல நிர்வாக இயக்குநரிடமிருந்து வரப்பெற்ற உத்தரவின் பேரிலேயே இப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர்.

கே. ராதாகிருஷ்ணன் (திமுக): நகராட்சிப் பகுதிகளில் தெரு விளக்குகள் அமைப்பதற்காக மின் வாரியத்திற்கு பணம் செலுத்தப்பட்டுள்ளது. எனது வார்டு பகுதியில் 30 விளக்குகள் அமைக்க சுமார் 1.50 லட்சம் செலுத்தப்பட்டுள்ளது. எனினும் இதுவரையில் விளக்குகள் அமைக்கப்படவில்லை.

தலைவர்: இதுகுறித்து மின் வாரியத்திடம் பேசி உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆர். ஏகாம்பரம் (அதிமுக): நகராட்சிப் பகுதிகளில் தற்போது கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது. இதைக் கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை தேவை. நகராட்சி சுகாதார துறையிலுள்ள ஆள் பற்றாக்குறையைச் சரிசெய்து கொசு ஒழிப்பு நடவடிக்கையில் நகராட்சி ஈடுபட வேண்டும்.

கே. ராதாகிருஷ்ணன்: 8-வது வார்டு காமராஜ்புரம், முத்தலாடம்பட்டி பகுதியில் குடிநீர்தொட்டி அமைக்க 4 மாதங்களுக்கு முன் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டும் பணிகள் நடைபெறவில்லை என்றார்.

கூட்டத்தில், உறுப்பினர்கள் செல்வராஜ், ராஜ், கே.பி. பாலுசாமி, எஸ். பாபுகுமார், கே. மாரியம்மாள், பி. பழனிசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

புதிய குடிநீர் இணைப்பு விண்ணப்பம் விநியோகம்

Print PDF

தினமணி 13.10.2010

புதிய குடிநீர் இணைப்பு விண்ணப்பம் விநியோகம்

பல்லடம், அக். 12: பல்லடத்தில் அத்திக்கடவு குடிநீர் புதிய இணைப்பு பெற விண்ணப்பம் விநியோகம் செய்யப்பட்டது.

பல்லடம் நகராட்சி (முதல் நிலை) பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அத்திகடவு குடிநீர் குழாய் இணைப்பு பெற மக்கள் விண்ணப்பித்திருந்தனர். அவர்களுக்கு தபால் மூலம் விண்ணப்பங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அது தவிர குடிநீர் குழாய் இணைப்பு வேண்டுவோர் பல்லடம் நகராட்சி அலுவலகம் மற்றும் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் புதிய குழாய் இணைப்பு பெற விண்ணப்பங்கள் புதன்கிழமை வழங்கப்படும் என்று நகராட்சி நிர்வாகம் அறிவித்து இருந்தது.

ஆனால் செவ்வாய்க்கிழமை காலை 6 மணி முதல் நகராட்சி அலுவலகம், பள்ளி வளாகம் கேட் முன்பு மக்கள் விண்ணங்கள் பெற வரிசையில் நின்றனர். இதைத் தொடர்ந்து பல்லடம் நகராட்சி நிர்வாகம் அவர்களுக்கு விண்ணப்பப் படிவங்களை வழங்கியது.

வரி இனங்கள் நிலுவை இன்றி செலுத்தி இருந்தால் மட்டுமே விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படும். குடிநீர் வீட்டு இணைப்பு பெற 7 ஆயிரம், வீட்டுப் பயன்பாடு இல்லாதவை 10 ஆயிரம், தொழிற்சாலைகளுக்கு 15 ஆயிரம் என வைப்புத் தொகை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

இத்தொகையை பல்லடத்தில் உள்ள இந்தியன் வங்கி, கனரா வங்கி, யூனியன் வங்கி ஆகியவற்றில் செலுத்திட விண்ணப்பதார்களுக்கு பல்லடம் நகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

குடிநீர் இணைப்பு வேண்டுவோர் அனைவருக்கும் வரிசைப்படி குழாய் இணைப்பு வழங்கப்படும் என்று நகராட்சித் தலைவர் ராமமூர்த்தி, செயல் அலுவலர் பெஞ்சமின் குணாசிங் ஆகியோர் தெரிவித்தனர்.

 


Page 154 of 390