Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

அத்திக்கடவு திட்டம் ஆய்வுக்கு கால நீட்டிப்பு

Print PDF

தினமலர் 13.10.2010

அத்திக்கடவு திட்டம் ஆய்வுக்கு கால நீட்டிப்பு

அன்னூர்:அவிநாசி - அத்திக்கடவு திட்டம் குறித்த விரிவான அறிக்கை அளிக்க பொதுப்பணித் துறை அதிகாரிகளுக்கு மூன்று மாதம் அவகாசம் நீட்டிக் கப்பட்டதால், மக்கள் பெரும் ஏமாற்றத்துக்கு உள்ளாகியுள்ளனர். கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் ஆண்டுக்கு ஆண்டு மழை குறைந்து வருகிறது. நிலத்தடி நீர் மட்டம் 1,200 அடிக்கு கீழ் சென்று விட்டது. குளம், குட்டைகள் மைதானங்களாக மாறி விட்டன. தண்ணீர்
இல்லாமல் பல நூறு ஏக்கர் விவசாய நிலங்கள் "லே-அவுட்'களாக மாறி விட்டன. கால்நடை வளர்ப்பும் குறைந்து விட்டது. இதற்கு ஒரே தீர்வு அவிநாசி - அத்திக்கடவு திட்டம் தான். பவானி ஆற்றில் வெள்ளக் காலங்களில் ஏற்படும் உபரி நீரை பில்லூர் அணைக்கு மேல் இருந்து எடுத்து திறந்தவெளி வாய்க்கால் மூலம் கொண்டு சென்றால் அன்னூர், அவிநாசி, காரமடை, பவானிசாகர், நம்பியூர், திருப்பூர், பெருந்துறை, ஊத்துக்குளி, கோபி, சென்னிமலை உள்ளிட்ட வட்டாரங்களை சேர்ந்த பல லட்சம் விவசாயிகள், பொதுமக்கள் பயனடைவார்கள். குளம், குட்டைகளில் நீர் நிரம்பும்.

நிலத்தடி நீர் மட்டம் உயரும். விவசாய பரப்பும், கால்நடை வளர்ப்பும் அதிகரிக்கும். இந்த திட்டத்துக்காக மூன்று மாவட்ட மக்கள் 30 ஆண்டுகளாக போராடி வருகின்றனர். இத்திட்டம் குறித்து விரிவாக ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்கும்படி பொதுப்பணித்துறை நீர்ப்பாசன பிரிவுக்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. வரும் டிசம்பர் மாதத்துக்குள் அறிக்கை அரசுக்கு தாக்கல் செய்யப்படும் என்று உயரதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில்,இத்திட்டம் குறித்து சென்னையில் மத்திய அமைச்சர் ராஜா தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடந்தது. இதில் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் சாமிநாதன், பொதுப்பணித்துறை முதன்மை செயலர் ராமசுந்தரம் மற்றும் உயரதிகாரிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தில், "விரிவான திட்ட அறிக்கையை 2011ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் சமர்ப்பிப்பது எனவும், அறிக்கை அரசுக்கு கிடைத்தவுடன், மத்திய, மாநில அரசுகள் நிதியுதவியுடன் திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த அறிவிப்பு, கொங்கு மண்டல மக்களிடம் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

ரூ20கோடி செலவில் குடிநீர் குழாய் புதுப்பிப்பு

Print PDF

தினகரன் 13.10.2010

ரூ20கோடி செலவில் குடிநீர் குழாய் புதுப்பிப்பு

பெங்களூர், அக். 13: கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக பெங்களூர் குடிநீர் வாரியம் மற்றும் அரசு மருத்துவமனைகளுக்கு கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்படுத்தி வந்த பைப் லைன் மாற்றம் செய்யப்பட்டுள்ளதன் மூலம் பிரச்னைக்கு தீர்வு கிடைத்துள்ளது.

மாநிலத்தில் இயங்கி வரும் விக்டோரியா, புவுரிங், வாணிவிலாஷ், கவுசியா, கே.சி.ஜெனரல், மிண்டோ ஆகிய 6 அரசு பொது மருத்துவமனைகளுக்கு கடந்த 40 ஆண்டுகளுக்கு முன் பெங்களூர் குடிநீர் வாரியம் குடிநீர் இணைப்பு கொடுத்தது. இதற்காக அமைக்கப்பட்ட பைப்புகள் துருப்பிடித்து குடிநீர் வீணாகி வந்தது. ஆரம்பத்தில் குறைவாக கட்டணம் செலுத்தி வந்த மருத்துவமனைகள் நாளடைவில் ஆண்டுக்கு தலா ரூ.75 லட்சம் வரை கட்டணம் செலுத்தும் வகையில் பில் செலுத்தி வந்தன. இவ்வளவு குடிநீர் கட்டணம் வருவது மருத்துவமனை வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தியது.

இதனிடையில் பெங்களூர் குடிநீர் வாரியம் ஏற்பாடு செய்திருந்த குறைகேட்பு நிகழ்ச்சியில் மருத்துவமனைகள் சார்பில் பெங்களூர் மருத்துவ கல்லூரி கண்காணிப்பாளர் ஆஜராகி அதிகமாக குடிநீர் கட்டணம் வருவது குறித்தும் சந்தேகம் எழுப்பினர். இதை தொடர்ந்து குடிநீர் மற்றும் மருத்துவமனை அதிகாரிகள் கூட்டாக ஆய்வு நடத்தினர். இதில் 40 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்டுள்ள இரும்பு பைப்புகள் துருப்பிடித்து தண்ணீர் வீணாகியது கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து ரூ20 கோடி செலவில் துருப்பிடித்த பைப்புகள் அனைத்தும் மாற்றம் செய்யப்பட்டது. இதன் மூலம் குடிநீர் வாரியம் மற்றும் மருத்துவமனைகளுக்கு ஏற்பட்டு வந்த நஷ்டம் குறைந்துள்ளது. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆண்டுக்கு தலா ரூ.75 லட்சம் கட்டணம் செலுத்தி வந்த மருத்துவமனைகள் இனி ரூ.10 லட்சத்திற்கும் குறைவாக கட்டணம் செலுத்தும்.

 

கிருஷ்ணா தண்ணீர் வருகையால் பூண்டி ஏரி நீர்மட்டம் உயர்வு

Print PDF

மாலை மலர் 12.10.2010

கிருஷ்ணா தண்ணீர் வருகையால் பூண்டி ஏரி நீர்மட்டம் உயர்வு

கிருஷ்ணா தண்ணீர் வருகையால்
 
 பூண்டி ஏரி நீர்மட்டம் உயர்வு

 சென்னை, அக். 12- ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து கடந்த வாரம் கிருஷ்ணா தண்ணீர் திறக்கப்பட்டது. ஆரம்பத்தில் ஆயிரம் கனஅடி வீதம் திறக்கப்பட்ட தண்ணீர் 8-ந்தேதி மாலை 1,500 கன அடியாக அதிகரிக்கப்பட்டது.

இதனால் பூண்டி ஏரிக்கு வரும் தண்ணீர் அளவு தமிழக எல்லையில் 478 கனஅடியாக அதிகரித்துள்ளது. பூண்டி ஏரிக்கு வரும் தண்ணீர் அளவு 359 கனஅடியாக உள்ளது.

பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3232 மில்லியன் கனஅடி. நேற்று முன்தினம் பூண்டி ஏரியில் 1281 மில்லியன் கனஅடி தண்ணீர் இருந்தது. கிருஷ்ணா தண்ணீர் வருகையால் அது 1303 மில்லியன் கனஅடியாக அதிகரித்துள்ளது.

பூண்டி ஏரியின் மொத்த உயரம் 35 அடி இன்று காலை நீர்மட்டம் 27.91 அடியாக அதிகரித்துள்ளது. பூண்டியில் இருந்து புழல் ஏரிக்கு 100 கனஅடிதண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

புழல் ஏரியில் 1235 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு இருக்கிறது. நீர்மட்டம் 9.81 அடியாக உள்ளது. இதன் மொத்த உயரம் 21.20 அடி. மொத்த கொள்ளளவு 3330 மில்லியன் கனஅடி.

செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 3645 மில்லியன் கனஅடி. இன்றைய இருப்பு 1594 மில்லியன் கனஅடி. ஏரியின் மொத்த நீர்மட்டம் 24 அடி. இன்று காலை நிலவரப்படி நீர்மட்டம் 15.34 அடி.

சோழவரம் ஏரியின் மொத்த கொள்ளளவு 881 மில்லியன் கனஅடி. மொத்த உயரம் 17.86 அடி. இன்று காலை தண்ணீர் இருப்பு 411 மில்லியன் கனஅடி. நீர்மட்டம் 10.21 அடி.

வீராணம் ஏரியில் 841 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. இன்றைய நீர்மட்டம் 13 அடி. இதன் மொத்த கொள்ளளவு 1465 மில்லியன் கனஅடி. மொத்த உயரம் 15.60 அடி. இன்று காலை நிலவரப்படி ஏரிக்கு 1200 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

சென்னை நகருக்கு தற்போது தினமும் 660 மில்லியன் லிட்டர் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது

 


Page 155 of 390