Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

குத்தம்பாக்கம் திடக்கழிவுத் திட்டத்தால் சென்னைக்கு குடிநீர் பாதிக்கும் அபாயம்

Print PDF

தினமணி 12.10.2010

குத்தம்பாக்கம் திடக்கழிவுத் திட்டத்தால் சென்னைக்கு குடிநீர் பாதிக்கும் அபாயம்

சென்னை, அக். 11: குத்தம்பாக்கம் திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் நிறைவேற்றப்பட்டால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம் ஏரி பாதிப்படையும் என்று உச்ச நீதிமன்ற திடக்கழிவு மேலாண்மைக் குழு உறுப்பினர் அல்மித்ரா படேல் தெரிவித்தார்.

÷நகர்புறச் சுற்றுச்சூழல் பிரச்னையில் மக்கள் பங்கேற்பு என்ற தலைப்பில் சென்னை ஐஐடி வளாகத்தில் திங்கள்கிழமை கருத்தரங்கம் நடந்தது.

இந்தக் கருத்தரங்கில் கலந்து கொண்ட குத்தம்பாக்கம் ஊராட்சி முன்னாள் தலைவர் இளங்கோ பேசியதாவது: ÷÷இந்தத் திட்டத்தால் மக்களுக்கும், கால்நடைகளுக்கும் பாதிப்பு ஏற்படும் என்பதால் கிராம மக்களிடையே பெரும் எதிர்ப்பு கிளம்பியது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் பிரதான செம்பரம்பாக்கம் ஏரி இந்தப் பகுதியில்தான் உள்ளது. மேலும் இந்தப் பகுதியை மையமாகக் கொண்டு 32 ஏரிகள், பல்வேறு கிணறுகள் என நிலத்தடி நீர் ஆதாரங்கள் உள்ளன. இந்த ஒரு திட்டத்தால் இவை அனைத்தும் மாசுபடும்.

÷இதற்கிடையில் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம், உயர் அதிகாரிகள் அடங்கிய ஒரு குழுவை அமைத்து அப்பகுதியில் விசாரணை நடத்தியது. விசாரணையின் முடிவில் அந்தப் பகுதியில் திடக்கழிவுத் மேலாண்மைத் திட்டத்தை அரசு செயல்படுத்தக் கூடாது என்று 17.10.2008-ல் அந்தக் குழு தனது அறிக்கையில் தெளிவுபடுத்தியது.

÷ஆனால் அந்தக் குழுவின் பரிந்துரையை ஏற்காத மாசுக் கட்டுப்பாடு வாரியம், குத்தம்பாக்கத்தில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தை செயல்படுத்த 21.10.2008-ல் தடையில்லாச் சான்று வழங்கியது.

÷இங்கு திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் அமையும்பட்சத்தில் செம்பரம்பாக்கம் ஏரி பாதிக்கப்படும் என்ற நிலையை அதிகாரிகள் அரசின் கவனத்துக்கு கொண்டு சென்றார்களா என்று அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். அரசின் கவனத்துக்கு இந்த விவகாரம் சென்றிருந்தால் அரசே தடுத்து நிறுத்தியிருக்கும் என்றும் நம்புகின்றனர்.

÷இதற்கிடையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு நடந்து வருகிறது. இந்த வழக்கில், தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்கம் கண்காணிக்கும் ஆணையத்தின் (நஉஐஅ) முடிவுக்கு கட்டுப்படுவதாக அரசு உறுதி அளித்துள்ளது. இன்னும் ஓரிரு வாரத்தில் ஆணையம் இது தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்யும் என்று எதிர்பார்க்கிறோம் என்றார் இளங்கோ.

உச்ச நீதிமன்ற திடக்கழிவு மேலாண்மைக் குழு உறுப்பினர் அல்மித்ரா படேல் பேசியதாவது:

÷குத்தம்பாக்கம் கிராமத்தில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் அமைக்க அரசால் தேர்வு செய்யப்பட்ட இடத்தை பார்வையிட்டேன். மேலும் அந்தப் பகுதியில் ஆய்வுகளும் நடத்தியுள்ளேன். செம்பரம்பாக்கம் ஏரி மிக அருகில் உள்ளதால் இந்தப் பகுதியில் ஒரு மீட்டருக்குள்ளாகவே நிலத்தடி நீர் உள்ளது. மேலும் மழைக் காலங்களில் இப்பகுதியில் உள்ள கிணறுகளில் கைக்கு எட்டும் தொலைவில் தண்ணீர் நிலை உயர்ந்து விடுகிறது.

÷இது போன்ற இடத்தை திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்துக்கு எவ்வாறு தேர்வு செய்தார்கள் என்று தெரியவில்லை. இந்த இடத்தில் இந்த திட்டம் செயல்பட்டால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம் ஏரி முற்றிலும் பாதிப்படையும்.

÷மேலும் அந்தப் பகுதி முழுவதும் நிலத்தடி நீரின் தன்மை பாதிப்படையும். எனவே இந்தத் திட்டத்தை இப்பகுதியில் செயல்படுத்தக் கூடாது என்றார் அல்மித்ரா படேல்.

வழக்கறிஞர் டி.கே. ராம்குமார் பேசியதாவது: திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்துக்கு குத்தம்பாக்கத்தில் தேர்வு செய்யப்பட்ட இடம் முற்றிலும் தவறு. இது நகர்ப்புற திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2000-க்கு எதிரானது என்றார்.

அண்ணா பல்கலைக் கழத்தின் நீர்வள மையத்தின் பேராசிரியர் அனுத்தமன் பேசியதாவது: திருவள்ளூர் போன்ற அதிக ஏரிகள் உள்ள மாவட்டத்தில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தை அரசு கொண்டு வருவது ஆபத்தான விஷயம் என்றார்.

சுற்றுச் சூழல் ஆர்வலர் நித்யானந்த் ஜெயராமன் பேசியதாவது: குத்தம்பாக்கம் போன்ற தலித் மக்கள் அதிகமுள்ள கிராமத்தின் மேய்ச்சல் நிலத்தைக் குப்பைக் கொட்டும் இடமாக மாற்ற முயற்சிப்பது, நவீன தீண்டாமை என்றுதான் சொல்ல வேண்டும் என்றார்.

 

தகுதியற்ற உணவு ஆய்வாளர்கள் 70 பேரை பணிநீக்க கோரி மனு சுகாதார துறைக்கு நோட்டீஸ்

Print PDF

தினமலர் 11.10.2010

தகுதியற்ற உணவு ஆய்வாளர்கள் 70 பேரை பணிநீக்க கோரி மனு சுகாதார துறைக்கு நோட்டீஸ்

மதுரை:மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் உணவு பொருள் ஆய்வாளர்களாக பணிபுரியும் தகுதியற்ற 70 பேரை, நீக்க கோரிய மனு குறித்து சுகாதார துறை செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்ப, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.தென்காசியை சேர்ந்த பிச்சைபாஸ்கர் தாக்கல் செய்த ரிட் மனு: கடையநல்லூர் நகராட்சியில் துப்புரவு ஆய்வாளராக பணிபுரிகிறேன். தமிழகத்தில் 192 உணவு பொருள் ஆய்வாளர்கள் பணிபுரிகின்றனர். இவர்களின் எண்ணிக்கையை 854 ஆக உயர்த்த அரசு முடிவு செய்தது. இதற்காக, ஏற்கனவே துப்புரவு ஆய்வாளர்களாக பணிபுரிவோரை பதவி உயர்வு அளித்து, உணவு பொருள் ஆய்வாளராக நியமிக்க அரசு உத்தரவிட்டது. துப்புரவு ஆய்வாளர்கள் உணவு தொழில்நுட்பத்தில் டிப்ளமோ பெற்றிருக்க வேண்டும் என நிபந்தனை விதித்தது.


சேலம் தனியார் கல்லூரியில் உணவு தொழில்நுட்பத்தில் டிப்ளமோ பெற்ற 11 பேரும், அண்ணாமலை பல்கலையில் 2007க்கு முன், பி.எஸ்.சி., அப்ளைடு வேதியியல் பட்டம் பெற்ற 32 பேரும் உணவு பொருள் ஆய்வாளர் பணிக்கு பரிந்துரைக்கப்பட்டனர். அவர்களுக்கு பயிற்சியும் கொடுக்கப்பட்டது.2007க்கு முன், அண்ணாமலை பல்கலையில் பி.எஸ்.சி., அப்ளைடு வேதியியல் பட்டம் பெற்றவர்களையும், சேலம் தனியார் கல்லூரியில் 2005க்கு முன் உணவு தொழில்நுட்பத்தில் டிப்ளமோ பெற்றவர்களையும், உணவு பொருள் ஆய்வாளர் பணிக்கு தகுதியற்றவர்களாக சுப்ரீம் கோர்ட் ஒரு வழக்கில் தெரிவித்தது.

இதனால், உணவு பொருள் ஆய்வாளர் நியமனத்தை அரசு ரத்து செய்தது. இருப்பினும், இப்படி பட்டம், டிப்ளமோ பெற்ற 70 பேர் மாநகராட்சி, நகராட்சிகளில் உணவு பொருள் ஆய்வாளர்களாக பணிபுரிகின்றனர். தகுதியற்ற அவர்களை பணியில் இருந்து நீக்க வேண்டும், என தெரிவிக்கப்பட்டது. மனுதாரர் சார்பில் வக்கீல் காஜா மொய்தீன் ஆஜரானார்.மனு குறித்து பதிலளிக்கும்படி சுகாதார குடும்ப நல செயலாளர், இயக்குனருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி கே.சந்துரு உத்தரவிட்டார்..

 

குடிநீர் இணைப்புக்கு விண்ணப்பம் வழங்கல்

Print PDF

தினமலர் 11.10.2010

குடிநீர் இணைப்புக்கு விண்ணப்பம் வழங்கல்

பல்லடம்: புதிய குடிநீர் இணைப்புக்கான விண்ணப்பம், பல்லடம் நகராட்சியில் வரும் 13ம் தேதி வழங்கப்படுகிறது. புதிய குடிநீர் இணைப்பு கேட்டு, பல்லடம் நகராட்சியில் சில ஆண்டுகளுக்கு முன் 2,500 பேர் விண்ணப்பித்தனர். அவர்களுக்கான விண்ணப்பம் நகராட்சியில் இருந்து தபாலில் அனுப்பி வைக்கப் படுகிறது. புதிதாக இணைப்பு தேவைப்படு வோருக்கு, பல்லடம் அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளி வளாகத்தில் விண்ணப்பம் வரும் 13ம் தேதி வழங்கப்படுகிறது. பூர்த்தி செய்த விண்ணப்பத்தை 14ம் தேதி திரும்பப் பெற்று, சீனியாரிட்டி அடிப்படையில் இணைப்பு வழங்க நகராட்சி முடிவு செய்துள்ளது.

 


Page 156 of 390