Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

நீர்த்தேக்க தொட்டி கட்டும் பணி துவக்கம்

Print PDF

தினகரன் 06.09.2010

நீர்த்தேக்க தொட்டி கட்டும் பணி துவக்கம்

புதுச்சேரி, செப். 6: புதுவை உழவர்கரை நகராட்சியை சேர்ந்த ஆலங்குப்பம் அருகில் உள்ள அன்னை நகர் பகுதியில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கும் வகையில் ரூ.1.09 கோடி மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, ஆதி திராவிடர் நல நிதியில் இருந்து நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான அரசாணை பெறப்பட்டது.

இதை நிறைவேற்றும் வகையில் முதல் கட்டமாக 1.50 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, 50 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட கீழ்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் அந்த வளாகத்தை சுற்றி பாதுகாப்பு மதில் சுவர் கட்டுதல் ஆகிய பணிகளுக்காக 73.32 லட்சம் செலவிடப்பட உள்ளது.

இந்த பணிக்கான பூமி பூஜையை அமைச்சர்கள் ஷாஜகான், நமச்சிவாயம், கந்தசாமி ஆகியோர் நடத்தி வைத்தனர். ஆலங்குப்பம் கிராம கவுன்சிலர் சுசிலா என்ற விஜயலட்சுமி, பொதுப்பணித்துறையின் பொது சுகாதார கோட்ட செயற்பொறியாளர் ஜெயக்குமார், கிராம குடிநீர் திட்ட உதவி பொறியாளர் சதாசிவம், இளநிலை பொறியாளர் ராதாகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

கம்பாலபட்டி கூட்டுக்குடிநீர் திட்ட பராமரிப்பு பணிகள் நிறைவு கிராமங்களுக்கு குடிநீர் விநியோகம்

Print PDF

தினகரன் 04.09.2010

கம்பாலபட்டி கூட்டுக்குடிநீர் திட்ட பராமரிப்பு பணிகள் நிறைவு கிராமங்களுக்கு குடிநீர் விநியோகம்

பொள்ளாச்சி, செப். 4: பொள்ளாச்சி கம்பாலபட்டி கூட்டு குடிநீர்த் திட்டத்தில் நீருந்து நிலையம் சுத்தம் செய்யும் பணி முடிவடைந்துள்ளதால் நேற்று முதல் கிராமங்களுக்கு குடிநீர் விநியோகம் துவங்கியுள்ளது.

பொள்ளாச்சியை அடுத்த எஸ்.நல்லூர், கம்பாலபட்டி, கோட்டாம்பட்டி, ஜல்லிபட்டி, பில்சின்னாம்பாளையம், கரியாஞ்செட்டிபாளையம் ஆகிய 6 ஊராட்சிகளும், சமத்தூர் மற்றும் கோட்டூர் ஆகிய இரு பேரூராட்சிகள் ஆகிய பகுதிகளுக்கு கம்பாலபட்டி கூட்டுக் குடிநீர்த் திட்டம் மூலம் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. ஆழியாறு அணைக்கு அருகே அமைக்கப்பட்டுள்ள நீருந்து நிலையம் மூலம் குடிநீர் பெறப்பட்டு சுத்திகரிப்பு செய்த பிறகு கிராமங்களுக்கு விநியோகிக்கப்படுகிறது. இத்திட்டத்தில் 3 மாதங்களுக்கு ஒரு முறை சுத்திகரிப்பு நிலையம் சுத்தம் செய்தல் மற்றும் குடிநீர் குழாய்களில் ஏற்பட்டுள்ள உடைப்புகளை சீரமைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

அதன்படி கடந்த 29ம் தேதி முதல் பராமரிப்பு பணி தொடர்ந்து 5 நாட்களுக்கு நடைபெற்றது. பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் நேற்று முதல் கிராமங்களுக்கு குடிநீர் விநியோகம் துவங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கம்பாலபட்டி கூட்டு குடிநீர்த் திட்ட தலைவரும், எஸ். நல்லூர் ஊராட்சித் தலைவருமான யுவராஜ் கூறியதாவது:

ஆழியாறு ஆற்றில் இருந்து கம்பாலபட்டி கூட்டு குடிநீர்த் திட்டத்துக்கு தண்ணீர் பெறப்படுகிறது. இந்த நீர் ஆழியாற்றில் உள்ள 3 நிலமட்ட நீர்த்தேக்கத் தொட்டிகளில் சேமிக்கப்பட்டு சுத்திகரிப்பு செய்த பிறகே கிராமங்களுக்கு விநியோகிக்கப்படுகிறது. இத்திட்டத்தில் எஸ்.நல்லூர், கம்பாலபட்டி, ஜல்லிபட்டி (மஞ்சநாயக்கனூர்), பில்சின்னாம்பாளையம், கரியாஞ்செட்டிபாளையம், டி.கோட்டாம்பட்டி ஆகிய 6 ஊராட்சிகளும், சமத்தூர் மற்றும் கோட்டூர் ஆகிய இரு பேரூராட்சிகளும் பயனடைகின்றன.

மேற்படி கிராமங்களுக்கான குடிநீர்த் திட்டத்தில் தலா சுமார் 2 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நிலமட்ட நீர்த் தேக்கத் தொட்டிகளில் குடிநீர் சுத்திகரிப்பு செய்யப்படுகிறது.

இத்தொட்டிகள் 3 மாதத்திற்கு ஒரு முறை சுத்தம் செய்து அதில் உள்ள மாசுபட்ட மணல் அப்புறப்படுத்தப்பட்டு புதிய மணல் கொட்டப்படும். நீருந்து நிலையம் முன்பு, புளியங்கண்டியில் இரு இடங்கள், பெட்ரோல் பங்க் எதிரே, மாடேத்தி பள்ளம், துறையூர் மேடு, அரசூர், பூவலப்பருத்தி, விஜயேஸ்வரி மில் அருகே என பல இடங்களில் திட்டக் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.

மேற்படி இடங்களில் ஏற்பட்டுள்ள உடைப்புகள் சரி செய்யப்பட வேண்டியுள்ளது. இதற்கான பணிகள் கடந்த 29ம் தேதி துவங்கியது. சுமார் 50 பணியாளர்களைக் கொண்டு இப்பணி 5 நாட்களுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டது. அதன்படி 2ம் தேதியுடன் பணிகள் முடிவடைந்தன. இதனைத் தொடர்ந்து மேற்படி திட்டத்தில் உள்ள கிராமங்களுக்கு இன்று (நேற்று) முதல் குடிநீர் விநியோகம் துவங்கியுள்ளது. இவ்வாறு யுவராஜ் தெரிவித்தார்.

 

நெல்லை மாநகராட்சி பகுதிகளில் குடிநீர் கட்டண உயர்வு நிறுத்தி வைப்பு

Print PDF

தினமணி 03.09.2010

நெல்லை மாநகராட்சி பகுதிகளில் குடிநீர் கட்டண உயர்வு நிறுத்தி வைப்பு

திருநெல்வேலி, செப். 2: திருநெல்வேலி மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் குடிநீர் கட்டணம் உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பாளையங்கோட்டை மண்டல தலைவர் சுப. சீதாராமன் வியாழக்கிழமை விடுத்துள்ள செய்திக் குறிப்பு:

திருநெல்வேலி மாநகராட்சி பகுதிகளில் குடிநீர் கட்டணம் ரூ.100 செலுத்த வேண்டும் என்ற தீர்மானம் ஆகஸ்ட் 19-ம் தேதி நடைபெற்ற மாமன்றக் கூட்டத்தில்ஒத்திவைக்கப்பட்டது.

மேலும் வீடுகட்ட பிலான் கொடுப்பவர்கள் வீட்டு பிளானோடு பசுமைக் கட்டணம் (மரம் வளர்க்க) ரூ.2000 செலுத்த வேண்டும் என்ற தீர்மானம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மாநகராட்சியில் இருந்து அதிகாரப் பூர்வமான நோட்டீஸ் ஒவ்வொருவருக்கும் கிடைக்கும் வரை பொதுமக்கள் ஏற்கெனவே செலுத்தி வரும் குடிநீர் கட்டணத்தை செலுத்துவதோடு புதிய வீடுகட்ட பிளான் கொடுப்பவர்கள் பசுமை வரி செலுத்த வேண்டாம். மேலும் பாதாளச் சாக்கடை இணைப்பு பெறாதவர்கள் சேவைக் கட்டணத்தை இணைப்பு பெற்ற பிறகு செலுத்தினால் போதும் என தெரிவித்துள்ளார்.

Last Updated on Friday, 03 September 2010 11:15
 


Page 170 of 390