Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

முதல்வர் தொடக்கி வைக்கும் குடிநீர் திட்டப் பணி தீவிரம்

Print PDF

தினமணி 03.09.2010

முதல்வர் தொடக்கி வைக்கும் குடிநீர் திட்டப் பணி தீவிரம்

திருச்சி, செப். 2: ரூ.169 கோடி மதிப்பிலான திருச்சி மாநகர குடிநீர் மேம்பாட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியை வரும் 8-ம் தேதி முதல்வர் கருணாநிதி தொடங்கி வைக்கவுள்ளதை அடுத்து, அந்தப் பகுதிப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

திருச்சி மாநகரிலுள்ள அனைத்துப் பகுதிகளுக்கும் சீரான குடிநீர் வழங்கும் வகையில் ரூ.169 கோடி மதிப்பிலான மேம்பாட்டுத் திட்டம் தயாரிக்கப்பட்டு, 9 தொகுப்புகளாக பணிகள் நடைபெற்று வருகின்றன. இப் பணிகளுக்கு தமிழ்நாடு நகர்ப்புற உள்கட்டமைப்பு நிதி சேவை நிறுவனம் மூலம் ஜப்பான் நிதி நிறுவனத்தின் நிதி உதவியுடன், மாநில அரசின் மானியமும் உள்ளது.

இத்திட்டத்தில், ஸ்ரீரங்கம் மேலூர் பகுதியில் கொள்ளிடம் ஆற்றில் 3 பிரதான நீர் சேகரிப்பு கிணறுகள், 2 தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டிகள், குடிநீர் விநியோகத்துக்கு ஏதுவாக 35 இடங்களில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள், 88.59 கிமீ தொலைவுக்கு பிரதான மற்றும் கிளை உந்து குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், வருகிற 8-ம் தேதி முதல்வர் கருணாநிதி பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் ஒன்றாக, இத் திட்டத்தின் ஒரு பகுதியை தொடங்கி வைக்கும் பணியும் இணைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, 3-ம் கிணற்றிலிருந்து அய்யாளம்மன் படித்துறை அருகேயுள்ள பொன்மலை கூட்டுக் குடிநீர்த் திட்ட நீர் சேகரிக்கும் கிணறு வரை 5.5 கிமீ தொலைவுக்கு குடிநீரேற்றும் குழாய் பதிக்கப்பட்டு இறுதியாக குழாய்கள் இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இப் பணிகளை மேயர் எஸ். சுஜாதா, ஆணையர் த.தி. பால்சாமி ஆகியோர் வியாழக்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். எஞ்சியுள்ள பணிகளை இரு நாள்களுக்குள் முடிக்க வேண்டும் என பொறியாளர்களுக்கு அறிவுரை வழங்கினர்.

இந்த ஆய்வின்போது, நகரப் பொறியாளர் எஸ். ராஜா முகம்மது, செயற்பொறியாளர்கள் ஆர். சந்திரன், எஸ். அருணாசலம், உதவிச் செயற்பொறியாளர் என். பாலகுருநாதன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Last Updated on Friday, 03 September 2010 11:10
 

கடையநல்லூரில் புதிய குடிநீர்த் திட்டத்தால் ரூ 4.21 கோடி சாலை திட்டத்திற்கு பாதிப்பு?

Print PDF

தினமணி 02.09.2010

கடையநல்லூரில் புதிய குடிநீர்த் திட்டத்தால் ரூ 4.21 கோடி சாலை திட்டத்திற்கு பாதிப்பு?

கடையநல்லூர்,செப்.1: திருநெல்வேலி மாவட்டம், கடையநல்லூர் நகராட்சியில் புதிய குடிநீர்த் திட்டத்துக்கான பணிகள் தொடங்கும் சூழலில், சிறப்பு சாலைத் திட்டத்தின் கீழ் நகராட்சிப் பகுதியில் ரூ 4.21 கோடி மதிப்பில் தார் மற்றும் சிமெண்ட் சாலைகள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

குடிநீர் திட்டப் பணிகளால் இப் புதிய சாலைகள் சேதமடையும் நிலையுள்ளதால், சாலை திட்டத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள பணம் வீணாகும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

புதிய குடிநீர்த் திட்டம்: 52.25 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுள்ள கடையநல்லூர் நகராட்சியில், சுமார் ஒரு லட்சம் பேர் வசிக்கின்றனர். 13,000 பேருக்கு இந் நகராட்சியில் குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. 50.23 கிலோ மீட்டர் நீள உள்புற சாலைகளும், 6 கிலோ மீட்டர் தேசிய நெடுஞ்சாலையும் இந் நகராட்சி பகுதிக்குள் உள்ளன.

கடையநல்லூருக்கு 1973-ம் ஆண்டு முதல் கருப்பாநதி அணைக்கட்டு திட்டத்தின் மூலம் 35 லட்சம் லிட்டர் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. இதனுடன், 2003-ம் ஆண்டு முதல் தாமிரபரணி குடிநீர்த் திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இவ்விரண்டு திட்டங்களின் மூலமும் நாளொன்றுக்கு சுமார் 68 லட்சம் லிட்டர் தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது. இருப்பினும் பல இடங்களில் பகிர்மானக் குழாய்களின் சீரற்ற நிலையினால் குடிநீர்ப் பிரச்னை ஏற்படுவதாகப் புகார் எழுந்தன.

இக் குடிநீர்ப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில் புதிய குடிநீர்த் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்று பீட்டர்அல்போன்ஸ் எம்.எல்.. கோரிக்கை விடுத்தார்.

இதையடுத்து ரூ21.41 கோடி மதிப்பீட்டில் புதிய குடிநீர் திட்டத்தை முதல்வர் கருணாநிதி அறிவித்தார். துணை முதல்வர் மு..ஸ்டாலின், ஆக.6-ம் தேதி குடிநீர்த் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினார். ஜெர்மனியின் கே.எப்.டபிள்யூ. நிறுவனத்தின் நிதியுதவி மற்றும் தமிழக அரசின் மானியத்துடன் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இத் திட்டத்தின் கீழ் கருப்பாநதி ஆற்றுப்பகுதியில் தடுப்பணையும், சந்தைப் பகுதியில் கீழ்நிலைத் தொட்டியும் கட்டப்படுகின்றன.

மேலக்கடையநல்லூர், மாவடிக்கால், இக்பால்நகர், முத்துக்கிருஷ்ணாபுரம், பேட்டை, குமந்தாபுரம் ஆகிய 7 இடங்களில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளும் அமைக்கப்படவுள்ளன. நகராட்சி முழுவதும் உள்ள பிரதானக் குடிநீர்க் குழாய்கள், பகிர்மானக் குழாய்கள் மற்றும் வீட்டின் இணைப்பு குழாய்கள் உள்ளிட்ட அனைத்து குழாய்களும் மாற்றப்படவுள்ளன.

சிறப்பு சாலைத் திட்டம்: இதற்கிடையே, 30.8.2010-ல் நடைபெற்ற கடையநல்லூர் நகராட்சி அவசரக் கூட்டத்தில், நகராட்சிகள் நிர்வாக இயக்குநரின் (சென்னை) நேர்முக கடிதங்களில் தெரிவித்துள்ளபடி, 2010-2011 ஆண்டின் சிறப்பு சாலைத் திட்டத்தின் கீழ் அரசு மானியம் பெற்று 51 தார் மற்றும் சிமெண்ட் சாலைகள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இத் திட்டத்தின் மூலம் ரூ 1 கோடி மதிப்பீட்டில் பேட்டை மலம்பேட்டையிலிருந்து, தலைமை நீரேற்றும் நிலையம் வரை தார்ச்சாலை அமைப்பது, ரூ38 லட்சம் மதிப்பீட்டில் மேலக்கடையநல்லூர் மலம்பேட்டைத் தெருவில் தார்ச்சாலை அமைத்தல்,

ரூ 19 லட்சம் மதிப்பீட்டில் ஜவாஹர் தெருவில் தார்ச்சாலை அமைப்பது, ரூ33 லட்சத்தில் கிருஷ்ணாபுரம் ரயில்வே பீடர் ரோட்டில் தார்ச்சாலை அமைப்பது உள்ளிட்ட 51 பணிகள் ரூ|4 ,21,70,000 மதிப்பீட்டில் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளன.

ஏற்கெனவே, அடிக்கல் நாட்டப்பட்டுள்ள புதிய குடிநீர்த் திட்டத்தின் கீழ் அனைத்து குடிநீர்க் குழாய்களும் மாற்றியமைக்கப்படவுள்ளன. இதற்கிடையே, இந்த சிறப்பு சாலைத் திட்டத்தின் கீழ் சாலை அமைத்தாலும், குடிநீர் குழாய்களைப் பதிக்க, புதிதாக போடப்படும் சாலைகளை தோண்ட வேண்டிய நிலை நிச்சயம் ஏற்படும்.

இதனால் புதிய சாலைகள் சேதமடையும். மீண்டும் சாலை அமைக்க வேண்டிய அவசியம் ஏற்படும். இதனால் மக்களின் வரிப்பணம் வீணாகும் அபாயம் உள்ளது.

எனவே, புதிய குடிநீர்த் திட்டத்தை செயல்படுத்திய பின்னரே புதிய சாலைகளை அமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.

 

1 கோடி செலவில் நீர்த்தேக்க தொட்டி

Print PDF

தினமணி 02.09.2010

1 கோடி செலவில் நீர்த்தேக்க தொட்டி

புதுச்சேரி, செப்.1: புதுச்சேரி உழவர்கரை நகராட்சி, ஆலங்குப்பம் கிராமத்தில் 1 கோடி செலவில் நீர்த்தேக்க தொட்டி அமைக்கும் பணி திங்கள்கிழமை தொடங்கியது.

ஆலங்குப்பம் அன்னை நகர் பகுதியில் சமீப காலமாக குடிநீர் பற்றாக்குறை நிலவி வந்தது. இதை போக்கும் வகையில் 1 கோடி அளவிலான மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, ஆதிதிராவிடர் நல நிதியிலிருந்து நிதி ஒதுக்கப்பட்டது.

இப்பணிகளை நிறைவேற்றும் பொருட்டு, முதல்கட்டமாக 1.50 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, 50 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட கீழ்நிலை நீர்த்தேக்க தொட்டி மற்றும் அவ்வளாகத்தை சுற்றி பாதுகாப்பு சுவர் கட்டுதல் ஆகிய பணிகள் மேற்கொள்ள திங்கள்கிழமை பூமிபூஜை நடந்தது.

இந் நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஷாஜகான் கலந்துகொண்டு பணிகளை தொடங்கி வைத்தார். ஆலங்குப்பம் கவுன்சிலர் பி.சுசீலா, பொதுப்பணித்துறை சுகாதார கோட்ட செயற்பொறியாளர் ஜெ.ஜெயக்குமார், கிராம குடிநீர் திட்ட உதவியாளர் சி.சதாசிவம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Last Updated on Thursday, 02 September 2010 11:32
 


Page 171 of 390