Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

40 வருடங்களுக்கு பிறகு 750 குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்பு; மேயர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்

Print PDF

மாலை மலர் 27.07.2010

40 வருடங்களுக்கு பிறகு 750 குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்பு; மேயர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்

40 வருடங்களுக்கு பிறகு
 
 750 குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்பு;
 
 மேயர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்

சென்னை, ஜூலை. 27- சென்னை மாநகராட்சிக்குட்பட்ட கோட்டூர்புரம் பாரதி அவென்யூ, மாந்தோப்பு காலனி பகுதியில் 750 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இந்த பகுதி குடியிருப்புகள் உருவாகி 40 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டன. ஆனால் இதுவரை குடிநீர் இணைப்பு, பாதாள சாக்கடை வசதிகள் செய்து தரப்படவில்லை. தனியார் ஒருவரால் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டதால் குடிநீர் இணைப்புகள் வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது.

தற்போது வழக்குகள் முடிந்து மாநகராட்சி சார்பில் குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. ரூ.34 லட்சம் செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ள கழிவு நீரோற்று நிலையத்தை மேயர் மா.சுப்பிரமணியன் இன்று தொடங்கி வைத்தார்.

அத்துடன், மாந்தோப்பு காலனியில் உள்ள 112 குடிசை வீடுகளுக்கும் இலவசமாக கழிவுநீர் இணைப்பு வழங்கவும் உத்தரவிட்டார்.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.. சைதை கிட்டு, கோட்டூர் சண்முகம், அன்பு, கவுன்சிலர் மேரி லூர்துசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். குடிநீர் இணைப்பு வழங்கியதற்காக குடியிருப்போர் நல சங்கங்கள் சார்பில் மேயருக்கு பாராட்டும் நன்றியும் தெரிவிக்கப்பட்டது.

 

வெள்ளகோவிலில் குடிநீர் சப்ளை பாதிப்பு

Print PDF

தினகரன் 27.07.2010

வெள்ளகோவிலில் குடிநீர் சப்ளை பாதிப்பு

திருப்பூர், ஜூலை 27: வெள்ளகோவில் நகரமன்ற தலைவர் சாந்திகந்தசாமி வெளியிட்டுள்ள அறிக்கை:

வெள்ளகோவில் நகராட்சி பகுதிகளுக்கு காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. கொடுமுடி தலைமை நீரேற்று நிலையத்தில் மின்மோட்டார் பழுது காரணமாக குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. மின் மோட்டார் தமிழ்நாடு குடிநீர் வாரியம் மூலமாக பழுது சரி செய்யப்பட்டு மீண்டும் குடிநீர் கிடைக்கும் வரை பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்திக் கொள்ளக் கேட்டுக் கொள்கிறேன். இதர பயன்பாடுகளுக்கு நகராட்சி நிர்வாகத்தால் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள சிறு மின்விசைப்பம்பு டேங்க் மூலம் வழங்கப்படும் தண்ணீரை பயன்படுத்திக் கொள்ள வேண்டுகிறேன்.

 

சீரான குடிநீர் விநியோகம் ரூ.169 கோடியில் திட்டம் செப்டம்பரில் முதல்வர் துவக்குகிறார்

Print PDF

தினகரன் 27.07.2010

சீரான குடிநீர் விநியோகம் ரூ.169 கோடியில் திட்டம் செப்டம்பரில் முதல்வர் துவக்குகிறார்

திருச்சி, ஜூலை 27: திருச்சியில் ரூ.169 கோடி செலவிலான குடிநீர் திட்டத்தை செப்டம்பரில் முதல்வர் கருணாநிதி துவக்கி வைக்கிறார்.

தமிழ்நாடு நகர்புற உள்கட்டமைப்பு நிதி சேவை நிறுவனம் மூலம் ஜப்பான் நிதி நிறுவன உதவி, மாநில அரசின் மான்யத் தொகை மற்றும் மாநகராட்சி பங்களிப்பு என ரூ.169 கோடியில் 8 தொகுப்புகளாக குடிநீர் அபிவிருத்தி திட்ட பணிகள் திருச்சியில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பணியின் ஒரு கட்டமாக காவிரி ஆற்றில் கம்பரசம்பேட்டை அய்யாளம்மன் படித்துறையில் நடந்து வரும் குழாய் பதிக்கும் பணியை அமைச்சர் நேரு நேற்று பார்வையிட்டார். அப்போது அவர் கூறியதாவது:

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் சீரான குடிநீர் வழங்கும் வகையில், அடுத்த 40 ஆண்டுகளுக்கான குடிநீர் தேவை அடிப்படையில் ரூ.169 கோடியில் பணிகள் முழுவீச்சில் நடந்து வரு கிறது. இத்திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள பிரதான நீர் சேகரிக்கும் கிணறு எண். 3லிருந்து 5 கி.மீ. தூரத்திற்கு காவிரி ஆற்றின் வடகரை வரை பிரதான குடிநீரேற்றும் குழாய் பதிக்கப் பட்டுள்ளது. தற்போது காவிரி ஆற்றின் வடகரையிலிருந்து பொன்மலை கூட்டு குடிநீர் திட்ட நீர் சேகரிக்கும் கிணறு வரை காவிரி ஆற்றின் குறுக்கே அரை கிலோ மீட்டர் நீளத்திற்கு நவீன தொழில்நுட்பம் மூலம் குழாய் பதிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த குடிநீரை பொன்மலை, காமராஜ் நகர், அம்மன் நகர், கிருஷ்ணமூர்த்தி நகர், சுந்தரராஜ் நகர், அரியமங்கலம், மலையப்பநகர், ரயில்நகர், ஜெகநாதபுரம், முன்னாள் ராணுவத்தினர் காலனி, மேலகல்கண்டார்கோட்டை, பொன்னேரிபுரம், பொன்மலைப்பட்டி, சங்கிலியாண்டபுரம், விவேகானந்தாநகர் பகுதிகளுக்கு சீரான குடிநீர் வழங்கும் வகையில் இப்பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

திருச்சியில் ஒருங்கிணைந்த கலெக்டர் அலுவலகம், வெள்ளத் தடுப்பு பணி, தகவல் தொழில்நுட்ப பூங்கா ஆகியவற்றை செப்டம்பர் முதல் வாரத்தில் தமிழக முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் ஸ்டாலின் ஆகியோரால் துவக்கிவைக்கப்படவுள்ளது. அப்போது இந்த குடிநீர் திட்டத்தின் ஒரு பகுதியும் துவக்கி வைக்கப்படும். இவ்வாறு நேரு கூறினார். மேயர் சுஜாதா, மாநகராட்சி கமிஷனர் பால்சாமி மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

 


Page 198 of 390