Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

ஊட்டியில் ரூ.23 கோடியில் புதிய குடிநீர் திட்டம் நகர்மன்ற அனுமதிக்கு காத்திருப்பு

Print PDF

தினகரன் 29.06.2010

ஊட்டியில் ரூ.23 கோடியில் புதிய குடிநீர் திட்டம் நகர்மன்ற அனுமதிக்கு காத்திருப்பு

ஊட்டி, ஜூன் 29: ஊட்டி நகராட்சியின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய ரூ.23 கோடி மதிப்பில் புதிய குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

ஊட்டி நகராட்சியில் 36 வார்டு உள்ளது. 2001ம் ஆண்டு கணக்கெடுப்புபடி 1 லட்சத்து 10 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர். கடந்த 10 ஆண்டுகளில் 10 முதல் 15 ஆயிரம் வரை மக்கள்தொகை அதிகரித்திருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

நகராட்சிக்குட்பட்ட பெரும்பாலான பகுதிக்கு பார்சன்ஸ்வேலி அணை யில் இருந்தே குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. மேலும் மார்லிமந்து, கிளண்ராக், அப்பர் மற்றும் லோவர் கோடப்பமந்து, அப்பர் மற்றும் லோவர் தொட்டபெட்டா, ஓல்டு ஊட்டி, கோரிசோலா, டைகர் ஹில் அணைகளில் இருந் தும் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.

பார்சன்ஸ்வேலி நீரேற்று மையத்தில் இருந்து 2 ராட்சத குழாய்கள் மூலம் குடிநீர் கொண்டு வரப்படுகிறது. அதிகரித்து வரும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியாத நிலையில் ஊட்டி நகராட்சி உள்ளது. தற்போது ஒரு நபருக்கு 90 லிட்டர் வீதம் ஒருநாள் விட்டு ஒருநாள் நீர் விநியோகிக்கப்படுகிறது. ஆனால் தினமும் 135 லிட்டர் நீர் விநியோகம் செய்ய வேண்டும்.

இதனை கருத்தில் கொண்டு பார்சன்ஸ்வேலி அணையில் புதிய குடிநீர் திட்டத்தை உருவாக்க நகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. இதற்கான திட்ட மதிப்பு தயாரிக்க எஸ்.பி.டி. என்ற தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

அந்நிறுவனம் ரூ.23 கோடியில் விரிவான திட்டத்தை தயாரித்துள்ளது. இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் பார்சன்ஸ்வேலி அணையில் புதிதாக ஒரு பம்பிங் ஸ்டேஷன் கட்டப்படும். அதில் ராட்சத மோட்டார்கள் பொருத்தப்பட்டு அணையில் இருந்து தண்ணீர் உறிஞ்சி குழாய்களின் மூலம் ஊட்டி நகர் பகுதிக்கு கொண்டு சென்று அங்குள்ள 2 பெரிய நீர் தேக்க தொட்டியில் சேகரித்த பின் வினியோகம் செய்யப்படும்.

தமிழ்நாடு மாநில அளவிலான ஓப்புதல் அளிக்கும் குழு ஊட்டி நகராட்சிக்கு மதிப்பீடு தொகையான ரூ.23 கோடியே 80 லட்சத்திற்கு அனுமதியளித்தது.

இதில், மாநில அரசின் மானியத்தொகை ரூ.7.14 கோடியில், தமிழ்நாடு நகர்ப்புற உட்கட்டமைப்பு நிதி சேவைகள் நிறுவனத்தின் கடன் ரூ.14.28 கோடி மற்றும் நகராட்சியின் பங்குதொகை ரூ.2.38 கோடியாகும். இத்திட்டம் நிறைவேறினால் ஊட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு இருக்காது.

நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் குடிநீர் குழாய் இணைப்புக்களுக்கான வைப்புத் தொகை மற்றும் குடிநீர் கட்டணங்களை உயர வாய்ப்புள்ளது. இத்திட்டம் நிறைவேற்றுவதற்காக இன்று ஊட்டியில் நடக்கும் நகராட்சி கூட்டத்தில் நகர் மன்ற உறுப்பினர்களின் அனுமதி கோரப்படுகிறது.

அனுமதி கிடைத்தவுடன் உள்ளாட்சித்துறை அமைச்சரிடம் பணிகளை துவக்குவது குறித்து அனுமதி கோரப்படும். இதனால் விரைவில் ஊட்டி மக்களுக்கு மூன்றாவது குடிநீர் திட்டம் உருவாக வாய்ப்புள்ளது.

 

சங்கரன்கோவில்: 10 ஆண்டுகளாக புதிய குடிநீர் இணைப்பு இல்லை

Print PDF

தினமணி 29.06.2010

சங்கரன்கோவில்: 10 ஆண்டுகளாக புதிய குடிநீர் இணைப்பு இல்லை

சங்கரன்கோவில், ஜூன் 28: திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவிலில் கடந்த 10 ஆண்டுகளாக புதிய குடிநீர் இணைப்பு வழங்கப்படவில்லை. ஏராளமானோர் மனு செய்தும் அவை கிடப்பில் போடப்பட்டுள்ளதால், பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர்.

சங்கரன்கோவில் ஊராட்சியாக இருந்து 1.4.1964-ல் நகராட்சியாக அறிவிக்கப்பட்டது. 1978-ல் இரண்டாம் நிலை நகராட்சியாகவும், 1998 முதல் கடந்த 12 ஆண்டுகளாக முதல்நிலை நகராட்சியாகவும் உள்ளது.

இங்கு 30 வார்டுகள் உள்ளன. 2001 கணக்கெடுப்பின்படி மக்கள்தொகை 55,606. இங்கு கோட்டமலையாறு, தாமிரபரணி, மானூர் கூட்டுக் குடிநீர் திட்டம் உள்ளிட்ட 3 திட்டங்கள் மூலம் தலா 20 லட்சம் லிட்டர் வீதம் நாளொன்றுக்கு 60 லட்சம் லிட்டர் தண்ணீர் பெறப்பட்டு, விநியோகிக்கப்பட வேண்டும்.

தாமிரபரணித் திட்டம் மூலம் பெறப்படும் தண்ணீரின் அளவு அரசியல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தற்போது வெகுவாகக் குறைந்து, ஒருசில லட்சம் லிட்டர் தண்ணீர் மட்டுமே வருகிறது. மொத்தத்தில் தினமும் சுமார் 45 லட்சம் லிட்டர் தண்ணீர் பெறப்பட்டு, 3 நாள்களுக்கு ஒருமுறை விநியோகம் செய்யப்படுகிறது.

நகரில் உள்ள 15,076 குடியிருப்புகளில் இதுவரை 6688 குடியிருப்புகளுக்கு மட்டுமே குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மீதி 8388 குடியிருப்புகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்படவில்லை. இவர்கள் ஏற்கெனவே இணைப்பு உள்ளவர்களிடம் மாதந்தோறும் குடிநீருக்குப் பணம் செலுத்தி, வீட்டின் உரிமையாளர் தண்ணீர் பிடித்து முடித்தபிறகு தண்ணீர் பிடித்துச் செல்கின்றனர். இந்த அவல நிலை பல ஆண்டுகளாகத் தொடர்கிறது.

இதனால் நகராட்சிக்கு வரவேண்டிய வருவாய் முழுவதும், ஏற்கெனவே இணைப்பு வைத்திருப்பவர்களுக்குப் போய்ச் சேருகிறது. ஆனால், இதுபற்றி நகராட்சி நிர்வாகம் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.

1998ஆம் ஆண்டு குடிநீர் இணைப்புக்கு ரூ.1000 வைப்புத்தொகையாக இருந்தபோது, 1500 பேர் குடிநீர் இணைப்பு கேட்டு மனு செய்திருந்தனர். இவர்களில் 500 பேருக்கு மட்டுமே இணைப்பு வழங்கப்பட்டதாம். 2005-ல் குடிநீர் இணைப்புக்கான வைப்புத்தொகை ரூ.3000 ஆகவும், 2007-ல் ரூ.9000 ஆகவும் உயர்த்தி அறிவிக்கப்பட்டது. அறிவிக்கப்பட்டதோடு சரி, யாருக்கும் குடிநீர் இணைப்பு கொடுக்கப்படவில்லை. 1992-ல் தாமிரபரணி திட்டம் வந்தபோது, அதற்கான செலவைத் திரும்பப் பெறும் வகையில் சங்கரன்கோவிலில் வீட்டுவரி 12 சதவீதம் உயர்த்தப்பட்டது.

தமிழ்நாடு முழுவதும் அரசு பொது வரி உயர்வை விதித்தபோது, அப்போதும் வீட்டுவரி உயர்த்தப்பட்டது. இதனால் இரட்டிப்பு வரியை செலுத்த வேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டனர். மற்ற நகராட்சிகளில் பாதி மானியம், பாதி கடன் என்கிற வகையில் குடிநீர்த் திட்டம் செயல்படுத்தப்பட்டது. ஆனால், சங்கரன்கோவிலில் மானூர் குடிநீர்த் திட்டம் முழுவதும் கடனாகப் பெற்று செயல்படுத்தப்பட்டது. இதனை திருப்பிச் செலுத்துவதற்காக குடிநீர் இணைப்புக்கான வைப்புத்தொகை ரூ.9000 என குடிநீர் வடிகால் வாரியம் நிர்ணயித்தது.

அருகில் உள்ள நகராட்சிகள் மற்றும் மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட மாநகராட்சிகளில் கூட அதிகபட்ச வைப்புத்தொகை ரூ.3000 முதல் ரூ.5000 வரைதான் உள்ளது. அதையே நிர்ணயிக்க வேண்டும் என்றும், ரூ.9000 வைப்புத்தொகை கூடாது என்றும் நகர்மன்றக் கூட்டத்தில் உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பான கோப்புகள் சென்னைக்கு அனுப்பப்பட்டு ஓராண்டாகியும் இன்றுவரை பதில்இல்லை. 3.8.2009 வரை குடிநீர் இணைப்பு கேட்டு 1636 பேர் விண்ணப்பித்துள்ளனர். அந்த மனுக்கள் இன்றும் நிலுவையில் உள்ளன. மேலும் பலர் குடிநீர் இணைப்பு கேட்டு விண்ணப்பித்தவாறு உள்ளனர்.

குடிநீர் இணைப்புகளுக்கு அந்தந்த நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள கட்டண விதிகளுக்கு உள்பட்டு எண்ணிக்கையில் எவ்விதக் கட்டுப்பாடும் இன்றி குடிநீர் இணைப்புகள் பெற விண்ணப்பிக்கும் அனைவருக்கும் குடிநீர்

இணைப்புகள் வழங்கப்பட வேண்டும் என, 2007-ல் அரசாணை மூலம் உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்பிறகும் சங்கரன்கோவில் மக்களுக்கு விடிவுகாலம் பிறக்கவில்லை.

குடிநீர் இணைப்புக்காக 10 ஆண்டுகளாக காத்திருக்கும் மக்களுக்கு புதிய குடிநீர் இணைப்பை உடனே வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் தற்போதைய எதிர்பார்ப்பு.

 

ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டம் 2ம் கட்ட பணி விரைவில் துவக்கம்

Print PDF

தினமலர் 29.06.2010

ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டம் 2ம் கட்ட பணி விரைவில் துவக்கம்

தர்மபுரி: ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தில் ரூ. 276 கோடியில் இரண்டாம் கட்ட பணிகள் விரைவில் துவங்கப்படுகிறது. தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்க திட்டமிட்டப்பட்ட ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட பணிக்கான முதல் கட்ட பணிகள் கடந்த பிப்ரவரியில் இருந்து துவங்கி நடந்து வருகிறது. ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட பணி ஐந்து தொகுப்பாக பிரிக்கப்பட்டு, முதல் கட்ட தொகுப்பு பணிகளுக்காக கூத்தப்பாடி பஞ்சாயத்து பகுதியில் தலைமை நீரேற்று நிலையம், பென்னாகரம் அடுத்த மடம் பகுதியில் நிலத்தடி நீர் சேமிப்பு தொட்டி அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இப்பணிகள் விரைவில் முடிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 276 கோடியில் இரண்டாம் கட்ட தொகுப்பு பணிகளுக்கள் துவங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இரண்டாம் கட்ட பணிகளில் மடம் கிராமத்தில் உள்ள பெரிய சமநிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து ஊத்தங்கரை வரை 2,106 கி.மீ., தூரம் பிரதான குழாய்கள் மற்றும் நீர் கடத்தும் குழாய்கள் பதிக்கபட உள்ளது. இக்குழாய்கள் மூலம் தர்மபுரி நகராட்சி, பென்னாகரம், நல்லம்பள்ளி, தர்மபுரி, மத்தூர், ஊத்தங்கரை ஆகிய ஐந்து யூனியனில் உள்ள 1,698 ஊரக குடியிருப்பு பகுதிகள் மற்றும் பென்னாகரம், ஊத்தங்கரை ஆகிய இரு டவுன் பஞ்சாயத்துக்கு தேவையான குடிநீர் கொண்டு செல்லப்படும். தொகுப்பு இரண்டு பணிகள் முடிந்த பின்னர் தொகுப்பு நான்கு பணிகள் 475 கோடி மதிப்பிலும், மூன்றாம் தொகுப்பு பணிகள் அதன் பின்னர் துவங்கப்படும்.

 


Page 206 of 390