Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

புளியங்குடி பகுதியில் ரூ.1 கோடியில் குடிநீர் திட்டம் நகராட்சி தலைவர் தகவல்

Print PDF

தினகரன் 17.06.2010

புளியங்குடி பகுதியில் ரூ.1 கோடியில் குடிநீர் திட்டம் நகராட்சி தலைவர் தகவல்

புளியங்குடி, ஜூன், 17: புளியங்குடி பகுதியில் குடிநீர் பற்றாக்குறையை போக்கிட ரூ.1 கோடி செலவில் வாலமலையாறு குடிநீர் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படுமென நகராட்சி தலைவர் டாக்டர் துரையப்பா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கலெக்டர் ஜெயராமனுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

புளியங்குடி நகராட்சி பகுதியில் குடிநீர் பற்றாக்குறையை கண்டித்து ஒரு கட்சி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டம் மற்றும் பொதுக்கூட்டத்தில் என்னையும், தொகுதி எம்எல்ஏ டாக்டர் சதன்திருமலைக்குமாரையும் அவதூறாக பேசியுள்ளனர்.

நகராட்சி தலைவர் என்ற முறையில் தமிழக முதன்மை செயலாளர் நிரஞ்சன்மார்டியைச் சந்தித்து அரசு நிதியாக ரூ.50 லட்சமும், தொகுதி எம்எல்ஏ நிதி ரூ.25 லட்சமும் மற்றும் நகராட்சி பொதுநிதியை சேர்த்து ரூ.1 கோடி செலவில் வாலமலையாறு குடிநீர் திட்டம் தயாரிக்கப்பட்டு இன்னும் விரைவில் குடிநீர் பற்றாக்குறைக்கு தீர்வு காண உள்ளோம்.

நகராட்சி பகுதியில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கிட ஆழ்துளை கிணறுடன் கூடிய மின்மோட்டார் பொருத்தப்பட்ட தொட்டி பல இடங்களில் அமைத்து பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கிட நடவடிக்கை எடுத்துள்ளோம். ஆனால் ஒரு கட்சியின் பொதுக்கூட்டம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் உண்மைக்கு புறம்பான செய்திகளை பரப்பி வருகின்றனர். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

 

குறுக்குதுறை தலைமை நீரேற்று நிலையத்தில் ரூ.3.25 கோடியில் "சான்ட் பில்டர் யூனிட்ஸ்'

Print PDF

தினமலர் 17.06.2010

குறுக்குதுறை தலைமை நீரேற்று நிலையத்தில் ரூ.3.25 கோடியில் "சான்ட் பில்டர் யூனிட்ஸ்'

திருநெல்வேலி : குறுக்குதுறை தலைமை நீரேற்று நிலையத்தில் 3.25 கோடியில் "ரேபிட் சான்ட் பில்டர் யூனிட்ஸ்' வசதி விரைவில் செய்யப்பட உள்ளது.

நெல்லை மாநகராட்சி பகுதிகளுக்கு குடிநீர் சப்ளை செய்யும் குறுக்குதுறை தலைமை நீரேற்று நிலையத்தில் நல்ல குடிநீருக்கான சுத்திகரிப்பு வடிகட்டி அமைப்பான் (ரேபிட் சான்ட் பில்டர் யூனிட்ஸ்) 3.25 கோடி மதிப்பீட்டில் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக நெல்லை அரசு இன்ஜினியரிங் கல்லூரி நிர்வாகத்தை கலந்தாலோசகராக நியமனம் செய்து மாநகராட்சியில் அனுமதி வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து உட்கட்டமைப்பு பற்றாக்குறையை ஈடுசெய்வதற்கான பங்களிப்பு நிதியின் கீழ் 3.25 கோடி மதிப்பில் செயல்படுத்த முதற்கட்டமாக 2.50 கோடி மானிய தொகையை நகராட்சி நிர்வாக இயக்குனர் ஒதுக்கீடு செய்துளார்.

இக்குடிநீர் பணியை நிறைவேற்றும் வகையில் மீதமுள்ள 75 லட்சம் தொகையை பங்களிப்பு நிதியின் கீழ் 2010-11ம் ஆண்டில் பெறப்படும் மானியத்தில் பணியை மேற்கொள்ளவும், அவ்வாறு மானியம் பெறப்படாத பட்சத்தில் மாநகராட்சி வருவாய் நிதியில் இருந்த செலவினம் மேற்கொள்ளவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வரும் 21ம் தேதி நடக்கும் மாநகராட்சி கூட்டத்தில் விவாதித்து தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

 

கவுண்டம்பாளையம்- வடவள்ளி குடிநீர் திட்டம்: துவக்கி வைத்தார் துணை முதல்வர்

Print PDF

தினமலர் 16.06.2010

கவுண்டம்பாளையம்- வடவள்ளி குடிநீர் திட்டம்: துவக்கி வைத்தார் துணை முதல்வர்

பெ.நா.பாளையம் : கவுண்டம்பாளையம் - வடவள்ளி கூட்டு குடிநீர் திட்டத்தை நேற்று துணை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். இத்திட்டத்தால் ஒரு லட்சத்து 18 ஆயிரம் பேர் பயன் பெறுவர்.

கவுண்டம்பாளையம் நகராட்சி, வடவள்ளி பேரூராட்சிக்கு சிறுவாணி மற்றும் பில்லூர் திட்டம் வாயிலாக குடிநீர் பெறப்பட்டு, வினியோகம் செய்யப்பட்டு வந்தது. நாள் ஒன்றுக்கு, நபர் ஒருவருக்கு 31 லிட்டர் குடிநீர் மட்டுமே வழங்கப்படுகிறது. இது போதுமானதாக இல்லை. இதனால் கவுண்டம்பாளையம்- வடவள்ளி கூட்டு குடிநீர் திட்டம் 31 கோடி ரூபாயில் தயாரிக்கப்பட்டது. இத்திட்டம் செயல்படுத்தப்பட்டதால் நபர் ஒருவருக்கு நாள் ஒன்றுக்கு 70 லிட்டர் குடிநீர் வழங்க முடியும். இத்திட்டத்தின்படி, காரமடை அருகே உள்ள நெல்லித்துறையில் தலைமை நீரேற்று நிலையத்தில் நீர்சேகரிப்பு கிணறு அமைக்கப்பட்டது. அங்கிருந்து பெறப்படும் நீர், செல்லப்பனூர் கிராமத்தில் உள்ள 11 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட சுத்திகரிப்பு நிலையம் வந்தடைகிறது. அங்கிருந்து வீரபாண்டியில் உள்ள 11 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர் தேக்க தொட்டி மற்றும் நீர் உந்து நிலையத்தை அடைகிறது. மீண்டும் அங்கிருந்து கவுண்டம்பாளையம் நகராட்சி அலுவலகம் முன் உள்ள 11 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்டத் தொட்டி மற்றும் நீர் உந்து நிலையத்தை அடைகிறது.

இங்கிருந்து கவுண்டம்பாளையம் நகராட்சிக்கு உட்பட்ட சேரன் நகர், எஸ்.பி.நகர், கவுண்டம்பாளையம், நடராஜ் நகர், அண்ணா நகர், அப்பாஸ் கார்டன், அருண் நகர் ஆகிய ஏழு இடங்களில் மேல்நிலைத் தொட்டிகளை அடைந்து, பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. இத்திட்டத்தால் கவுண்டம்பாளையம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் 5000 குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்படும். இத்திட்டத்தை கவுண்டம்பாளையம் நகராட்சி அலுவலகம் முன் உள்ள மைதானத்தில் துணை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். திட்ட செயல்பாடுகள் குறித்து அதிகாரிகள் விளக்கினர். பின், திட்டத்தின் பெயர் பலகை, குடிநீர் பைப், கவுண்டம்பாளையம் நகராட்சி அலுவலகத்துக்கான முதல் தள அலுவலகத்தை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், கோவை எம்.பி.நடராஜன், தொண்டாமுத்தூர் எம்.எல்.., கந்தசாமி, கலெக்டர் உமாநாத், தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மை செயலர் நிரஞ்சன் மார்டி, குடிநீர் வடிகால் வாரிய மேலான்மை இயக்குனர் சுகன்தீப்சிங்பேடி, கவுண்டம்பாளையம் நகராட்சி தலைவர் சுந்தரம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

 


Page 212 of 390