Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

புதிய குடிநீர் இணைப்பு பெறும் எளிய நடைமுறை இயக்குனர் உத்தரவை கண்டுகொள்ளாத நகராட்சிகள்

Print PDF

தினமலர் 15.06.2010

புதிய குடிநீர் இணைப்பு பெறும் எளிய நடைமுறை இயக்குனர் உத்தரவை கண்டுகொள்ளாத நகராட்சிகள்

சிவகாசி : புதிய குடிநீர் இணைப்பு பெற எளிய நடைமுறைகளை வகுத்து அதை பின்பற்ற நகராட்சிகளின் நிர்வாக இயக்குனரின் உத்தரவை பல நகராட்சிகள் கண்டுகொள்வதில்லை. இதனால் குடிநீர் இணைப்பு பெறுவதில் மக்களின் சிரமம் தீரவில்லை. மாநகராட்சி, நகராட்சிகளில் வீட்டு குடிநீர் இணைப்பு பெற விரும்பினால் சீனியாரிட்டி, டெபாசிட், ரோடு கட்டிங், ஆபீஸ் செலவு என பிரிவு வாரியாக கேட்கும் தொகை செலவிட வேண்டும். நகராட்சி அடையாளம் காட்டும் பிளம்பர் மூலமே குழாய் இணைப்பு வேலை செய்ய வேண்டும். இவர் தரமில்லாத பொருட்களுக்கு கூடுதல் விலை நிர்ணயம் செய்தாலும், வீட்டு உரிமையாளர் கேள்வி கேட்காமல் பணத்தை எண்ணிக்கொடுக்க வேண்டும். இந்த நிபந்தனைகளுக்கு உட்பட்டு 10,000 முதல் 20,000 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்பவர்கள் தான் குடிநீர் இணைப்பு பெறமுடியும் என்ற நிலைமை இருந்தது. இச்சூழ்நிலையில் நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர், குடிநீர் இணைப்பு பெறும் நடைமுறைகளை எளிமையாக்கி 2009 செப்., 21ல் உத்தரவு பிறப்பித்தார்.

அதில் மாநகராட்சி, நகராட்சிகளில் குடிநீர் இணைப்பு கோரி, விண்ணப்பித்த ஏழு நாட்களுக்குள்ளும், தொழில் நுட்ப காரணங்களால் சிரமம் இருந்தால், ஒரு மாதத்திற்குள் இணைப்பு வழங்க வேண்டும். இணைப்பு வழங்குவதில் மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியான புதிய வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

புதிய வழிமுறைகள்:

புதிய குடிநீர் இணைப்புக்கான படிவம், தகவல் மையத்தில் இலவசமாக வழங்கவும், இப்படிவத்தில் டெபாசிட் கட்டணத்தில் வீட்டு பயன்பாடு, வீட்டு பயன்பாடு அல்லாதவை, சொத்துவரி நிலுவைத் தொகை, நகராட்சிக்கு செலுத்தும் கட்டணங்களில் (ரோடு கட்டிங்) 30 மீட்டர் நீளத்திற்கு கருங்கல் ஜல்லி ரோடாக இருந்தால் 1,050 ரூபாய், தார் ரோட்டிற்கு 2,250, சிமென்ட் ரோட்டிற்கு 2,600, 30 மீட்டர் முதல் 90 மீட்டர் நீளம் வரை கருங்கல் ஜல்லி ரோட்டிற்கு 1,650, தார்ரோட்டிற்கு 2,850, சிமென்ட் ரோட்டிற்கு 3200 ரூபாய் என நகராட்சி துணை விதிப்படி மேற்பார்வை கட்டணம், நகராட்சிக்கு செலுத்த வேண்டிய மொத்த தொகை குறிப்பிட வேண்டும். மொத்த செலவு விபரத்தை நகராட்சி தகவல் பலகை, வசூல் மையத்தில் விளம்பரம் செய்ய வேண்டும்.

 விண்ணப்பத்தின் சீனியாரிட்டியை உடனே இணையதளத்தில் வெளியிட வேண்டும். விண்ணப்பதாரர் புதிய குடிநீர் இணைப்பிற்கு தேவையான குழாய்களை பதித்து விட்டு, மாநகராட்சி, நகராட்சி பொறியாளரிடம் எழுத்து மூலம் தெரிவிக்க வேண்டும்.

விண்ணப்பதாரரிடம் இருந்து முறையான தகவல் பெற்றவுடன், சம்மந்தப்பட்ட அலுவலர்கள் சரிபார்த்து, புதிய குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும். இந்நடைமுறையால் அதிகாரிகளை சந்திக்கும் நேரம் குறைந்து தவறு நடக்க வாய்ப்பு ஏற்படாது என தெரிவித்து இருந்தார். உத்தரவு பிறப்பித்து பத்து மாதங்களாகியும், நகராட்சிகள் நிர்வாக இயக்குனரின் உத்தரவை பல நகராட்சிகள் பின்பற்றவில்லை. குடிநீர் இணைப்பிற்கான செலவின விபரங்களை குறிப்பிட்டு தகவல் மையத்தில் விளம்பரம் செய்யவில்லை. வழக்கம் போல் நகராட்சி இன்ஜினியரிங் பிரிவில் அடையாளம் காட்டும் பிளம்பர் மூலமாக தான் குழாய் இணைப்பு வேலை நடக்கிறது. பிளம்பர் ஆபீஸ் செலவு, பொருட்கள் செலவு என கேட்கும் தொகையை கொடுக்க வேண்டியுள்ளது. உயர் அதிகாரிகள் உத்தரவுகள் காற்றில் தான் பறக்கின்றன.

நடைமுறைப்படுத்த வேண்டிய உள்ளூர் அதிகாரிகள் சிலரின் அலட்சியத்தால் மக்கள் குடிநீர் இணைப்பு பெறுவதில் சிரமம் தொடர்கிறது. புதிய மின் இணைப்பிற்கு வீட்டு உரிமையாளரே எலக்ட்ரீசினை வைத்து வயரிங் செய்துவிட்டு, இணைப்புக்கு மட்டும் மின் வாரிய அதிகாரிகளை நாடும் நடைமுறையை போல் புதிய குடிநீர் இணைப்பு வழங்குவதிலும் பின்பற்ற வேண்டும்.

 

வண்டியூர், மேலமடையில் மாநகராட்சி குடிநீர் ஒரு குடம் 8 ரூபாய் !

Print PDF

தினகரன் 14.06.2010

வண்டியூர், மேலமடையில் மாநகராட்சி குடிநீர் ஒரு குடம் 8 ரூபாய் !

மதுரை, ஜூன் 14: வண்டியூர், மேலமடை பஞ்சாயத்து பகுதிகளில், மாநகராட்சி குடிநீர் குடம் ஒன்று ரூ.8க்கு விற்கப்படுகிறது. இதனால் மக்கள் பெரிதும் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர்.

மதுரை மாநகராட்சி எல்லையை ஒட்டியுள்ளது வண்டியூர், மேலமடை பஞ்சாயத்துக்கள். சதாசிவம் நகர், தாசில்தார் நகர், பிகேஎம் நகர், அன்புநகர், கோமதிபுரம், வண்டியூர், யாகப்பா நகர், கற்பக விநாயகர் நகர், பாலாஜி நகர், குறிஞ்சி நகர், ஸ்டெல்லா நகர், அங்கையற்கண்ணி நகர் என வண்டியூர், மேலமடை பஞ்சாயத்து பரந்து விரிந்துள்ளது.

டாக்டர்கள், இன்ஜினியர்கள், வக்கீல்கள் முதல் ஏழை, நடுத்தர மக்கள் என ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கும், இவ்விரு பஞ்சாயத்துகளுக்கும், சக்கிமங்கலத்தில் 2 ஆழ்துளை கிணறுகள் மூலம் தனித்தனியாக நீர்த்தேக்க தொட்டி மூலம் தெருக்குழாய்களில் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. அந்த குடிநீர் உவர்ப்பு தன்மையுடன் இருப்பதால், வீட்டு புழக்கத்திற்கு பயன்படுத்தி வருகின்றனர். தனியார் லாரிகள் மூலம் ஒரு குடம் தண்ணீர் ரூ.2க்கு விற்கின்றனர். அந்த தண்ணீரும் சுமாராகத்தான் உள்ளது.

இதனால், குடிநீருக்கு மாநகராட்சி மூலம் சப்ளை செய்யப்படும் தண்ணீரைத்தான் மக்கள் நம்பி உள்ளனர். அந்த தண்ணீரை அதிக விலைக்கு வாங்குகின்றனர். மக்கள் தேவையை அறிந்து அண்ணாநகரில் இருந்து குடிநீரை குடங்கள், கேன்களில் பிடித்து டிரை சைக்கிள், டெம்போ வேன்களில் கொண்டு வந்து, இவ்விரு பஞ்சாயத்து பகுதிகளில் விற்கின்றனர். அவ்வாறு விற்கப்படும் குடிநீர் 18 லிட்டர் கொண்ட குடம் ஒன்று ரூ.8க்கும், 20 லிட்டர் கொண்ட கேன் ரூ.10க்கும் விற்கப்படுகிறது. அதுவும் முன்கூட்டியே சொல்லி வைத்தால்தான் கிடைக்கும். இந்த குடிநீரையும் நிரந்தர வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே கொடுக்கின்றனர்.

இது ஒருபுறம் இருக்க, ஓரளவு வசதி படைத்தவர்கள் குடிப்பதற்கு மினரல் வாட்டரை பயன்படுத்துகின்றனர். இதனால் இப்பகுதியில் மினரல் வாட்டர் வியாபாரமும் சூடுபிடித்துள்ளது. மினரல் வாட்டர் ஒரு கேன் ரூ.25க்கு விற்கப்படுகிறது. பல கம்பெனி பெயர்களில் மினரல் வாட்டர் கிடைக்கிறது. போலி மினரல் வாட்டர் வருகையும் அதிகரித்துள்ளது.

எனவே, வண்டியூர், மேலமடை பஞ்சாயத்துகளில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யவும், போலி மினரல் வாட்டரை தடுக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்களின் தற்போதைய கோரிக்கை.

 

ரூ.293 கோடியில் தனிக்குடிநீர் திட்டம் ஒரு நபருக்கு நாள்தோறும் 135லிட்டர் குடிநீர் விநியோகம் வேளாண் அமைச்சர் தகவல்

Print PDF

தினகரன் 14.06.2010

ரூ.293 கோடியில் தனிக்குடிநீர் திட்டம் ஒரு நபருக்கு நாள்தோறும் 135லிட்டர் குடிநீர் விநியோகம் வேளாண் அமைச்சர் தகவல்

சேலம், ஜூன் 14: சேலம் மாநகராட்சி சின்னதிருப்பதியில் இலவச கலர் டிவி மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.

விழாவிற்கு மாவட்ட ஆட்சியர்(பொ) கலையரசி தலைமை வகித்தார். வேளாண் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் கலந்து கொண்டு 1647 பேருக்கு ரூ.38.45 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசியதாவது:

சின்னதிருப்பதியில் 4,264 பேருக்கு இலவச கலர் டி.வி.கள் வழங்கப்பட்டுள்ளது. சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 3 பேருக்கு ரூ.10 ஆயிரம் வழங்கப்படுகிறது. மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் ரூ.6.45 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட வகுப்பறைகள், ரூ.3 லட்சம் மதிப்பில் சுற்றுச்சுவர் ஆகியன திறந்து வைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 1 கோடியே 52 லட்சத்து 80 ஆயிரம் பேருக்கு இலவச கலர் டிவிக்கள் வழங்கப்பட்டுள்ளது. குடும்ப அட்டை இல்லாத குடும்பங்களுக்கும் வழங்கப்படுகிறது. இன்னும் 44 லட்சத்து 63 ஆயிரத்து 428 குடும்பங்களுக்கு இந்த ஆண்டு டிசம்பருக்குள் வழங்கப்பட்டு விடும்.

சேலம் மாநகராட்சியில் ரூ.188.48 கோடியில் பாதாள சாக்கடை திட்டம் டெண்டர் விடப்பட்டு பணிகள் தொடங்க சர்வே செய்யப்பட்டு வருகிறது. திடக்கழிவு மேலாண்மை திட்டம் ரூ.20 கோடியில் பணிகள் நடைபெற்று வருகிறது. சேலம் மாநகராட்சி பகுதிக்கு மட்டும் ரூ.293 கோடியில் தனிக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டம் செயல்படுத் தப்பட்டதும் மாநகராட்சி பகுதியில் உள்ள ஒவ்வொருவருக்கும் தினசரி 135 லிட்டர் காவிரி குடிநீர் கிடைக்கும். இவ்வாறு வேளாண் அமைச்சர் பேசினார்.

நிகழ்ச்சியில் மேயர் ரேகாபிரியதர்ஷினி, ஆணையர் பழனிசாமி, வருவாய் கோட்டாட்சியர் குழந்தைவேலு, தனித்துணைஆட்சியர் மோகனராஜ், மண்டலக்குழுத்தலைவர் நடேசன், வட்டாட்சியர் சித்ரா, கவுன்சிலர் சாரதாதேவி, வட்டாட்சியர் மணிமாலா ஆகியோர் கலந்து கொண்டனர்.

 


Page 215 of 390