Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

குடிநீர் வாரியம் அதிரடி முடிவு ஒரு பிளாட்டுக்கு ஒரு இணைப்புத்தான்

Print PDF

தினகரன் 20.05.2010

குடிநீர் வாரியம் அதிரடி முடிவு ஒரு பிளாட்டுக்கு ஒரு இணைப்புத்தான்

புதுடெல்லி, மே 20: நாளுக்குள் நாள் குடிநீர் தேவை அதிகரித்து வரும் நிலையில், அதை சமாளிக்கும் வகையில் இனி ஒரு அடுக்குமாடி குடியிருப்புக்கு ஒரு குடிநீர் இணைப்பு மட்டுமே தருவது என்று முடிவு செய்துள்ளது.

டெல்லியில் குடிநீர் தேவை தினமும் அதிகரித்து வருகிறது. இப்போதே குடிநீர் தேவை, இருப்பை விட அதிகமாக உள்ளது. நாளொன்றுக்கு 1000 மில்லியன் காலன் குடிநீர் தேவைப்படுகிறது. ஆனால், தன்னுடைய எல்லா ஆதார ங்களையும் பயன்படுத்தி குடிநீர் வாரியத்தால் 870 மில்லியன் காலன் நீரை மட்டுமே வாரியத்தால் சப்ளை செய்ய முடிகிறது.

இப்போதுள்ள தேவை யை முனக் கால்வாய் மூலம் வரும் நீரை பெற்று சமாளிக்கலாம் என்று குடிநீர் வாரியம் நம்பி இருந்தது. இதற்காக அரியானாவில் இருந்து டெல்லி வரையில் ரூ.550 கோடி செலவில் கால்வாயின் இருபுறமும் கான்கிரீட் அமைத்தது. ஆனால், டெல்லிக்கு உரிய பங்கை தராமல் அரியானால அரசு இழுத்தடித்து வருகிறது. இதனால் இந்த குடிநீர் ஆதாரமும் பிரச்னையில் உள்ளது.

இந்நிலையில், டெல்லி மேம்பாட்டு ஆணையம் இதைப்பற்றி எந்த கவலையும் இல்லாமல் அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டி வருவது குடிநீர் வாரியத்துக்கு கடும் எரிச்சலை கிளப்பியுள்ளது. துவர்காவில் துணை நகரத்தை ஆணையம் கட்டி வருகிறது. இதற்கான குடிநீர் ஆதாரத்தை பொறுப்பேற்று கொள்வதற்கு இந்த இரு அரசு அமைப்புகளுமே முன்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

குடிநீர் ஆதாரம் இல்லாத நிலையில், குடிநீர் இணைப்புகளை கட்டுப்படுத்துவது என்று வாரியம் முடிவு செய்துள்ளது. இதுகுறித்து அதன் தலைவர் ரமேஷ் நெகி கூறியதாவது:

அடுக்குமாடி குடியிருப்பில் ஒவ்வொரு வீட்டுக்கும் தனித்தனியாக குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு வந்தது.

ஆனால், இப்போது குடிநீர் தேவை நாளுக்கு நாள் உயர்ந்து வருவதால் அதை கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பில் வாரியம் உள்ளது. இதனால் இனிமேல் 4 மாடிகள் கொண்ட ஒரு அடுக்குமாடி குடியிருப்புக்கு ஒரு குடிநீர் இணைப்பு மட்டுமே வழங்கப்படும். பொதுமக்களும் குடிநீரை சிக்கனமாக உபயோகிக்க முன்வரவேண்டும்.

டெல்லி மேம்பாட்டு நிறுவனம் சமூக பொறுப்பு இல்லாமல் தனியார் கட்டிட நிறுவனங்களை போன்று அடுக்குமாடி குடியிருப்புகளை உருவாக்கி வருகிறது.

குடிநீர் ஆதாரம் பற்றி ஆணையம் கவலைப்பட்டதாக தெரியவில்லை. இனியும் தொடர்ந்து இதேநிலையை ஆணையம் தொடர்ந்தால், அதன்பின் எல்லா குடிநீர் திட்டத்துக்கும் உரிய செலவை ஆணையத்துடன் சேர்ந்து பகிர்ந்து கொள்வது குறித்து குடிநீர் வாரியம் முடிவெடுக்க வேண்டியிருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

 

புதிய குடிநீர்த் தொட்டிகள் திறப்பு

Print PDF

தினமணி      18.05.2010

புதிய குடிநீர்த் தொட்டிகள் திறப்பு

கரூர், மே 18: தாந்தோன்றிமலை நகராட்சியில் ரூ.3 லட்சத்தில் புதிய குடிநீர் தொட்டிகள் அண்மையில் திறக்கப்பட்டன.

தாந்தோன்றிமலை நகராட்சிப் பகுதியில் முழுமையான குடிநீர் வழங்குவதற்காக வார்டுகளில் பிளாஸ்டிக் தொட்டிகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், 11 -வது வார்டு பகுதியில் கரூர் சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து இரண்டு தொட்டிகள் அமைப்பதற்காக தலா ரூ.1.5 லட்சம் வீதம் ரூ.3 லட்சம் ஒதுக்கீடு செய்தார் வி. செந்தில்பாலாஜி எம்.எல்..

இதையடுத்து, 11 -வது வார்டில் புதிய குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டன. இதன் திறப்பு விழா விழா அண்மையில் நடைபெற்றது. விழாவுக்கு நகர்மன்றத் தலைவர் ஜெ.ரேவதி தலைமை வகித்தார்.

சட்டப்பேரவை உறுப்பினர் வி.செந்தில்பாலாஜி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று புதிய தொட்டிகளை திறந்து வைத்தார். அப்போது, இதே பகுதியில் மேலும் ஒரு குடிநீர் தொட்டி அமைக்கப்பட வேண்டுமென பொதுமக்கள் சார்பில் வேண்டுகோள் விடப்பட்டது.

இதையடுத்து மேலும் ஒரு புதிய குடிநீர்த் தொட்டி அமைக்க தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.1.5 லட்சம் ஒதுக்கப்படும் என்றார் அவர். இந்நிகழ்ச்சியில், நகராட்சி துணைத் தலைவர் வே. வசந்தாமணி, நகர்மன்ற உறுப்பினர்கள் இ. கண்ணகி, கோடங்கிபட்டி பழனிச்சாமி, அதிமுக நகரச்செயலர் பி. சரவணன், இளைஞர் பாசறை மாவட்டத் தலைவர் எஸ். சுந்தர்ஜி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

குடிநீரைப் பரிசோதித்து விநியோகிக்க அறிவுரை

Print PDF

தினமணி     18.05.2010

குடிநீரைப் பரிசோதித்து விநியோகிக்க அறிவுரை

தேனி, மே 18: உள்ளாட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வாரியம் பொதுமக்களுக்கு விநியோகிக்கும் குடிநீரின் தன்மையை தினமும் பரிசோதனை செய்ய வேண்டும் என்று பொது சுகாதாரப் பணிகள் இயக்குநர் பொற்கைப்பாண்டியன் கூறினார்.

தேனி மாவட்டத்தில் உத்தமபாளையம், சின்னமனூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த மே 11-ம் தேதி முதல் பொதுமக்கள் வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நோய்ப் பாதிப்பால் இதுவரை 4 பேர் இறந்துள்ளனர்.

இப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் நோய் தடுப்பு நடவடிக்கைகள், மருத்துவ முகாம்கள், பாதுகாக்கப்பட்ட குடிநீர் விநியோகம் செய்யும் பணிகள் ஆகியவற்றை பொது சுகாதாரப் பணிகள் இயக்குநர், கொள்ளை நோய் தடுப்புத் துறை இணை இயக்குநர் ஜெயக்குமார், விருதுநகர் மாவட்ட பொது சுகாதரத் துணை இயக்குநர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனர்.

பின்பு, தேனியில் மாவட்ட ஆட்சியர் பூ.முத்துவீரன் தலைமையில் உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்கள், பணியாளர்கள், வருவாய்த் துறையினர், குடிநீர் வாரிய அலுவலர்கள் ஆகியோர் பஙகேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் பொது சுகாதாரப் பணிகள் இயக்குநர் பேசியதாவது:

வயிற்றுப்போக்கு நோயினால் பாதிக்கப்பட்டு தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, உத்தமபாளையம், சின்னமனூர், போடி, கம்பம் அரசு மருத்துமனை ஆகியவற்றில் இதுவரை 627 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர். இவர்களில் 150 பேர் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள உத்தமபாளையம் பகுதியில் 4 மருத்துவக் குழுவினர், சின்னமனூரில் 13 குழுவினர், ஒரு நடமாடும் மருத்துவக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

குடிநீராதாரங்கள் மாசுபட்டதாலும், குடிநீரை முறையாக குளோரினேசன் செய்து விநியோகம் செய்யாததாலும், திறந்த வெளிக் கழிப்பிடங்களாலும் பொதுமக்களுக்கு வயிற்றுப்போக்கு நோய் ஏற்பட்டுள்ளதாகக் கருதப்படுகிறது.

நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ள பகுதிகளில் 15 இடங்களில் குடிநீர் மாதிரிகளை சேகரித்து பரிசோதனை செய்ததில், தரம் மற்றும் அளவு குறைவாக குளோரின் கலந்திருப்பது தெரியவந்துள்ளது.

உள்ளாட்சி நிர்வாகங்கள் மற்றும் குடிநீர் வாரியப் பணியாளர்கள் குடிநீரை முறையாக நிர்ணயித்துள்ள அளவு குளோரினேசன் செய்து விநியோகம் செய்ய வேண்டும். ஆயிரம் லிட்டர் நீருக்கு 4 கிராம் வீதம் குளோரின் கலக்க வேண்டும். வீடு மற்றும் கடைகளில் பயன்படுத்தும் குடிநீரில் 20 லிட்டருக்கு ஒரு குளோரின் மாத்திரை கலக்கலாம்.

கிராம சுகாதாரக் குழுக்களுக்கு வழங்கப்பட்டுள்ள நிதியை குளோரின் வாங்குதல் உள்ளிட்ட வயிற்றுப் போக்கு நோய் தடுப்புப் பணிகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். குளோரினை குடிநீர்த் தொட்டியில் நேரடியாக கொட்டாமல், நீரில் கரைத்து தெளிந்த நீரை சுண்ணாம்பு நீக்கி தொட்டியில் ஊற்ற வேண்டும்.

குடிநீரின் தன்மை மற்றும் குளோரின் அளவு ஆகியவற்றைப் பரிசோதித்து விநியோகம் செய்ய அரசு, உள்ளாட்சி அமைப்புகளுக்கு களர்நீர் பரிசோதனைப் பெட்டிகள் வழங்கியுள்ளது. இதனைப் பயன்படுத்தி தினமும் குடிநீரைப் பரிசோதித்து விநியோகம் செய்ய வேண்டும். வீட்டில் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் விநியோகம் செய்யப்படும் குடிநீரைப் பொதுமக்கள் காய்ச்சி ஆற வைத்துப் பருக வேண்டும் என்றார் பொற்க்கைப்பாண்டியன்.

 


Page 236 of 390