Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

ஆரணியில் வறட்சிக் கால குடிநீர்த் திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு

Print PDF

தினமணி 06.05.2010

ஆரணியில் வறட்சிக் கால குடிநீர்த் திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு

ஆரணி, மே 5: ஆரணியில் வறட்சிக் கால குடிநீர்த் திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் மு.ராஜேந்திரன் கூறினார்.

ஆரணி வட்டாட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை ஆண்டாய்வு நடைபெற்றது. இதில் பங்கேற்ற அவர் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது:

வறட்சிக் கால குடிநீர்த் திட்டத்துக்கு திருவண்ணாமலை மாவட்டத்துக்கு ரூ.2 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் ரூ.4 கோடி ஒதுக்கீடு செய்யுமாறு அரசிடம் கேட்கப்பட்டுள்ளது.

வளர்ச்சிப் பணிகளுக்காக ரூ.18 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இப்பணத்தில் சாலை வசதி, குடிநீர் வசதி, தொகுப்பு வீடுகள் கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சிப்பணிகள் செய்யப்பட உள்ளது. இம்மாவட்டத்தில் 5 ஆயிரம் தொகுப்பு வீடுகள் கட்டப்படவுள்ளது.

கலைஞர் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் இதுவரை 850 கிராமங்களில் ஒரு லட்சத்து 24 ஆயிரம் குடிசை வீடுகள் கணக்கிடப்பட்டுள்ளது. இதில் தேர்வு செய்யப்பட்ட குடிசைகளுக்கு மாடி வீடு கட்டித்தரப்படும். ஆரணியில் விளையாட்டுத் திடல் அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்படும் என்றார் அவர்.

கோட்டாட்சியர் சாந்தகுமாரி, வட்டாட்சியர்கள் கச்சபாளையம், ராமலிங்கம், வட்ட வழங்கல் அலுவலர் தேவதாஸ், இடர்ப்பாடு நிவாரண வட்டாட்சியர் மனோகரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

 

ஒகேனக்கல் பிரச்னை அதிகாரிகள் நிலையில் பேச்சுவார்த்தை

Print PDF

தினமணி 06.05.2010

ஒகேனக்கல் பிரச்னை அதிகாரிகள் நிலையில் பேச்சுவார்த்தை

பெங்களூர், மே 5: ஒகேனக்கல் குடிநீர்த் திட்டம் தொடர்பாக தமிழக அரசு தலைமைச் செயலாளருடன் கர்நாடக அரசு தலைமைச் செயலாளர் விரைவில் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று முதல்வர் எடியூரப்பா தெரிவித்தார்.

அவர் பெங்களூரில் நிருபர்களிடம் புதன்கிழமை கூறியது: கர்நாடகத்தில் சிவனசமுத்திரம் நீர் வீழ்ச்சியில் மின் உற்பத்தி திட்டத்தைத் துவக்க வேண்டும் என்று கர்நாடகம் தீர்மானித்துள்ளது.

ஆனால் இத்திட்டத்துக்கு தமிழக அரசு எதிர்ப்புத் தெரிவித்து வருவதால் நீண்ட காலமாக அத்திட்டம் கிடப்பில் உள்ளது. இந்நிலையில் அத்திட்டத்தை துவக்க இப்போது கர்நாடகம் ஆலோசித்து வருகிறது.

இந்நிலையில்தான் ஒகேனக்கலில் தமிழக அரசு குடிநீர்த் திட்டத்தை துவக்கியுள்ளது. இரு மாநிலங்களிடையே இப்போது உள்ள நல்லுறவு தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்பதே கர்நாடகத்தின் விருப்பமாகும். எனவே, இவ்விரு திட்டங்கள் தொடர்பாக முதல்கட்டமாக அதிகாரிகள் நிலையில் பேச்சுவார்த்தை நடத்தப்படும். தற்போது தமிழக சட்டப் பேரவைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. அக் கூட்டம் முடிவடைந்ததும், தமிழக அரசு தலைமைச் செயலாளருடன் கர்நாடக அரசு தலைமைச் செயலாளர் எஸ்.வி. ரங்கநாத் பேச்சுவார்த்தை நடத்துவார்.

பிரதமருடன் எம்.பி.க்கள் சந்திப்பு: இதற்கிடையே ஒகேனக்கலில் தமிழக அரசு மேற்கொண்டுவரும் குடிநீர்த் திட்டத்தில் உள்ள பிரச்னைகள் குறித்து பிரதமர் மன்மோகன் சிங்கின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. புதன்கிழமை தில்லியில்

பிரதமர் மன்மோகன் சிங்கை கர்நாடக பாஜக எம்பிக்கள் அனந்தகுமார் தலைமையில் பிரதமரைச் சந்தித்துப் பேசியுள்ளனர். அப்போது ஒகேனக்கலில் சர்ச்சைக்குரிய இடத்தில் தமிழக அரசு குடிநீர்த் திட்டத்தை துவக்கியுள்ளது குறித்து பிரதமரின் கவனத்துக்குக் கொண்டுவந்துள்ளனர்.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் விவாதித்து நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் உறுதி அளித்துள்ளார். எதையும் அவசரப்பட்டு செய்துவிட முடியாது. இதனால் ஒவ்வொரு நடவடிக்கையாக கர்நாடகம் எடுத்து வருகிறது என்றார்.

 

குடிநீர் விநியோகம் செய்ய மறுத்தால் லாரிகள் பறிமுதல்:

Print PDF

தினமணி 05.05.2010

குடிநீர் விநியோகம் செய்ய மறுத்தால் லாரிகள் பறிமுதல்: அமைச்சர்

பெங்களூர், மே 4: பெங்களூர் நகரில் தண்ணீர் பற்றாக்குறையைத் தீர்க்க குடிநீர் வாரியத்துடன் ஒத்துழைப்பு அளிக்காத தனியார் தண்ணீர் லாரிகள் பறிமுதல்செய்யப்படும் என்று நகர குடிநீர் விநியோகத் துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் கட்டா சுப்பிரமணிய நாயுடு தெரிவித்தார்.

செவ்வாய்க்கிழமை காலை முதல்வர் எடியூரப்பாவுடன் லால்பாக் பூங்காவை பார்வையிட்ட அமைச்சர் கட்டா சுப்பிரமணிய நாயுடு நிருபர்களிடம் கூறியது:

நகருடன் புதிதாக இணைக்கப்பட்டுள்ள பகுதிகளில் தண்ணீர் பற்றாக்குறை அதிகமாக உள்ளது. இதனால் லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.

இதற்காக தேவையான அளவு லாரிகளை குடிநீர் வாரியம் வாடகைக்கு அமர்த்தியுள்ளது. ஒரு நாளைக்கு 5 முறை தண்ணீர் எடுத்துச் சென்று விநியோகிக்க வேண்டும்.

இதற்காக ஒருநாளைக்கு ரூ.1600 வாடகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த லாரிகளுக்கு தண்ணீரை குடிநீர் வாரியம் சப்ளை செய்யும். லாரி டிரைவர்கள் தண்ணீரை வாரியம் குறிப்பிடும் பகுதிகளுக்கு எடுத்துச் சென்று விநியோகிக்க வேண்டும்.

இதற்கு மறுப்புத் தெரிவிப்பது, அதிக கட்டணம் கேட்பது சரியானது அல்ல. மக்களின் தண்ணீர் பிரச்னை இது. இதில் வாரியத்துடன் தனியார் லாரி உரிமையாளர்கள் ஒத்துழைக்க வேண்டும். இந்த வேண்டுகோளை மீறி தனியார் லாரிகள் தண்ணீர் விநியோகம் செய்ய மறுத்தால் அந்த லாரிகள் பறிமுதல் செய்யப்படும்.

இதுதொடர்பாக குடிநீர் வாரிய அதிகாரிகளுக்கு கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நகரின் எல்லா பகுதிகளுக்கும் குடிநீர் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

மேலும் தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்தவும், சேமிக்கவும் சில நடவடிக்கைகளை எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. பெங்களூர் நகரில் பல்வேறு பகுதிகளில் நீரூற்றுகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றை மூடினால் 10 சதவிகித தண்ணீர் மிச்சமாகும்.

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் மழை காலத்தில் ஏராளமான தண்ணீர் காட்டாறாக பாய்ந்து ஓடி வீணாக கடலில் கலக்கிறது. இந்த தண்ணீரை பெங்களூர் நகருக்குத் திருப்பம் திட்டம் உள்ளது.

மேலும் நகரில் ஆண்டுக்கு 70 நாட்கள் மழை பெய்கிறது. இவ்வாறு பெய்யும் மழை நீரை சேமித்தாலே 10 டிஎம்சி தண்ணீர் கிடைக்கும். இதற்காக நகரின் 4 புறங்களிலும் மழை நீர் சேகரிப்புத் திட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு சேமிக்கப்படும் நீரை சுத்தப்படுத்தி பயன்படுத்த முடியும். இதுவெல்லாம் திட்டமிட்டபடி நடந்தால் அடுத்த சில ஆண்டுகளில் பெங்களூர் நகரின் குடிநீர் பற்றாக்குறை நிரந்தரமாகத் தீரும்.

24 மணி நேர குடிநீர்: நகரில் உள்ள 10 வார்டுகளுக்கு 24 மணி நேர குடிநீர் விநியோகிக்கும் திட்டத்தை அரசு அமல்படுத்த உள்ளது.

இந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதிக்குள் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுவிடும். நகரில் சேதமடைந்த கழிவுநீர் குழாய்களை மாற்றி புதிய குழாய்கள் அமைக்கப்பட்டு வருகிறது என்றார் அவர்.

Last Updated on Wednesday, 05 May 2010 10:34
 


Page 242 of 390