Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

தென்காசிக்கு சீரான குடிநீர் வினியோகம்:நகராட்சி கவுன்சிலர் வலியுறுத்தல்

Print PDF

தினமலர் 04.05.2010

தென்காசிக்கு சீரான குடிநீர் வினியோகம்:நகராட்சி கவுன்சிலர் வலியுறுத்தல்

தென்காசி:'தென்காசி நகராட்சி பகுதிக்கு தாமிரபரணி குடிநீர் சீராக வினியோகம் செய்ய வேண்டும்' என நகராட்சி தி.மு..கவுன்சிலர் ராமராஜ் கோரிக்கை விடுத்துள்ளார்.இதுகுறித்து அவர் தென்காசி எம்.எல்..கருப்பசாமி பாண்டியனிடம் கொடுத்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:'தென்காசி நகராட்சிக்குட்பட்ட அனைத்து வார்டு பகுதி மக்களுக்கும் தற்போது 5 நாட்களுக்கு ஒருமுறை தான் தாமிரபரணி குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. தென்காசிக்கு தாமிரபரணி குடிநீர் வழங்குவதற்காக ஊர்க்காடு, மன்னார்கோவில், திருமலையப்பபுரம், மாதாபுரம் பகுதிகளில் நீரேற்று நிலையங்கள் உள்ளது. இங்கிருந்து தென்காசி நீரேற்று நிலையத்திற்கு வந்தடையும் மெயின் குடிநீர் குழாய் உடைந்து வயல் பகுதிக்குள் தண்ணீர் விரையமாக செல்கிறது.இதனை சரி செய்து தென்காசி நகராட்சி பகுதி மக்களுக்கு சீரான குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்' என கோரிக்கை மனுவில் கவுன்சிலர் ராமராஜ் கூறியுள்ளார்.

Last Updated on Tuesday, 04 May 2010 06:17
 

இரட்டை வாய்க்கால் பணிக்கான நிதியைப் பெற்றுத் தருவோம்

Print PDF

தினமணி 03.05.2010

இரட்டை வாய்க்கால் பணிக்கான நிதியைப் பெற்றுத் தருவோம்

கரூர், மே 2: கரூர் இரட்டை வாய்க்கால் பணிக்கான நிதியை பெற்றுத் தருவோம் என்றார் கரூர் மக்களவை உறுப்பினர் மு. தம்பிதுரை.

கரூரில் மக்களவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில், ஞாயிற்றுக்கிழமை அந்தத் தொகுதியின் மக்களவை உறுப்பினர் மு. தம்பிதுரையும், கரூர் சட்டப்பேரவை உறுப்பினரும், அதிமுக மாவட்டச் செயலருமான வி. செந்தில்பாலாஜியும் மக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றனர்.

அவர்கள் தாந்தோன்றிமலை நகராட்சி, வெள்ளியணை, ஜெகதாபி, உப்பிடமங்கலம், பழைய ஜயங்கொண்ட சோழபுரம், கிருஷ்ணராயபுரம், மாயனூர், புலியூர் பேரூராட்சி, தொழில்பேட்டை ஆகிய பகுதிகளில் பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்றனர்.

அதைத்தொடர்ந்து, அரசு காலனியில் மனுக்களைப் பெற்ற போது, கரிகாலி நகரில் சாக்கடை வசதி செய்து தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, அந்த இடத்தை நேரில் பார்வையிட்ட தம்பிதுரை கூறியது:

அரசு காலனி பகுதியில் சாக்கடை தொடர்ந்து பராமரிக்கப்படாததால் சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இந்தப் பகுதியில் கால்வாய் அமைக்க எம்.பி., எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து நிதி ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆறுகளில் மணல் அள்ளுவதால் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதுகுறித்து நடைபெற்று வரும் மக்களவை கூட்டத் தொடரில் புதன்கிழமை பேசுவேன்.

தமிழகத்தில் சட்டவிரோதமாக மணல், கனிம வளங்கள் அள்ளப்பட்டு வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டு வருகிறது.

1998-99 ஆம் ஆண்டில் நான் மக்களவை உறுப்பினராக இருந்த போது இரட்டை வாய்க்கால் திட்டம் கொண்டு வரப்பட்டது. தற்போது மத்தியிலும், மாநிலத்திலும் அதிமுக ஆட்சியில் இல்லாத போதும், அந்தத் திட்டத்துக்குத் தேவையான நிதியை பெற்று வருகிறோம். 11 ஆண்டுகளாக மத்திய அரசில் அங்கம் வகித்த திமுக, அப்போதெல்லாம் ஏதும் செய்யாமல் விட்டுவிட்டு தற்போது தவறான வாக்குறுதிகளை அளித்து வருகிறது.

இரட்டை வாய்க்கால் பணி முழுமையாக நிறைவேற தேவையான நிதியை நானும், செந்தில்பாலாஜி எம்எல்ஏவும் பெற்றுத் தருவோம் என்றார் தம்பிதுரை.

அதைத்தொடர்ந்து, அதிமுக எம்.பி., எம்.எல்.ஏ. பரிந்துரைக்கும் மனுக்கள் மீது ஆட்சியர் நடவடிக்கை எடுப்பதில்லை என்று புகார் வருகிறது. அதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தம்பிதுரை கூறினார்.

தொடர்ந்து வாங்கல், செவ்வந்திப்பாளையம், என்.புதூர், கடம்பங்குறிச்சி, தளவாபாளையம், தோட்டக்குறிச்சி பகுதி பொதுமக்களிடம் தம்பிதுரை மனுக்களை பெற்றனர்.

கரூர் சட்டப்பேரவை தொகுதி அதிமுக செயலர் திருவிக. பழனியப்பன், ஒன்றியச் செயலர் கே. கமலக்கண்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

 

கரூர் அரசு மருத்துவமனையில் சூரிய சக்தியில் குடிநீர் சுத்திகரிப்புத் திட்டம் அமைக்க ஆய்வு

Print PDF

தினமணி 03.05.2010

கரூர் அரசு மருத்துவமனையில் சூரிய சக்தியில் குடிநீர் சுத்திகரிப்புத் திட்டம் அமைக்க ஆய்வு

கரூர், மே 2: கரூர் அரசு மருத்துவமனையில் சூரிய சக்தியில் குடிநீர் சுத்திகரிக்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. ஆனால், முழு நேரமும் நகராட்சி குடிநீர் விநியோகித்தால் மட்டுமே இந்தத் திட்டத்தின் நோக்கம் நிறைவேறும் என்ற நிலை உருவாகியுள்ளது.

கரூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் போதிய அளவு குடிநீர் வசதி செய்யப்படாததாலும், அங்குள்ள குடிநீர்த் தொட்டிகளில் தண்ணீர் ஏற்றப்படாததாலும், மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளும், பார்வையாளர்களும் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

மேலும், சுகாதாரமற்ற தண்ணீரைக் குடிப்பதால், பல்வேறு நோய்களுக்கும் அவர்கள் ஆளாகின்றனர் என்று அண்மையில் தினமணியில் செய்தி வெளியானது.

இதுதொடர்பாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தது:

மருத்துவமனைக்கு தினமும் சுமார் 25 ஆயிரம் லி. தண்ணீர் தேவைப்படுகிறது. ஆனால், நகராட்சியிலிருந்து தினமும் தண்ணீர் விநியோகிக்கப்படாததால், குடிநீர்த் தட்டுப்பாடு நிலவுகிறது. எனினும், நோயாளிகளுக்காக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் அந்தந்த வார்டுகளில் வழங்கப்பட்டு வருகிறது.

தண்ணீர் தட்டுப்பாடு உள்ள நிலையில், நோயாளிகளைக் காண வரும் பார்வையாளர்கள் குடிநீர்த் தொட்டிகளில் ஏற்றப்படும் தண்ணீரை குளிக்கவும், துணிகளைத் துவைக்கவும் பயன்படுத்துகின்றனர். எனவே, நோயாளிகள், பார்வையாளர்களுக்கு போதிய அளவு குடிநீர் வழங்க முடியவில்லை.

குடிநீர் தட்டுப்பாடு நகராட்சி அலுவலகத்துக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வந்து மருத்துவமனையில் ஆய்வு செய்து, முழு நேரமும் தண்ணீர் வழங்க ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தனர்.

தற்போது, மகப்பேறு வார்டின் மேல்பகுதியில் மரபுசாரா எரிசக்தித் துறையின் மூலமாக சூரிய சக்தியின் மூலம் குடிநீரை சுத்திகரிக்கும் திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஆய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்தப் பணிகளுக்கான திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு, 2 மாதத்துக்குள் அந்தத் திட்டம் நிறைவேற்றப்படும். ஆனால், நகராட்சியிலிருந்து முழு நேரமும் தண்ணீர் விநியோகித்தால் மட்டுமே, இந்தத் திட்டமும் சாத்தியமாகும் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

 


Page 244 of 390