Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

குடிநீர் பிரச்னையை தீர்க்க ரூ.1 கோடி

Print PDF

தினமணி 30.04.2010

குடிநீர் பிரச்னையை தீர்க்க ரூ.1 கோடி

திருவள்ளூர், ஏப். 29: திருவள்ளூர் மாவட்டத்தில் கோடை காலத்தில் குடிநீர் பிரச்னையை தீர்க்க ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் டி.பி.ராஜேஷ் விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் தெரிவித்தார்.

திருவள்ளூர் மாவட்ட விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் டி.பி.ராஜேஷ் தலைமையில் வியாழக்கிழமை காலை நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொன்னேரியைச் சேர்ந்த விவசாயி ஒருவர் அப்பகுதியில் பழுதடைந்துள்ள விவசாய வேளாண் கிடங்கை புதிதாக கட்ட வேண்டும் என கோரியிருந்தார்.

வேளாண் கட்டடம் புதிதாக கட்டத் தேவையில்லை. அதை பழுது பார்க்க ரூ.1.90 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வரும் நிதியாண்டில் விவசாய வேளாண் கட்டடம் சீரமைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். புழல் ஏரியில் சுற்றியுள்ள ஹோட்டல்கள், இறைச்சிக் கடைகள் மற்றும் வீடுகளின் கழிவுகள் கொட்டப்படுகின்றன. இதன் மூலம் சென்னை குடிநீர் மற்றும் விவசாய பயன்பாட்டுக்கு பயன்படுத்தப்படும் நீர் மாசுபடும் அபாயம் உள்ளது. மேலும் ஏரிப் பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனை தடுக்க வேண்டும் என விவசாய சங்கத் தலைவர் பாஸ்கள் கோரிக்கை விடுத்தார். மேற்கண்ட கோரிக்கைக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பொதுப்பணித் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

பாக்கம் பகுதியைச் சேர்ந்த சுபசெல்வராஜன், இந்த ஆண்டு பருவமழை பொய்த்துப் போனதால் திருவள்ளூர் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்து அதன் மூலம் விவசாயிகளுக்கு சலுகைகள் வழங்க வேண்டும் என கோரியிருந்தார். அவரது மனுவுக்கு பதிலளித்த மாவட்ட ஆட்சியர், திருவள்ளூர் மாவட்டத்திóல் கடந்த பருவத்தில் மழை நன்றாக பெய்துள்ளது. ஆகையால் விவசாயத்துக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. ஆனால் மாவட்டத்தில் உள்ள திருத்தணி, பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை பகுதியில் குடிநீர் பிரச்னை உள்ளது.

தற்போதுள்ள கோடை காலத்தில் குடிநீர் பிரச்னையை தீர்க்க ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன் மூலம் இப்பிரச்னை விரைவில் தீர்க்கப்படும் என்றார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.சோமசுந்தரம், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) ராஜகோபால் மற்றும் விவசாயம் சார்ந்த அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

 

வேலூர் மாநகராட்சி குடிநீர் தேவைக்காக ஓட்டேரி, பொன்னையாறு பகுதிகளில் ரூ.30 லட்சம் செலவில் பணி தொடங்கியது

Print PDF

தினமலர் 30.04.2010

வேலூர் மாநகராட்சி குடிநீர் தேவைக்காக ஓட்டேரி, பொன்னையாறு பகுதிகளில் ரூ.30 லட்சம் செலவில் பணி தொடங்கியது

வேலூர்:வேலூர் மாநகராட்சி குடிநீர் தேவைக்காக ஓட்டேரி, பொன்னையாறு பகுதிகளில் ரூ. 30 லட்சம் செலவில் ஆழ்த்துளை கிணறுகள் அமைக்கும் பணி நேற்று தொடங்கியது.வேலூர் மாநகராட்சியில் 5 நாளைக்கு ஒரு முறை சப்ளை செய்யப்பட்ட குடிநீர், நீர் ஆதாரங்களில் நீர்மட்டம் குறைந்ததால் இப்போது 10 நாளுக்கு ஒரு முறை சப்ளை செய்யப்படுகிறது. இதனால் நகரில் குடிநீருக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. தண்ணீரைத் தேடி மக்கள் குடங்களுடன் தெருத்தெருவாக அலைந்து தவிப்பது அன்றாட நிகழ்ச்சியாகவே மாறிவிட்டது.கோடையில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க மாநகராட்சி நிர்வாகம் திட்டம் தயாரித்து, 2.40 கோடி ரூபாய் நிதி கேட்டு மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பப்பட்டது. ஆனால் அரசு வேலூர் மாவட்ட குடிநீர் பஞ்சம் போக்க மொத்தம் 2 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கி உள்ளதால், இதில் இருந்து ரூ. 20 லட்சம் நிதி மாநகராட்சிக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த தொகையுடன் மாநகராட்சி பொது நிதியில் இருந்து 10 லட்ச ரூபாய் அனுமதித்து, 30 லட்ச ரூபாய் செலவில பணிகள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.இந்நிலையில் ஓட்டேரி நீர்ஆதாரப் பகுதியில் நான்கு ஆழ்துளைக்கிணறுகள் அமைக்கும் பணி நேற்று தொடங்கியது. இதற்காக 2 ஆழ்துளை இயந்திரங்கள் மூலம் 500 அடி ஆழம் வரை துளையிடும் பணி நடந்தது. இது குறித்து மாநகராட்சி கமிஷனர் செல்வராஜிடம் கேட்டபோது: நீர் ஆதாரங்களில் உள்ள உறை கிணறுகள் பல வற்றிவிட்டன. வேலூரின் முக்கிய நீர் ஆதராமான ஓட்டேரியில் தினமும் 10 லட்சம் லிட்டர் நீர் கிடைத்தது. ஆனால் இப்போது வெறும் ஒரு லட்சம் லிட்டர் நீரே கிடைக்கிறது.

மற்றொரு குடிநீர் ஆதரமான பொன்னையாற்றில் 60 லட்சம் லிட்டர் கிடைத்து வந்த நிலையில் இப்போது 30 லட்சம் லிட்டர் நீரே கிடைக்கிறது. சமீபத்தில் மாநகராட்சி குடிநீர் தேவைக்காக மாவட்ட நிர்வாகம் 20 லட்சம் ரூபாய் நிதி வழங்கியது. பொது நிதி 10 லட்சம் ரூபாய் சேர்த்து பொன்னையாற்றில் நான்கும், ஓட்டேரியில் நான்கும் மற்ற பகுதிகளில் 10ம் ஆக மொத்தம் 18 ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.இப்பணி நிறைவு பெற்றவுடன் கூடுதல் நீர் கிடைக்க வாய்ப்பு உள்ளது. எனவே விரைவில் 5 நாளைக்கு ஒரு முறை குடிநீர் சப்ளை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கமிஷனர் கூறினார்.

Last Updated on Friday, 30 April 2010 07:28
 

குடிநீர் விநியோகத்தை சீரமைக்க வேண்டும் பட்டுக்கோட்டை நகராட்சி கூட்டத்தில் வலியுறுத்தல்

Print PDF

தினமலர் 30.04.2010

குடிநீர் விநியோகத்தை சீரமைக்க வேண்டும் பட்டுக்கோட்டை நகராட்சி கூட்டத்தில் வலியுறுத்தல்

பட்டுக்கோட்டை: பட்டுக்கோட்டையில் ரூ. 70 லட்சத்தில் வளர்ச்சிப்பணிகள் செய்வது என நகராட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இந்நகராட்சியின் அவசரக்கூட்டம் அதன் தலைவர் பிரியா தலைமையில் நடந்தது. ஆணையர் பாலகிருஷ்ணன், துணைத்தலைவர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உறுப்பினர்கள் பேசியதாவது:

சாமிநாதன்: பட்டுக்கோட்டை நகரின் நடைபாதையில் நெரிசல் ஏற்படுகிறது. பாதையில் நடந்து செல்ல வழிவகுக்க வேண்டும். பாலித்தீன் பைகளை ஒழிக்க மீண்டும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

ஜோதிமணி: நகராட்சியில் ஆடு அடிக்கும் (வதை செய்யுமிடம்) கட்டிடம் கட்டி திறக்கப்படாமலே உள்ளது. இதனால் வெளியில் உள்ளவர்கள் இறந்த ஆடுகளைக் கூட வெட்டி விற்பனை செய்கின்றனர். இதனால் மக்களுக்கு நோய்கள் வர வாய்ப்புள்ளது. சம்பத்: பொதுமக்கள் நலன் கருதாமல் 3 மணி நேரம் மின்தடை செய்யப்படுகிறது. ஆனால் சென்னை நகரத்தில் மட்டும் மின்வெட்டு இல்லாமல் உள்ளது. நமது மாவட்டங்களில் மட்டும் மின்வெட்டு இருப்பது ஏன்? (இவ்வாறு கூறிவிட்டு மின்வெட்டை கண்டித்து வெளிநடப்பு செய்தார்.) ரகுராமன்: புதிதாக ரேஷன்கார்டு கேட்டு விண்ணப்பித்தவர்களில் எங்கள் வார்டில் உள்ள 200 பேருக்கு ரேஷன் கார்டு இல்லை. அவர்கள் அனைவருமே ஏழை எளியவர்கள்.அதிகாரிகளிடம் கேட்டால் வீட்டுவரி ரசீது இல்லை என்று தட்டிக் கழிக்கிறார்கள். அவர்களுக்கு ரேஷன் கார்டு கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

மகப்பேறு உதவித் திட்டம் பெறுவதற்கு எந்தந்த நாட்களில் வந்து நகராட்சியில் பதிவு செய்யவேண்டுமென அறிவிக்க வேண்டும். என் வார்டில் உள்ள பள்ளியில் 125 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். அவர்களுக்கு போதிய கழிவறை சுகாதார வசதி இல்லை அதை செய்து தர வேண்டும். திருச்செந்தில்: பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் செயல்பட்டு வரும் 108 வாகன ஊர்தி பற்றி மேலும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

ஜவஹர்பாபு: சிவக்கொல்லை பகுதியில் குடிநீர் தட்டுப்பாடுகள் அதிகமாக உள்ளது. இரண்டு குடிநீர் தொட்டி அமைத்துக் கொடுக்க வேண்டும். பழுதடைந்துள்ள இரண்டு சாலைகளை புதுப்பித்து தர வேண்டும். அங்கன்வாடி கட்டிடம் கட்ட முடியவில்லை என்றால் நாங்கள் தங்களிடம் கொடுத்த பத்திரத்தை திருப்பித் தர வேண்டும்.


வீரையன்: அரசு ஆஸ்பத்திரியில் கண் பரிசோதனை செய்து கொள்ள டாக்டர்கள் கிடையாது. இலவச மருத்துவ முகாமை நாடி செல்கிறார்கள்.மறைந்த முன்னாள் சேர்மன் சீனிவாசன் சிலை வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளேன். அதை எப்பொழுது செய்யப்போகிறீர்கள்.பஸ் ஸ்டாண்டில் உள்ள வாய்க்கால் குண்டும், குழியுமாக உள்ளது. அதை சரி செய்ய வேண்டும். லட்சத்தோப்பு பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு உள்ளது. அதை போக்கித் தர வேண்டும்.

நாகராஜ்: நகரின் தெரு ஓரங்களில் உள்ள மணல்களை அள்ள வேண்டும்.பாரதிசாலையை சரிசெய்து கொடுக்க வேண்டும். விளை நிலங்களை மனைப்பிரிவாக பிரித்து நகராட்சி உத்தரவின்றி விற்கிறார்கள். நகராட்சி அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இங்குள்ள சர்வே ஊழியர்கள் சரியாக செயல்படுவதில்லை. செயல்பட செய்ய வேண்டும்.


அண்ணாதுரை: பஸ் ஸ்டாண்டில் பின்பக்கம் இருட்டாக உள்ளது. அங்கு விளக்கு எரியவிட வேண்டும். அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவை விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் பேசினர்.பின்னர் நகராட்சி வளர்ச்சிப்பணிகளாக சாலை வசதி, மின் வசதி, குடிநீர், சுகாதாரம் ஆகியவற்றிற்கு ரூ. 70 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Last Updated on Friday, 30 April 2010 06:36
 


Page 247 of 390