Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

பணி துவங்கினால் மண்டலங்களுக்கு 51 நாள் மட்டும் தண்ணீர் கிடைக்கும்

Print PDF

தினமணி 26.04.2010

பணி துவங்கினால் மண்டலங்களுக்கு 51 நாள் மட்டும் தண்ணீர் கிடைக்கும்

பொள்ளாச்சி, ஏப். 25: பரம்பிக்குளம்- ஆழியாறு பாசனத் திட்டத்தின் முக்கிய அங்கமான காண்டூர் கால்வாய் சீரமைப்புப் பணிகள், அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு பணி துவங்கினால், 4 மண்டலங்களுக்கு மொத்தம் 2 ஆண்டுகளுக்கு தலா 51 நாள்கள் மட்டும் தண்ணீர் கிடைக்கும். பணிகள் நடக்கும் ஜன. முதல் ஜூன் வரையிலான காலத்தில், தண்ணீர் முற்றிலுமாக நிறுத்தப்படும்.

÷பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் திட்டம் மூலம் தமிழகத்தில் 4 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறுகின்றன. சோலையாறு, பரம்பிக்குளம், தூணக்கடவு, பெருவாரிப்பள்ளம் ஆகிய அணைகளில் இருந்து தண்ணீர் சுரங்கப்பாதையில் சர்க்கார்பதி கொண்டு வரப்படுகிறது.

÷இந்தத் தண்ணீர் அடர்ந்த வனப்பகுதியின் நடுவில் அமைக்கப்பட்ட காண்டூர் கால்வாய் மூலம் சுமார் 50 கி.மீ. தொலைவில் உள்ள திருமூர்த்தி அணைக்குச் செல்கிறது. அங்கிருந்து ஆண்டுக்கு 2 மண்டலங்கள் வீதம் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது.

÷ஒவ்வொரு மண்டலத்துக்கும் இருப்பில் உள்ள தண்ணீரைப் பொறுத்து, 80 முதல் 90 நாள்கள் தண்ணீர் கிடைக்கும். இதில் மழையளவு அதிகரிக்கும்போது கூடுதல் நாள்களுக்கு பாசனத்துக்கு தண்ணீர் கிடைக்கும். எதிர்பார்க்கும் மழையளவு குறையும் போது, பாசனத்துக்கும் தண்ணீரின் அளவும் குறையும்.

÷காண்டூர் கால்வாயில் சில மாதங்களுக்கு முன் இரண்டு முறை உடைப்பு ஏற்பட்டது. இதை பொதுப்பணித் துறையினர் சரி செய்தனர். காண்டூர் கால்வாயை முழுமையாகச் சீரமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்று ரூ. 127 கோடி நிதியை அரசு பட்ஜெட்டில் ஒதுக்கியது.

÷காண்டூர் கால்வாய் சீரமைப்புப் பணிகளை வரும் ஜன. மாதத்தில் மேற்கொள்ள பொதுப்பணித்துறை திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. பி.ஏ.பி. திட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில் வரும் ஜூன் முதல் டிசம்பர் மாதம் வரை மழை அதிகஅளவில் இருக்கும் என்பதால், அந்தச் சமயத்தில் காண்டூர் கால்வாயில் பணிகளைச் செய்ய முடியாது.

÷இதனால் ஜூன் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையில் இரண்டு மண்டலங்களுக்குத் தண்ணீர் வழங்கலாம் என்ற கருத்து விவசாயிகளிடம் இருந்து பெறப்பட்டுள்ளது.

÷பொதுவாக ஒரு மண்டலத்துக்கு சுமார் 90 நாள்கள் தண்ணீர் வழங்கப்படுகிறது. ஆனால் காண்டூர் கால்வாய் பராமரிப்புப் பணிகள் செய்யப்படுவதால், ஒரு மண்டலப் பாசனக் காலமான ஜூன் முதல் டிசம்பர் மாதத்துக்குள் இரண்டு மண்டலங்களுக்கும் தலா 51 நாள்கள் வீதம் தண்ணீர் வழங்கவும், அடுத்த ஆண்டிலும் இதே போல அடுத்த 2 மண்டலங்களுக்கும் தண்ணீர் வழங்கவும், விவசாயிகள் ஆலோசனை தெரிவித்துள்ளனர்.

÷இது தொடர்பாக திருமூர்த்தி அணைத் திட்டக்குழுத் தலைவர் மெடிக்கல் கே.பரமசிவம் கூறியது:

÷காண்டூர் கால்வாயைச் சீரமைக்க அரசு நிதி ஒதுக்கியுள்ளது. இதனால் மழைக் காலத்தில் தண்ணீர் கொடுக்கலாம். வெயில் காலத்தில் பணிகளைத் துவக்கலாம். 2 ஆண்டுகளுக்கு மட்டும் இந்தச் சிரமம் இருக்கும்.

÷அதன்பின் வழக்கம்போல ஒரு மண்டலத்துக்குத் 90 நாள்கள் வீதம் தண்ணீர் கிடைக்கும். கால்வாய் சீரமைக்கப்பட்டால் தண்ணீர் சேதமும் மிகக் குறையும். இது தொடர்பாக பொதுப்பணித் துறையினருக்கு மனு கொடுத்துள்ளோம், என்றார்.

 

குடிநீர் பிரச்னையைத் தீர்க்க பொது நிதியை பயன்படுத்துங்கள்

Print PDF

தினமணி 24.04.2010

குடிநீர் பிரச்னையைத் தீர்க்க பொது நிதியை பயன்படுத்துங்கள்

வேலூர், ஏப்.23: குடிநீர் பிரச்னையைத் தீர்க்க, உள்ளாட்சி அமைப்புகள் பொதுநிதியைப் பயன்படுத்த வேண்டும் என்று அமைச்சர் துரைமுருகன் அறிவுறுத்தினார்.

காட்பாடியில் உள்ள தாராபடவேடு நகராட்சியின் புதிய அலுவலக கட்டடத்தை வெள்ளிக்கிழமை திறந்து வைத்து அவர் பேசியது:

தமிழகத்தில் உள்ள பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்யாததால் குடிநீர் பிரச்னை நிலவுகிறது. வேலூர் மாவட்ட குடிநீர் பிரச்னையை போக்க, தமிழக அரசு ரூ.2 கோடி ஒதுக்கியுள்ளது. அதிலிருந்து காட்பாடி தொகுதிக்கு ரூ.43 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தாராபடவேடு நகராட்சியைப் பொருத்தவரை ரூ.12 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிதியைக் கொண்டு குடிநீர் பிரச்னையை போக்க வேண்டும். அனைத்து செயல் அலுவலர்களும் குடிநீர் பிரச்னை போக்க மேற்கொண்டுள்ள பணி குறித்து வாரம் ஒரு முறை எனக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

உள்ளாட்சி அமைப்புகள் பொது நிதியை குடிநீர் பிரச்னையைத் தீர்க்கப் பயன்படுத்த வேண்டும். பொது நிதி என்பது சாலை போடுவதற்காக மட்டும் அல்ல.

அரசு அறிவிக்கும் நலத்திட்டங்கள் பொது மக்களுக்கு சென்றடையும் அலுவலர்கள் வகையில் செயல்பட வேண்டும் என்றார்.

இவ்விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் செ.ராஜேந்திரன் தலைமை வகித்தார். மத்திய இணை அமைச்சர் எஸ்.ஜெகத்ரட்சகன், ராணிப்பேட்டை எம்எல்ஏ ஆர்.காந்தி, மண்டல நகராட்சிகள் நிர்வாக இயக்குநர் சோ.பாலசுப்பிரமணியம், மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் ஷீலாராஜன், காட்பாடி ஒன்றிய குழுத் தலைவர் பிரமிளா தயாநிதி, முன்னாள் எம்பி தி..முகமது சகி உள்ளிட்டோர் பேசினர்.

 

ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம்: கர்நாடக எல்லையில் தொடங்கப்படவில்லை: ஸ்டாலின்

Print PDF

தினமணி 24.04.2010

ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம்: கர்நாடக எல்லையில் தொடங்கப்படவில்லை: ஸ்டாலின்

சென்னை, ஏப்.23: ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் கர்நாடக எல்லையில் தொடங்கப்படவில்லை என்று துணை முதல்வர் மு..ஸ்டாலின் உறுதிபட தெரிவித்தார்.

ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் தொடர்பாக கர்நாடக மாநில நீர் பாசனத் துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்த கருத்துகளையும் ஸ்டாலின் மறுத்தார்.

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் பேரவையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விவாதத்தில் அதிமுக எம்.எல்.ஏ கே.பி. அன்பழகன் பேசியது:

ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாகவும், இதை எதிர்த்து சட்ட ரீதியாக நடவடிக்கை மேற்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். இதில் நடப்பது என்ன என்று மக்கள் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

அப்போது, துணை முதல்வர் ஸ்டாலின் குறுக்கிட்டுப் பேசியது:

ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் தொடர்பாக கர்நாடக அமைச்சர் பசவராஜ் பொம்மை எந்த ஆதாரமும் இல்லாமல் செய்திகளைத் தெரிவித்துள்ளார். அவர் கூறியுள்ளது போல, இந்தத் திட்டத்துக்காக 1.7 டி.எம்.சி. தண்ணீரோ அல்லது 2.5 டி.எம்.சி. தண்ணீரோ எடுக்கத் திட்டமிடப்படவில்லை.

1.4 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே இந்தத் திட்டத்துக்காக காவிரி ஆற்றிலிருந்து பெறப்படும். மத்திய அரசிடமிருந்து இதற்கான ஒப்புதலை முறையோடு பெற்ற பிறகுதான் திட்டப் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.

ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகள் கர்நாடக மாநில எல்லையில் தொடங்கப்பட்டிருப்பதாகவும் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். அதுவும் உண்மைக்கு மாறான செய்தி.

இந்தத் திட்டப் பணிகள் தமிழக எல்லையில்தான் தொடங்கப்பட்டிருக்கின்றன. கர்நாடக அமைச்சர் தெரிவித்துள்ளவாறு சர்ச்சைக்குரிய கர்நாடக எல்லையில் நிச்சயமாகத் தொடங்கப்படவில்லை.

மத்திய அரசினுடைய அனுமதியைப் பெற்ற பிறகுதான் இது நடந்துகொண்டிருக்கிறது. ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் நிறைவேற்றப்படக்கூடிய நிலையில் இல்லை என்று அ.தி.மு.. எம்.எல்.. பேசியுள்ளார்.

இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு எந்த அளவிற்கு கால நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதோ, அதற்கு முன்பே இந்தத் திட்டத்தை நிறைவேற்றுகிற பணியில் இந்த அரசு ஈடுபடும் என்பதை உறுதியோடு தெரிவித்துக்கொள்கிறேன் என்றார் ஸ்டாலின்.

 


Page 255 of 390