Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

கரூர் நகராட்சியில் புதிய குடிநீர் திட்டம் வடிவமைப்பு ரூ.25.45 கோடி மதிப்பில் நிறைவேற்ற முடிவு

Print PDF

தினமலர் 24.04.2010

கரூர் நகராட்சியில் புதிய குடிநீர் திட்டம் வடிவமைப்பு ரூ.25.45 கோடி மதிப்பில் நிறைவேற்ற முடிவு

கரூர்: கரூர் நகராட்சியில் குடிநீர் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 25.45 கோடி ரூபாய் மதிப்பில் புதிதாக குடிநீர் திட்டம் நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. கவுன்சிலர்களுக்கு திட்டம் குறித்து விளக்கும் கூட்டம் நகராட்சி வளாகத்தில் நடந்தது. கரூர் நகராட்சியின் தற்போதைய குடிநீர் திட்டம் காவிரி ஆற்றை நீராதாரமாக கொண்டு இயங்குகிறது. பெருகிவரும் மக்கள் தொகை அடிப்படையில் கூடுதல் தண்ணீர் தேவைப்படும் நிலையில், விரிவான குடிநீர் திட்ட அறிக்கை தயாரிக்க நகராட்சி நிர்வாக ஆணையம் மூலம் ஃபிஷ்னர் இந்தியா நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது. திட்டத்தின் கீழ் நெரூர் காவிரியில் ஏற்கனவே உள்ள நீர் சேகரிப்பு கிணறு மற்றும் புதிதாக கட்டப்பட்ட நீர் உறிஞ்சு கிணறுகளுக்கு இடை÷ ய ஆறு மீட்டர் விட்டம், 21.65 மீட்டர் ஆழத்தில் புதிய நீர் சேகரிப்பு கிணறு அமைக்கப்படுகிறது. புதிய மற்றும் பயன்பாட்டில் உள்ள நீர் சேகரிப்பு கிணற்றில் 80 குதிரை திறன் டர்பைன் மின் இறைப்பான் பொருத்தி புதிய தலைமை பணியிடத்தில் இருந்து நகராட்சியின் எல்லையருகில் வாங்கல் சாலையில் உள்ள நீர் உந்து நிலையம் வரை கொண்டுவரப்படுகிறது. வாங்கலில் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள தரைமட்ட தொட்டிக்கு அருகில் புதிதாக மின் இறைப்பான் அறையுடன் தரைமட்டத்தொட்டி கட்டப்பட்டு இரண்டும் இணைக்கப்படுகிறது. பழைய தரைமட்ட தொட்டியில் இருந்து நகராட்சியின் கிழக்கு பகுதியில் உள்ள நான்கு மேல்நிலை நீர்தேக்க தொட்டிக்கும், புதிய தொட்டியில் இருந்து பிறபகுதியில் உள்ள எட்டு மேல்நிலை தொட்டிக்கும் தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது.

சீரான குடிநீர் விநியோகம் மற்றும் பராமரிப்புக்காக 12 குடிநீர் விநியோக பகிர்மான பகுதியாக பிரிக்கப்பட்டு. மொத்தம் 79.29 கி.மீ., நீளமுள்ள பகிர்மான குழாயில், பழைய 'பிவிசி' குழாய் 15.33 கி.மீ., மற்றும் புதிய 'ஹெச்டிபிஇ' குழாய் மூலம் 63.96 கி.மீ., நீளத்தில் அமைத்து விநியோகம் செய்ய திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. 2010 மக்கள் தொகை கணக்கின்படி 16 ஆயிரத்து 136 வீட்டு இணைப்புகள் கணக்கில் எடுக்கப்பட்டுள்ளன. திட்டத்தின் மதிப்பீடு 25.45 கோடி ரூபாய், மற்றும் பராமரிப்பு செலவு ஆண்டுக்கு 1.75 கோடி ரூபாய் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போதைய தேவையாக 14.34 மில்லியன் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. இதுவே 2040ல் 17.79 மில்லியன் லிட்டர் தேவைப்படும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

ஃபிஷ்னர் இந்தியா நிறுவனம் திட்ட தலைமை பொறியாளர் ராஜயோகசந்திரபோஸ் மற்றும் வடிவமைப்பு பொறியாளர் சரவணன் கூறியதாவது: அதிகரிக்கும் மக்கள் தொகையின் அடிப்படையில் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள முறையில் 23 சதவீதம் தண்ணீர் வீணாக போவதை, புதிய திட்டத்தில் மிச்சப்படுத்த முடியும். மேலும், ஒவ்வொரு மேல்நிலை நீர்தேக்க தொட்டியிலும் பொருத்தப்படும் கருவி மூலம், தொட்டிகளில் தண்ணீர் வந்து சேர்வது, விநியோக்கிக்கப்படுவது குறித்த தகவல்களை அலுவலகத்தில் இருந்தே கண்காணிக்க முடியும். முழுமையாக நவீன தொழில்நுட்பத்தில், 'ஹெச்டிபிஇ' குழ õய் மூலம் வீடுகளுக்கு இணை ப்பு வழங்கப்படுவதால், தண்ணீர் வீணாவது தடுக்க முடியும். நகராட்சிக்கு தெரியாமல் கள்ளத்தனமாக இணைப்பு எடுக்க முடியாது. மேலும், புதிய திட்டம் மூலம் 24 மணிநேரமும் குழாயில்தண்ணீர் வருவதால், வீடுகளில் மோட்டார் வைத்து தண்ணீர் எடுக்க வேண்டியதில்லை.

மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் எப்போதும் தண்ணீர் இருப்பு பராமரிக்கப்படுவதால், தேவையான அழுத்தம் எப்போதும் குழாயில் இருக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர். நகராட்சி தலைவர் சிவகாமசுந்தரி கூறுகையில், ''திட்ட அறிக்கை நிதி ஆணையத்தின் ஆய்வுக்கு பிறகு நகராட்சி நிர்வாக ஆணையம் பார்வைக்கு சென்றதும், திட்டத்துக்கான நிதி ஒதுக்கீடு முறை குறித்து முடிவு செய்யப்பட்டு டெண்டர் அழைப்பு மற்றும் நகராட்சி நிர்வாகத்தின் வழக்கமான நடைமுறைகள் நடக்கும். திட்டம் துவங்கி ஓராண்டில் முடிக்க முயற்சி மேற்கொள்ளப்படும்,'' என்றார்.நகராட்சி தலைவர் சிவகாமசுந்தரி, கமிஷனர் ரகுபதி, நிர்வாக பொறியாளர் ராஜா மற்றும் கவுன்சிலர்கள் உடனிருந்தனர்.

Last Updated on Saturday, 24 April 2010 05:56
 

ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம், முன்னதாகவே நிறைவேற்றப்படும் : ஸ்டாலின் உறுதி

Print PDF

தினமலர் 24.04.2010

ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம், முன்னதாகவே நிறைவேற்றப்படும் : ஸ்டாலின் உறுதி

சென்னை : ''ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம், திட்டமிட்ட காலத்திற்கு முன்னதாகவே முடிக்கப்படும்,'' என்று, துணை முதல்வர் ஸ்டாலின் உறுதி தெரிவித்தார். சட்டசபையில், ஊரக வளர்ச்சித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அ.தி.மு.., உறுப்பினர் அன்பழகன் பேசும்போது நடந்த விவாதம்: மின்வெட்டு காரணமாக, கிராமங்களில் உள்ள மின் மோட்டார்கள் அடிக்கடி பழுதாகின்றன. குடிநீர் பிரச்னை அதிகரித்துள்ளது. .தி.மு.., ஆட்சி காலத்தில் 24 மாவட்டங்களில் பாதாள சாக்கடை திட்டம் கொண்டு வரப்பட்டது. அத்திட்டங்கள், இந்த ஆட்சியில் இன்னும் முடிக்கவில்லை. அடையாறு பூங்கா உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள், .தி.மு.., ஆட்சியில் கொண்டு வரப்பட்டவை.

கடந்த 2007-08ல் ஒட்டுமொத்த திட்டங்களுக்கு 62 ஆயிரத்து 626 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதில் 56 ஆயிரத்து 707 கோடி மட்டுமே செலவு செய்யப்பட்டுள்ளது.ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம், 1986ல் 120 கோடி ரூபாயில் நிறைவேற்ற திட்டமிடப்பட்டும், தள்ளிக்கொண்டே போனது. 2008ல் 1,334 கோடியாக உயர்த்தி, திட்டத்திற்கு அடிக்கல் நாட்டு விழாவையும் நடத்தினீர்கள். இப்போது 1,929 கோடியாக மதிப்பீடு உயர்ந்துள்ளது. இன்னும் திட்டப் பணிகள் முடியவில்லை.

கர்நாடக மாநில நீர்ப்பாசனத்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை, திட்டத்தை தடுக்கும் வகையில் கருத்து தெரிவித்துள்ளார். அது, பத்திரிகைகளிலும் வந்துள்ளது. அரசியல் ரீதியாக தீர்வு காண முடியாத பட்சத்தில், சட்ட ரீதியாக தீர்வு காணப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த திட்டத்தின் நிலை என்ன? எப்போது முடியும்?

துணை முதல்வர் ஸ்டாலின்: அமைச்சர் தெரிவித்ததாக பத்திரிகைகளில் வந்த செய்தி தவறு. 1.75 டி.எம்.சி., தண்ணீரையோ அல்லது 2.5 டி.எம்.சி., தண்ணீரையோ நாம் எடுக்கப்போவதில்லை. 1.4 டி.எம்.சி., தண்ணீரை மட்டும் தான் எடுக்கப் போகிறோம். அதுவும், தமிழக எல்லைப் பகுதியில் இருந்து தான் இந்த நீரை எடுக்கப் போகிறோம்.

அம்மாநில அமைச்சர் தெரிவித்தது போல், கர்நாடக எல்லைப் பகுதியில் இருந்து எடுக்கப்போவதில்லை. 1.4 டி.எம்.சி., தண்ணீர் எடுப்பது குறித்து, மத்திய அரசின் அனுமதியை பெற்ற பிறகுதான் பணிகளை மேற்கொண்டு வருகிறோம். இத்திட்டத்தை, நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்கு முன்னதாகவே அரசு நிறைவேற்றும்.அன்பழகன்:

கடல் நீரை குடிநீராக்கும் திட்டம், மீஞ்சூரில் துவக்கப்பட்டது. அத்திட்டமும் இன்னும் செயல்பாட்டுக்கு வரவில்லை. திட்டத்தை நிறைவேற்றுவதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளது.
ஸ்டாலின்: இந்த திட்டம், உங்கள் ஆட்சியில் கொண்டு வந்தது தான். .தி.மு.., ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டம் என்று நாங்கள் விட்டுவிடவில்லை. மக்களுக்கு குடிநீர் வழங்கும் திட்டம் என்பதால், அதை நிறைவேற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறோம்.

கடல் சீற்றம் காரணமாக, திட்டப் பணிகளில் சிறிது தொய்வு ஏற்பட்டது. இதனால், நிறுவனத்திற்கோ, அரசுக்கோ எந்தவித இழப்பும் இல்லை. நிறுவனத்தின் அதிகாரிகளை அழைத்துப் பேசி, திட்டப் பணிகளை விரைவில் முடிக்குமாறு அறிவுறுத்தியுள்ளோம். வரும் ஜூன் இறுதிக்குள், நாளொன்றுக்கு 100 மில்லியன் லிட்டர் கடல் நீரை குடிநீராக்கி வழங்கும் திட்டம் அமலுக்கு வந்துவிடும். இவ்வாறு விவாதம் நடந்தது.

Last Updated on Saturday, 24 April 2010 05:42
 

கிழக்கு, வடக்கு மண்டலங்களில் சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை

Print PDF

தினமணி 23.04.2010

கிழக்கு, வடக்கு மண்டலங்களில் சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை

கோவை, ஏப்.22:கோவை மாநகராட்சி கிழக்கு, வடக்கு மண்டலங்களில் சீரான குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மேயர் ஆர்.வெங்கடாசலம் தெரிவித்துள்ளார்.

கிழக்கு, வடக்கு மண்டலங்களில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படுவதை சமாளிப்பது தொடர்பாக மேயர் வெங்கடாடசலம் தலைமையில் ஆலோசனை கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. துணை மேயர் நா.கார்த்திக் முன்னிலை வகித்தார்.

இக்கூட்டத்தில் மேயர் வெங்கடாசலம் பேசும்போது, "பில்லூர் அணைக்கட்டு பகுதியில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதால் தான் குடிநீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. இனி வரும் காலங்களில் மின்தடை ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அப்படியே மின்தடை ஏற்பட்டாலும் மக்கள் நலன் கருதி சீரான குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். நீர்க்கசிவு ஏற்படும் பகுதிகளை அதிகாரிகள் உடனுக்குடன் கண்டறிந்து சரிசெய்ய வேண்டும் என்றார்.

தமிழ்நாடு மின்வாரிய கண்காணிப்புப் பொறியாளர் அனந்தகிருஷ்ணன், தமிழ்நாடு குடிநீர்வடிகால் வாரிய கண்காணிப்பு பொறியாளர் அமரநாதன், முதன்மைப் பொறியாளர் ரவிச்சந்திரன், செயற்பொறியாளர்கள் சுப்பிரமணியம் (பில்லூர்), கோபாலகிருஷ்ணன் (சிறுவாணி), மாநகராட்சி குடிநீர்ப் பிரிவு உதவிப் பொறியாளர் கருப்பசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 


Page 258 of 390